Thursday, April 24, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 67

அன்றைய நாள் திருவாவடுதுறை என்னும் அவ்வூர்  ஒளியிழந்திருந்தது. 

ஆனால் காலம் என்னும் ஒரு மருந்து போல் வேறொன்றுமில்லை. அது வேதனைகளையும் பிரிவுகளையும் மாற்றம் என்ற ஒன்றினை அறிமுகப்படுத்தி, அதனுள்ளே நம்மை முழுதுமாகத் தள்ளி நம்மை அப்போதைக்கு வாட்டி துன்புறுத்தும் அல்லல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்து விடும் ஒரு மாமருந்து. 

இத்தோடு துன்பத்திற்கு விடுதலை ஏற்படுமா? .... என்றால் அதற்கும் ஒரு முடிவில்லை என மீண்டும் மீண்டும் இன்ப துன்பத்தை காட்டியும் மறைத்தும் காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கின்றது.

உ.வே.சா வின் வாழ்வில் பிள்ளையவர்கள் மறைவுக்குப் பின் ஏற்படுவது வேறொரு வகையானதொரு வாழ்க்கை. 

வயதும் வளர .. உலக அறிவும் விசாலமாகிய காலகட்டம் அது..இந்தப் புதிய வாழ்க்கையில் அதிகமாக தாமே சுயமாக  பொறுப்பேற்றுக் கொண்டு சம்பாதித்து தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தைப் பேணுவது.. தனது கணவுகளை நனவாக்குவது என்ற வகையில் பயணித்த வாழ்க்கை பயணம் அது. அதன் தொடர்ச்சிகளை அடுத்தடுத்த பதிவுகளில் வழங்குகின்றேன்.

பிள்ளையவர்கள் மறைவுக்குப் பின்னர் மடத்தில் இருந்து வரும் வாய்ப்பிற்கு தமக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சம் உ.வே.சாவின் மனதை வாட்டாமல் இல்லை. ஆனால் ஆதீனகர்த்தர் சுப்ரமணிய தேசிகர் அவரை அங்கேயே தொடர்ந்து இருக்க அனுமதி வழங்கியதோடு தொடர்ந்து தம்மிடமே இவரும் ஏனைய சில மாணாக்கர்களும் பாடம் படித்து வரலாம் என்றும் புதிதாக பாடம் கேட்க வருவோருக்கு பாடம் சொல்லும் பணியையும் மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்க தங்குமிடம், தமிழ்ப்பாடம் பற்றிய கவலைகள் மறைந்து அன்றாட வாழ்க்கையின் அலுவல்கள் தொடர்ந்தன.

அபய வார்த்தை என்ற அத்தியாயத்தில் எதிர்கால சிந்தனையை நினைத்து ஏற்பட்ட அச்சத்திற்கும்  தனது மனக்கவலைகளுக்கும் தேசிகர் வழங்கிய அன்பு வார்த்தைகள் அபய வார்த்தைகளாக அமைந்தமையை உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார். 

பிள்ளையவர்களோடு எப்போதும் இருந்து பாடம் கேட்டுக் கொண்டும் எழுதிக்கொண்டும் சுகமாகக் காலத்தைக் கழித்தோம். இனிமேல் நாம் என்ன செய்வது? இம்மடத்திற்கும் நமக்கும் என்ன உறவு இருக்கப் போகிறது? நம் நிலை இனி என்ன ஆகும்?” என்ற ஏக்கம் தலைப்பட்டது. “ஒரு பெருந்துணையாக விளங்கிய பிள்ளையவர்கள் மறைந்ததால் வேறு பற்றுக் கோடில்லாமல் அலைந்து திரியும் நிலை நமக்கு வந்து விடுமோ” என்று அஞ்சினேன்.

இக்குழப்பத்தில் அங்கே நிற்பதைவிட ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்து வருவது நலமென்றெண்ணி மடத்தினுள்ளே சென்றேன்.

அங்கே ஒடுக்கத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டவுடன் அதுகாறும் என்னுள் அடங்கியிருந்த துக்கம் பொங்கவே கோவென்று கதறி விட்டேன். என்ன முயன்றும் விம்மல் அடங்கவில்லை. அடக்க முடியாமல் எழுந்த என் வருத்தத்தைக் கண்ட தேசிகர், “வருத்தப்பட்டு என்ன செய்வது! மாற்ற முடியாத நஷ்டம் நேர்ந்துவிட்டது! நமக்கும் வருத்தம் அதிகமாக இருக்கிறது; வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். உமக்குத் தாங்க முடியவில்லை. உம்மிடத்தில் அவருக்கு இருந்த அன்பை வேறு எங்கே பார்க்க முடியும்?”
என்றார்.

..
பிள்ளையவர்களுடைய அன்பில் வளர்ந்த எனக்கு மற்றவர்களது அன்பின் நிலையை அறிந்துகொள்ளச் சந்தர்ப்பமும் நேரவில்லை. பிள்ளையவர்கள் பிரிந்த பிறகு தேசிகருடைய அன்பின் சிறப்பானது தெளிவாக விளங்கத் தொடங்கியது.

அன்பு மேலீட்டுடன் ஆதரித்து வந்த ஆசிரியர் மறைவுக்குப் பின் வாழ்க்கை முற்றுப் புல்ளையைக் அடைந்து விடவில்லை. புதிய கதவுகள் திறக்க புதிய வாய்ப்புக்களும் தம்மை அடையாளம் காட்ட ஆரம்பித்தன உ.வே.சாவின் வாழ்க்கையில்.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment