Thursday, February 29, 2024

எழுத்தாளர் ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்

 எழுத்தாளர் ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் என்ற நாவலை அண்மையில் ஒரு நூல் திறனாய்வு நிகழ்ச்சிக்காக வாசிக்க நேர்ந்தது. வாசித்து முடித்த பின்னரும் மனதில் பல நிகழ்ச்சிகள்.. இந்த நாவல் தொடர்பானவை.. எண்ண ஓட்டங்களாக எழுந்து கொண்டிருக்கின்றன.



கதைக்களம் 1940 காலகட்டம்..அன்றைய மலாயா.
1941 இறுதி காலகட்டத்தில் ஜப்பானியர்கள் கிழக்காசிய நாடுகளில் தங்கள் தடம் பதித்து சீனாவில் இருந்து பர்மா வரை... தெற்கே மலாயா சிங்கை என பல நாடுகளையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வரத் தொடங்கிய காலகட்டம்.
1942 ஆம் ஆண்டு காலவாக்கில் மலாயா முழுவதுமாக ஜப்பானியர் கைவசம் வந்துவிட, இக்காலகட்டத்தில் தாய்லாந்து பகுதியில் இருந்து பர்மா... பர்மாவில் இருந்து இந்தியாவை நில வழியாக சென்றடைந்து அதனையும் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையுடன் ஜப்பானியப் படைகள் சயாம்-பர்மா மரண ரயில்வே பாதை அமைக்கும் திட்டமும் தொடங்கிய காலமாகும்.
இக்காலகட்டத்தில் அதற்கு முன்பிருந்து தமிழ்நாட்டிலிருந்து லேவாதேவி பண பரிவர்த்தனை செய்யும் தொழில்.. வியாபாரிகளுக்குப் பணம் வட்டிக்குக் கொடுக்கும் தொழில் செய்யும் வயிரவன் பிள்ளை குடும்பத்தார் பற்றியும் அவர்கள் பினாங்கு மாநிலத்திற்கு வந்து அங்கு சிறப்பாகத் தங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் போது அவர்களது "சாதி சனங்களையும்" வரவழைத்து அவர்களுக்குத் தொழில்முறை பயிற்சி அளித்து அவர்களும் தொழில் செய்வது என்பது போன்ற பல செய்திகள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன.
அப்படி வயிரவன் பிள்ளையால் கொண்டுவரப்படுபவன் தான் செல்லையா. வயிரவன் பிள்ளைக்கு வடிவேல் என்று ஒரு மகன். அவனை படிக்க வைக்க வேண்டும் என மலாயா கொண்டு வருகின்றார். படித்துக் கொண்டிருக்கும் பிள்ளை ஜப்பான் பிரிட்டிஷ் போரின் போது கொல்லப்படுகின்றான். எஞ்சி இருப்பவள் மரகதம் என்ற ஒரு பெண் மகள். தன் மகள் மரகதத்தை செல்லையாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்.. தன் தொழிலையும் வழங்க வேண்டும் என வயிரவன் பிள்ளை கற்பனை கோட்டையில் இருக்கின்றார்.
ஆனால் செல்லையா இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கும் ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் விடுதலை வேண்டும் என நினைத்து சுபாஷ் சந்திரபோஸ் அமைக்கின்ற இந்திய படையில் இணைகின்றான். படிப்படியாக வளர்ந்து அந்த ராணுவ அமைப்பில் பெரிய பதவிக்கு ஓராண்டிற்குள் வந்து விடுகின்றான். இது வயிரவன் பிள்ளைக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
1945ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் கொல்லப்படுவது.. அதற்குப் பிறகு ஜப்பானிய படைகள் வீழ்ச்சி என படிப்படியாக செல்லையா இந்திய ராணுவத்திலிருந்து வெளிவந்து இயல்பான குடும்பம், தொழில் என தனது வாழ்க்கையை மாற்றி பயணத்தைத் தொடர நினைக்கின்றான். ஆனால் வயிரவன் பிள்ளைக்கு செல்லையாவிற்கு மரகதத்தை திருமணம் செய்து வைக்க துளியும் விருப்பமில்லை.
மரகதமும் செல்லையாவும் காதலிக்கின்றார்கள். ஆனால் வயிரவன் பிள்ளை செல்லையாவிற்குப் பெண்ணை கொடுப்பதில்லை என உறுதியாக முடிவு செய்து தனது கடையிலேயே வேலை செய்யும் இன்னொரு ஆளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விடுகிறார். பக்குவமாக செல்லையாவிற்கு இந்தச் செய்தியைச் சொன்னாலும் இறுதியில் செல்லையா எதிர்த்து குரல் கொடுக்கின்றான். ஆனால் மரகதத்தின் கண்ணீரும் காமாட்சியம்மாள் கண்ணீரும் செல்லையாவின் உறுதியும் வயிரவன் பிள்ளை முன்னால் எடுபடவில்லை.
குடும்பத்தாரையும் தனது கடையிலேயே வேலை செய்யும் மாப்பிள்ளையும் அழைத்துக் கொண்டு இந்தியாவுக்குச் செல்ல ஆயத்தமாகிறார் வயிரவன் பிள்ளை. செல்லையா சிங்கப்பூருக்குப் புறப்படுகிறான். இதுதான் கதையின் சாரம்.
நாவலில் ஆங்காங்கே மலாய் சொற்கள் இடம்பெறுகின்றன. பினாங்கில் எனக்கு நன்கு பரிச்சயமான டத்தோ கிராமட் சாலையில் அவர்களது வீடு இருப்பது போன்று நூலாசிரியர் குறிப்பிடுவதும் ரிக்க்ஷாகாரர்களிடம் மலாய் மொழியில் பேசுவது போன்று சொல்லாடல் உரையாடல்கள் இடம் பெறுவதும் எனக்கு மலேசியாவில் இருந்து கொண்டு ஒரு காட்சியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
செட்டி ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகின்ற மார்க்கெட் ஸ்ட்ரீட், சூலியா ஸ்ட்ரீட் போன்ற சாலைகளில் செட்டியார்களின் கடைகள் பற்றிய விவரங்கள்... பணம் வட்டிக்குக் கொடுக்கும் தொழில் பற்றிய விரிவான விளக்கங்கள் போன்றவை இன்றும் அங்குள்ள லிட்டல் இந்தியாவை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.
இரண்டாம் உலகப் போர் என்றால் ஜெர்மனியர்களும் பிரிட்டிஷ் அமெரிக்கா ஃபிரான்ஸ் கூட்டுப் படைகளும் தான் என நினைக்கும் நமக்கு மீண்டும் ஒருமுறை ஜப்பானியர்களின் இரண்டாம் உலகப் போர் அட்டூழியங்கள் இந்த நாவலின் வழி வரலாற்றுப் பதிவாகவும் அமைகின்றது.
எழுத்தாளர் ப. சிங்காரம் இதே காலகட்டத்தில் இந்தோனேசியாவின் மேடான் நகருக்குத் துணி வணிகம் செய்வதற்காகச் சென்றவர். அங்கே பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தவர். பிரசவ நேரத்தில் குழந்தையும் மனைவியும் இறந்து போகவே அதற்கு பின்னர் இரண்டாம் உலகப் போர் முடிந்து தமிழ்நாடு திரும்பினார். ஆனால் அவர் பலமுறை முயற்சி செய்தும் மீண்டும் மலாயா செல்ல முடியாத சூழல் நிகழ்ந்தது. இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் மிக இயல்பாக தமிழ்நாட்டிலிருந்து மலாயா சென்று வந்து கொண்டிருந்தனர் பல தமிழ் வணிகர்கள். அந்தச் சூழல் சுதந்திரத்திற்குப் பின் மாறியது. பல அரசாங்க ரீதியான கட்டுப்பாடுகள் இந்தப் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக மாறின. நூலாசிரியர் பின்னர் தமிழ்நாட்டில் உள்ளூர் பத்திரிக்கையில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமானார்.
இரண்டு நாவல்களை மட்டுமே எழுதி இருந்தாலும் ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்களுமே வரலாற்று பொக்கிஷங்கள். அன்றைய மலாயாவின் வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல்கள் வாசகர்களுக்கு மிகச்சிறந்த ஆவணங்களாகவும் திகழ்கின்றன. வாங்கி வாசிக்க தவறாதீர்கள்.
-சுபா
27.2.2024
குறிப்பு: இந்த நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

No comments:

Post a Comment