Thursday, March 2, 2017

சமபந்தி சாப்பாடு - சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு வழி

 முனைவர்.க.சுபாஷிணி,

ஜெர்மனி

​சாதி பாகுபாடு தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவலங்கள் சிறிதல்ல. சமூகத்தின் பல பரிமாணங்களைத் தொட்டு அசைத்து சீரழிவினை ஏற்படுத்தி வைத்துள்ளமையில் சாதி அமைப்பின் பங்கு அளப்பறியது.  பல சீரழிவுகளை இது ஏற்படுத்தியிருக்கின்றது என்ற நிலையில் அதில் ஒரு கூறாகிய ”சேர்ந்து உண்ணல்” அல்லது ”சமபந்தி” என்ற ஒரு கருத்தை மட்டும் இந்தக்கட்டுரையில் காண்போம்.

வர்ணாசிரமத்தை அடிப்படை நீதியாக முன் வைக்கும் வைதீக சமயம் யாருடன் சேர்ந்துண்ணுதல் தகும், யாருடன் சேர்ந்து உண்ணக்கூடாது என ஸ்மிருதிகளில் குறிப்பிடுகின்றது.  வசிட்டர் கூறும் போது, கைவினைஞர்கள், மருத்துவர், வட்டித்தொழில் புரிபவர், வண்ணார், பஞ்சமர், மதுவியாபாரி,உளவாளி, வேடுவர், செருப்புத்தைப்பவர் ஆகியோரிடமிருந்து பிராமணர்  உணவு பெறக்கூடாது என்றும் ஒரு சூத்திரன் கொடுத்த உணவை சாப்பிடும் பிராமணன் இறந்துபோனால் மறு பிறவியில் பன்றியாகப் பிறப்பான் அல்லது அந்தச் சூத்திரன் குடும்பத்தில் பிறப்பான் எனக் கூறுகின்றார். ஒரு சண்டாளன் என ஒதுக்கப்பட்டவன் நீர் அருந்துகின்ற குளத்திலிருந்து நீர் பருகிய ஒரு பிராமணன் அதற்குப் பரிகாரமாக ஒரு பசுமாட்டின் சிறுநீரை பல நாட்கள் குடிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.  

மனுதர்ம சாத்திரத்தை எழுதிய மனுவோ மேலும் விரிவாக உணவு உண்ணுதலை ஆராய்கின்றார்.

ஒரு உணவுப்பந்தியில்​ அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என்றும், சாதி விட்டு தாழ்ந்த குலத்தில் பெண் எடுத்தவன், விதவையை மணந்து பிறந்த பிள்ளை, தாழ்ந்த குலத்தானிடம் கலைகள் பயின்றவர்கள், கீழ்ச்சாதியினருக்குப் பாடம் நடத்தியோர், கீழ்ச்சாதியினர் என வகைப்படும் அனைவருடனும் பிராமணர் சேர்ந்து சாப்பிடக்கூடாது என சட்டம் இயற்றுகின்றார்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு அந்தணனை வேறு குலத்தவன் தொட்டால் அது பாவமாகிவிடும் என்றும் ஒரு அந்தணன் சாப்பிடும் போது யாராவது பார்த்து விட்டால் அந்த அந்தணனுக்கு யார் தர்மம் செய்து உணவிட்டார்களோ அவர்களது புண்ணியமெல்லாம் வீணாகிவிடும் என்பதால் ஒரு அந்தணன் யாரும் காணாத இடத்தில் அமர்ந்து மறைந்து சாப்பிட வேண்டும் எனக்குறிப்பிடுகின்றார்.

ஈழத்து மண்ணில் சைவம் வளர்த்த ஆறுமுக நாவலர் சமபந்தி பற்றி தன் கருத்தினை பதிந்திருக்கின்றார். இருபத்து நான்கு வகையான  ஒழுக்கமின்மை தன்மைகளைப் பட்டியலிடும் அவர் மூன்றாவதாகக் குறிப்பிடும் ஒழுக்கக்கேட்டில், மாமிசம் புசிப்பவர், கள்ளுச் சாராயம் புசிப்பவர், தாழ்ந்த சாதியர் ஆகியோருடன் இணைந்து அமர்ந்து சாப்பிடுவதும் அல்லது இவர்கள் பார்க்கவும் சைவர்கள் சாப்பிடுவதும் ஒழுக்கக்கேடு எனக்குறிப்பிடுகின்றார்.  அதோடு விதவைகளும், விதவைகளைத்திருமணம் செய்தோரும், விதவைகளுக்குப் பிறந்தோரும் கூட சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவது சைவர்களுக்கு ஒழுக்கக்கேடு என வரையறுக்கின்றார். அன்பே சிவம் என்ற சைவ சித்தாந்தக்கொள்கைக்கு முற்றிலும் எதிர்மறையான நடைமுறைகளாக இவற்றை ஆறுமுக நாவலர் வலியுறுத்தி இருப்பதைக் காண்கின்றோம்.

ஐரோப்பாவிலிருந்து வந்த கிருத்துவ மதத்தில் அடிப்படையில் சாதியக் கோட்பாடு இல்லை. ஆனால் இந்தியாவிலும், இலங்கையிலும் கிருத்துவமும் சாதிப்பிரிவினையை வற்புறுத்தி உள்வாங்கிக் கொண்டு தான் இயங்குகின்றது. இதனால் அனைவருமாக இணைந்து நற்கருணை பெறுவது கூட நடைபெறாது,  உயர்சாதி கிருத்துவர்களுக்கு ஒரு நாளும் ஏனைய கிருத்துவர்களுக்கு மற்றொரு நாளும் என பிரிக்கப்பட்டது. 

கடந்த நூற்றாண்டில் உணவு உண்ணலில் சாதிபேதம் காண்பதை தடுக்கும் பல முயற்சிகள் பல தளங்களில் நிகழ்ந்தன. வடலூர் இராமலிங்க வள்லலார், ஸ்ரீ நாராயண குரு போன்றோரின் முயற்சிகள் இதில் குறிப்பிடத்தக்கவை. வடலூர் இராமலிங்க வள்ளலார் மக்கள் சிந்தனையில் இருந்த பல அழுக்கான சிந்தனைகளைக் களைந்து எல்லோரும் ஒன்றே என்ற  சீர்திருத்தக்கருத்துக்களை முன் வைத்து இயங்கினார். பஞ்சம் விரித்தாடிய காலத்தில் பசித்தோருக்கு சாதி இன பாகுபாடின்றி உணவு வழங்கி பசிப்பிணி போக்கும் முயற்சிகளில் தீவிரமாகச் செயல்பட்டார்.

இன்று இந்தியா மற்றும் இலங்கையின் நகர்ப்புறங்களில் உணவகங்களில் சாதிபேதமின்றி மக்கள் வந்து உணவு உண்டு செல்ல முடிகின்றது. ஆனால் கிராமப்புறங்களிலோ இந்த நிலை இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.  ஒரு தாழ்ந்த சாதிக்காரர் உணவுக்கடை வைத்தால் அதற்குச் சென்று  சாப்பிடலாம் என்ற எண்ணம் தம்மை உயர்சாதிக்காரர்களாகக் கூறிக்கொள்வோரிடத்தில் இல்லை. இதனை தீட்டு எனப்பெயரிட்டு அத்தகையக் கடைகளுக்குச் செல்லாமல் ஒதுங்கிச்செல்கின்ற போக்கு இன்றளவும் தமிழககிராமங்களில் நடைமுறையில் இருக்கின்றது. 

அடிப்படையில் உயிர்கள் அனைத்தும் ஒன்றே. 
கூடி வாழ்ந்தால் கோடி நன்மையைக் காணலாம். பிரிவினையை வளர்ப்பது மக்களிடையே விரிசலைத்தான் பெரிதாக்கும் என்பதோடு இதனால் ஏற்படுவது பொருள் இழப்பும் மன உளைச்சலுமாகத்தான் இருக்கும். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு சமபந்தி சாப்பாட்டு முறையை விரிவாக்க வேண்டும். எல்லா தளங்களிலும் சாதி மத இன வேறுபாடுகளின்றி எல்லோரும் இணைந்து அமர்ந்து உணவுண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.  இது மனித நல்லிணக்கத்திற்கு உதவும்.

No comments:

Post a Comment