அம்பிகாபதி திரைப்படத்தில் அம்பிகாபதி அமராவதி கதையைப் பார்த்து கண்ணீர் விட்டு அழாதவர்கள் இருப்போமா? மிக இளம் வயதில் நான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கின்றேன்.
இன்று அந்தத் திரைப்படத்தை எண்ணிப் பார்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன.
99 தெய்வீகப் பாடல்களைப் பாடி சோழ மன்னர் மகள், தன் காதலி அமராவதி முகம் காட்ட, அவள் முகத்தைப் பார்த்து காதல் பாடல் பாடி ...ஐயகோ எல்லாம் முடிந்ததே.. எனப் படம் பார்த்தவர்கள் எல்லாம் அமராவதியைச் சபித்த காட்சிகளும் ..
அவசரக் குடுக்கை இந்த அமராவதி.. எனத் திட்டியதும் இன்றும் நினைத்தால் நினைவு வருகின்றது.
உலகத்து மகா வில்லனாக ஒட்டக் கூத்தர் இந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பார். இத்தனைக்கும் பாவம் அந்த மனிதர்.. பிற்காலத்தில் சோழர் வரலாறு நூல்களை நான் வாசித்த பின்னர் தான் தெரிந்தது எவ்வளவு முக்கியமான ஒரு இலக்கியவாதி இவர் என்பதும், 3 சோழ மன்னர்களின் அரசவையில் ஒரு இலக்கியவாதியாகத் திகழ்ந்தமையும், மன்னனின் குழந்தைகளைப் பாதுகாத்த பெரும்பொருப்பையும் ஏற்றவர் என்பதும்.
அம்பிகாபதி ஏன் 100 பாடல் பாடி முடிக்கும் வரை அரசவையில் கவனம் வைத்திருக்கவில்லை என யாரும் கேட்பதில்லை. அம்பிகாபதி செத்தால் அதற்கும் பழி அமராவதிதான் என்ற சிந்தனை அன்று உருவாகியது.
கம்பர் பாதிக்கப்பட்டவராக மிகப்பரிதாபமாகக் காட்டப்பட்ட படம் இது. ஆனால் 'என் சரித்திரம்' நூலை வாசித்த போது உ.வே.சா கொடுத்திருக்கும் செய்தியின் அடிப்படையில், கம்பர் செல்வாக்குடன் வாழ்ந்தமையும், இன்று மக்கள் மீத்தேனுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்களே.. அந்தக் கதிராமங்கலத்தில் வசித்த ஒரு தாசியாகிய தன் அன்புக் காதலிக்காக சடையப்ப வள்ளலிடம் நெற்கதிர்களை கேட்க, அவரோ பொன்னாலேயே கதிர்களை அக்கவிப்பெருமானுக்கு வழங்கியதாகவும் சில செய்திகளையும் அறிய முடிகின்றது.
சரி.. உண்மையில் அம்பிகாபதிக்கு என்னதான் நடந்தது? 100 பாடல் பாடியும் கூட ஒட்டக்கூத்தரின் சதியால் சோழமன்னனின் தண்டனைப் பெற்று கொல்லப்பட்டாரா.. என்ற கேள்வி எழுகின்றது.
இன்று காலை வீரசோழியம் நூலைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் வீரசோழியம் நூலுக்கான பதிப்புரையை வாசித்துக் கொண்டிருந்தேன்.
சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள், பொதுவாக பலர் குறிப்பிடுவதுபோல தண்டியலங்காரம் இலக்கண நூலை வடமொழியிலிருந்து பெயர்த்து தமிழில் "தண்டி" என்ற ஆசிரியரால் இயர்றப்பட்ட நூல் அல்ல எனச் சொல்லி அதனை மறுக்கின்றார்.
வீரசோழியத்துக்கான பதிப்புரையில் அவர் கீழ்க்காணும் செய்தியைக் குறிப்பிடுகின்றார். "தண்டியலங்காரம் இயற்றினார் அம்பிகாபதியின் புத்திரர். அம்பிகாபதி கம்பர் மகன். கம்பர் குலோத்துங்க சோழன் காலத்தில் வெண்ணெய் நல்லூர் சடையப்ப முதலியார் முன்னர் எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழின்மேற் ரமுது இராமாயணம் அரங்கேற்றியவர்... "
ஆக, இங்கே சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் பதிப்புரை வாசகங்கள் அம்பிகாபதிக்குm ஒரு மகன் இருந்ததாகவும் சொல்கின்றது. அப்படியென்றால் ஒட்டக்கூத்தர் சதி எனத் திரைப்படத்தில் காட்டப்படுவதும், சோழ மன்னன் தண்டனை கொடுத்து அம்பிகாபதியைக் கொன்றார் என்பதும் உண்மையா? அப்படிk கொன்றிருந்தால் அவருக்கு மகன் இருந்ததாகவும் தண்டியலங்காரம் இயற்றியதாகவும் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் குறிப்பிடுகின்றாரே..
எது உண்மை ? திரைப்படத்தை எடுத்தவர் எவ்வகையான ஆய்வுப் பின்புலத்தோடு இப்படத்தை எடுத்தார், கதை வசனம் எழுதினார் என்ற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டுமல்லவா?
சுபா
http://www.jeyamohan.in/35933#.Wm7869R97Gg
ReplyDeleteஉண்மையும் கற்பனையும் சேர்ந்தது என்று disclaimer கொடுத்திருப்பார்கள்..
ReplyDelete