ஃப்ளோரன்ஸ் நகரின் புகழ்மிக்க 14ம் நூற்றாண்டு கவிஞன் டாண்டே பற்றி அவ்வப்போது இந்த இழையில் பதிந்துள்ளேன். இன்ஃபெர்னோ நூலில் குறிப்பிடப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை விவரிப்பது போல சித்திரங்களைப் பற்றியும் சில பதிவுகளின் நான் வழங்கியிருக்கின்றேன். அந்த வரிசையில் இன்று வருவது ஒரு மனித முகமூடி.
உலகின் வரலாற்று சிறப்புமிக்க 7 Death Mask களில் ஒன்றாக கருதப்படுவது டான்டேயின் முகமூடி. இவ்வகை முகமூடிகள் வாக்ஸ் கொண்டு தயாரிக்கப்படுபவை. முதலில் இது டாண்டேயின் இறந்த உடலின் முகத்தில் வைக்கப்பட்டு வாக்ஸ் கொண்டு அச்சு அசலாக தயாரிக்கப்பட்டது என்ற கருத்து உலவி வந்தது. அதன் பின்னர் இது அசலிலிருந்து மீட்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு முகமூடி என்பது தெரிய வந்தது. தற்சமயம் இந்த முகமூடி ஃப்ளோரன்ஸ் நகரின் பாலாஸியோ வெச்சியோவின் முதல் மாடியில் பிரத்தியேக கண்காட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
Dante Death Mask
ஃப்ளோரன்ஸ் நகரின் இலக்கியவாதியான டாண்டே அக்கால ஃப்ளோரன்ஸ் அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு சிந்தனைகளை முன் வைத்தமையினால் நாடு கடத்தப்பட்டார். அதாவது ப்ளோரன்ஸ் நகருக்கு வெளியே இவர் வசிக்கலாம். உள்ளே வர அனுமதியில்லை. உள்ளே நுழைந்தால் மரண தண்டனை என அறிவிக்கப்பட்டு நகரை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையினால் ஃப்ளோரன்ஸ் நகரை விட்டு வெளியேறிய டாண்டே, போலோனாவுக்கு அருகில் இருக்கும் ரவென்னா நகரில் தஞ்சம் புகுந்தார். இங்கு அவர் இருந்த காலகட்டத்தில் உருவானதுதான் டிவைன் காமெடி எனும் காவியம்.
தற்சமயம் பாலாஸியோ வெச்சியோவில் பாதுகாக்கபடும் இந்த முகமூடி 1483 வாக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் கியாம்பொலொஞா என்ற சிற்பியிடம் வந்து சேர்ந்த இந்த முகமூடி அடுத்தடுத்து வேறு சிலரின் பாதுகாப்பில் இருந்து செனட்டர் டி அன்கோனா விடம் வந்து சேர்ந்தது. சில காலங்களுக்குப் பின்னர் இதனை அவர் பாலாஸியோ வெச்சியோவில் இருக்கும் அரும் பொருட்கள் சேகரத்தில் இணைத்துவைக்க விரும்பி 1911ம் ஆண்டில் இதனை வழங்கினார்.
அது முதல், டாண்டேயின் இறப்புக்கு முன் பதியப்பட்டதாகக் கருதப்படும் இம்முகமூடி பாலாஸியோ வெச்சியோவில் இருந்து வருகின்றது.
இன்ஃபெர்னோவில் இந்த முகமூடி தொலைந்து அது தேடும் படலம் மிக விருவிருப்பானது. நான் அதிகம் சொல்லக்கூடாது! இது வரை நாவலை வாசித்திராதவர்கள் வாசித்து மகிழுங்கள்.
தொடரும்..
No comments:
Post a Comment