மலேசிய சடங்கு முறைகளிலும் சரி, உணவுப் பழக்கவழக்கங்களிலும் சரி, அதிகமாகத் தமிழ்ப்பண்பாட்டின் தாக்கம் இருப்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். திருமணத்தில் தூவப்படும் மஞ்சள் அரிசி, மன்னருக்குக் கொடுக்கப்படும் மஞ்சள் நிறத்துக்கான அதிக மதிப்பு, வெற்றிலைப் பாக்கு வைத்து சடங்குகளைச் சிறப்பிப்பது என்பவை அவற்றுள் சில. பலகாரங்களை எடுத்துக் கொண்டால் தமிழ்ப்பலகாரங்கள் பலவற்றை மலாய்க்காரர்கள் இயல்பாகச் செய்வது மலேசியாவில் மிக இயல்பான ஒன்று. அப்படிப்பட்ட சில பலகாரங்களில் ஒன்றுதான் அதிரசம்.
சர்வ சாதாரணமாக சாலையோரக்கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் அதிரசங்களை மலேசியக் கடைகளில் காணலாம். குறிப்பாக நெடுஞ்சாலை உணவகங்களின் கடைகளில் இவை கிடைக்கும்.
நாம் பழகிவிட்ட அதிரசங்களைப் போன்ற வடிவத்திலும் குட்டி குட்டியாக சிறிய வடிவத்திலும் இவை கிடைக்கும்.
மலாய் மொழியில் இதனை Kuih Adhirasam அதாவது அதிரசப் பலகாரம் என அழைப்பர். இதற்கு வேறு பெயர்களும் உண்டு. நடுவில் ஒரு ஓட்டை போட்டு வடை போல நாம் சுடும் அதிரசத்தைச் சற்று மாற்றி, நடுவில் 3 அல்லது 4 ஓட்டைகளை ஏற்படுத்தி எண்ணையில் சுட்டு எடுப்பார்கள். மாவு தயாரிப்பு நமது அதிரசத்துக்குச் செய்யும் அதே தயாரிப்புத்தான். இந்த சற்றே வித்தியாசமான இந்த அதிரசத்தை மலாய் மொழியில் Kuih denderam அல்லது Kuih paniaram என்றும் அழைப்பர். அதை விட அதற்கு இன்னுமொரு சிறப்புப் பெயரும் இருக்கின்றது. அதுதான் Kuih telinga keling என்பது.
ஏன் telinga keling என்று அழைக்கின்றனர் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. ? telinga என்றால் மலாய் மொழியில் காது என்று பொருள். keling என்றால் கலிங்கர்கள், அதாவது மலாய் மக்கள் தமிழர்களைக் ”கலிங்கர்கள்”, ”கெலிங்கா”, என்றுதான் சுட்டிக் காட்டுவர். முன்னர் இயல்பான அடையாள்ச் சொல்லாக இருந்த இந்த ”கெலிங்கா” என்ற சொல் இன்று தவறான சுட்டிக் காட்டுதல் என்ற அடிப்படையில் பொது இடங்களில் பேசக்கூடாத ஒரு சொல்லாக மலேசிய சூழலில் உள்ளது.
ஒரு தமிழரை நோக்கி ”கெலிங்கா” என்று ஒரு சீனரோ மலாக்காரரோ சொன்னால் அது ஒரு தமிழரை அவமானப்படுத்தும் சொல் என்ற வகையில் மூவினங்கள் சேர்ந்து வாழும் மலேசிய சூழலில் தவிர்க்கப்பட வேண்டிய சொல்லாக இன்றைய நிலையில் இச்சொல் கையாளப்படுகின்றது. ஆனால் வரலாற்றை நாம் அறிந்து கொண்டால் அது கலிங்கத்திலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்த மலாய் மக்கள் பண்டைய காலம் தொட்டு பயன்படுத்திய சொல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆக தமிழர்களின் காது போல இந்த அதிரசம் இருக்கின்றதாம். அதனால் இதற்கு Kuih telinga keling என்று பெயர் வைத்து விட்டனர் மலாய்க்காரர்கள்.
மலாய்க்காரர்களில் பலர் இதனை தமிழ்ப்பலகாரம் என்றே மறந்து விட்டனர். தங்களது பண்டைய பாரம்பரிய உணவில் ஒன்று இது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ஆக, தீபாவளி நாளில் அதிரசம் சாப்பிடுவோர் இதன் மலாய் மொழி பெயரையும் நினைத்துக் கொண்டே சாப்பிடுங்கள். நம் அதிரசம் நம் பாரம்பரிய உணவு. அதனை மறக்கலாமா?
அன்புடன்
சுபா
வணக்கம் சுபா !
ReplyDeleteமுதலில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம்
எப்படி மறக்க முடியும் தமிழ் பலகாரத்தை அதிரசம் அதிசயம் நன்றி