Monday, June 30, 2014

குடியரசில் பெரியார் உடன்....!- 9

காலத்துக்கு ஏற்ற சிந்தனை என்பது அத்தியாவசியத் தேவை. மனித மனம்   எதிர்கொள்கின்ற விஷயங்கள் புதிய பரிமாணங்களைக் காட்டுவதாகத்தான் நம் கண் முன்னே தோன்றி தன் இருப்பை நிலைப்படுத்துகின்றன. 

பழம் சிந்தனை.. பழம் பெருமை பேசுதல் என்பது எத்தகைய நன்மையை நம் சமூகத்துக்கு வழங்கும் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். 

பழமையின் சிறப்பினை போற்றுதல், அதன் சுவடுகளைப் பாதுகாத்தல் என்பது ஒரு விஷயம். இது நம் சமூக பின்புலத்தை அறிந்துகொள்ள உதவும் ஆய்வாகவும் வளர்ச்சி, கால மாற்றத்தினால் நிகழ்ந்த புதிய பரிமாணத்தை அறிந்து கொள்ளுதல் ஆகியனவற்றிற்கு உதவக் கூடியவையாக அமைபவை. இதனை பெரும்பாலும் நாம் நடைமுறைப்படுத்தாமல் ஒதுக்கி விடுகின்றோம்.

ஆனால், வெறும் பழம் பெருமை மட்டும் பேசிக் கொண்டு முன்னர் நாம் இப்படி இருந்தோம்..நம்மைப் போல வேறுண்டா எனச் சொல்லி மகிழ்வதால் கிடைக்கும் பலன் தான் என்ன? 

ஒரு வகையில் பார்க்கும் போது இப்படி பழம் பெருமையை வாயளவில் சொல்லி அந்த நேரத்திற்கு மகிழ்ந்து செல்வது ஒரு வித போதையை,மயக்கத்தை தரக்கூடிய ஒரு தற்காலிக மகிழ்ச்சி என்ற வகையில் தான் கொள்ள வேண்டியுள்ளது.

1934ம் ஆண்டு வெளிவந்த குடியரசு- புரட்சி இதழில் திரு.ஈ.வே.ரா வின் ஒரு தலையங்கத்தில் கீழ்க்காணும் வகையில் அவர் எழுதுகின்றார்

நமது பண்டைத் தமிழும் நமது பண்டை நாகரீகமும் சொல்லிக் கொண்டு வருவதின் போக்கைச் சிந்திக்கும் போது பள்ளிப் பிள்ளைகளின் பழைய பெருமைகளைப் பேசிக்களிக்கும் சம்பிரதாயத்தை ஒக்குமே ஒழிய வேறல்ல. அதாவது  ஒரு தனவந்தன் வீட்டுப் பையன் குதிரையின் மீது சவாரி செய்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கும் போது ஒரு கிழிந்ததும் அழுக்கடைந்துள்ளதுமான ஆடையைத் தரித்துக்  கொண்டிருக்கும் ஒரு ஏழைப் பையன் தனவந்தரின் பையனைப் பார்த்துவிட்டு எங்கள் தாத்தா கூட இதைவிட ஒரு உயர்ந்த குதிரை மீதுதான் எப்போதும் சவாரி செய்வாரென்று  சொல்லி மகிழ்வதையொக்கும்.  தாத்தா குதிரை சவாரி செய்த இருப்பிடத்தில் ஏற்படக்கூடிய காய்ப்புக்கூட இவனிருப்பிடத்தில் உண்டா என்றால் அதுவுமிராது. இம்மாதிரியான பிரயோசனமற்ற விஷயங்களால் மக்களுக்கு ஏற்படும் பயன் யென்னவென்பதே நமது கேள்வி. 

ஒரு பக்கம் பழம் பெருமை பேசும் இந்த வித்வான்கள் மறு பக்கம் சாதி சமூக வேறுபாட்டினை வளர்க்கும் வகையில் செயல்பாட்டினை ஆற்றுவதும் செயல்படுவதும் ’சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்றும் குறிப்பிட்டு அதே தலையங்கத்தில் திரு.ஈ.வே.ரா சாடி விளக்குகின்றார்.

நம் நாட்டவரும் மற்ற நாட்டாரோடு சம வாழ்வு, சம அந்தஸ்து, சம உரிமை இல்லாமல் உழன்று பசி, தரித்திரம், நோய், அற்பமான வருவாய், சுதந்திரமற்ற அடிமை வாழ்வு முதலிய கொடும் வியாதிகளின் மிகுதியால் அவதிப்பட்டு அல்லலுற்று வாழ்ந்து வரும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதும், இத்தகைய இழிந்த நிலைமைகளுக்கு அடிப்படையான மூல காரணமென்னவென்பதைச் சிந்தித்து ஊன்றி யோசிப்பார்களேயானால், இவ்விதமான பண்டைப் பெருமைகளால் வீண்காலஷேபம் செய்யமாட்டார்களென்றே நினைக்கின்றோம்.
- 18.04.1934

நடக்கின்ற சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது இன்னமும் இவ்வித காலஷேபம் ’முடியவில்லை.. தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது’ என்று தான் எனக்குத் தோன்றுகின்றது.

சுபா

1 comment:

  1. ப்ழம் கதைைகளேே பேேசக்்க் கூடாதா

    ReplyDelete