Monday, January 4, 2021

கொரோனா வாக்சின் - ஐரோப்பிய நிலவரம்


கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தும் முயற்சியில் எந்த ஐரோப்பிய நாடு முந்திக் கொண்டு நடைமுறைப்படுத்துகிறது என்பதை யூரோ நியூஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ செய்திகளின் படி இங்கிலாந்தும் இஸ்ரேலும் தான் இந்தப் பந்தையத்தில் முந்திக் கொண்டு செல்கின்றன. பிரான்சும் நெதர்லாந்தும் இந்தச் செயல்பாட்டில் மிக மெதுவாகச் செயல்படுவதாகவும் இப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

டிசம்பர் 8ம் தேதி இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு வாக்சின் அளிக்கும் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. ஜனவரி 1, 2021 வாக்கில் 1 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு அவை செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் மாட் ஹான்ஹோக் தெரிவித்துள்ளார். இன்று, அதாவது ஜனவரி 4 முதல் 2ம் கட்ட வாக்சின் செலுத்தும் செயல்பாடுகள் தொடங்கப்படுகின்றன. AstraZeneca மற்றும் Oxford University இணைந்து தயாரித்த வாக்சின் தான் இங்கே செலுத்தப்படுகிறது.

இஸ்ரேலில் ஜனவரி 3 வரை 1.1 மில்லியன் இஸ்ரேலியர்களுக்கு வாக்சின் செலுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் யூரி எல்டர்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார். அதாவது மக்கள் தொகையில் 12% விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பார்க்கும் போது இந்தப் பட்டியலில் முதல் இடம் பெறுவது டென்மார்க். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் Pfizer/BioNTech ஜெர்மனி நிறுவனம் தயாரித்த வாக்சினைப் பயன்படுத்துகின்றன. டென்மார்க்கில் இதுவரை 45,800 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ஜனவரி 1 வரை 188,550 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கடுத்து குரேஷியா, போர்த்துகல், போலந்து எனப் பட்டியல் தொடர்கிறது.

பிரான்சு அரசு மெதுவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 67 மில்லியன் மக்கள் தொகையில் இதுவரை 352 பேருக்கு மட்டுமே வாக்சின் அளிக்கப்பட்டுள்ளது என்பது தான் காரணம். நெதர்லாந்து ஜனவரி 8 முதல் வாக்சினுக்கானப் பிரச்சாரத்தை தொடங்க இருக்கின்றது என்ற செய்தியும் கிடைக்கிறது.

இது இப்படி இருக்க, இந்தக் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி நமது மனித உடலில் எவ்வகையான RNA மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது பற்றிய விரிவான விழிப்புணர்வும் தேவை அல்லவா? 

 -சுபா 

https://www.euronews.com/2021/01/03/coronavirus-which-european-country-is-fastest-at-rolling-out-the-vaccine

No comments:

Post a Comment