Tuesday, July 1, 2014

நினைவு மட்டும்..!


10 ஆண்டுகள் கழிந்து விட்டன..

ஜூலை 1. அம்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்து இன்றோடு 10 ஆண்டுகள்..!

பல விஷயங்கள்.. மனதில் எட்டிப் பார்த்து.. என்னை நினைக்க வைத்து மறைகின்றன.

மலேசியாவில் பினாங்கில் பாரமவுண்ட், ரெக்ஸ் என இரண்டு சினிமா தியேட்டர்கள். அங்கே தமிழ் படங்கள் தொடர்ந்து திரையிடப்படும். அம்மா அப்பாவோடு தமிழ் சினிமாவுக்கு அவ்வப்போது செல்வோம். மிகச் சிறிய வயதில்.. அப்போது பார்த்த ஆட்டுக்கார அலமேலு படம் ஏனோ மனதை விட்டு மறையவில்லை. படம் பார்க்கச் செல்கின்றோம் என்றால் பிக்னிக் செல்வது போல அம்மா ஏற்பாடு செய்வார். அன்றும் அப்படித்தான். கேக் செய்திருந்தார். தியேட்டருக்கு கேக் கொண்டு போய் பிக்னிக் போல சாப்பிட்டுக் கொண்டே படம் பார்த்தோம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் பல முறை தண்ணீர்மலை நீர்வீழ்ச்சிக்குச் சென்று விளையாடிய நாட்கள்.. அவையும் மனதை விட்டு அகலாது. ஆற்றின் ஓரத்தில் அம்மா உணவு பாத்திரங்களை வைத்துக் கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க நாங்கள் நீர் வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருப்போம்.

அப்போதெல்லாம் சுவைக்காத அம்மா சமைத்த உப்புமாவும் இட்லியும் இப்போது கிடைக்காது எனத் தெரிந்தும் ஏங்கும் மனதை கட்டுப்படுத்தி வைக்கும் துணிவு மனதிற்கு இல்லை.

மனம் நினைக்கின்றது. அம்மா இன்னும் கூட சில ஆண்டுகள் இங்கே.. இந்த உலகத்தில் என்னுடன் இருந்திருக்கலாம்..!

1 comment: