http://tamilperaivu.um.edu.my/
பண்டைய தமிழர்களின் கடல்வழிப்பயணங்கள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு
(Preservation of Ancient Tamil Maritime Records )
முனைவர் க.சுபாஷிணி
Dr.K.Subashini
Abstract
The Tamil maritime history begins long time back. Inadequate information and missing records about ancient Tamil seafarers, lead to the opinion that maritime trade activities were only pioneered
by European seafarers. Ancient Tamil seafarers explored the wide ocean, discovered new lands, initiated trade activities with other ancient civilizations in the past. However, only fewer records describing Tamils seafaring experience details were identified so far. This paper study
ancient maritime activities of Tamil people, referencing information in Sangam Tamil literature, maritime records from travelers visited Tamil country and records on ship making industry practiced by the Tamil folks. A Palm leaf manuscript from the 17th Cent A.D is also used in this study, particularly for the purpose of understanding the ship making industry practiced by ship making community lived in Tranquebar, a harbor city on the Coromandel Coast .
முன்னுரை
வணிகமும் சமய நம்பிக்கைகளை அண்டைய நாடுகளுக்கு விரிவாக்கும் நடவடிக்கைகளும் உலகில் பல சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வணிகத் திறனும், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய தத்துவ பலமும், நீண்ட கடல் பயணம் மேற்கொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் ஆழ்ந்த வேட்கையும் இயல்பாகவே கொண்டிருக்கும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழர்கள் கால் பதிக்காத நிலங்களே இல்லை எனும் அளவிற்கு விரிவான கடல்பயணங்களைப் பண்டைய தமிழர் கையாண்டிருக்கின்றனர். பண்டைய தமிழரின் கடல்வழிப்பயணம் தொடர்பான சில செய்திகள், அவர்கள் பயன்படுத்திய கலங்கள் ஆகியன தகவல்களைப் பதிவதும் அச்செய்திகள் தொடர்பான ஆவணங்கள் மின்னாக்கங்களின் வழி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இக்கட்டுரை விளக்குகின்றது.
ஆய்வுப் பின்புலம்
தமிழர்கள் கடல்வழிப்பயணம் செய்து உலகின் பல இடங்களுக்குப் பயணித்து வணிகம் செய்த தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கிடைக்கின்றன. கடல்பயணத்தில் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்திருக்கும் புகழ் இன்று அனைவரும் அறிந்ததே. கடல் பயனங்கள் என்றாலே அவற்றை முறைப்படுத்தி வழி அமைத்தோர் ஐரோப்பிய மாலுமிகளே என்ர சிந்தனை போக்கு இன்று ஆழப் பதிந்திருக்கின்றது.
பண்டைய தமிழரின் வாழ்வில் நிலம் எத்தகைய முக்கியத்துவம் வகிக்கின்றதோ அதே அளவு முக்கியத்தை கடல்வெளியும் பெறுகிறது. கடல் மார்க்கமாகப் பயணித்து புதிய இடங்களில் வணிகம் செய்திருக்கின்றனர் தமிழர் பலர். சிலர் புதிய நாடுகளிலேயே தங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனர். சிலரோ எல்லையில்லா தேடுதலையும் உயர்ந்த லட்சியங்களையும் ஏந்திக் கொண்டு தத்துவங்களையும் மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் தனக்கு அன்னியப்பட்ட புதிய நிலப்பகுதியில் பதிந்து வைக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இன்று கிழக்காசிய நாடுகள் முழுமைக்கும் பௌத்த மதம் பெருமளவு பரவியிருப்பதற்கும், பின்னர் சைவ, வைணவ மதங்கள் கிழக்காசிய நாடுகளில் காலூன்றிய வரலாற்று நிகழ்வுகளுக்கும் பண்டைய தமிழரின் கடல்வழிப்பயணங்கள் காரணமாக அமைந்த வரலாற்றுச் செய்திகளை மீண்டும் உரத்துப் பேச வேண்டியது அவசியமாகின்றது.
தமிழர்களின் கடல் பயணங்கள், வணிகங்கள் அவை தொடர்பான ஆவணங்கல் ஆகியவை கிடைப்பது அரிதாக இருப்பது நம் முன்னே இருக்கின்ற பெரும் குறைபாடு. ஆயினும், இக்குறைபாட்டினை ஒதுக்கி, வரலார்று ஆவணங்களைத் தேடி அவற்றைப் பாதுகாக்க வேண்டும், அவை மீளாய்வு செய்யப்பட வேண்டும், மீள்பதிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
ஆய்வுமுறை
மேற்குறிப்பிட்ட நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகளான "நாவாய் - கடல்சார் வரலார்றாய்வுகள்" என்ற நூலும், "நிகமம் - வணிக வரலார்றாய்வுகள்" என்ற நூலும், "Marco Polo - The Travels" என்ற நூலும், "பழங்காலத் தமிழர் வாணிகம்" என்ற நூலும், "கப்பல் சாஸ்திரம்" என்ற பெயர்கொண்ட கி.பி17ம் நூற்றாண்டு ஓலைச்சுவடியின் அச்சுப்பதிப்பு நூலும், மேலும் இதன் தொடர்புடைய சில ஆவணங்களும் இந்த ஆய்விற்குத் துணை நூல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
கடல் வழிப்பயணமும் கருவிகளும்
"நாவாய்" எனும் சொல் தமிழர்களின் பண்டைய கடல்வழிச்செலவைக் குறிக்கிறது. இந்தத் தொண்மையான சொல்லை ஆராயும் போது அச்சொல் வழங்கிய விதம் நம் தமிழர்களின் வரலாற்றை விளக்குவதாக அமைகின்றது. "நாவின்" அசைவால் நம் சொற்கள் பிறக்கின்றன. அதே போல, கடற்பரப்பில் கலம் அசையும் போது, காற்று, மனிதர்களின் நா அசைந்து சொல்லை உருவாக்குவது போல மேலும் கீழும் அசைந்து தண்ணீரில் அலைகளை உண்டாக்குவதால் நாவாய் எனும் "தொழில் ஆகுபெயராக" இச்சொல் அமைந்தது எனக் கருதலாம். இது தமிழ் மொழியின் ஆய்வுப் பார்வையையும் தொன்மையையும் சுட்டிக்காட்டுகின்றது.
கடல் வழிப்பயணம் என்பது எளிமையானதன்று. இயற்கையைப் பற்றிய துல்லிய ஆராய்ச்சிப்பார்வை கொண்டவர்களால் மட்டுமே கடல்வழிப்பயணத்தைத் திட்டமிட்டு செயல்படுத்த முடியும். காற்றின் போக்கு, அது வரும் திசை, காற்றின் அழுத்தம் ஆகியன பற்றிய அனுபவம் கடல்வழிப்பயணத்திற்கு மிக அவசியமானது. அத்தகைய திறனை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர். பாய்மரக்கப்பல்கள் கட்டுவதில் பேரறிவுபெற்ற தமிழர்களின் கப்பல்கட்டும் திறம், கடல்வழி குறித்த அறிவு, காற்றின் போக்கு அறியும் உயர் அறிவு, கப்பலைச் செலுத்தும் திறன், கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் போர்த்தொழில் உள்ளிட்ட திறன்களை அவர்கள் பெற்றிருந்தனர். இதுவே பண்டைய தமிழர் தமிழக நிலப்பரப்பையும் கடந்து பல தீவுகளில் கால்பதிக்கக் காரணமாகியது எனலாம்.
தமிழர்கள் பயன்படுத்திய கலங்களின் வகைகளாக தமிழ் இலக்கியத்தில் பதினெட்டு வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை கட்டு மர வகை, தோணி வகை, வள்ளம் வகை என மூன்று பெரும் பிரிவுகளுக்குள் பிரித்திருக்கின்றார்கள்(வே.சாமுவேல் அருள்ராஜ், நாவாய்- மரபுவழிக் கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்) . கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன. தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பரிபாடல்களில் உள்ளன {குறுந்தொகை 123:5,6) (பரிபாடல் 10:70,71) (புறநானூறு 126:14-16) (அகநானூறு 350: 10-15)]. நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக ”வள்ளம்” என்ற வகையான பெரிய கப்பல்களைப் பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது (சிலப்பதிகாரம் 13:176,179).
கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணக்கிடைக்கின்றன [ (சிலப்பதிகாரம் 6:141) (பட்டினப்பாலை 111 : 112) (பெறும்பாணாற்றுப்படை 348-351) (அகநானூறு 255>5-6)].
தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மீனவர்கள் என அழைக்கப்படும் பரதவர்கள் மிக விரிவாக கடல் வணிகத்தில் தங்கள் ஆளுமையைச் செலுத்தினர். பெரும் வளம் சேர்க்கும் மீன் பிடித் தொழிலும் முத்துக்குளித்தலும் தமிழகம் மட்டுமன்றி உலக அளவில் அரேபியர்களும், ஐரோப்பியர்களும் தமிழகம் வந்து வணிகம் செய்து செல்லக் காரணமாகின. இந்தப் பரதவ மக்கள் ”திமில்” என்ற பெயர் கொண்ட படகுகளை உருவாக்கிப் பயன்படுத்தினர் (அகநானூறு 340 : 18).
சங்ககாலத்தில் யவனர்கள் (கிரேக்கர்களும், ரோமானியர்களும்) இப்பகுதிகளுக்கு வணிக நோக்கமாக வந்து சென்றமை இலக்கியச் சான்றுகளுடன் காண்கின்றோம் (நாவாய் - க.வெள்ளைவாரணம், பக் 6). அக்காலம் தொட்டு மீன்கள் மட்டுமன்றி உப்பு உற்பத்தியும் மிக முக்கிய வணிகப்பொருளாக இருந்தமையையும் அறிகின்றோம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியக் கடற்கரை பகுதிகள் கடல்கடந்து தமிழகம் வந்து வணிகம் செய்து சென்றோரின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன என்பதற்கு நமக்கு இன்று சான்றுகள் கிடைக்கின்றன.(pls provide reference). அதேபோல தமிழர்களும் தூர நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தமைக்குச் சான்றாதாரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கிடைக்கின்றன.
கி.மு.5ம் நூற்றாண்டு என சுட்டப்படும் மாங்குளம் கல்வெட்டுக்களில் காணப்படும் ‘சாத்து’, ‘நிகமம்’ என்ற சொற்கள் வணிகக் குழுக்களைச்சுட்டுகின்றன (நாவாய் - கா.ராஜன், இலங்கை தென்னிந்தியாவிற்கு இடையேயான கடல்கடந்த பண்பாட்டு உறவுகள், பக் 11). ஆக, வரலாற்று தொடக்ககாலத்திலேயே இத்தகைய வணிக குழுக்கள் இடம்பெயர்ந்து நீண்ட தூரம் சென்று வணிகம் செய்தன என அறியமுடிகின்றது. பண்டைய வணிக வழிகளில் குவியல்களாகவும் உதிரியாகவும் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் அயலகத்தார் தமிழகம் வந்து வணிகத்தில் ஈடுபட்டமைக்குச் சான்றாக அமைகின்றன. ஒரு கப்பல் தலைவன் ஒருவனின் இரு மகன்களான சேனா, கோத்திகா ஆகிய இருவரும் இலங்கையில் முதன் முதலில் தமிழ் ஆட்சியை நிறுவினர் (கி.மு 177-155) என மகாவம்சம் நூலின் வழி அறிய முடிகின்றது (நாவாய் - கா.ராஜன், பக் 23) . ஆக, கடல் வழிகளை அறிந்து கப்பலை ஆளுபவன் பெரும் தலைவனாக மதிக்கப்படும் சூழல் பண்டைய தமிழ் மரபில் இருந்தமையை இது வெளிப்படுத்துகின்றது எனலாம்.
1990களில் ஷாஜன் என்பவர் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாகப் ”பட்டணம்’ எனும் நகர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2003ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வுகள் இந்த நகரின் முக்கியத்துவத்தை மேலும் வெளிப்படுத்தின. பின்னர் 2007 முதல் 2009 வரை கேரள வரலாற்றுக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகள், பட்டணம் மற்றும் கீழைக்கடற்கரையில் அமைந்திருந்த அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற நகரங்கள் முக்கியமான வணிக மையங்களாகத் திகழ்ந்தன என்பதை ஆய்வுலகிற்கு வெளிச்சப்படுத்தியது. பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தோணி, படகுத் துறை ஆகியன, படகு பிணைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தேக்குமரத் தூண்களும் மிகச் சிறப்பானக் கண்டுபிடிப்புக்கள் எனலாம். கி.மு 1 மற்றும் கி.பி.1ம் நூற்றாண்டைச் சார்ந்தவை இவை (வீ.செல்வகுமார், நாவாய் - இலக்கியத்தில் முசிறி தொல்லியல் பட்டணம் பக் 33).
மேற்கு கடற்கரை கடற்வழி நகரங்களான மாந்தை, வஞ்சி, முசிறி, நெல்கிண்டா, குட்ட நாடு போன்றவை முக்கிய சங்க கால வணிக நகரங்களாக இருந்தன (நாவாய் - ர.பூங்குன்றன், பக் 47) . சங்க இலக்கியம் மாந்தை, வஞ்சி ஆகிய நகரங்களின் வளத்தைச் சிறப்புடன் கூறுகின்றது. முசிறி மலை வளமும் கடல் வளமும் பொருந்திய நகராக விளங்கியமை பரணரின் பாடல் வழி அறிய முடிகின்றது. கடல் வணிகம் சிறப்புற்று இருந்தமையால் கி.மு.4ம் நூ. வாக்கிலேயே சீனத்துப் பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகின்றது (நாவாய் - ர.பூங்குன்றன், பக் 50) . மேற்கு கடற்கரை நகரான மாந்தையின் வளமும் சிறப்பும் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.
கடல்வழிப்பயணம் பற்றி இன்று நமக்குக் கிடைக்கின்ற ஏறக்குறைய எல்லா தரவுகளுமே ஐரோப்பியர்களும் சீன யாத்திரிகர்களும் உருவாக்கியனவாக இருப்பதைத்தான் நாம் இன்று காண்கின்றோம். ’தமிழில் அவ்வகை நூல்கள் உருவாக்கப்படவில்லையா’ என்ற கேள்விக்கு பதிலாக நமக்கு இன்று கிடைத்திருக்கின்ற நூல்கள் சில. அதில் ஓலச்சுவடி நூல் ஒன்றினை உதாரணமாகக் காட்டலாம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் சிறந்த ஆவணங்களில் இந்த நூலும் ஒன்று. ‘கப்பல் சாஸ்திரம்’ என்ற பெயருடன் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் இது என்பது நூலை வாசிக்கும் போது அறியமுடிகின்றது (http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - Book 20).
தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வணிகம் செய்ய ஏற்பாடுகள் செய்து, அச்சுத நாயப்ப மன்னரிடம் ஆண்டு வாடகைக்குக் கடற்கரை துறைமுக நகரமாகத் திகழ்ந்த தரங்கம்பாடியையும் பின்னர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கையகப்படுத்தினர். அவ்விஷயங்களை உட்புகுத்தி, அந்தக் காலகட்டத்தில் கடற்கரையோர மீனவ மக்களிடையே இருந்த கப்பல் கட்டும் பணி தொடர்பில் நடக்கும் சடங்குகளை விவரிக்கும் ஒரு செய்யுள் நடையிலான நூலாக இந்த நூல் அமைந்திருக்கின்றது. கப்பல் தயாரிக்கப் பயன்படுத்தும் மரத்துண்டுகளை எடுத்து தயார் செய்யும் நாளின் நட்சத்திரப் பலாபலன்கள், செய்யப்படும் சடங்குகள் என பல செய்திகளை இந்தச் சிறிய நூல் சொல்கின்ரது. ஓலைச்சுவடி நூலான இதனை தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதி மகால் நூலகத்தினர் அச்சுப்பதிப்பாக்கி அது 1950ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதன் மின்படிவ தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் அனைவரும் வாசிக்கக்கூடிய வகையில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
இந்த நூல் ஒரு உதாரணம் மட்டுமே. தமிழகம் வந்து சமயப் பணிகளிலும், தமிழ்ப்பணிகளிலும், சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட ஐரோப்பிய பாதிரிமார்கள், தமிழகத்திலிருந்து தாமே கைப்பட எழுதியும், உள்ளூர் மக்களிடமிருந்து விலை கொடுத்தும் வாங்கிச் சென்ற நூல்கள் ஏராளம். இந்த நூல்களில் பல இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்திலும், ஜெர்மனியின் ஃப்ராங்கன் கல்விக்கூடத்திலும், கோப்பன்ஹாகன் அரச நூலகத்திலும், பிரான்சின் அரச நூலகம் மட்டும் ஆவணப்பாதுகாப்பகங்களிலும், வாட்டிக்கனின் ஆவணப்பாதுகாப்பகத்திலும், ஆம்ஸ்டர்டாம் அரச நூலகத்திலும், லெய்டன் நூலகத்திலும் என பல நாடுகளில் இன்று பாதுகாக்கப்படுகின்றன. பாதுகாக்கப்படுவது மட்டும் போதுமானதன்று. அவை வாசித்தறியப்பட வேண்டும். இவற்றை மிகச் சிறப்பாக இன்று பாதுகாக்கும் ஐரோப்பியர்களை விட தமிழர்கள் நமக்கு இவற்றை அறிந்து கொள்வதும், இவை சொல்லுகின்ற விசயங்களை ஆராய்ந்து அறிவதும், தமிழறின் அறிவுத்தளத்தைப் புரிந்து கொள்ள மிக அவசியத் தேவையாகின்றது.
முடிவுரை
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய அளவில் இன்று தமிழ் ஓலைச்சுவடிகளும் அரிய காகித ஆவணங்களும் சேகரித்துப் பாதுக்காக்கப்படும் ஆவணப்பாதுகாப்பகங்களைத் தொடர்பு கொண்டு அவற்றில் உள்ள பண்டைய தமிழர் வணிகம், தழர் கப்பல் கட்டுமானம் தொடர்பான eல்ல வகை ஆவணங்களின் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும்; இவை உலகளாவிய அரிய ஆவணங்களின் தொகுப்பாக வெளியிடப்பட வேண்டும் என்பதோடு இவை மின்னாக்கம் செய்யப்பட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
துணை நூல்கள்
- தமிழ்ப்பல்கலைக்கழகம், ”நாவாய் – கடல்சார் வரலாற்றாய்வுகள்”, 2010
- தமிழ்ப்பல்கலைக்கழகம், ”நிககம் - வணிக வரலாற்றாய்வுகள்”, 2010
- மயிலை சீனி வேங்கடசாமி, பழங்காலத் தமிழர் வாணிகம், 1974.,காஞ்சிபுரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- Caldwell R.Bishop (1989), A History of Tinnevely. New Delhi: Asian Educational Services.
- Mackintosh -Tim & Smith ( Edited), The Travels of Ibn Battutah, (1988), Macmillan Collector's Library.
- T.P.Palaniyappa Pillay, Kappal Sattiram, 1950, Kappal Sattiram, Madras: Governemnt Oriental Manuscripts Library.
- Ronald Latham. Penguin Classics, Marco Polo Travels, 1958
- புறநானூறு, 208:7
- அகநானூறு
- பரிபாடல்
- பெரும்பாணாற்றுப்படை
- சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment