தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.
இந்த நூலில் 7வது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் பு.சந்திரசேகரன் அவர்களின் “ பண்டைய, இடைக்காலக் கடல் ஆதிக்க வரலாறு” என்ற கட்டுரை.
சங்ககால பரதவர்கள் (மீனவர்கள்) கடல் ஆளுமையில் சிறந்திருந்தார்கள் என்பதையும், சங்ககால மன்னர்கள் கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தார்கள் என்றும், அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற துறைமுகப் பட்டினங்களில் ரோமானிய நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன என்பதனையும் இராஜேந்திர சோழ மன்னனின் கடாரத்திற்கான போர் ஆகிய செய்திகளை அக்கால சமூக, பொருளாதார, அரசு அமைப்புக்களுடன் இணைத்துப் பார்க்கும் வகையில் கட்டுரையாளர் இக்கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.
பரதவர்களின் ஆதிக்கம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என அமைந்திருந்தது. ஆக இந்த ஆதிக்கம் பொருளாதார ஆதிக்கம் என்ற வகையில் அமைகின்றது.
அயல்நாட்டவர்கள் தமிழகத்தின் பண்டைய நகர்களுக்கு வந்து வணிகம் மேற்கொண்டபோது வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஏற்ற உள்நாட்டுப் பொருட்கள் பரிவர்த்தனைச் செய்யப்பட்டன. இதனால் பரிமாற்றம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் பொருள் உற்பத்தி என்பது நிகழ்ந்தது. மிளகு, விலையுயர்ந்த கற்கள், முத்து, பட்டு, பருத்தித் துணி என்பன இவ்வகை உதாரணங்களில் அடங்குகின்றன.
இனக்குழு சமுதாயத்தில் சிற்றரசர்களே வணிகம் செய்வதும் நிகழ்ந்தது.
வணிக முதலீடு வணிக குழுக்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. நிகமம், சாத்து என்ற வணிகக்கூட்டங்கள் உருவெடுத்தன.
சங்ககால மன்னர்கள் மற்றும் குடிகளின் வீழ்ச்சிக்கு கடல்கோளும் மிக முக்கியக் காரணமாகியது.
சாத்து, நிகமத்தைச் சார்ந்த பெரும் வணிகர்கள், பல்லவர்கால சிறுபாண்மை உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து திசையாயிரத்து ஐந்நூற்றுவராக உருவாகினார்கள். இந்த அமைப்பு வேளாண்மை சிற்பாண்மை உற்பத்தியாளர்களும் நிகம, சாத்து வணிக சந்ததிகளும் சேர்ந்தே உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பு பல்லவர் காலத்தில் 3ம் நந்திவர்மன் காலத்தில் ஏற்பட்டது. கீழையனூர் கிராமத்திலிருந்து ஒரு நிலக்கிழார் மணிக்கிராமத்து வணிகர்களுடன் தாய்லாந்து சென்று அங்கே ஒரு குளத்தை வெட்டி அது பாதுகாப்பாக இருக்க மணிக்கிராமத்தார் வசம் ஒப்படைத்துள்ளார் என்ற கல்வெட்டுச் செய்தியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.
மலேசிய சிங்கை தவிர்த்து ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கான தமிழட்களின் கடல் ஆளுமை என்பது தற்சமயம் பேசப்படாத ஒரு விசயமாகவே இருக்கின்றது. தமிழகத் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் இந்த நோக்கில் ஆய்வு செய்ய முற்பட வேண்டும். இதன் வழி மேலும் பல தகவல்களைப் பெற வாய்ப்பிருக்கும். அது தமிழர் வரலாற்றை மேலும் விரிவாக அறிந்து கொள்ள உதவும்!
சுபா
No comments:
Post a Comment