Wednesday, May 14, 2014

Robert Langdon is back..! - 20

டான் ப்ரவுன் தனது எல்லா நூல்களையுமே மிக விரிவான ஆராய்ச்சிக்குப் பின்னரே படைப்பது வழக்கம். முந்தைய தனது படைப்புக்களாக வெளிவந்த ஏனைய ஐந்து நூல்களுக்குமே அவர் காட்டிய வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து அதனை தனது நாவலில் இணைக்கும் உத்தியை அவர் இன்ஃபெர்னோவிலும் கடைபிடித்திருக்கின்றார் என்பதில் ஐயமில்லை. 



குறியீடுகளை (symbols) மையமாக வைத்து இவரது நாவல்கள் அமைந்திருக்கின்றன என்பதை டான் ப்ரவுன் நாவல்களை வாசித்த எல்லோரும் அறிவர். குறியீடுகள் என்பவை மொழி கடந்தவை. அவை ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளைக் கொண்டவை என்பது ஒரு புறமிருக்க சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆழ் உளளத்துள் எழும் வடிவங்கள் என்பது ஒரு முக்கிய அம்சம். குறியீடுகள்  பற்றி ப்ரவுன் குறிப்பிடும் போது...Brown: They can convey enormous concepts without the baggage of language. They are transparent and universal. (http://www.bloomberg.com/news/2013-05-14/dan-brown-s-harvard-hero-fears-plague-in-inferno-.html)

இந்த நூலின் தனிச் சிறப்புக்கள் சிலவற்றை பார்ப்போமே..!

இந்த நாவலின் வழி இத்தாலியின் 13ம் நூற்றாண்டு கவிஞன் டாண்டேவை உலகிற்கு மீண்டும் ஒரு முறை வித்தியாசமான கோணத்தில் அறிமுகப்படுத்துகின்றார் ப்ரவுன். இவரை அறியாதிருந்த என்னைப் போன்ற பலருக்கும் டாண்டே இன்னூல் வழி அறிமுகமானது மறுக்க முடியாத விஷயம்.  

அதே போல வெனீஸை அறிமுகப்படுத்தும் பகுதிகள் அவை காதலர்களுக்கும் தேனிலவுக்குச் செல்பவர்களுக்கும் இனிமை தரும் ஒரு இடம் என்ற பார்வையிலிருந்து மாறுபட்டு ஐரோப்பாவை 13ம் நூற்றாண்டு வாக்கில் தாக்கிய  ப்ளேக் நோய், வெனிஸின் தனிச்சிறப்பு மிக்க வரலாற்று பின்புலம், ரகஸிய அமைப்புக்கள் ஆகியனவற்றைப் பற்றி பேசும் வகையில் அமைத்து இந்த நகருக்கு வேறொரு மாற்றுப் பார்வையை வாசகர்களுக்கு வழங்கியிருக்கின்றார்.

நூதன சிந்தனையாளர்கள், ஐகியூ உயர்வான மனிதர்களின் சிந்தனை போக்கை பற்றியும், அதனால் அவர்களுக்கே எழும்  பிரச்சனைகளையும் இந்த நாவலில் குறிப்பிடுகின்றார்.

இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரையே முழுமையாக சுற்றி அரசியல் பின்புலங்களை ஆராய்ந்து நாவலை த்ரில் குறையாமல் வரலாற்றுப் பார்வையை முன்னிறுத்தி இந்த நாவலைப் படைத்திருக்கின்றார்.

உலக சுகாதார அமைப்பு, மக்கள் பெருக்கத்தால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் ஆகியனவற்றை பற்றி பேசும் போது நம்மை ஒரு கணம் நிதாணித்து யோசிக்க வைக்கின்றார் இந்த நாவலில். பொதுவாக நாம் பார்க்காத ஒரு பார்வை இது. டான் ப்ரவுனின் தனித்துவம் சிறப்பு பெறும் அமசங்களில் இதுவும் ஒன்று. 

இப்படி சில விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...!

ஆயினும் இவை அனைத்தையும் விட இந்த நாவலில் என்னை மிகக் கவர்ந்த ஒரு அம்சம் என்றால் அது டான் ப்ரவுன் இந்த நாவலில் பிரத்தியேகமாகச் சுட்டிக் காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் தாம். இக்கட்டிடங்களை அவர் அறிமுகம் செய்யும் போது மிகுந்த சிரத்தை எடுத்து இப்பணியைச் செய்திருக்கின்றார். இக்கட்டிடங்களின்  ஆரம்ப கால அமைப்பு, கட்டுமான வடிவின் அடிப்படைகள், அவற்றின் அரசியல் பின்னனி கால ஓட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் ஆகியனவற்றை ப்ரவுன் விளக்கும் உத்தி, எழுத்து நடை ஆகியன மிகப் பிரமாதம் என்றே சொல்வேன். 

ஆனால் இந்த நூலின் கருத்துக்களை மறுக்கும் முயற்சிகளும் எழாமல் இல்லை. அதனை அடுத்து சொல்கின்றேன்.

தொடரும்...

No comments:

Post a Comment