ஜெர்மனியின் பாடன்-வூர்ட்டம்பேர்க் மாநில வரலாற்றுச் சின்ன பாதுகாப்புக்கான அலுவலகத்தின் செய்தி ஒன்று அண்மையில் இங்கு பாட்கான்ஸ்டாட் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் ஒரு ரோமானிய கோட்டை இருந்த இடத்திற்கு அருகில் 100க்கும் மேற்பட்ட குதிரைகளின் எலும்புக்கூடுகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அகழாய்வு செய்யப்படும் இடங்களில் மனித எலும்புக்கூடுகளோடு விலங்குகளின் எச்சங்களும் கிடைப்பது வழக்கம். அவ்வகையில் ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான் வசிக்கின்ற லியோன்பெர்க் பகுதியிலிருந்து இந்த இடம் ஏறக்குறைய 25 கிமீ தூரத்தில் இருக்கின்றது. பாட் கான்ஸ்டாட் நகரில், மக்கள் வாழ்விடப் பகுதியில் இது Düsseldorfer Straße , Bottroper Straße இரண்டு சாலைகள் சந்திக்கும் பகுதியில் இந்த அகழாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஒரு கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500 குதிரைவீரர்களைக் கொண்ட ரோமானிய குதிரைப்படைப் பிரிவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தக் குதிரை எலும்புக்கூடுகள் அவை ஒரு போரிலோ அல்லது இராணுவ தாக்குதலில் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. மாறாக ஏதாவது ஒரு வகை நோய் அல்லது முதுமையால் இறந்திருக்கலாம். மேலும் ஆய்வுகள் இதனை உறுதிபடுத்த வேண்டும்.
இங்கு கிடைத்த பெரும்பாலான குதிரை எலும்புக்கூடுகள் சாதாரணமாக புதைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குதிரையின் எலும்புக்கூடு மட்டும் தனிச்சிறப்புடன் புதைக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் புதைக்கும் போது கல்லறை வழிபாட்டுப் பொருட்கள் வைக்கப்படுவது ரோமானிய பண்டைய கல்லறைகளில் கிடைத்துள்ளன. அதே போல இந்த ஒரு குதிரையின் அருகில் இரண்டு குடங்களும் ஒரு எண்ணெய் விளக்கும் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இக்குதிரை ஒரு முக்கிய ரோமானிய படைத்தளபதி அல்லது தலைவனின் குதிரையாக இருந்திருக்கலாம்.
கூடுதல் தகவல்கள்:
https://rp.baden-wuerttemberg.de/rps/presse/artikel/letzte-ruhe-fuer-roms-reittiere-groesster-roemerzeitliche-pferdefriedhof-sueddeutschlands-in-stuttgart-bad-cannstatt-entdeckt/
No comments:
Post a Comment