அக்காலத்தில் யாத்திரை செய்வது என்பது இன்று போன்று சுலபமான ஒரு காரியம் இல்லை என்பதை நம்மால் ஊகித்தறியமுடியும். இன்றைக்கு போல வாகன வசதிகள் அல்லாத காலகட்டம் அது. மடங்களிலிருந்து ஆதீனகர்த்தர் பயணிக்கவேண்டும் என்றால் அதற்கு நீண்ட நாளைய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது மிக அவசியம். தை மாதத்தில் ஒரு பிரயாணம் அப்படி ஏற்பாடாகி இருந்தமையையும் அதில் தானும் உடன் பங்கு கொண்டமையையும் விரிவாக உ.வே.சா அத்தியாயம் 72ல் குறிப்பிடுகின்றார்.
தஷிணம் பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள செவ்வந்திபுரத்தில் ஒரு மண்டபம் ஒன்றை அச்சமயம் கட்டியிருக்கின்றார். அதற்கு சுப்பிரமணிய தேசிக விலாசம் என பெயரிட்டு சிறப்பு செய்திருக்கின்றார். ஆதீனத்தோடு தொடர்புடைய மண்டபம் என்பதால் இம்மண்டபம் இன்னமும் இங்கு இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது என்றே கருதுகின்றேன்.
இந்தத் தம்பிரான் தேசிகரை தமது குழுவினருடன் இந்தப் பகுதிக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என மிக விரும்பி விண்ணப்பம் அளித்திருந்தார். அதே சமயம் மதுரை மீனாஷி சுந்தரேசுவரர் ஆலயத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று மேலும் ஒரு சிறப்பு அழைப்பும் அவருக்கு வேறொருவரிடமிருந்து கிடைத்திருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு அவ்வருடம் தை மாதம் மதுரைக்கு ஒரு பிரயாணம் செல்ல தேசிகர் திட்டம் அமைத்தார்.
செல்லும் வழிகளில் இருக்கும் கனவாண்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் ஆதீனகர்த்தரின் வருகையைப் பற்றிய செய்தி அனுப்பிவைக்கப்பட்டது. செல்லும் வழியில் தாம் சந்திக்கும் நபர்களோடு உரையாட தம்மோடு சிலரையும் கூட்டிச் செல்ல தேசிகர் உத்தேசித்திருந்தார். அதில் உ.வே.சாவிற்கு முக்கிய பணிகளையும் மனதில் நினைத்திருந்தார். அதாவது வழியில் சந்திப்போருடன் உரையாடும் போது செய்யுட்கள் சொல்லவும் தமிழ் இலக்கிய விளக்கங்களை அளிக்கவும் என்ற வகையில் தேசிகரின் குழுவில் இருக்கும் தம்பிரான்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்தப் பயணத்தின் போது கல்லிடைக் குறிச்சியில் இருந்த சின்னப்பட்டம் ஸ்ரீ நமசிவாய தேசிகருக்கு மதுரையில் வந்து சேர்ந்து கொள்ளும்படி சுப்பிரமணிய தேசிகர் செய்தி அனுப்பியிருந்தார். இந்தச் செய்தி அனுப்புதல் என்பதை உ.வே.சா 'திருமுகம் அனுப்பினார்' எனக் குறிப்பிடுகின்றார். அந்த யாத்திரையின் போது வழியில் தேவைப்படும் தங்கும் வசதி உணவு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் நடந்திருக்கின்றன.
தம்மோடு தமது தந்தையும் இந்தப் பயணத்தில் உடன் வருவதை உ.வே.சா விரும்பினாலும் வேங்கடசுப்பையருக்கு அதில் உடன்பாடு காட்டவில்லை. காரணம் அப்போதுதான் மதுரைக்கு முதன்முதலாகப் புகை வண்டி அறிமுகம் செய்யப்பட்ட காலம். பிரயாணத்தின் போது தாமும் பிறரும் புகை வண்டியில் பிரயாணம் செய்ய நேரும். வேங்கட சுப்பையர் இதில் பயணம் செய்யமாட்டார். ஆக அதனால் அவரையும் உடன் அழைத்துச் செல்வது என்பது நடக்காத காரியம் என்றும் உணர்ந்து திருவாவடுதுறையிலேயே அவரை குடும்பத்தாருடன் விட்டுச் செல்வது என முடிவானது.
தைப்பூசத்திற்கு முதல் நாள் தேசிகர் தம் பரிவாரங்களுடன் யாத்திரையைத் தொடங்கியிருக்கின்றார். திருவிடைமருதூரில் அச்சமயம் பிரமோத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே போய் தேசிகர் திருத்தேரை நிலைக்குக் கொண்டு வந்து பூஜை செய்து அங்கே அனைவரும் வழிபட்டனர்.
உ.வே.சாவிற்கு பயணத்திற்கு தேவைப்படும் என்று கித்தான்பை (இது என்ன வகை பை என்று தெரியவில்லை) ஒன்றையும் பட்டால் செய்யப்பட்ட தலையணையையும் ஜமக்காளம் ஒன்றினையும் தேசிகர் கொடுத்திருக்கின்றார். பிறகு தனக்க்ருகில் அமர வைத்து அன்புடன் ஒரு தம்பிரானிடம் சொல்லி கொணர்ச் செய்த கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றை உ.வே.சாவின் கழுத்திலே அணிவித்து ஒரு சால்வையைப் போர்த்தி இதே கோலத்தில் பெற்றோரிடம் சென்று பார்த்து அவர்கள் மனம் குளிர வைத்து ஆசிபெற்று வரும் படி சொல்லி அனுப்பியிருக்கின்றார்.
இதனை உ.வே.சா என் சரித்திரம் நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
பிறகு என்னைச் சமீபத்தில் வந்து உட்காரச் செய்து, “நாம் யாத்திரை செய்யும் இடங்களிலெல்லாம் உமக்குத் தொந்தரவு கொடுக்க நேரும். தமிழபிமானிகளாகிய கனவான்கள் பலர் வருவார்கள். அவர்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தமிழ்ப் பாடல்களைச் சொல்ல வேண்டியது உமது கடமை” என்று கூறினார். “அப்படிச் செய்வது என் பாக்கியம்” என்றேன் நான்.
அவர் கட்டளையின்படி உடனே ஒரு தம்பிரான் கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றைக் கொணர்ந்து என் கழுத்திலே போட்டு ஒரு சால்வையை என் மேல் போர்த்தினார். நான் அச்சமயத்தில் ஆனந்த மிகுதியால் ஸ்தம்பித்துப் போனேன்; மயிர்க் கூச்செறிந்தது “இப்படியே திருவாவடுதுறைக்குப் போய்த் தந்தையாரிடம் விடை பெற்றுக் கொண்டு இங்கு வந்து விடும். நம்மோடு புறப்படலாம்” என்று தேசிகர் சொல்லி என்னைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார்.
இப்படி தேசிகரிடம் அன்பையும் பெருமையையும் பெற்ற நாட்கள் உ.வே.சாவின் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள் என்பதில் ஐயமில்லை. தமிழ் மேல் தீவிர பற்று கொண்ட உ.வே.சா என்ற அந்த இளைஞன் மீது தேசிகர் கொண்டிருந்த அன்பும் நம்மை உருகச் செய்கின்றது.
தொடரும்...
சுபா
கித்தான்பை - சாக்கில் செய்த பை. சாக்கை 'கித்தான்' என்று வழங்கி நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteபட்டால் செய்யப்பட்ட தலையணை - இதை உபயோகிப்பது ஆசாரம். கித்தான் பையும் ஆசாரம் (அப்படீன்னா, பெரியவர்கள் குளித்தபிறகு பழைய துணி எதுவும் தன் மீது படாமல் பார்த்துக்கொள்வார்கள். அப்படிப் பட நேர்ந்தால், சுத்தமான இடங்களுக்குச் செல்லமுடியாது.- சமையல் உள், சன்னிதானம் போன்றவை). சாக்கு எப்போதும் நீரால் தோய்க்கப்படுவதில்லை என்பதால் அதை உபயோகப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். பகல் நேரத்தில் கொஞ்சம் அசர, பட்டு சுற்றிய தலையணை உபயோகப்படும்.
ReplyDelete