Thursday, June 22, 2023

நெதர்லாந்தில் 4000 ஆண்டு பழமையான ஈமக்கிரியை கல்வட்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு

 ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின் ஹாக் எனும் நகருக்கு 72 கிமீ தூரத்தில் உள்ள டீல் (Tiel) என்ற இடத்தில் டச்சு தொல்லியல் ஆய்வறிஞர்களால் தொல்லியல் அகழாய்வு 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இங்கு தொன்மை வாய்ந்த கல்திட்டை உருவாக்கப்பட்டு இறந்தோருக்கு மரியாதை செய்யும் வகையில் மணல் குன்று அமைக்கப்பட்டு அப்பகுதியில் வழிபாடுகளும் பூசைகளும் சடங்குகளும் செய்யப்பட்டன என்பது இவ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈமக்கிரியைச் சடங்குகள் நிகழ்த்தப்பட்டுள்ள மணல் குன்று பகுதியில் 60 மனித எலும்பின் எச்சங்கள் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள்) அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் இங்கு வாழ்ந்த மக்களால் ஒரு புனிதமான பகுதியாக இது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

தொன்மையான சமூகங்களில் ஈமக்கிரியைச் சடங்குகள் நிகழ்த்தப்படுவதை உலகம் முழுவதும் கிடைக்கின்ற சான்றுகளின் வழி அறியமுடிகின்றது. அந்த வகையில் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகத் தொன்மையானதொரு இறந்தோருக்கான சடங்குகள் நிகழ்த்தப்பட்ட இடமாக இதனைக் குறிப்பிடலாம்.

இங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறக்குறைய 1 மில்லியன் அரும்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த அரும்பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிமு.2500 ஆண்டுகால பொருட்களும் அடங்கும் என்பதோடு இன்றைக்கு 1000ஆண்டு கால கண்ணாடி மணிகளும் அடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி மணிகள் அன்றைய மெசபடோமியா, அதாவது இன்றைய ஈராக் நாட்டிலிருந்து வந்தவை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்பகுதியில் 1 பெரிய மணல் குன்றும் அருகே மேலும் 2 சிறிய மணல் குன்றுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.



குறிப்பு: இங்கு இணைக்கப்பட்டுள்ள படம் அன்று இப்பகுதி எவ்வாறு இருந்திருக்கலாம் என்பதை இங்கு கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் கணினி வழி உருவாக்கப்பட்டதாகும்.
-சுபா
22.6.2023
நன்றி: https://www.theguardian.com/world/2023/jun/21/archaeologists-unearth-stonehenge-netherlands

No comments:

Post a Comment