தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.
இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.
இந்தியக் கப்பற்கலை தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது.
கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.
கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை
- கட்டு மர வகை
- தோணி வகை
- வள்ளம் வகை
எனப்பிரித்திருக்கின்றார்கள்.
கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.
தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு , அகநானூறு பாடால்களில் உள்ளன.
நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களை பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.
கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.
இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.
கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி முனைப்புடன் தொடரப்பட வேண்டும்.
சுபா
No comments:
Post a Comment