Wednesday, April 23, 2025

உலக புத்தக நாள் வாழ்த்துக்கள்



எனது குழந்தை பருவத்தை விட இந்தக் காலகட்டத்தில் ஏராளமான நல்ல நூல்கள் என்னைச் சுற்றி இருப்பதாக நான் உணர்கிறேன். நான் மட்டும்தான் இப்படி நினைக்கின்றேனா அல்லது நீங்கள் எல்லோருமே என்னை போலத்தான் நினைக்கின்றீர்களா என்று தெரியவில்லை.

நூல்களைக் கடைகளில் பார்ப்பதும், நேரம் எடுத்து அவற்றை தேடி வாங்கிக் கொள்வதும் எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள்.

வாங்கி வீட்டிற்குக் கொண்டு வரும் நூல்களை அவை வரலாற்று நூல்களா, பண்பாட்டு நூல்களா, தொல்லியல் நூல்களா, தலைவர்கள் நாடுகள் நகரங்கள் பற்றிய நூல்களா? என தரம் பிரித்து அடுக்கி வைத்து அடுக்கிய அலமாரியில் அவை அழகாகக் காட்சியளிப்பதைப் பார்ப்பதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் தருணங்கள். 

இவை எல்லாவற்றையும் விட ஒரு ஓய்வு நாளில் மனதிற்கு பிடித்த ஒரு நூலை எடுத்து பக்கத்தில் அருமையான ஒரு காபியை வைத்துக் கொண்டு நூலை படிப்பதும், நூலில் உள்ள முக்கிய இடங்களைக் கோடிட்டு குறிப்பு எடுத்துக் கொள்வதும் மிகப்பெரிய மகிழ்ச்சி. 

இந்த ஆண்டு தொடக்க முதல் கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நூல்கள் வாங்கி இருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை படித்து முடித்திருக்கின்றேன். சிலவற்றைப் பற்றி சிறிய அறிமுகமும் திறனாய்வும் எழுதி இருக்கின்றேன்.

ஒவ்வொரு நூலும் தெளிவில்லாத பகுதிகளுக்கு எனக்குத் தெளிவை அளிக்கின்றன.. அறிந்திராத விஷயங்களை அறிய வைக்கின்றன.. 

உலகை நான் காண்கின்ற பார்வையை எனக்கு மேலும் தெளிவாக்குகின்றன. 

வாசித்து மகிழுங்கள்! 

-சுபா

23.4.2025

Tuesday, April 22, 2025

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குதிரை எலும்புக்கூடுகள்

 


ஜெர்மனியின் பாடன்-வூர்ட்டம்பேர்க் மாநில   வரலாற்றுச் சின்ன  பாதுகாப்புக்கான  அலுவலகத்தின் செய்தி  ஒன்று  அண்மையில் இங்கு பாட்கான்ஸ்டாட் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில்  ஒரு ரோமானிய கோட்டை இருந்த இடத்திற்கு அருகில்  100க்கும் மேற்பட்ட குதிரைகளின் எலும்புக்கூடுகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அகழாய்வு செய்யப்படும் இடங்களில்  மனித எலும்புக்கூடுகளோடு விலங்குகளின் எச்சங்களும் கிடைப்பது வழக்கம். அவ்வகையில் ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான் வசிக்கின்ற லியோன்பெர்க் பகுதியிலிருந்து இந்த இடம் ஏறக்குறைய 25 கிமீ தூரத்தில் இருக்கின்றது. பாட் கான்ஸ்டாட் நகரில், மக்கள் வாழ்விடப் பகுதியில் இது Düsseldorfer Straße ,  Bottroper Straße இரண்டு சாலைகள் சந்திக்கும் பகுதியில் இந்த அகழாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஒரு கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500 குதிரைவீரர்களைக் கொண்ட ரோமானிய குதிரைப்படைப் பிரிவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.   இந்தக் குதிரை எலும்புக்கூடுகள்  அவை ஒரு போரிலோ அல்லது இராணுவ தாக்குதலில் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.  மாறாக  ஏதாவது ஒரு வகை நோய் அல்லது முதுமையால் இறந்திருக்கலாம்.  மேலும் ஆய்வுகள் இதனை உறுதிபடுத்த வேண்டும்.

இங்கு கிடைத்த பெரும்பாலான குதிரை எலும்புக்கூடுகள்  சாதாரணமாக புதைக்கப்பட்டுள்ளன.  அதில் ஒரு குதிரையின் எலும்புக்கூடு மட்டும் தனிச்சிறப்புடன் புதைக்கப்பட்டுள்ளது.  மனிதர்களைப் புதைக்கும் போது கல்லறை வழிபாட்டுப்  பொருட்கள் வைக்கப்படுவது ரோமானிய பண்டைய கல்லறைகளில் கிடைத்துள்ளன. அதே போல இந்த ஒரு குதிரையின் அருகில்  இரண்டு குடங்களும் ஒரு எண்ணெய் விளக்கும்   வைத்து   அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இக்குதிரை ஒரு முக்கிய ரோமானிய  படைத்தளபதி அல்லது தலைவனின் குதிரையாக இருந்திருக்கலாம்.

கூடுதல் தகவல்கள்:

https://rp.baden-wuerttemberg.de/rps/presse/artikel/letzte-ruhe-fuer-roms-reittiere-groesster-roemerzeitliche-pferdefriedhof-sueddeutschlands-in-stuttgart-bad-cannstatt-entdeckt/

Wednesday, April 9, 2025

The Knights Templar நூல் விமர்சனம் - பகுதி 2

 


நம்பிக்கைகள் மனிதர்களை அசாத்தியமான பல காரியங்களை நிகழ்த்த வைத்திருக்கின்றன. நம்பிக்கைகளுக்காகத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள். தாம் பின்பற்றுகின்ற சமய நம்பிக்கைக்காக தனது உயிரையும், தங்கள் வாழ்நாளையும் அர்ப்பணிக்கின்ற ஆழமான உறுதியான எண்ணத்துடன் வாழ்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள். அத்தகைய மனிதர்களைப் பற்றி உலக வரலாறு பல தகவல்களைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் ஐரோப்பிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற குழுவினராகக் கருதப்படுபவர்கள் தி நைட் டெம்ப்ளர்ஸ் (The Knight Templars ).
புகழ்பெற்ற கதாசிரியர் டான் பிரவுன் அவர்களது டாவின்சி கோட் நாவல் வெளிவந்த பிறகு இந்த நைட் டெம்ப்ளர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினரைப் பற்றிய பேச்சுக்களும் கலந்துரையாடல்களும் பரவலாக எழுந்தன. டான் பிரவுன் அவர்களது அடுத்தடுத்த நாவல்கள் ஒவ்வொன்றும் இவர்கள் பற்றியும் இவர்கள் வரலாற்றில் பெற்ற முக்கியத்துவம் பற்றியும், அதன் பின்னர் அவர்களது வீழ்ச்சி, அவ்வீழ்ச்சிக்கு பின்னர் எவ்வாறு இன்றும் இவர்களது ஆளுமை மறைமுகமாக உலகின் வல்லரசு நாடுகளில் தொடர்கின்றது என்ற வகையிலும் அமைந்தன.
ஒரு வரலாற்றுச் செய்தியைப் புராணக் கதைகள் மழுங்கடிக்கச் செய்ய முடியும். அதே நிலை தான் நைட் டெம்ப்ளர் என அழைக்கப்படுகின்ற இந்த போர் வீரர்களுக்கும் நடந்தது எனலாம். அந்தப் புராணக் கதைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு வரலாறு இவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு நெடு நாளாக இருந்தது.
அண்மையில் எனது இங்கிலாந்துக்கான பயணத்தின் போது இப்போர் வீரர்களின் மையங்களாக இங்கிலாந்தில் இருக்கின்ற இரண்டு பகுதிகளுக்கு நேரில் சென்று வந்தேன். அதில் ஒன்று இங்கிலாந்தின் தென்கிழக்கு நகரமான டோவர் நகரில் அமைந்திருக்கின்ற நைட் டெம்ப்ளர்ஸ்களது சிதைந்த ஒரு ஆலயத்தின் தரைத்தளப் பகுதி. இது என்று பாதுகாக்கப்படுகின்ற ஒரு வரலாற்றுச் சின்னமாக அமைந்திருக்கின்றது என்பதோடு இதற்கு அருகாமையில் உள்ள சில பகுதிகள் பொதுமக்கள் செல்ல முடியாத, தனியாருக்குச் சொந்தமான இடங்களாக அமைந்திருக்கின்றன. இவர்களைப் பற்றி பேச தொடங்கினாலே ரகசியங்களும் மர்மங்களும் இவர்கள் வரலாற்றோடு இணைந்து வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
அதற்கு அடுத்ததாக, இன்று நைட் டெம்ப்ளர் என்று சொல்லப்படுகின்ற இந்தப் போர் வீரர்களுக்கு மையமாக அமைந்திருக்கின்ற லண்டன் மாநகரில் இருக்கின்ற டெம்பிள் சர்ச் என்ற ஒரு தேவாலயம். இந்த தேவாலயம் ஒரு ரகசிய அமைப்பு போல இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றாலும் பொதுமக்கள் இதன் உள்ளே வந்து இங்குள்ள அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்து செல்லக்கூடிய வகையில் இத்தேவாலயம் அமைந்திருக்கின்றது என்பது சிறப்பு. இன்று ஐரோப்பாவின் ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, போர்த்துகள்இத்தாலி, கிரேக்கம், சைப்ரஸ், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பல நாடுகள், எகிப்து, ஜெருசலம் என பல பகுதிகளில் விரிவடைந்து இருந்தாலும் கூட, இவர்களின் மையமாகத் திகழ்வது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கின்ற இந்த டெம்பிள் சர்ச் தேவாலயம் தான்.
இந்த நைட் டெம்ப்ளர் போர் வீரர்களுக்கு தலைவராக இருப்பவர் கிராண்ட் மாஸ்டர் என அழைக்கப்படுகின்றார். தற்பொழுது கிராண்ட் மாஸ்டராக பொறுப்பில் இருக்கும் Robin Griffith-Jones எழுதிய The Knights Templar என்ற நூலை அதே தேவாலயத்தில் வாங்கினேன். இந்த நூல் கூறுகின்ற செய்திகளை இனி காண்போம்.

இந்த நூலின் அத்தியாயம் நைட் டெம்ப்ளர் எனப்படுபவர்கள் யார்? என்ற விளக்கத்தோடு தொடங்குகின்றது. சிலுவைப்போர்கள், சகோதரத்துவ செயல்பாடுகள், புனிதப் பயணிகள், லண்டனில் அமைக்கப்பட்ட புதிய கோயில், டெம்ப்ளர்களும் புனித கோப்பையும், அவர்களது வீழ்ச்சி, தற்போதைய நிலை என்ற வகையில் நூலின் ஏனைய பக்கங்கள் அமைந்துள்ளன.

இடைக்கால ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பு தான் இது. ஐரோப்பாவின் கிறிஸ்துவ மன்னர்களும் மாவீரர்களும் புனித நகரமான ஜெருசலேமில் ஏசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தை கிறிஸ்தவர்களுக்காக மீட்டெடுக்கவும், 'கடவுளின் திருச்சபையை விடுவிக்கவும்' போப்பாண்டவர் அர்பன் IIவிடுத்த அழைப்பிலிருந்து டெம்ப்லர்கள் உருவானார்கள்.
சிலுவைப்போர் ஐரோப்பிய வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு வரலாற்று நிகழ்வு. டெம்ப்லர்களின் வரலாறு முதல் சிலுவைப் போரில் தொடங்கியது, 1096 முதல் 1291 வரை நைட் டெம்ப்ளர் ராணுவம் மிகப்பெரிய அளவிலான சிலுவைப் போர்களையும் சிறிய அளவிலான போர்களையும் நிகழ்த்தின. புனித குன்றான சாலமன் கோயில் இருக்கும் இடத்தை இஸ்லாமிய அரேபியர்களிடம் இருந்து மீட்டெடுத்து கிறிஸ்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவது இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது. அதற்காக நிகழ்த்தப்பட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் காலவாக்கிலான போரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். இப்பகுதியே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது என்பது வரலாற்றில் அழிக்க முடியாத சான்று. அது இன்றும் தொடர்கின்றது மற்றொரு வடிவில் என்பது நிகழ்கால அரசியல்!
இன்றைய ஜெருசலேம் நிலப்பகுதியில் அமைந்திருக்கின்ற சாலமன் கோயிலுக்குப் புனித பயணம் செல்வது கிறிஸ்தவ மத நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. ஆகவே அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி ஐரோப்பாவின் பல பகுதிகளில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் பாதயாத்திரையாக இப்புனித தலத்தை நோக்கி வருவது முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது.
பாதுகாப்பற்ற, மிகவும் கடினமான பயணத்தைக் கொண்டதான இப்புனித பயணத்தை நிகழ்த்த விரும்புவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் ராணுவமாகவும் உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் அதற்கு தேவைப்படும் பொருளாதார தேவைகளை வங்கி போல நிர்வகித்து புனித யாத்திரை செல்பவர்களுக்கு உதவுவது இவர்களின் மைய நோக்கமாக இருந்தது.
தொடக்கத்தில் மிக எளிய வறுமை நிறைந்த புனித யாத்திரை செய்வோருக்கான பாதுகாவலர்களாக அறியப்பட்ட இவர்கள் படிப்படியாக பலம் பொருந்திய, ஏராளமான சொத்துகளுக்கு உரிமை கொண்டவர்களாக வளர்ச்சி கண்டனர். இன்று நமக்கு நன்கு பரிச்சயமான பாண்டு பத்திரம், அனைத்துலக வங்கி நிர்வாகம் ஆகியவற்றிற்குத் தொடக்கப் புள்ளியாக இவர்களது செயல்பாடுகள் அமைந்தன என்றால் அதனை மறுக்க முடியாது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக வளர்ச்சி கண்ட இவர்கள் சைப்ரஸ் தீவையும் வாங்கி அங்கு நைட் டெம்ப்ளர் தலைமையகத்தைக் கட்டினார்கள். மெடிட்டரேனியன் கடலில் மிக முக்கியமான நிலப்பகுதியில் சைப்ரஸ் தீவு அமைந்திருக்கின்றது என்பதே இதற்குக் காரணம்.
அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி கிரேக்கம் என பல நாடுகளைக் கடந்து வருகின்ற பாத யாத்திரிகர்கள் ஜெருசலேம் வரை வரும் போது அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு சைப்ரஸ் தீவில் அமைந்திருக்கும் தலைமை மையம் அமைந்தது இலகுவாக அமைந்தது.
கத்தோலிக்க தலைமை மையமான வாத்திக்கனில் தலைமை குருவான போப்பின் ஆதரவும் இவர்களுக்குத் தொடக்கத்தில் இருந்தது.
இந்த நூல் இப்போர் வீரர்கள் எப்போது எதற்காக உருவானார்கள்? இவர்களுக்கு ஜெருசலேம் மன்னரின் ஆதரவு எப்படி கிட்டியது? கத்தோலிக்க மத குருவின் ஆதரவு எப்படி கிட்டியது? அடுத்தடுத்து நடந்த சிலுவைப் போர்கள் போன்ற பல்வேறு தகவல்களை ஆண்டு வரிசையில் தெளிவாக எளிதாக விளக்குகின்றது.
டான் பிரவுனின் டா வின்சி கோட் நாவலில் குறிப்பிடப்படுகின்ற முக்கிய காரணமாக அமைவது நைட் டெம்பர் குழுவினரும் அவர்களின் தலைவரான கிராண்ட் மாஸ்டரும் போற்றி பாதுகாப்பது இயேசு கிறிஸ்துவின் ரத்த சம்பந்தத்திலான வாரிசுகளின் பாதுகாப்பு என்பதாக அமையும். ஆனால் இந்த நூலில் இது குறிப்பிடப்படவில்லை.
Holy grail அதாவது, புனித பாத்திரம் எனக் குறிப்பிடப்படுவது உண்மையிலேயே வைன் வைக்கப்பட்டிருந்த இயேசு கிறிஸ்து இறுதியாக அருந்திய வைன் நிறைந்த பாத்திரமா அல்லது அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அவரது உடலிலிருந்து வடிந்த ரத்தத்தைப் பிடிக்கப் பயன்படுத்திய கிண்ணத்தையா அல்லது வேறு ஏதேனும் மறைப்பொருளையா என்பது மர்மமாகவும் குழப்பமாக இருக்கின்றது என இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இந்த நூலின் ஆசிரியர் நைட் டெம்ப்ளர் அமைப்பின் தற்போதைய கிரான்ட் மாஸ்டர் என்பதை நாம் மீண்டும் மனதில் கொள்ள வேண்டும். புனித பாத்திரத்தைப் பற்றி அவரது கருத்தாக அமைவது டான் பிரவுனின் நாவல் குறிப்பிடுகின்ற தகவலுக்கு மாறாகவும் அதே வேளை அது இல்லை என்பதை மறுக்காமல் அது மர்மமும் குழப்பமும் நிறைந்தது என்றும் கூறி முடிந்து விடுகின்றது. ஆக இதுவே மர்மமாகத்தான் இருக்கின்றது.
ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பாக திகழ்ந்த நைட் டெம்ப்ளர் குழுவினர் 14ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தனர். பிரான்ஸ் மன்னன் நான்காம் பிலிப்ஸ் டெம்ப்ளர்ஸ் மீது பல்வேறு குற்றங்களைச் சுமத்தி அவர்களைப் பிடித்து கொலை செய்த நிகழ்வுகள் வரலாற்றின் இருண்ட பக்கங்கள். பிரான்ஸ் மன்னனின் சூழ்ச்சிக்கு வாத்திக்கணும் ஒத்துழைத்தது என்பது கூடுதல் அழுத்தத்தை இந்த அமைப்பிற்கு வழங்கியது.
அக்கால கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் இயங்கி வந்த நைட் டெம்ப்ளர் ராணுவ வீரர்களை பிரான்ஸ் மன்னனின் குழுவினர் சிறைபிடித்து அவர்களை ஒப்புதல் வாக்குமூலம் வழங்கச் செய்து பிறகு கொன்று குவித்தனர். அப்போது கொலையுண்டவர்களில் அன்றைய கிராண்ட் மாஸ்டர் ஜேக்கஸ் டி மோலெ அவர்களும் அடங்குவார்.
நைட் டெம்பள்ர் குழுவினர் 14ஆம் நூ தொடக்கத்தில் தேடித் தேடி கொல்லப்பட்டதன் காரணமாக அவர்களில் தப்பியவர்கள் ரகசியமாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். போர்த்துகல் மன்னர் வெளிப்படையாகவே இப்படி தப்பித்தவர்களைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் மறைமுகமான வாழ்க்கையை இவர்கள் தொடர்ந்தனர். பலர் ஐரோப்பா மட்டுமன்றி அமெரிக்காவிற்கும் புலம்பெயர்ந்தனர். அவர்களது தொடர்பு தொடர்ந்தது.
இன்று லண்டன் டெம்பிள் சர்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாக திகழ்கின்றது என்றாலும் அதன் பின்னணியில் எவ்வகை செயல்பாடுகள் நிகழ்கின்றன என்பது மறைவாகத்தான் உள்ளது.






Sunday, March 23, 2025

சித்தார்த்தா - கால்வ்



 சித்தார்த்தா நாவலுக்காக நோபல் பரிசு பெற்றவர் இலக்கியவாதி ஹெர்மான் ஹெஸ்ஸ. இவர் ஒரு ஜெர்மானியர். 55 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது சித்தார்த்தா நாவல்.

தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இன்று தற்செயலாக அவர் பிறந்த ஊரான கால்வ் நகருக்குச் சென்றிருந்தோம்.
அங்கு எதிர்பாராத விதமாக ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களது வழித்தோன்றல் உறவினர்கள் நாங்கள் அவரது சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தேடிக் கொண்டு வந்து பேசினார்கள்.
சித்தார்த்தா நாவலைப் பற்றி உரையாடினோம். ஹெர்மான் அவர்களது தாத்தா கூண்டர் ஒரு இலக்கியவாதி. சுதந்திரமான இலக்கியம் படைக்க வேண்டும் என முயற்சித்தவர்.
கூண்டர் அவர்கள் இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் 25 ஆண்டுகள் இருந்தவர். மலையாள மொழியின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகின்றேன்.
அதில் அவரது உறவினர்கள் அண்மையில் வெளியிட்ட இரண்டு நூல்களை எங்களுக்கு பரிசளித்தார்கள். கூண்டர், ஹெர்மன் ஹெஸ்ஸ இருவர் பற்றியும் எழுதப்பட்ட இரண்டு ஜெர்மானிய மொழி நூல்கள் அவை.
எதிர்பாராத ஆனால் ஆச்சரியமான மகிழ்ச்சி நிறைந்த ஒரு அனுபவமாக அமைந்தது.
-சுபா
23.3.2025














Wednesday, March 19, 2025

சர் ஜான் மார்ஷல் அவர்களது பிறந்தநாள்

 


இன்று சர் ஜான் மார்ஷல் அவர்களது பிறந்தநாள். சிந்துவெளி நாகரிகத்தின் தனிச்சிறப்பை உலகுக்கு வெளியிட்டவர் சர் ஜான் மார்ஷல்.

Illustrated London News ஆய்விதழில் சர் ஜோன் மார்ஷல் தனது சிந்து வெளி நாகரிக கண்டுபிடிப்பை வெளியிட்ட நாள் 20.9.1924.
20 செப்டம்பர் 2024 அவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் மரபு அறக்கட்டளை ஓர் இலச்சினை வெளியிட்டு சிறப்பு செய்தோம். ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றையும் பச்சையப்பா கல்லூரியில் ஏற்பாடு செய்து சிந்துவெளி ஹரப்பா நாகரிகம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம்.
சர் ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பும் ஆய்வுகளும் நம் பெருமை!
19.3.2025



Tuesday, March 18, 2025

டார்வின்

 


லண்டன் பயணத்தில் ஆறு புதிய நூல்களை வாங்கி வந்தேன். அனைத்தும் வரலாறு மற்றும் அறிவியல் தொடர்பானவை தான்.

நண்பர்கள் சந்திப்பின் போது சில நூல்கள் பரிசளித்திருக்கின்றார்கள். இப்படி நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று இரவு டார்வின் பற்றிய, குறிப்பாக அவரது உலக ஆய்வுப் பயணம் பற்றிய நூல் ஒன்று படிக்க தொடங்கினேன்.
கடலில் நீண்ட உலகப் பயணம்... மிகத் தீவிரமாக ஆய்விலேயே கவனம் வைத்து உலகுக்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார் டார்வின்.
முன் தயாரிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், ஆவணப்படுத்தல் முயற்சி, அவணப்படுத்திய ஆவணங்களை ஆய்வு செய்தல், அவற்றை முறையாக வெளியிடுதல் என பல்வேறு வகையில் டார்வின் மேற்கொண்ட முயற்சிகள் தான் இன்று நமக்கு வழிகாட்டியாக அமைகின்றன.
கிருத்துவ கத்தோலிக்க மத நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கும் evolution, natural selection கருத்தாக்கங்களை அவர் வெளியிட்ட போது அவருக்கு எவ்வகையான எதிர்ப்புகள் இருந்திருக்கும் என்பது நம்மால் ஊகிக்க முடியும். அறிவியல் எப்போதும் மத நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கும் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும்; உலகம் பற்றிய புது தெளிவை மக்களுக்கு வழங்கும்.
டார்வினை பற்றி பேசுவதும் அவரது கண்டுபிடிப்புகளை அவரது ஆய்வுகளைப் பற்றி பேசுவதும் இப்போதும் நமக்கு மிக மிக அவசியம் என்று நினைக்கின்றேன்.
லண்டன் நகரில் உள்ள natural history museum டார்வின் ஆய்வுப்பகுதி ஒன்றைக் கொண்டிருக்கின்றது. அவர் சேகரித்து வந்த பலரும் பொருட்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
அறிவியலை சிந்திப்போம்
அறிவியலை வாசிப்போம்
அறிவியலை பேசுவோம்.
-சுபா

Saturday, March 15, 2025

லண்டனில் தமிழ் மக்கள் சந்திப்பு




 லண்டனில் தமிழ் மக்கள் சந்திப்பு. இலக்கிய ஆளுமைகள் பேராசிரியர் நித்தியானந்தன், பத்மநாப ஐயர், நவஜோதி, மீனா, ஓவியர் ராஜா என பலரும் வந்திருந்து இன்று அருமையான ஒரு சந்திப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு லண்டன் தமிழ் மக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.