Thursday, September 26, 2013

Robert Langdon is back..- Church of Dante - 10

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரோபர்ட் லாங்டன் ஞாபகத்திற்கு வர இன்று மேலும் ஒரு பதிவு.

போபோலி கார்டனைப் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இன்று ஒரு தேவாலயத்தைப் பற்றியதாக இப்பதிவு.

இன்பெர்னோ கதாநாயகன் டாண்டேவின் வாழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகவுகளில் அவரது காதலியுடனான முதல் சந்திப்பு அவர் மனதை விட்டு அகலாத ஒன்றாகப் பதிந்து அந்த காதல்  நினைவுடனேயே இறந்தார் எனவே குறிப்புக்கள் சொல்கின்றன.. டாண்டேவின் காதலி பியாட்ரிஸ்!

டாண்டே-பியாட்ரிஸ் காதல் நிறைவேறவில்லை. டாண்டேவின் இறுதி காலம் வரை அவர் மனதை விட்டு அகலாமல் மனதில் குடிகொண்டிருந்தவர் பியாட்ரிஸ். இதனை தனது இலக்கியமான  The Devine Cemedy யிலே வெளிப்படுத்துகின்றார் டாண்டே. டாண்டேவைப் போலவே பியாட்ரிஸ் நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்கத்தான் முடியும்.

பியாட்ரிஸ்

இந்தக் காதலர் முதலில் சந்தித்த நேர்ந்த இடம் ஒரு தேவாலயம். The church of Santa Margherita dei Cerchi என்பதே அது. ப்ளோரன்ஸ் நகரின் மைய வர்த்தகப் பகுதியைக் கடந்து ரயில் நிலையம் நோக்கிச் செல்ல முற்படும் போது தென்படும் ஒரு சிறு சாலையில் கட்டிடங்களுக்கிடையே அமைந்திருக்கும் ஒரு தேவாலயம் இது. டாண்டேவின் முக்கியத்துவம் அறியாமலேயே நான் சென்று பார்த்து வந்த இடம் இது எனும் போது ஒரு ஏமாற்றம் மனதில் தோன்றுகின்றது. டாண்டேவின் பின்னனியை அறிந்து கொண்டு இந்த தேவாலயத்தை பார்க்கும் போது இந்த தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எனக்கு ஒரு தனி கதை சொல்லும் என்பது உறுதி.

The church of Santa Margherita dei Cerchi  என அழைக்கப்பட்டாலும் Church of Dante  என்றே பரவலாக அறியப்படுவது இது.

பியாட்ரிஸ் -டாண்டே முதல் சந்திப்பு


இந்த தேவாலயம் செர்ச்சி, டோனாட்டி, அடிமாரி ஆகிய குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு தேவாலயம். இதனுள் டோனாட்டி குடும்பத்தினர் சிலரது கல்லறைகளும் உள்ளன.    டாண்டேவின் காதலி பியாட்ரிஸ் போர்ட்டினரி குடும்பத்தைச் சேர்ந்தவர். டாண்டே ஒரு குடும்ப நிகழ்வில் தான் முதல் முதலாக பியாட்ரிஸை இந்த தேவாலயத்தில் காண்கின்றார். முதல் பார்வையே காதலாக மலர்ந்ததாம். ஆனால் அவர் மணந்ததோ கெம்மா டொனாட்டி என்ற பெண்ணை. பியாட்ரிஸின் தந்தை போல்கோ போர்ட்டினரியின் கல்லறையும் இந்த தேவாலயத்தினுள்ளே இருக்கின்றது.


தேவாலயம்

1032ம் ஆண்டில் கட்டப்பட்டதாக இந்த தேவாலயம் அறியப்படுகின்றது. ஆனாலும் கட்டப்பட்டு 400 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு நடைபெறும் நிகழ்வுகளும் அதற்கு மூல காரணமாக இருக்கும் டாண்டேவின் பெயரைச் சொல்லும் ஒரு சிறப்பிடமாக இந்த தேவாலயம் விளங்குவதே ஒரு தனிச்சிறப்பு.

இந்த தேவாலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் காதல் நிறைவேற விரும்பி ஒரு கடிதம் எழுதி பியாட்ரிஸுக்கு தெரிவிப்பது என்பது இங்கு ஐதீகமாக இருக்கின்றது. டாண்டே-பியாட்ரிஸ் காதல் நிறைவேறாவிட்டாலும் பியாட்ரிஸ் பிறரது காதல் நிறைவேற ஆசிர்வதித்து உதவுகிறார் என்பது இங்கு நம்பிக்கையாக இருக்கின்றது.


பியட்ரிஸுக்கு காதலர்கள் அனுப்பும் வேண்டுதல் கடிதங்கள்

இன்பர்னோவில் நூலாசிரியர் ப்ரவுன், ரோபெர்ட்டும் சியன்னாவும் இங்கே சில நிமிடங்கள் செலவிடுவதைக் குறிப்பிடுகின்றார். ஐந்து நிமிடங்களே என்றாலும் அந்த 5 நிமிடங்களுக்கு அவர் தரும் விளக்கமும் இந்த தேவாலயம், டாண்டேவின் வரலாற்றுப் பின்னனி என எல்லாமுமே நம்மை இந்த தேவாலயத்தின் பால் ஓர் ஈர்ப்பைத் தரத் தவறுவதில்லை. சரி நண்பர்களே.. வாசித்து விட்டீர்களா .. இன்பெர்னோவை..??

சுபா
குறிப்பு - படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.

No comments:

Post a Comment