அன்று காலை சீத்தாம்மாவுடன், மதுமிதாவும் சேர்ந்து கொள்ள நாங்கள் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதாகத் திட்டம். அவற்றை முடித்து 2:30க்கு திரு.நரசய்யா தம்பதிகளை அவர்கள் வீட்டில் சந்தித்து பேசுவது.. மற்றும் ஆலவாய் நூல் பற்றி கலந்துரையாடுவது என்பது திட்டம். ஆனால் நாங்கள் தான் 2:30 மணிக்கு அண்ணா நகர் சரவனபவனில் இருக்கின்றோமே!
திருமதி.நரசய்யா, திரு.நரசய்யா,சுபா, திருமதி.சீதாலட்சுமி
தாமதத்திற்கான காரணத்தை திரு.நரசய்யாவிற்குத் தொலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு நாங்கள் சாப்பிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். சீத்தாம்மா ஏற்பாடு செய்திருந்த வாகனமோட்டி எங்கெங்கோ சென்று பின்னர் மீண்டும் கண்டுபிடித்து ஒரு வழியாக எங்களை 4 மணிக்கு திரு.நரசய்யா இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார். பாவம்.. அவருக்கும் வழி மறந்து போய்விட்டது போலும்.
திருமதி.மதுமிதா திரு.நரசய்யாவுடன்
திரு.நரசய்யா.. கடலோடி என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுபவர். தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர். அத்துடன் நமது அனைத்து திட்டங்களிலும் நம்முடன் துணையாக இருந்து ஆலோசனைக் கூறி வருபவர். இவரது பயணக் குறிப்புக்களும் ஆய்வு நூல்களும் எனது கவனத்தை ஈர்த்தவை. இவரது மதுரை பற்றிய ”ஆலவாய்” நூல் ஒரு தகவல் களஞ்சியம். மதுரையையே புதிய கோணத்தில் மலேசியரான எனக்கு அறிமுகப்படுத்திய நூல் இது. அது போலவே மதராச பட்டினம் என்ற நூலும். மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வு செய்து இந்த வரலாற்றுப் படைப்புக்களை உருவாக்கியவர் இவர்.
முகம் மலர எங்களை வரவேற்று உபசரித்தனர் திரு.நரசய்யாவும் அவர் துணைவியாரும். கிடைத்ததே எங்களுக்கு கொஞ்சம் நேரம் தான். அன்று மாலையே நான் தஞ்சைக்கு வேறு பயணிக்க வேண்டும். ஆக 5 மணிக்குள் அங்கிருந்து புறப்பட வேண்டிய சூழல் ஆகையால் அதிகம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. நிறைய பேச வேண்டும். தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் இருந்தாலும் அவசர நிலையில் எதனையும் திருப்திகரமாக செய்ய முடியாத நிலை.
திரு.நரசய்யாவின் புதிய வெளியீடான மாமல்லபுரம் நூலை பற்றியும் சிறிது பேசினோம். இது டாக்டர்.சுவாமிநாதன் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலின் தமிழாக்கம். தரமான பதிப்பாக வந்துள்ளது இந்த நூல். இடையில் இவர் ஈடுபட்டிருந்த திருச்சி ஆய்வு பற்றியும் கொஞ்சம் பேசினோம். விரைவில் இந்த திட்டம் நிறைவாக முடிவுற்று மேலும் ஒரு ஆய்வு நூல் நமக்கு கிடைக்கும் வேண்டும் என்பது எனது அவா.
புறப்படுவதற்கு முன்னர் திரு.நரசய்யாவின் அலுவலக அறைக்கு என்னை அழைத்துச் சென்று எனக்கு அவரது 2 பிரியமான நாற்காலிகளைக் காண்பித்தார். இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட மஹோகானி மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலிகள் இவை. இந்த நாற்காலியில் அமர்ந்து சிந்திப்பதும் ஓய்வெடுப்பதும் மகிழ்ச்சி தரும் ஒரு விஷயமாக திரு.நரசய்யாவிற்கு உள்ளது என்பதை அவரது புன்னகையிலேயே தெரிந்து கொண்டேன்.
அடுத்த ஆண்டு தமிழகம் செல்லும் போது மீண்டும் நிச்சயம் திரு.நரசய்யா தம்பதிகளைச் சந்திக்க வேண்டும். நிறை நேரில் பேச வேண்டும் என்ற ஆவல் இப்போதே உள்ளது.
ஆல்பம் முழுதும் பார்க்க இங்கே செல்க..!
No comments:
Post a Comment