Monday, April 9, 2001

கைவல்யோபநிஷத்து (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயணம் (சுய சிந்தனை)

Date: Mon, 9 Apr 2001 01:12:22 -0700 (PDT)
From: "suba k."
Subject: Upanishad - Kaivalya Upanishad (Part 2.1)
To: meykandar@egroups.com

முதல் காண்டச் சுருக்கம்:
- ஆச்வலாயனர் பிரம்மாவிடம், சிறந்ததும், எப்போதும் நல்லோர்களால் நாடப்பெற்றதும், மறையாயுள்ளதுமான பிரம்ம வித்தையை உபதேசிக்க வேண்டுகின்றார். ஆச்யவலாயனாருடைய பாட்டனாராகிய பிரம்மா (ஆச்யவ்லாயனர் பகவானே என்றே பிரம்மாவை அழைக்கின்றார்) பிரம்ம வித்தையை 'சிரத்தையாலும், பக்தியாலும் தியான யோகத்தினாலும் அடைவாயாக' என வாழ்த்துகின்றார்.

- சாகாநிலையை அடைவது என்பது கர்மத்தாலோ அல்லது ஈன்ற குழந்தைகளாலோ, செல்வத்தாலோ அன்றி செய்கின்ற தியாகத்தினாலேயே சிலர் எய்தினர்.

- யோக முயற்சி உடையோர் எய்தும் அப்பதவி ஸ்வர்க்கத்தினும் சிறந்தது. சந்தியாச யோகத்தால் பிரம்மத்தில் நிலைபெற்று அந்திய காலத்தில் பற்றனைத்தினின்றும் விடுபடுகின்றனர்.

- சந்தியாசியானவன் தனிமையான இடத்தில் சுகமான ஆசனத்தில் அமர்ந்து பரிசுத்தமானவனாய் கழுத்து, தலை, உடல் ஆகியவற்றைச் சமமாய் நிறுத்தி, எல்லா இந்திரியங்களையும் அடக்கி பக்தியுடன் தன் குருவை வணங்கி அறியாமையாகிற இருளைக்கடந்ததுமான நிலையை அடைகின்றான்.

- எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னிடம் எல்லா உயிர்களையும் கண்டு கொண்டு ஒருவன் பரப்பிரம்மத்தை அடைகின்றான்.

- அறிவாளி தன்னை ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து தனது பாவங்களைச் சுட்டெரிக்கின்றான்.

- உமாதேவியுடன் கூடிய பரமேச்வரனாக உலகை ஆழ்கின்ற பரம்பொருளை நினைத்து, தியானித்து இருளைக் கடந்த நிலையை முனிவன் அடைகின்றான். அந்த பரப்பிரம்மமே சிவன், பிரம்மா, அவனே விஷ்ணு, அவனே பிராணன், காலன், அக்கினி அவனே சந்திரன். உண்டானதும், உண்டாகப்போவதும், என்றுமுள்ளதும் எல்லாமும் அவனே. அவனை அறிந்தே ஒருவன் சாவைக் கடக்க முடியும்; முக்திக்கு வேறு வழியில்லை.

தொடர் சிந்தனை:

உபநிஷத்துக்கள் பலரால் எழுதப் பட்டு தொகுக்கப்பட்டவை. அதனால் பல கருத்துக்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கும் சூழ்நிலை பல இடங்களில் தென்படுகின்றது. உபநிஷத்துகளுக்குப் பாஷ்யம் எழுதி அத்துவிதக் கொள்கையை உலகுக்கு தந்தவர் சங்கராச்சாரியார். அத்துவிதம், ஆன்மாவே இறைவன்; மாயையினால், உடலெடுத்த ஆன்மா தனது சுய ரூபத்தை உணராது, வாழ்க்கை எனும் சுழலில் சிக்கித் தவிப்பதாகவும், அது தனது சுயரூபத்தை உணருகின்ற தருவாயில் இறை ஜோதியில் சேர்ந்து தானே பரப்பிரம்மமாகின்றது என்று ஆன்ம விளக்கம் தருகின்றது. அந்த கருத்துக்களுக்கு மூலம் போன்று கைவல்யோபநிஷத்தின் சில செய்யுள்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் அவை இதன் இரண்டாம்காண்டத்தில் அமைந்திருக்கின்றன.இதனை படிக்கின்ற ஒருவர் வேதாந்த கருத்துக்கள் மட்டும் கொண்டவையோ என இந்த உபநிஷத்தை குறுகிய கண் கொண்டு பார்ப்பதை விட, அது சொல்கின்ற எல்லா கருத்துக்களயும் ஆழமான சிந்தனைகோடு ஒப்பிட்டு அலசுவதே சாலச் சிறந்தது.

பண்டைய இந்திய கல்வி முறையில் பொருளியல் ஆராய்ச்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட ஆன்மீகத் தேடலுக்கான தத்துவ விசாரனைகள் மிகத் தீவிரமாக அலசப்பட்டுள்ளன என்பதை நம்மால் மறுக்கமுடியாது. அதுவே இன்றைய நிலையில் மிகவும் உயர்ந்த பல பண்பாடுகளும் கலாச்சாரங்களும் சிந்தனை ஆழங்களும் நமது தமிழ் மரபிலே இன்றும் செழித்து வளர காரணமாக இருக்கின்றன. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே யோகம், மீமாம்சம், சாங்கியம் லோகாயுதம் சமணம் புத்தம் என பல சமயங்களாக விரிந்து பரந்து தத்துவங்கள் பிறந்து செழித்து வந்திருக்கின்றன. இவை சமயம் என்ற குறியீட்டுப் பெயரில் விளங்கினாலும், தத்துவங்களைத் தெளிவு படுத்தி மக்களை உயர்ந்த சிந்தனைக்குக் கொண்டு செல்லக் கருவிகளாக பயன்பட்டன என்று கொள்வதே மிகச்சிறந்தது.

இந்த சமயங்களுக்குப் பிறகு மிகவும் செழித்து வளர்ந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் போன்றவையும் இன்று சடங்குகளில் முழ்கித் தவித்தாலும் தத்துவங்களை அலசுவதில் சிறிதளவும் சளைத்தவை அல்ல. சைவத்தின் முக்கிய நூலான சிவஞான சித்தியார், உலவி வருகின்ற பல சமயங்களை ஆராய்ந்து அதன் குறை நிறைகளை கண்டு ஆராய்ந்து பின்னர் அவற்றை விளக்கும் வகையில் சைவத்தின் கருத்துக்களை வைத்து சைவத்தை வளர்த்தது. அது போலத்தான் பிற சமயங்களும் இருந்தன.

ஆனால் இன்றைய நிலையில் சைவம் என்றால் சைவ சாப்பாடா என்று கேட்கும் தாழ்ந்த நிலை கூட தோன்றிவிட்டது. தத்துவங்கள் தோன்றிச் செழித்த தமிழகத்தில் இறையனுபவத்தைப் பெற பொருளாதாரம் தான் தேவையாயிருக்கின்றது. இறைவனுக்கு அர்ச்சனை செய்யக் கூட குலமும் கோத்திரம் கேட்டுத்தான் கோயில் குருக்கள் பூஜை செய்கின்றார். மக்களும் இறை வழிபாடு என்பதை கடமைக்குச் செய்கின்ற ஒன்றாக நினைத்து பணமே அதற்கு மூலாதாரம் என நினைக்கும் வகையில் இயங்குகின்றனர். இது பரிதாபமான ஒரு நிலையே.

ஆன்மீக தத்துவங்கள், அவை எந்த மதமாக இருந்தாலும் சரி, பள்ளிகளில் ஒரு பாடமாக வைக்கப்படும் போது அது வளர்கின்றது. உதாரணமாக, மலேசிய நாட்டில் இஸ்லாமிய கல்வி எல்லா முஸ்லீம் மாணவர்களுக்கும் கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய ஒன்றாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களும் மத பேதமின்றி இஸ்லாமிய பாடத்தை ஒரு கட்டாயப் பாடமாக முதலாண்டில் படிக்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.. அதுபோல ஜெர்மனியில் எல்லா பள்ளிகளிலும் குறிப்பாக ஆரம்பப்பள்ளியில் படிக்கும் கிறிஸ்துவ மாணவர்கள் கிறிஸ்துவ சமய பாட வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இங்கு பிற மதத்தவர் கிறிஸ்துவ மத பாடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. துருக்கிய நாட்டினர் அந்நேரங்களில் பொது அறிவு வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். ஆனால் 1980களின் ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வந்த பல இலங்கை சைவத்தமிழர்களின் குழந்தைகள் இந்த கிறிஸ்துவ மதப் பாடப் போதனைகளில் கலந்து 'சிறப்பிகின்றனர்'. இந்து/சைவ சமயம் சார்ந்த கல்விமுறை என் எடுத்துக் கொண்டால் அது யாழ்ப்பாணத்தைத் தவிர வேறு எங்கும் பாடமாக வைக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம். அதுவும் கூட பெரும்பாலும் கல்லூரிகளில் தேவார திருவாசாக ஆராய்ச்சிகளாக மட்டுமே இருப்பதாகவும் தத்துவங்கள் அதிகமாக அலசப்படுவய்தில்லை என இலங்கைத் தமிழ் நண்பர் ஒருவர் ஒரு முறை நொந்து கொண்டார்.

இந்திய தத்துவ ஆராய்ச்சிகள் தேவைக்கு அதிகமாகவே கிடப்பதால் தானோ இந்த நிலை?

இந்திய தத்துவ ஞானம் என்பது மறுமைக்கு புண்ணியம் தேட கண்டுபிடிக்கப்பட்ட அதிசயப் பொருளாக எனக்குத் தோன்றவில்லை. அன்றாட வாழ்க்கையை அலசி அதனுள்ளிருந்து ஒருவர் தன்னை உணர்ந்து கொள்ள, தனது செயல்களுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ள வைக்கின்ற ஒரு வாழ்க்கை நெறி முறையாகவே அது விளங்குகின்றது. வாழ்க்கை என்பது பாவத்தினாலும் குற்றங்களினாலும் உருவாகிய ஒன்று என்பதை விட வாழ்கின்ற வாழ்வில் எப்படி நித்திய இன்பத்தைக் காண்பது என்பதே இந்திய தத்துவ ஞானத்தின் சாரமாக இருக்கின்றது.

சுதந்திரத்தைக் கொடுத்து ஒருவர் சுயமாக சிந்தித்து தனது செயல்களுக்குத் தானே பொருப்பு எனும் உண்மையை உணர வைத்து தனது வாழ்க்கையை மென்மேலும் செம்மைப் படுத்திக் கொள்ளும் வழியை காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. புறக் கட்டுப்பாடுகளை விட அகக் கட்டுப்பாடினை வளர்த்து மனிதரை செயல் வீரராக்கும் திறனும் கொண்டிருக்கின்றது. அந்த வகையிலேயே இந்த உபநிஷத்தும் அமைந்திருக்கின்றது.

இறைவன் ஒருவனே. அவன் வேண்டுவோருக்கு அருவமாக, அருவுருவமாக, உருவமாகத் தோன்றி தன்னை வெளிப்படுத்துபவன். 'வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ' இது சைவக் குறவரின் வாக்கு. அது போல வள்ளலாரும், 'எண்ணிய நான் எண்ணிய வாரு எனக்கருளும் தெய்வம்' என இறைவனை விளிக்கின்றார். இறைவனை குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கின்ற நீதிபதியாக பார்ப்பதை விட ஆன்மா நினைப்பதைத் தருகின்ற வள்ளலாக பார்க்கின்ற இந்த உயர்ந்த கருத்துக்கள் மனித ஆன்மாவிற்கு பலம் சேர்க்கும் தன்மை வாய்ந்தவை. ஆக வாழ்கின்ற வாழ்க்கையில் பல போராட்டங்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிட்டாலும் மனிதர்கள் சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கையோடு சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் தன்மையைக் கொண்ட வைட்டமின் மாத்திரைகளாக அமைந்திருப்பது நமது தத்துவம் சொல்லும் வாழ்க்கை முறை. இல்லறம், பிறகு துறவறம்; இரண்டையுமே அறத்தோடு ஒழுகுதல் வேண்டும்.

சட்டங்கள் நாட்டின் , மக்களின் அமைதியைப் பாதுகாப்பதைப் போல இல்லத்திலும், துறவு வாழ்விலும் அனுசரிக்கப்படுகின்ற ஒழுக்கங்கங்கள் அறம் சார்ந்திருக்க வேண்டும். அறத்தோடு இருக்கும் போது வாழ்க்கை சுவைக்கின்றது. அறம் பிழைக்கும் போது வாழ்க்கை பிரச்சனையாகின்றது; போராட்டம் பிறக்கின்றது.

ஒரு கனினி இயந்திரம் இயங்கும் போது அதன் அத்தனை செயல்பாடுகளுக்கும் மூல காரணியாக இருப்பது மென்பொருளில் அமைந்திருக்கின்ற கட்டளைகள். (Program codes / statements) கட்டளைகள் ஒழுங்காகச் செயல்படுகின்ற போது இயந்திரம் தனது வேலையை குறிப்பிட்டுள்ள வகையில்(documentation) சரியாக செய்யும். இதனால் தொழில் சீராக இயங்குவதோடு தொழிலுக்கு வருமானமும் பெருகும். மாறாக கனினி கட்டளைகள் பிசகி செயல்பட ஆரம்பித்தால் அதன் பின் விளைவுகள் சில வேளைகளில் உயிர் சேதத்தை உருவாக்கி விடும் அபாயமும் உண்டு. அது போலத்தான் மனிதரும். ஒவ்வொருவரும், அது இல்வாழ்வோ அல்லது துறவோ, வாழ்கின்ற வழ்க்கையை ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் பிறழாமல் வாழ்கின்ற வரையில் அறம் காத்து வாழ்கின்ற போது அது இனிதாகின்றது. மேலும் மேலும் வாழ்வில் வளம் பெருகுகின்றது. மாறாக ஒருவர் மயக்கத்தால் ஆசைகளுக்கு ஆட்பட்டு தனது தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறத்தை மறக்கும் போது (இழக்கும் போது) அங்கே தென்றலுக்கு பதில் புயலே தோன்றும். பல வேளைகளில் சிந்திக்கும் போது எனக்கு மனிதருக்கும் இயந்திரங்களும் ஆன்மாவைத் தவிர வேறு பேரளவிலான வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றுவில்லை.

அது உயிர்பொருளோ அல்லது இயந்திரமோ, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பின்னனியில் ஒரு மூலகாரணி இருக்கின்றது. ஒருவர் தனது கடமையை உணர்ந்து அதற்கேற்றார்போல இயங்கும் போதே கடமையில் வென்று பிரம்மத்தில் நிலைபெற முடிகின்றது.

நாம் அனுதினம் காலையில் விரும்புகிறோமே இல்லையோ, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து பிடிக்கின்றதோ இல்லையோ, அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்கின்றோம்; விரும்பியோ விரும்பாமலோ திருமண பந்தத்தில் மனிதப் பிறப்பெடுத்த அனைவரும் செய்ய வேண்டிய ஒரு கட்டாயக் கடமையாக நினைத்து நுழைகின்றோம்; தனது சொந்தப் பிரச்சனைகள் போதாதென்று மேலும் மேலும் பிறரின் பிரச்சனைகளிலும் தலையிட்டு அவற்றிலும் உழல்கின்றோம். ஒவ்வொரு நாளும் பலப் பல பிரச்சனைகள். 24 மனி நேரத்தில் தூங்குகின்ற நேரம் தவிர்த்து இன்பத்தை உணர்வது, அனுபவிப்பது என்பதற்கான சதவிகிதம் நிச்சயம் குறைவே. அலுவலகமாக இருந்தாலும் சரி இல்லமாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளை சிந்திப்பதும், அதனிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதை சிந்திப்பதிலும், மேலும் மேலும் வளத்தை எப்படிச் சேர்ப்பது என்பதிலுமே காலத்தை செலவு செய்கின்ற மனித இயந்திரங்களாக இயங்குகின்றோம். சக்தி இருக்கும் வரை (electricity / battery) இயந்திரம் இயங்கும்.

மனிதனும் அப்படித்தான். உடம்பில் சக்தி இருக்கும் வரை தான் ஆன்மா தங்கும். சக்தி குறையும் போது பிரம்மத்தினோடு கூடிய தொடர்பு குறைந்து ஆன்மா சோர்ந்து விடும் ஆக, எவ்வாறு கைவல்யோபநிஷத்து கூறுவது போல தான் தானாகும் நிலையை அடைவது?

அன்பு, கட்டொழுங்கு எனும் பன்புகள் கூடும் போதே அது சாத்தியமாகின்றது. மனித வாழ்வில் அறம் இருக்கும் போதே அங்கு அன்பு தோன்றுகின்றது. அறம் இல்லா வாழ்வு வெறுப்பையும் கோபத்தையும் கொடுத்து ஆன்மாவை வலிவிழக்கச் செய்து விடும். அன்பு பெருகும் போது, அன்பினை அனுபவிக்கும் போது அந்த அன்பு பெருகி உடல் தொடர்புகளைத் தாண்டி ஆன்மத் தொடர்பினை ஊண்டாக்கி உலகமே ஒரு குடும்பம் எனும் பரந்த சிந்தனையை உருவாக்குகின்றது. ஆன்மா இங்கு பகிர்ந்து கொள்வது சுய தேவைகளை அல்ல; மாறாக பரிபூரண ஆனந்தமான அன்பையே. மனிதர் எங்கிருந்தாலும், அவர் என்ன இனமாக இருந்தாலும், ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.

ஒவ்வொருவரும் தமக்கென அமைதியான நிறைவான ஒரு வாழ்க்கையயே தேடுகின்றனர். அது இல்லாது போகும் போதே விரக்தி, வேதனை, பிளவு துன்பம் எனத் தொடர் சோதனைகள்.

அன்பு பெருகும் போது எல்லா உயிர்களையும் தனதாக பார்க்கின்ற நிலை கூடுகின்றது. ' எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னிடம் எல்லா உயிர்களையும் கண்டு கொண்டு ஒருவன் பரப்பிரம்மத்தை அடைகின்றான்.'என கைவல்யோபநிஷத்து கூறுகின்றது. இதனை அத்துவிதம் போல 'ஆன்மாவே பரப்பிரம்மம்' என்று நினைத்து தன்னிடம் இருப்பது போல பிற உயிர்களினுள் இருக்கும் ஆன்மா இறைவன் தான் என நினைத்து விளங்கிக் கொள்வது ஒரு விதம். ஆனால் இதனை நான் வேறு வகையிலேயே காண்கின்றேன். ஆன்மாக்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்டவையே. ஆனால் அன்பு பெருகி அன்பே சிவம் என, ஆன்மாவில் இறைத் தன்மை அதிகரிக்கின்ற போது இறைவனின் அருள் தன்மை அங்கு வெளிப்படுகின்றது.

அது மென்மையானது. இந்தக் குணம் தன்னிலிருந்து பிற ஆன்மாவை பிரித்து பார்க்க முடியாதது. இந்த தன்மையே பிற ஜீவன்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வைப்பது.

ஒரு பெண் ஒருவனை காதலிக்கும் போது தன் உயிரை எப்படி நேசிக்கின்றாளோ அதே போல தனது காதலனையும் நேசிக்கின்றாள். பிறகு திருமணமாகி குழந்தைகளை ஈன்று தாயாகும் போது தன் மேல் இருக்கும் நேசத்தை போலவே தனது குழந்தைகளின் மீதும் காட்டுகின்றாள். இதுவே ஒரு குடும்பத்தை இறுக்கி இணைத்து வைக்கின்ற பாசச் சங்கிலியாகின்றது. இந்த சங்கிலியின் இணைப்புக்குப் பின்னால் பல எழுதப்படாத கட்டளைகளும் சட்டங்களும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த குடும்பம் எனும் ஒரு கூட்டில் ஒவ்வொருவரும் தனது கடமைகளை உணர்ந்து அன்பின் வழி செயல்படுகின்ற போது ஆன்மா சுலபமாக தன்னை வளர்த்துக் கொள்ள முடிகின்றது. அறத்தை உணர ஆன்மாவிற்கு தெய்வீக நாட்டம் தேவை. அலைபாயும் மனத்தை நெறிப்படுத்தி அதனை அமைதிபடுத்தி, ஆசைகளை அலச வைத்து சரியான வாழ்வில் சென்று இறைவனை அனுபவித்து நிறைந்த வாழ்வைப் பெற தெய்வீக நாட்டம் உதவுகின்றது. ஆனால் நாம் நமது வாழ்க்கையைப் பார்க்கின்ற போது மனம் நிறைந்ததாக நமக்கு வாழ்க்கை அமையாமல் பல பிரச்சனைகளும் கருத்து வேற்றுமைகளும், சஞ்சலங்களும் நிறைந்தே நமது வாழ்க்கை இயங்குவதை நம்மால் மறைக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் நாம் செய்த கன்மத்தை அனுபவித்து போக்கத்தான் முடியுமே தவிர தப்பிக்க முடியாது.

இறை அனுக்கம் கன்மத்தின் தாக்கத்தின் அளவை குறைத்து வாழ்க்கையை நல்ல முறையில் அமைக்க வழிகாட்டுமே அன்றி மாறாக துன்பங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தப்பிக்க உதவாது. நாம் விரும்புகின்றோமோ இல்லையோ, மனிதர் ஒவ்வொருவரும் நமது செயல்களுக்கு நாமே பொருப்பாகின்றோம்; நன்மையோ தீமையோ அதன் பின்விளைவுகளை அனுபவித்தே ஆகின்றோம்.

இறைவன் வேண்டுவதைத் தருபவன் என்கின்றோம். ஆக எதை வேண்டினாலும் இறைவன் கொடுத்து விடுவார் எனபது இதற்கு பொருளல்ல. வேண்டுகின்ற ஒன்றினை கேட்கக்கூடிய ஆன்ம தகுதி முதலில் வேண்டும்; ஆன்ம பக்குவம் வேண்டும்; அதோடு வேண்டுவதை வேண்டி அனுபவிக்கும் தகுதியும் வேண்டும்.

மனிதர் தன்னை உணர வேண்டும். தனது செயல்களை கூர்ந்து கவனித்து, இன்னும் எந்த வகையில் தன்னைத் திருத்திக் கொள்ளலாம் என சித்திக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தனது செயல்களில் குற்றம் காணும் போது குற்றத்தையே வாழ்க்கையாக பழகி விட்டது போல மீண்டும் மீண்டும் தவறுகளிலேயே செல்வது போலில்லாமல் தனது வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ளும் தைரியத்தை உறுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு, தான் தவறு செய்து விட்டோ ம் என்று உணரும் போது தனது தவறான சிந்தனைகளை சுட்டெரித்து அவை மீண்டும் மனதில் முளைக்கா வகையில் போக்கி விட வேண்டும். கனினியில் virus புகுந்து மென்பொருள்களைச் செயலிழக்கச் செய்யும் போது அதனை 'போனால் போகட்டும், மற்ற மென்பொருள் போல நீயும் ஒரு மென்பொருள் தானே' என பச்சாதாபம் காட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கனினியை பிறகு நாம் பயன்படுத்த முடியுமா? அது போலத்தான். ஒரு குறையோ குற்றமோ தவறான சிந்தனையோ, அது தனது வாழ்க்கையின் மேம்பாட்டைப், ஆன்ம வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியது என ஒருவர் உணர்ந்தவுடன் அந்த கருத்தை/சிந்தனையை அறவே துடைத்து ஒழித்து சிந்தையைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இது ஒரு சாதாரண செயலன்று. சில வேளைகளில் சில virus கள் operating system வரை சென்று அந்த மென்பொருளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கும். பல வேளைகளில் கனினியின் ஒட்டு மொத்த செயல்பாடுகளைத் திறனிழக்கச் செய்து வேலைகளில் தடைகளை உண்டாக்கி விடும். இந்த மாதிரியான virus களை அழிப்பதற்குச் சில வேளைகளில் கனினியை முழுவதுமாக reformat செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மனிதர்களும் இப்படித்தான். சில தவறுகளோ அல்லது பிரச்சனைகளோ மிகவும் ஆழமானவை எனத் தெரிந்து கொண்ட பின்னர் தன்னையே முழுவதாக மறு பிறவி எடுப்பது போல மாற்றிக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான சூழல் சுலபமாக சாத்தியப்படக் கூடியதல்ல.

ஆனால் இறை துனையோடு வாழ்க்கையை பயணிக்க முயற்சிக்கையில் இறை அருளும் கருணையும் என்றென்றும் முயற்சிப்பவரைக் கைவிடாது. கைவல்யோபனிஷத், உறுதியான கட்டுப்பாட்டினை ஒருவர் ஒழுகும் போதே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும் என்பதை வலியுறுத்துகின்றது. அது சந்நியாசமோ, ஒரு சிறு காரியமோ எதுவாக இருப்பினும் அதனை சிரத்தையாலும், பக்தியாலும், தியானத்தினாலுமே சாதிக்க முடியும்.

தொடரும்.....


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment