Monday, September 11, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 132

துன்பம் வரும்போது ஒன்றுக்கடுத்து இன்னொன்று என வரிசையாக அமைந்து விடுமானால் அதிலிருந்து மீள்வதற்கு அசாத்தியமான மன உறுதி கட்டாயம் ஒருவருக்கு வேண்டும். துன்பத்திலே உயர்வு தாழ்வு காண முடியுமா என்ற கேள்வி எழலாம். துன்பத்தை அனுபவிப்போருக்கு, அந்த நேரத்தில் ஒருவரது முழு கவனத்தையும் அத்துன்பம் எடுத்துக் கொண்டு வேறு விசயங்களில் கவனம் செலுத்த முடியாதவாறு ஒரு நிலையை உருவாக்கினால் அது உயர்ந்த துன்பம் தான். சில வகை துன்பங்களுக்கு ஓரிரு நாட்களில் விடை கிடைக்கலாம். துன்பமே நன்மையாகவும் ஆகலாம். ஒரு சில வகை துன்பங்களோ என்றும் மனதை விட்டு அகலாத தன்மை கொண்டவையாக அமைந்து விடுகின்றன. இத்தகைய துன்பங்கள் வாழ்வில் மறக்கவியலாத கீறலை உருவாக்கி வைத்து விட்டுச் செல்லும் போது அதன் பாதிப்பு கால ஓட்டத்தில் ஓரளவு குறைந்தாலும், முழுமையாகக் குறையாமல் மனதில் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவ்வப்போது வலியை உணர்த்திக் கொண்டே தானிருக்கும். இத்தகைய அனுபவத்தைத் தரவல்லது மரணம். இந்தத் துன்பத்தை மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் போது அதிலிருந்து வெளிவருவதற்கு அசாத்தியமான மன உறுதி என்பது அவசியமாகின்றது. காலம் தான் பல வகை துன்பங்களுக்கும் மாற்று மருந்தாக அமைகின்றது. 

மனிதராகப் பிறந்தவர் அனைவருமே இன்ப துன்பம் என்ற சுழற்சியிலே மாட்டிக் கொண்டவர்கள் தானே. எப்போதுமே ஒரே சீராக நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் இருப்பதில்லை. 

புறநானூற்றுப் பதிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் இத்தகைய துன்ப நிகழ்வுகள் உ.வே.சாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தன. 

சங்கீதத்தில் மிகத் தேர்ந்தவர் என்பதுடன் உ.வே.சாவிற்கு மிக நெருக்கமாக இருந்தவரான மகா வைத்தியநாதய்யர் 27.1.1893ம் ஆண்டு காலமானார். திருவாவடுதுறை ஆதினகர்த்தருக்கும் நல்ல நெருக்கமான தொடர்பில் இருந்தவர் இவர். இவரது மறைவு உ.வே.சாவைப் பாதித்தது போலவே, ஆதீனகர்த்தரையும் மிகவும் பாதித்தது என்ற குறிப்பை நூலில் காண்கிறோம். 

அதே ஆண்டில் உ.வே.சாவின் தாயும் தந்தையும் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டனர். தாயாரின் உடல் நிலை மிக கவலைக்கிடமான நிலையில் இருந்த வேளையில் தந்தையாரின் உடல் நலமும் திடீரென்று அதிகமாக பாதிப்புற்றது. அக்டோபர் மாதம் 7ம் தேதி உ.வே.சா வின் தந்தையார் வேங்கட சுப்பையர் காலமானார். நிறைந்த சிவபக்தி கொண்டவரான இவர் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் தியான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார் என்றும் இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து "சிவபக்தி பண்ணிக் கொண்டிரு" என சொல்லிவிட்டு சிவகதி அடைந்தார் என்பதையும் உ.வே.சா நூலில் குறிப்பிடுகின்றார். 

உ.வே.சாவின் அந்த நொடிப்பொழுது வரையில் வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் தந்தையாரே முன் நின்று கவனித்துக் கொண்டிருந்தார். அது உ.வே.சா முழுக்க முழுக்க கல்லூரிப் பணிகளில் கவனம் செலுத்தவும், தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்து ஆராய்ந்து பதிப்பிக்கவும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. வீட்டு விசயங்களில் மனம் அலைபாயாமல் ஆராய்ச்சியில் மனம் முழுமையாக ஈடுபட இது பெரிதும் உதவியது. ஆனால் தந்தையாரை இழந்த அந்தக் கனத்திலிருந்து ஆய்வுப் பணியுடன் குடும்பச் சுமையும் உ.வே.சாவிடம் வந்தடைந்தது. தந்தையை இழந்த துயரம் அவர் மனதை மிகவும் பாதித்து விட்டது என்பதைத் தன் தந்தையை நினைத்து அவர் எழுதிய செய்யுட்கள் வெளிப்படுத்துகின்றன. தந்தையாரின் இறப்பும், குடும்பச் சுமையும் உ.வே.சாவின் தமிழ்ப்பணியைச் சற்று சுனங்கச் செய்தன. 

இரண்டு மரணங்கள் ஒரே ஆண்டில் நிகழ்ந்து வேதனையில் ஆழ்த்த, அவ்வேளையில் உ.வே.சாவுக்குப் பலமுறை தக்க வேளைகளில் உதவிய பூண்டி அரங்கநாத முதலியார் காலமானார் என்ற செய்தி கிட்டியது. 10.12.1893ம் ஆண்டு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 

பூண்டி அரங்கநாத முதலியார் செல்வாக்கு மிக்கவராக இருந்தார் என்பதோடு பல தமிழ் அமைப்புக்களின் தலைமைப் பதவியையும் வகித்து வந்தவர் . அவரது இழப்பு தமிழுலகுக்குப் பெரும் இழப்பு என தமிழ்ச்சான்றோர் பலர் வருந்தியமையை உ.வே.சாவின் எழுத்துக்களின் வழி அறிய முடிகின்றது. தமிழ்ப்புலமையும் ஆங்கிலப்புலமையும் பெற்றவர், மிகுந்த செல்வந்தர் என்பதோடு தமிழ் அமைப்புக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதால் அதிகமான நட்பு வட்டத்தைப் பெற்றவராக இருந்தார் பூண்டி அரங்கநாத முதலியார். ஆக நண்பர்கள் பலர் கேட்டுக் கொள்ள பூண்டி அரங்கநாத முதலியாரின் இழப்பை நினைத்து சில செய்யுட்களை எழுதினார் உ.வே.சா. 

உ.வே.சா தன் வாழ்வில் மூன்று பெரும் இழப்புக்களை அந்த ஆண்டில் சந்தித்திருந்தார். இன்னமும் புறநானூற்றுப் பதிப்பு முழுமையடையாமலேயே இருந்தது. 
தொடரும்..
சுபா

No comments:

Post a Comment