Saturday, May 11, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 49



இன்று மீண்டும் என் சரித்திரம் நூலில்   முன்னர் வாசித்த போது அத்தியாயம் 44க்கு பின்னர் நான் கோடிட்டுக் குறிப்பு எழுதி வைத்திருந்த சில பக்கங்களை  நோக்கினேன். அதில் சில விஷயங்கள் சுவாரசியமாகவும் குருபூஜை நிகழ்வின் தொடர்ச்சியாகவும் அமைந்திருந்தமையால் அந்த நிகழ்வுகளைப் பற்றிய ஒரு பதிவாக இது அமைகின்றது.

குருபூஜை நிகழ்வுக்கு வருவதற்கு முன்னர் தனது உறவினர்களைக் காணச் சென்று  பின்னர் அங்கே உடல் நலம் குன்றி மீண்டும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இருக்கும் இந்தக் குருபூஜை நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் மண்டபத்த்திற்கு அவரைத்தேடிக் கொண்டு உ.வே.சா வருகின்றார். உடல் நலம் குன்றியமையாலும் நெடுநாள் குடும்பத்தாரோடு இருக்க குருகுல வாசத்தைப் பிரிந்தமையாலும் அவருக்கு ஏற்கனவே மனதில் வருத்தம். அவ்வருத்தத்தோடு அப்பிரிவினால், நெடுநாட்கள் பாடம் கேட்காத நிலை ஏற்பட்டமையால் மனதில் வேதனை உணர்வு நிறைந்திருந்தமையை இந்தஅத்தியாயத்தில்  ஆங்காங்கே விவரிக்கின்றார்.

குருபூஜையில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த  கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், பேச்சுக்களில் அவரது ஆர்வம் செல்லவில்லை. தன் ஆசிரியரைத் தேடிக் கொண்டு வருகின்றார். ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிப்பது அக்கூட்டத்தில் சுலபமான காரியமாக இல்லை. ஒவ்வொரு தெருவாகச் சென்று தேடிச் செல்கையில் தன் நிலையை இப்படி விவரிக்கின்றார்.

" இடையிடையே காண்போரை, ‘பிள்ளையவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?” என்று கேட்போம். “அவர்கள் எங்கும் இருப்பார்கள்; பண்டார ஸந்நிதிகளோடு சல்லாபம் செய்து கொண்டிருப்பார்கள்; வித்துவான்கள் கூட்டத்தில் இருப்பார்கள், இல்லாவிட்டால் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி வருவார்கள்” என்று விடை கூறுவர். “மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லுவார்கள்” என்பதைக் கேட்கும்போது எனக்கு ஒருவிதமாக வேதனை உண்டாகும். “அக்கூட்டத்தில் சேராமல் இப்படி நாம் தனியே திரிந்து கொண்டிருக்கிறோமே!” என்ற நினைவு எழும். உடனே காலடியை வேகமாக எடுத்துவைப்பேன்."

ஒருவழியாகப் பிள்ளையவர்களை ஒரு மண்டபத்தில் கண்டு சந்தித்ததும் உடல் நலத்தை விசாரித்துச் சாப்பிட்டாயிற்றா? குருபூஜை நிகழ்ச்சிகளைப் பார்த்தாயிற்றா என்று அன்புடன் வினவும் ஆசிரியரின் பண்பையும் இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.

“இந்த மாதிரி விசேஷம் எங்கும் இராது. எல்லாம் ஸந்நிதானத்தின்பெருமையினாலும் கொடையினாலுமே நடக்கின்றன.”
“இனிமேல் பாடம் கேட்க வரலா மல்லவா?”

“நான் காத்திருக்கிறேன்.”

“குருபூஜை யானவுடன் மாயூரத்திற்குப் போவேன். அங்கே போனவுடன் பாடம் ஆரம்பிக்கலாம்” என்று ஆசிரியர் கூறியபோது என் உள்ளம் குளிர்ந்தது.”

இது வேண்டும் வேண்டும் என ஒரு விஷயத்தை ஆழமாகத் திடமாகத் தியானித்துக் கொண்டிருக்கும் மனத்திற்கு வேண்டுவன கிடைப்பது என்பது நடக்கமுடியாத விஷயமல்லவே!
பாடம் மயூரத்திற்குச் செல்லும் முன்பே தொடங்கி விட்டது.

எதிர்பாராத விதமாக அன்று மாலையே ஒரு புதிய பாடம் துவங்கியது. மாலை மண்டபத்தில் இவர்கள் இருக்கும் போது அங்கு வந்த குமாரசாமித்தம்பிரானும் பரமசிவத் தம்பிரானும் இந்த நல்ல நாளில் பிள்ளையவர்களிடம்  பாடம் கேட்க தமக்கு விருப்பம் இருப்பதை விண்ணப்பிக்க.. அதற்கென்ன தொடங்குவோம் என அன்றே ஒரு புதிய பாடத்தை ஆரம்பிக்கின்றார் பிள்ளையவர்கள். இருவரும் காசிக் கலம்பகம் கேட்க விருப்பம் தெரிவிக்க காசிக்குச் சென்று வந்த காசிச்சாமியான குமாரசாமித்தம்பிரான் விருப்பத்தை நிறைவேற்ற ஆரம்பிக்கின்றார் ஆசிரியர்.

சுவடி நூலை வாசிக்க இவர்கள் ஒரு குளக்கரைப் பக்கமாக சென்று விடுகின்றனர். அங்கே உ.வே.சாவே நூலை  வாசிக்க காசிக்கலம்பகத்திற்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் விளக்கமளிக்கின்றார். இதனை உ.வே.சா  இப்படி விவரிக்கின்றார்.

“அந்தப் பெரிய குருபூஜை விழாவில் வெளியில் அங்கங்கே வாத்திய கோஷங்களும் கொண்டாட்டங்களும் ஸந்தோஷ ஆரவாரங்களும் நிரம்பியிருக்க, நாங்கள் ஒரு குளத்தங் கரையில் சிறிய சவுகண்டியில் காசி மாநகர்ச் சிறப்பையும் கங்கையின் பெருமையையும் ஸ்ரீ விசுவநாதரது கருணா விசேஷத்தையும் காசிக்கலம்பகத்தின் மூலம்
அனுபவித்து வந்தோம். ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் வாக்காகிய அக்கலம்பகம் சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது. சில காலமாகப் பிள்ளையவர்களையும் தமிழ்ப் பாடத்தையும் விட்டுப் பிரிந்திருந்த எனக்கு அன்று பிள்ளையவர்களைக் கண்ட லாபத்தோடு பாடம் கேட்கும் லாபமும் சேர்ந்து கிடைத்தது.“

பாடங்கேட்டலிலும் தமிழ்க்கல்வியிலும் தீராத விருப்பம் கொண்ட உ.வே.சாவிற்குச் சுற்றுச் சூழலில் நடந்து கொண்டிருக்கும் ஏனைய விஷயங்களில் இல்லாத  ஈர்ப்பும் மன்மகிழ்ச்சியும் இந்தக் காசிக்கலம்பக நூல் பாடம் கேட்டதில் இருந்தமையைக்  காண்கின்றேன். எத்தனையோ விஷயங்கள் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டேதானிருக்கின்றன. ஆனால உள்ளம் தேடும் ஆழ்மன விருப்பம் உள்ள ஒரு சில குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே நம மனம் காண்கின்றது. அதனில் மட்டுமே நம் மனம் ஈர்ப்பு பெறுகின்றது; லயிக்கின்றது.

தொடரும்...
சுபா

No comments:

Post a Comment