Sunday, March 12, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 109

பத்துப்பாட்டு மூல நூலோடு மேலும் சில படிகள் கிடைத்தால் ஒப்பீடு செய்து ஆராய்ந்து அதனை முறையாக வெளியிட முடியும் என்ற எண்ணம் உ.வே.சா மனதில் இருந்தது. ஆக, அவரது எண்ணம் நிறைவேறாத நிலையிலேயே திருநெல்வேலியிலிருந்து கும்பகோணம் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனாலும் கும்பகோணம் திரும்பிய பின்னரும் நெல்லையில் தனக்கு அறிமுகமானோருக்கெல்லாம் எழுதி எங்காகினும் மேலும் சில பிரதிகள் கிடைக்குமா எனத் தேடும் முயற்சியை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

திருநெல்வேலியில் இருந்த போது ஆழ்வார் திருநகரியில் படித்த சான்றோர் சிலர் இருப்பதாகக் கேள்விப்பட்டது அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்து கொண்டிருந்தது. ஆகச் சரியான வாய்ப்புக்குக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆவணி அவிட்டம் விடுமுறை தொடங்கியது. கல்லூரியில் விடுமுறை என்றவுடன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆழ்வார் திருநகரி சென்று வருவோம் எனப் பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டுப் புறப்பட்டு விட்டார்.

உ.வே.சாவின் இந்த உத்வேகம் தான் அவரது தனிச் சிறப்பு. தான் செய்து முடிக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்ட பத்துப்பாட்டு பதிப்பாக்கத்திற்காக அவரது மனம் அல்லும் பகலும் அதே நினைவுடன் இருந்தமையும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அவரது உழைப்பின் தீவிரத்தை நன்கு பிரதிபலிக்கின்றன. இந்த உத்வேகம் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொண்ட காரியங்களை ஒருவரால் சாதிக்க முடியும். பலர் இதைச் செய்யப்போகின்றேன், அதைச் செய்யப்போகின்றேன் எனச் சொல்லிக் கொள்வதோடு நின்று விடுகின்றனர். காரியத்தில் இறங்குவதில்லை. ஏனெனில் ஒரு காரியத்தைச் செய்ய அதற்கான உழைப்பைப் போட வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதற்குத் திட்டமிடுதல் வேண்டும். பின் அதனைச் செயல்படுத்தும் திறனும் வேண்டும். பலருக்கு அதற்குப் பொறுமை இருப்பதில்லை. இதனால் செய்ய நினைக்கும் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்காமல், தனது இயலாமைக்குப் புறத்தே காரணத்தைத் தேடி தம் இயலாமைகளைப் பார்த்து சரி செய்து கொள்ளத்தவறி விடுகின்றனர்.

ஒரு வழியாக அந்த விடுமுறையில் ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார் உ.வே.சா. அங்குச் சுப்பையா முதலியாரவர்களுடன் சேர்ந்து ஸ்ரீ வைகுண்டம் சென்றார். போகும் போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள ஏடுகளை அலசிப் பார்த்தார். அங்குப் பத்துப்பாட்டு கிடைக்கவில்லை. வேறு சில நண்பர்கள் இல்லங்களிலும் தேடினார். அங்கும் இவை கிடைக்கவில்லை. சட்டென்று லட்சுமண கவிராயர் என்பவர் தனது மாமனார் இல்லத்தில் பல சுவடிகள் இருப்பதாகச் சொல்லி அவரிடமிருந்து கேட்டுச் சொல்வதாகச் சொல்லிச் சென்றார். மாலை திரும்பி வந்த போது தன் மாமனாரிடம் ஒரு சுவடிக்கட்டுத்தான் இருந்ததாகவும் அதனைப் பார்த்து உ.வே.சா தேடும் நூல்கள் அதில் உள்ளனவா எனப்பார்க்கும் படியும் கேட்டுக் கோண்டார்.

அந்தச் சுவடிக்கட்டை நிலா வெளிச்சத்திலேயே உ.வே.சா பிரித்துப்பார்த்தார். வியப்பில் ஆழ்ந்தார்.
முல்லைப்பாட்டு என்ற பெயர் அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது.

அவருக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. முதலிலிருந்து திருப்பி திருப்பி அந்த நூலைப் பார்த்தார். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக அந்த சுவடிக்கட்டில் இருந்தன.

அன்றிரவு முழுவதும் மகிழ்ச்சியில் அவருக்குத் தூக்கம் வரவில்லை என்பதை அவர் "என் சரித்திரத்தில்" குறிப்பிடும் போதே அவரது மனதின் ஆர்வமும், உற்சாகமும், மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன.

அதன் பின்னர் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் பிரதிகளையும் லஷ்மண கவிராயரிடம் வாங்கிக்கொண்டு, ஆழ்வார் திருநகரியிலிருந்து திருநெல்வேலி வந்து அங்கே பார்க்க வேண்டிய நண்பர்களையும் பார்த்து விட்டுத் திரும்பியிருக்கின்றார்.

நானும் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி போன்ற ஊர்களுக்குச் சென்றிருக்கின்றேன். இன்று இருக்கின்ற போக்கு வரத்து வசதிகளின் நிலையைக் கணக்கில் கொண்டாலும், இந்தப் பயணம் எடுக்கும் கால நேரம் மற்றும் தேடுதலுக்காகச் செலவிடும் நேரம் ஆகியனவற்றை நினைத்துப் பார்க்கும் போது அதிலிருக்கும் சிரமத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைந்த நிலையில் கூட தனக்குக் கிடைத்த விடுமுறை நாட்களை சுவடிகளைத் தேடி ஆய்வு செய்து பதிப்பிக்கும் முயற்சிக்காகவே உ.வே.சா செலவிட்டமையை எண்ணி அவரது உழைப்பை எண்ணிப் பார்க்கின்றேன். அந்த மகத்தான உழைப்பின் பலனாகத்தான் இன்று நமக்குச் சங்கத்தமிழ் நூல்கள் கிடைத்திருக்கின்றன என்பதைப் புரிந்து அந்த உழைப்பைப் போற்ற வேண்டியது தமிழ் மாணவர்கள் நம் அனைவரது கடமையும் அல்லவா?


தொடரும்..
சுபா

No comments:

Post a Comment