கடந்த வாரம் காலமான எனது அண்டை வீட்டுக்காரர் கிரேக்க நண்பரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. நானும் சென்று வந்தேன். அது புது அனுபவமாக இருந்தது.
லியோன்பெர்க் நகருக்கு அருகிலேயே நகருக்கு சற்று வெளியே இருக்கிறது கல்லறை தோட்டம். ஐரோப்பாவில் கல்லறைத் தோட்டம் என்பது பொதுவாகவே விரிவாக மிக அழகாக நேர்த்தியாக ஒரு பூங்காவை போல பாதுகாக்கப்படும் ஓர் இடமாக இருக்கும். அதேபோலத்தான் இந்தக் கல்லறை தோட்டமும்.
கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ முறையில் தான் இந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது. பொதுவாக இங்கு இறுதிச்சடங்கிற்குச் செல்பவர்கள் முழுமையாக கருப்பு நிற உடை அணிந்து செல்வது வழக்கம். கையில் வெள்ளை நிற ரோஜாப்பூ அல்லது வெள்ளை நிறத்தில் ஏதாவது மலர்களைக் கொண்டு செல்வதும் வழக்கம். நானும் வெள்ளை ரோஜாக்களை வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன்.
நிகழ்ச்சி தொடங்கியவுடன் முழுமையும் கருப்பு உடையில் மேல் சட்டை பாவாடை போன்ற ஓர் உடை அணிந்து பாதிரியார் வழிபாட்டு பாடல்களைப் பாடத் தொடங்கினார். சவப்பெட்டி அருகில் வைக்கப்பட்டிருந்தது.
கல்லறைத் தோட்டத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பக்கம் முழுவதும் உறவினர்கள் மறுபுறம் நண்பர்கள் என்ற வகையில் பிரித்து வைத்திருந்தார்கள்.
வந்திருந்தவர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கிரேக்கர்கள். ஏனையோர் ஜெர்மானியர், மற்ற பிற இனத்தவர்கள்.
45 நிமிடம் வாழ்த்து துதி பாடல்களைப் பாடி முடித்த பின்னர் சவப்பெட்டியை ராஜ மரியாதை போல ஆறு பேர் கொண்ட குழு சிறிய தேர் போன்ற கையால் இழுத்துச் செல்லும் வண்டி ஒன்றில் வைத்து கல்லறை தோட்டத்தில் இழுத்துச் சென்றது. அவர்களும் தொப்பியும் கருப்பு நிற கோட்டும் சூட்டும் என அணிந்திருந்தார்கள். கல்லறைத் தோட்டம் மிகப்பெரியது என்பது நடந்து சென்ற போதுதான் தெரிந்தது.
ஏறக்குறைய 10 நிமிடம் நடந்த பிறகு அவருக்கென்று வாங்கப்பட்ட ஒரு பகுதி இருந்தது. அப்பகுதி ஏற்கனவே நீள் சதுர வடிவில் வெட்டப்பட்டு குழி தோண்டப்பட்டு கருப்பு நிறத்தாலான ஒருவகை துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக ஜெர்மனிய இறுதிச் சடங்குகளில் யாரும் அழுவதில்லை. கண்ணீர் வந்தாலும் மெதுவாக அதனை துடைத்துக் கொண்டு அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்மணிகள் மட்டும் மனைவியும் மகளும் மட்டும் கதறி அழுதார்கள்.
அந்தப் பகுதிக்கு வந்த பின்னரும் மீண்டும் பாதிரியார் கிரேக்க மொழியில் அமைந்த துதி பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
சவப்பெட்டியை குழிக்குள் செலுத்தி அதனை நேராக வைத்தார்கள்.
அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கையில் வைத்திருந்த மலரை குழிக்குள் போட்டுவிட்டு வாளியில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணை அதில் இருந்த ஒரு கரண்டியால் எடுத்து அந்த சவப்பெட்டி மேல் தூவினார்கள். வரிசையில் நானும் நின்று எனது மரியாதையையும் செலுத்தினேன்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்தோருக்கு சிறிய தேநீர் விருந்து ஒன்றும் அங்கு ஏற்பாடாகியிருந்தது. முதல் முறையாக ஒரு கிரேக்க இறுதி ஊர்வலத்தை நேரில் பார்த்த ஓர் அனுபவம் இது.
இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஏறக்குறைய 200 பேர் வந்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களது செல்போனை எடுத்து புகைப்படம் ஒன்றும் எடுக்கவில்லை.
ஒரு மனிதரின் இறுதிச்சடங்கு என்பது இயற்கையோடு அவர் இணைந்து கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்பதை இந்த நிகழ்ச்சி நேரில் உணர்த்தியது. உறவினர்களும் நண்பர்களும் சோகத்தோடு விடை கொடுத்தார்கள். அதில் போலி பந்தாக்கள் பெருமைகள் என்பதற்கெல்லாம் இடமில்லாமல் இறந்து போனவருக்கு மரியாதை செலுத்தி அவரை முறையாக மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.
-சுபா
18.7.2025
No comments:
Post a Comment