Monday, October 13, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 73

உ.வே.சாவின் வாழ்க்கை திருவாவடுதுறையிலேயே தொடர்ந்தது. தனது பெற்றோரையும் மனைவியையும் பிரிந்து அவர் திருவாவடுதுறை ஆதீனத்திலேயே தங்கியிருந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தொடர்ந்து வந்தார். அதே வேளை சுப்ரமணிய தேசிகரிடத்திலும் பாடம் கேட்பதைத் தொடர்ந்து வந்தார்.நாளுக்கு நால் இவரது அறிவின் விசாலம் விரிவடைந்து வந்தது. மடத்திற்கு வரும் பல கல்விமான்கள், செல்வந்தர்கள் ஆகியோர் நட்பும் கிடைக்கப்பெற்றது. 

மடத்தில் இருக்கும் தம்பிரான்களில் இவரிடம் பாடம் படிக்கும் சிலர் உ.வே.சா மடத்திலேயே நிரந்தரமாக தங்கி விட்டால் தங்களுக்கு அது தமிழ் கற்றலில் மிக உதவும் என நினைத்து சுப்பிரமணிய தேசிகரை அணுகி மடத்திலேயே அவர் பணி தொடர தேசிகர் உதவ வேண்டும் என அவ்வப்போது கேட்டு வந்தனர். தேசிகர் மனத்திலும் இந்த விருப்பம் இருந்திருக்க வேண்டும். 

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கற்றவர் என்ற ஒரு பெருமையுடன் உ.வே.சாவின் தமிழ்க் கல்வி ஞானமும் அதன் மேல் அவர் கொண்டிருந்த பற்றும் தேசிகரிடம் அவர் காட்டிய பணிவும் அன்பும், மரியாதையும் தேசிகரை மிகக் கவர்ந்திருந்தன. ஆக திருமடத்திற்குத் தகுந்ததொரு புலவர் உருவாகிக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் அவர் மனதிலும் இருந்து வளர்ந்து வந்தது.

இந்த நிலையில் குடும்பத்தாரைப் பிரிந்து தனியாக உ.வே.சா வாழ்க்கையைத் தொடர்வது சரியல்ல என முடிவெடுத்து திருவாவடுதுறையிலேயே அவருக்கு ஒரு தனி வீட்டினை கட்டும் பணியை மடத்து அதிகாரிகளுக்குப் பிறப்பித்தார் தேசிகர். இந்த வீடு உருவாகி முடியும் வரை இது உ.வே.சா குடும்பத்தினருக்குத் தான் என்பது உ.வே.சாவிற்கே தெரியாது. புது மனை கட்டி முடிவானதும் பெற்றோருக்குக் கடிதம் போட்டு வரச் சொல்லும் படி பணித்தார் தேசிகர். 

திருவாவடுதுறை வந்து சேர்ந்த உ.வே.சாவின் குடும்பத்தினருக்கு ஆனந்தம் நிறைந்த ஆச்சரியமாக இந்த விஷயம் அமைந்தது. பொருளாதார நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு ஊராக மாறி மாறி நாடோடி போல சில காலங்கள் தமது குடும்பத்தை வழி நடத்தி வந்த உ.வே.சாவின் தந்தையாருக்கு இனி நிரந்தரமாகக் குடும்பத்துடன் தங்க ஒரு இடம் கிடைத்தது மாபெரும் மகிழ்ச்சி என்பதில் ஐயமேது ? எக்காலத்து செய்த நற்செயலோ, பூர்வ ஜன்ம புண்ணியமோ திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் வடிவில் அவர்கள் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை கிடைத்திருக்கின்றதே என அவர்கள் மனம் மகிழ்ந்து போனார்கள்.

ஒரு சுப நாளில் புது மனைக்குச் சென்று தனது புது வாழ்க்கையை தனது பெற்றோர் மனைவியுடன் தொடங்கினார் உ.வே.சா.

சாமிநாத ஐயர் என உ.வே.சாவை அப்போது மடத்திலும் சரி ஏனைய தமிழ்ப் புலவர்களும் சரி, நண்பர்களும் சரி அழைப்பது வழக்கம். அது பிறகு திருவாவடுதுறை சாமிநாத ஐயரென்று வழங்குவது மரபாக உருவாகியது. இது ஒரு ஊர்ப் பெயராக இருப்பினும் தமது பெயரோடு இணைத்து வழங்கப்படுவதைக் கேட்கையில் உ.வே.சாவிற்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி ஏற்பட்டதென்று தனது குறிப்புக்களின் வழி என்.சரித்திரத்தில் அவர் தன் மனதின் மகிழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார்.

”என்னைத் திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரென்று வழங்குவது உறுதியாயிற்று. திருவாவடுதுறையென்பது ஊர்ப் பெயராக இருந்தாலும் அதை என் பெயரோடு சேர்த்தபோது எனக்கு ஒரு கௌரவப் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. ”

ஆதீனத்தில் நெடுங்காலம் இருக்கும் நிலை உவே.சாவிற்கு வாய்க்கவில்லை. ஆதீன வித்வானாக இல்லாத போதிலும் சில பதிப்புக்களில் தேசிகர் உ.வே.சா வை ஆதீன வித்வான் எனக் குறிப்பிட்டு எழுதியமையைப் பெருமையாகக் கருதி அதனைக் குறித்து வைக்கின்றார் உ.வே.சா.

”சுப்பிரமணிய தேசிகர், ஆதீன வித்துவான் என்று போடவேண்டுமென்று சொன்னதே எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கிற்று. அவர் என்னைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயத்தை அறிந்தேன். அப்பெயரை அப்பொழுது மும்மணிக் கோவைப் புஸ்தகத்தில் அச்சிடாவிட்டாலும், தேசிகர் பிற்காலத்தில் தம் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். நான் கும்பகோணம் காலேஜில் உத்தியோகம் பெற்ற பிறகு அவர் எனக்கு எழுதிய கடிதங்களிலும், அனுப்பிய புஸ்தகங்களின் முன் பக்கங்களிலும், “நமது ஆதீன வித்துவான்”, “ஆதீன மகா வித்துவான்” என்றெல்லாம் எழுதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.”

ஆதீன வித்வானாகவோ புலவராகவோ ஆவதற்கு முன்னரே அவருக்கு மற்றொரு வாய்ப்பு அமைந்தது. இதுவே அவரது வாழ்க்கை பயணத்தில் மூன்றாவது மிகப் பெரிய மாற்றத்தை அவருக்கு உருவாக்கி அமைத்தது. இளம் வயது இளைஞனாக இருந்த உ.வே.சா கல்வி கற்ற அறிஞராக,  ஒரு பணியை பொறுப்புடன் எடுத்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து செயலாற்றும் பணிக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வல்லமை பெற்றவராக அவர் வாழ்க்கையில் புதிய அடிகளை எடுத்து வைக்கும் புதுப் பயணம் தொடங்கிற்று..!

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment