நம்மோடு துணையிருந்து நமது வளர்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்பவர்கள் என்றென்றும் நம்முடன் இருக்க வேண்டும் என்றே எப்போதும் நம் மனம் நாடும். அத்தகையோரை மரணம் என்ற ஒன்று அழைத்துக் கொள்ளும் போது அதனை ஏற்றுக் கொள்ள நம் மனம் விரும்புவதில்லை. அதனை எதிர்கொள்ளும் நிலை துன்பகரமானதும் கூட. இத்தகைய இழப்புக்கள் தான் வாழ்வின் நிலையாமையை நாம் அனுபவப்பூர்வமாக உணர வைப்பவை.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மறைவு உ.வே.சாவின் வாழ்வில் மறையாத மனக்காயமாக இருந்தது. அவருக்குப் பின்னர் தாயாகவும், தந்தையாகவும், ஆசானாகவும் இருந்து உ.வே.சாவிற்கு பல வகையில் வழிகாட்டியவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர். அவர் 7.1.1888 அன்று சிவபதம் அடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டு ஏற்பாடு செய்திருந்த தம்பிரானே புதிய சன்னிதானமாகப் பொறுப்பெடுத்துக் கொண்டார் என்ற செய்தி உ.வே.சாவுக்கு எட்டியது. இது சற்றும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிகரமான தகவலாக அமைந்தது. சிந்தாமணி வெளிவந்து அது தரும் மகிழ்ச்சியைக்கூட இன்னமும் முழுமையாக உணராத நிலையில் சட்டென்று நிகழ்ந்த இந்த துன்பகரமான நிகழ்வு உ.வே.சா வின் மனதில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. கலங்கிய மனத்துடன் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார். அப்போது அவரது மன நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"நின்ற இடத்திலே நின்றேன்; ஒன்றும் ஓடவில்லை; புஸ்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்று விட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி, எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்த மகோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன். என் துக்கத்தை ஆற்றிக் கொள்ள வழியில்லை."
தன் வேதனைக்கு வடிகாலாக சுப்பிரமணிய தேசிகரை நினைத்து சில செய்யுட்களையும் வெண்பாக்களையும் இயற்றினார். அவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுகின்றார்.
“தெய்வத் தமிழின் செழுஞ்சுவையைப் பாராட்டும்
சைவக் கொழுந்தின் சபைகாண்ப தெந்நாளோ?”
“இன்றிரப்பார் வந்தா ரிலரென் றியம்புகுணக்
குன்றின்மொழி கேட்டுவகை கூருநாள் எந்நாளோ?”
அந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு தனிமையிலே வருந்தினேன். என் துரதிருஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டேன். அன்று இரவே புறப்பட்டு உடன்வந்த சிலருடன் நேரே திருவாவடுதுறையை அடைந்தேன்."
ஆதீனத்தில் அதற்குள் புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட 17வது பட்டம் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் உ.வே.சா வைப் பார்த்ததும் கணிவுடன் ஆறுதல் கூறிப் பேசினார். மடத்தில் எல்லா பூஜைகளும் கடமைகளும் ஒழுங்குடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இவர் தேடிய உருவமும் அன்பே உருவாக புன்னகையுடன் உ.வே.சாவை வரவேற்கும் சுப்பிரமணிய தேசிகரோ அங்கில்லை. எல்லாம் வெறிச்சோடிப் போனது போன்ற உணர்வினை அடைந்தார் உ.வே.சா.
குரு பூஜையின் இறுதி நாளில் உ.வே.சா புறப்பட்டு விட்டார். அன்று பரிபூரணம் அடைந்த தேசிகரின் நினைவாக இரங்கற்பாடலகளும் புதிய ஆதீனகர்த்தரை வாழ்த்தி செய்யுட்களும் பாடப்பட்டன. அப்போது சுப்பிரமணிய தேசிகரின் நற்செயல்களுள் ஒன்றாகிய சிந்தாமணி பதிப்பிற்கு உ.வே.சாவிற்கு உதவியமையை நினைத்து பாடப்பட்ட ஒரு செய்யுளுக்குப் பழனிக் குமாரத்தம்பிரானென்பவர் விளக்கமளிக்க, அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அதனை உ.வே.சா கீழ்க்காணும் வகையில் பதிகின்றார்.
"ஆதீனத்து அடியாராகிய பழனிக் குமாரத் தம்பிரானென்பவர் தாம் இயற்றிய இரங்கற் பாக்களை வாசித்து வந்தார். அவற்றுள் ஒரு பாட்டின் பகுதியாகிய, “குருமணி சுப்பிரமணிய குலமணியா வடுதுறைப்பாற் கொழித்துக் கொண்ட ஒரு மணி சிந்தாமணியை யுதவுமணி” என்பதற்குப் பொருள்
சொல்லும் போது, “சிந்தாமணியை உதவுமணி” என்ற பகுதிக்கு, ‘இந்த மடத்தில் தமிழ்க் கல்வி கற்று இப்போது கும்பகோணம் காலேஜிலிருக்கும் சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பிப்பதற்கு ஊக்கமளித்துப் பிரதி முதலியன கொடுத்த மகாஸந்நிதானத்தின் அருஞ் செயலை நினைத்தும் சொன்னேன்’ என்று ஒரு காரணம் கூறினாராம். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர், “சைவ மடமாகிய இந்த இடத்தில் ஜைன நூலுக்குச்
சிறப்புத் தருவது நியாயமன்று. சாமிநாதையர் இந்தமடத்திற்கு வேண்டியவராக இருந்தும் உமாபதி சிவாசாரியார் ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ என்று சொல்லியிருக்கும் ஜைன நூலை அச்சிட்டது தவறு. அதை நாம் கண்டிப்பதோடு அந்த நூல் பரவாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்” என்றாராம். அவர் அயலூரிலிருந்து வந்து மடத்திற் சில காலம் தங்கியிருந்தவர். எனக்கும் பழக்கமானவரே. அதைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும் திடுக்கிட்டனர். அவர் பால் அவர்களுக்குக் கோபமும் உண்டாயிற்று. அவரை உடனே எதிர்த்துத் தக்க நியாயங்கள் கூறி அடக்கி விட்டார்கள். என் நண்பராகிய புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் அவர்மீது சில வசை கவிகளைப் பாடிப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர் காதிற் படும்படி சொல்லிக் காட்டச் செய்தார்."
ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தம்பிரான் அவர்களே மத துவேஷம் எனப்பாராமல் சமண காவியமாக இருந்தாலும் சிந்தாமணியை உ.வே.சா அச்சுப்பதிப்பாகக் கொண்டு வரவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியதோடு அப்பணியில் மிக உறுதுணையாகவும் இருந்தவர். அதே மடத்திலேயே ஒருவர், அதிலும் சன்னிதானத்தின் குருபூஜையில் இவ்வாறு பேசியது உ.வே.சா விற்கு பெறும் மன வருத்ததை ஏற்படுத்தியது.
என்ன செய்வது ?
நல்ல காரியங்கள் செய்தோரை சொற்களால் துன்புறுத்தும் நிகழ்வுகளைத் தயங்காமல் செய்வோரும் இந்த உலகில் இருக்கத்தானே செய்கின்றனர். இத்தகையோர் குறுகிய சிந்தனைக் கொண்டவர்களே. அதிலும் குறிப்பாக மதம் தொடர்பான கருத்துக்கள் எழும் போது தீவிர மத சார்பார்பாளர்களாக இருப்போர் பலர் தம் மதத்தைத் தூக்கி பிடித்து உயர்த்திக்காட்ட நினைத்து பிற மதத்தோரிடம் நெருங்குவதும் இல்லை. அல்லது பிற மதத்து தத்துவங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை. இது ஒரு எல்லைக்குள் தம்மை வைத்துக் கொண்டு அதற்குள் மட்டுமே வாழும் நிலையை இத்தகையோருக்கு வழங்கும். பொது உலக அறிவும் அது தரும் தெளிவும் இத்தகைய நிலையில் இருப்போருக்கு எட்டாக்கனியே!
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment