Friday, November 18, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 105

சீவகசிந்தாமணி நூல் வடிவம் பெற்றாகி கைகளில் கிடைத்துவிட்டது. அது ஒரு சாதனை நிகழ்வு. ஆனால் அந்தச் சாதனையை நிகழ்த்த உ.வே.சா செலுத்திய உழைப்பு மிக அதிகம். கடமை உணர்வுடன், எடுத்துக் கொண்ட குறிக்கோளில் சிறிதும் சிந்தனை மாற்றம் கொண்டு கைவிட்டு விடாது, செய்ய நினைத்த காரியத்தை நிறைவேற்றி முடித்து விட்டார். ஆனாலும் அச்சகத்தாருக்குக் கொடுக்க வேண்டிய பண பாக்கி அவரை வருத்திக் கொண்டிருந்தது. நூல் வெளிவந்த உடனேயே யாரெல்லாம் பணம் கொடுத்து நூற்களை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியிருந்தார்களோ அவர்களிடம் தனித்தனியாக, வீடு வீடாகச் சென்றும், கடிதங்களை எழுதி அஞ்சல் வழி அனுப்பி நினைவு படுத்தி பனத்தைப் பெற்று நூலை வழங்குவது என்ற வகையிலும் அவரது பணிகள் தொடர்ந்தன. இது அலுப்பைத் தருவதாகவே இருந்தது.

எவ்வளவு பெரிய அருங்காரியத்தை ஒரு மனிதர் செய்து முடித்திருக்கின்றார்.. வீடு தேடிச் சென்று நூலை வாங்கிக் கொண்டு காசைக் கொடுத்து அவரைக்காப்பாற்றுவோமே.. என்ற எண்ணம் பொதுவாகவே பெரும்பாலோருக்கு இல்லை. இதுதான் யதார்த்தம். கேளிக்கைகளுக்குத் thaamee தேடிச் சென்று பணத்தைச் செலவு செய்யத் துணியும் மக்களுக்கு அறிவுக்கு விருந்தாகும் நல்ல நூற்களை ஆதரிக்கும் பண்பு என்பது இருப்பதில்லை. இது இன்றும் தொடரும் நிலைதான்.

அப்படிக் காசு கொடுத்து நூற்களைப் பெற்றுக்கொள்வதாகச் சொன்னவர்களுள் ஒருவர் பூண்டி அரங்கநாத முதலியார். அவர் வீடுதேடி உ.வே.சா செல்ல, அவர் இல்லாததால் பெரும் அலைச்சலுக்குப் பின்னர் வீடு திரும்புகின்றார். ஆனாலும் அவர் பணம் தந்து உதவுவார் என்று கருதி அவருக்காக, அவரைப்புகழ்ந்து செய்யுள் பாடி அதைக்கடிதமாக அனுப்புகின்றார். அது சென்றடைந்த சில நாட்களில் அரங்கநாத முதலியாரிடமிருந்து ஒப்புக்கொண்ட பணம் வந்து சேர்கின்றது. புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார்? விரும்புகின்றோமோ இல்லையோ.. துன்பம் ஏற்படும் காலத்தில் பொருள் படைத்தோரையும் வலிமைப்படைத்தோரையும் புகழ வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது மிகவும் வருத்தம் தரும் ஒரு அனுபவமாகத்தான் இருக்கும். ஆயினும் சூழ்நிலை அறிந்து சிலகாரியங்களைப் பொறுத்துக் கொண்டு சிலவற்றை அனுசரித்துக் கொண்டு செல்ல வேண்டியதும் நமக்குப் பல வேளைகளில் ஏற்பட்டு விடுவதை நமது சொந்த வாழ்க்கையிலேயே சந்தித்திருப்போம். அவற்றையெல்லாம் கடந்து சென்றால் தான் அடுத்தடுத்த காரியங்களை நம்மால் தொடரவும் முடியும் அல்லவா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தியாகராச செட்டியாரைப் பார்க்கும் வாய்ப்பு உ.வே.சாவிற்குக்கிட்டியது. திருச்சிக்கு ஒரு மாணவரைப் பார்க்கும் நிமித்தம் சென்றிருந்த உ.வே.சா, ஸ்ரீரங்கத்தில் பணியில் இருந்தார். திடீரென்று அவர் வீட்டுக்குச் சென்று அவர் வாசல் கதவைத்தட்ட, உ.வே.சாவைப் பார்த்த தியாகராச செட்டியாருக்கு ஆனந்தம் கரை புரண்டது. "உன்னையே நினைத்துக் கொண்டு படுத்திருக்கின்றேன் " எனச் சொல்லிக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொண்டாராம். இவ்வளவு அன்பினை அவர் காட்டுவார் என்று எதிர்பாராத உ.வே.சா விற்கு மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது. சிந்தாமணி பதிப்புப்பணியை உ.வே.சா முடித்தார் என்ற மகிழ்ச்சி தான் அந்த அன்பிற்குக்காரணம் எனச் சொல்லவும் வேண்டுமா?

தாமும் சிலருக்கு சிந்தாமணி நூற்களை கொடுத்து பணம் புரட்டி உ.வெ.சாவிடம் மறு நாள் கொடுத்தார். நேரம் போவது தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். சிந்தாமணியிலுள்ள தம்மைக் கவர்ந்த இடங்களையெல்லாம் உ.வே.சா வாசித்துக் காட்ட கண்களில் கண்ணீர் மல்க அவற்றைக்கேட்டு ஆனந்தமுற்றிருந்தார் தியாகராச செட்டியார். இப்படிக் கேட்டுக் கொண்டிருந்த தியாகராச செட்டியார், சட்டென்று நூலில் பலருக்கு நன்றி சொல்லியிருக்கும் உ.வே.சா, தன் பெயரை ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லையே என தன் மனதில் தோன்றிய ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொன்னார்.

ஒரு சிறிய காரணத்திற்காகத் தியாகராச செட்டியாரின் பெயரை உ.வே.சா அதில் இணைக்கவில்லை. ஆனால் அந்தப் பொழுதில் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணர்ந்தார். தன் வாழ்க்கையில் மகாவித்துவான், ஆதீனகர்த்தர் ஆகிய இருவருக்குப்பிறகு தனக்குப் பல முக்கிய வேளைகளில் உதவியவர் தியாகராச செட்டியார்தான். கும்பகோணம் கல்லூரியில் தனக்கு வாய்த்திருக்கும் ஆசிரியர் பணியை ஏற்படுத்திக்கொடுத்தவரும் தியாகராச செட்டியார்தான். அப்படி இருந்தும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டது எவ்வளவு பெரிய தவறு என அப்போது அவர் சிந்தனையில் உதிக்க மனம் வருந்தினார். தான் செய்தது தவறு தான் என அவர் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

இந்த நிகழ்வை மனதில் வைத்துக் கொண்ட உ.வே.சா பிற்காலத்தில் தியாகராச செட்டியார் நினைவாக மூன்று காரியங்களைச் செய்திருக்கின்றார்.

  1. தனது பதிப்பாகிய ஐங்குறுநூற்றுப்பதிப்பைத் தியாகராச செட்டியாருக்கு உரிமையாக்கினார் 
  2. கும்பகோணம் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் தமிழ்ப்பாடம் படிக்கும் ஒரு சைவ மாணவருக்கு வருஷம்தோறும் கல்லூரி படிப்பு முடியும் வரை செட்டியார் பெயரில் நாற்பத்தெட்டு ரூபாய் கொடுத்து வந்தார். 
  3. சென்னைக்கு வந்த பிறகு தான் குடியேறிய இல்லத்திற்குத் தியாகராஜ இல்லம் என்று பெயர் சூட்டினார். 


இவை மூன்றையும் செய்த காலத்தில் தியாகராச செட்டியார் உயிருடன் இல்லை. இருந்து பார்த்து மனம் மகிழும் வாய்ப்பினை உ.வே.சாவும் அளிக்கவில்லை, காலமும் அதற்கு இடமளிக்கவில்லை. நமக்கு உதவியோருக்கும், நற்காரியம் செய்வோருக்கும் அவர்தம் வாழ்நாளிலேயே சிறப்பு செய்து அவர்கள் மனம் மகிழ வைப்பது தான் சிறப்பு. அதுவே அவர்களுக்கு மன ஆறுதலைத்தரும் விசயமாக அமையும். இல்லையென்றால் தக்க நேரத்தில் நமது நன்றியைக் காட்டவில்லையே என நம் மனம் நம்மை வாட்டித் துன்புறுத்தும். அது வேதனைத் தரும் ஒரு அனுபவமாக வாழ்நாள் முழுக்க வடுவாக நம் மனதில் பதிந்து விடும்!

தொடரும்.
சுபா

No comments:

Post a Comment