Sunday, October 22, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 137

மணிமேகலை ஆராய்ச்சிக்காகப் பௌத்தத்தை அறிந்து கொள்ளும் முயற்சியை உ.வே.சா தொடங்கியிருந்தார். தனக்குப் பரிச்சயமில்லாத பௌத்த கொள்கைகளை அறிந்து கொள்ள நூல்களை வாசிப்பதும், அவரது கல்லூரியில் பணியாற்றிய ரங்காசாரியாருடன் கலந்துரையாடுவதும் தினம் தினம் நடந்து கொண்டிருந்தது. பௌத்தக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்காக ரங்காச்சாரியாருடன் உ.வே.சாவுக்கு ஏற்பட்ட நட்பு தொடர்ந்தது. ஆங்கிலத்தில் அமைந்த பல பௌத்த நூல்களை உ.வே.சாவிற்கு மொழி பெயர்த்து அவர் கூறுவார். மணிமேகலையை அதன் தொடர்போடு இணைத்துப் பார்த்து புரிந்து கொள்ள அது மிக உதவியது என்றே கூற வேண்டும்.


ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இதே போல மணிமேகலை ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் ரங்காச்சாரியாருக்குக் கல்லூரியில் பணிமாற்றம் கிடைக்கவே அவர் சென்னைக்குச் செல்ல வேண்டிய சூழல் அமைந்தது. செல்லும் போது மணிமேகலை அச்சுப்பதிப்புப் பணியை உ.வே.சா கண்டிப்பாக முடித்து விட வேண்டும் என உறுதியாகக் கேட்டுக் கொண்டார் ரங்காச்சாரியார். ஏனெனில் அவர் உள்ளத்தில், தமிழில் இத்தகைய அறிய பௌத்த நூல் ஒன்று இருப்பது ஏனையோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது. உ.வே.சாவும் சென்னை வந்து அங்கேயும் ரங்காச்சாரியாருக்கு அன்புத்தொல்லைக் கொடுத்து இந்த நூலைக் கட்டாயமாக அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்து விடுவதாக உறுதியளித்தார்.


இவர்கள் இருவரது ஆய்வின் போதும் மணிமேகலையில் இலங்கை தொடர்பான பல செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் உள்ள இடங்களின் பெயர்கள் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அவை எங்கே இருக்கிறன என்று அறிந்து கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இலங்கையில் வசித்த பொ.குமாரசாமி முதலியாருக்கு இந்த இடங்களைப் பற்றிய தகவல் தெரிந்திருக்கலாம் என எண்ணி அவருக்குக் கடிதம் எழுதினார் உ.வே.சா. அதுமட்டுமன்றி இலங்கையில் பௌத்தம் பற்றிய தகவல்களையும் அவர் வழங்க வேண்டும் எனவும், இந்தப் பணியில் யாரேனும் உதவ முன்வந்தால் அவர்கள் தொடர்பினைத் தருமாறும் கேட்டுக் கொண்டார்.


இந்த முயற்சிகளின் வழி இலங்கையில் வித்யோதய கலாசாலையில் முதல்வராக இருந்த பௌத்த மத ஆசிரியர் சூமங்களர் என்ற பெரியவர் ஒருவருடைய தொடர்பு கிட்டியது. உ.வே.சாவிற்கு எழுந்த சந்தேகங்களை அவர் கடிதங்களின் வழி விளக்கமளித்துத் தெளிவினை ஏற்படுத்தினார் என்பதையும் உ.வே.சா வின் குறிப்புக்களின் வழி அறிய முடிகின்றது.
இத்தகைய பல்வகைப்பட்ட ஆய்வு முயற்சிகளினால் பௌத்த மதக் கொள்கைகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை உ.வே.சா சிறிது சிறிதாக கற்கும் சூழல் உருவாகியது. இதனால் மணிமேகலையை நன்கு புரிந்து அந்தப் புரிதலுடன் அதன் அச்சுப்பதிப்பாக்கப் பணியை ஆரம்பிக்க இந்த முன்னேற்பாடுகள் உறுதியான அடிப்படையை அமைத்துக் கொடுத்தன.
மணிமேகலையின் எந்த விளக்கமும் பொருளுரையும் இல்லாத மூலம் மட்டும் 1891ம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை என்பவரால் அச்சுப்பதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இது உ.வே.சா மணிமேகலையைப் பதிப்பிப்பதற்கு முன்னரே வந்த மணிமேகலை அச்சுப் பதிப்பாகும். ஆனால் அதில் பொருள் வரையறை ஏதும் இல்லாமல் ஏட்டுச் சுவடியிலுள்ள பாடங்களை அவர் அச்சாக்கி இருந்தார். அதனை வாசிப்போருக்கு மணிமேகலையை அறிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஏட்டில் உள்ளதை அப்படியே அச்சாக்குவது மட்டும் பதிப்புப் பணியாகாது. அதோடு அச்சிடுபவர் சரியாகத்தான் அச்சுப்பதிப்பாக்கத்திற்குத் தயார் செய்கின்றாரா என்பதும் மிக மிக முக்கியம். இந்தப் பதிப்பைப் பற்றி உ.வே.சாவின் நண்பர் தி.த.கனகசுந்தரம் பிள்ளை ஒரு கடிதத்தில் குறிப்பிடும் போது ‘எட்டி குமரனிருந்தோன்றன்னை’ என்பது ‘எட்டிருமானிருந்தோன்’ என்றும், ‘ஆறறி யந்தணர்’ என்பது ‘ஆற்றி யந்தணர்’ என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே யறிந்து கொள்ளவும்” (29-3-1891) என்று குறிப்பிடுகின்றார்.


ஆக, ஏட்டிலிருந்து தாளில் அச்சுப்பதிப்பாக கொண்டு வருவது மட்டும் அச்சுப்பதிப்புப் பணியல்ல. நூலை, அது உருவாக்கப்பட்ட காலகட்டத்தின் சூழலையும் பின்புலத்தையும் அறிந்து, சொற்களுக்கானப் பொருளை அறிந்து தெளிந்து, விடுபட்ட அல்லது உடைந்த பகுதிகளை அப்படியே விட்டு வைத்து அதனை வாசிப்போருக்குத் தெளிவு படுத்தி பதிப்புக்கும் போதுதான் உண்மையான பதிப்புப் பணி என்பது நிகழும். இல்லையென்றால் ஒரு நூலைத் தவறான கருத்து தரும் படி மாற்றிய குற்றமே பதிப்பாசிரியருக்கு வந்து சேரும். இதுவரை வெளிவந்த அச்சுப்பதிப்பு அனைத்தும் குறைகள் அற்றவை எனக் கொள்வதே தவறு. பல நூல்கள் இடைச்சேர்க்கை, பிழையான பதிப்பு முயற்சி என்ற காரணங்களினால் பொருள் மாற்றம் ஏற்பட்டிருக்க மிகுந்த வாய்ப்புள்ளமையால் இதுகாறும் பதிப்பிக்கப்பட்ட நூல்களையும் தமிழறிஞர்கள் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து காலச் சூழலை மனதில் கொண்டு அந்த நூல்களில் உள்ள பிழைகளை நீக்கி மறுவாசிப்பும் மறுபதிப்பும் கொண்டு வருவது தற்காலத்திலும் தேவையான ஒன்றே. இதனை உலகளாவிய அளவில் இயங்கும் கல்விக்கூடங்கள் கவனத்தில் கொண்டு இத்தகைய பணிகளையும் தொடக்க வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment