Wednesday, November 11, 2020

டைம்லர் ரைட்வாகன்



இன்று மிகச் சர்வ சாதாரணமாக உலக நாடுகளில் சாலையின் எல்லா பக்கங்களிலும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் செல்வதைப் பார்க்கின்றோம். இது எப்போது உருவாக்கப்பட்டது..? எப்போதிலிருந்து பொது மக்கள் புழக்கத்திற்கு மோட்டார் சைக்கிள்கள் வரத் தொடங்கின என்பதை அறிந்து கொள்வோமா?

அதிகாரப்பூர்வமாக மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டது 1885 ஆம் ஆண்டு இதே நாளில் தான் (11.11.1885). இதனை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சார்ந்த கோட்லிப் டைம்லர் மற்றும் விஹெல்ம் மைபாஹ் ஆகிய இருவரும் தான். இந்த மோட்டார் சைக்கிளுக்கு இவர்கள் வைத்த பெயர் டைம்லர் ரைட்வாகன் ( Daimler Reitwagen). இச்சொல்லைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது டைம்லரின் ஓடக்கூடிய அல்லது இயங்கக்கூடிய வாகனம் எனப் பொருள் கொள்ளலாம்.

இந்த மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டது ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் பாட் கான்ஸ்டாட் என்ற நகரில். நான் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரம் இது. இங்குதான் டைம்லர் பென்ஸ் தொழிற்கூடங்களும், ஆய்வு நிலையங்களும், தொழிற்சாலைகளும், அருங்காட்சியகமும் இன்று இருக்கின்றன.

இதற்கு முன்னர் மோட்டார் சைக்கிள் இருந்தது தானே என சிலர் கூற முயற்சிக்கலாம். ஆனாலும் எரிபொருள் பயன்படுத்தி இயங்கும் எஞ்சினுடன் அதாவது, இயந்திரத்துடன் உருவாக்கப்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் இதுவே. இந்த முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்தவர் டைம்லரின் மகனான பவுல். இவர்தான் இந்த மோட்டார் சைக்கிளை முதன்முதலில் ஓட்டி சோதனைச் செய்தவர்.

இந்த மோட்டார் இயந்திரம் அடிப்படையில் மரத்தால் செய்யப்பட்டது. ஒரு சிலிண்டர் இயந்திரம் மட்டும் இணைக்கப்பட்ட வகையில் இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டிருந்தது. டைம்லர் ரைட்வாகன் உருவாக்கப்பட்ட பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு இதன் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வாகனங்களின் உற்பத்தி ஐரோப்பாவில் தொழிற்பரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது. பொது மக்களின் பொதுப் போக்குவரத்தை துரிதப்படுத்தியதில் மோட்டார் சைக்கிளின் பங்கு அளப்பரியது. மக்கள் இயல்பாகப் பல இடங்களுக்குச் செல்வதை எளிமைப்படுத்தியது மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு. இன்று பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கின்ற மோட்டார் சைக்கிள் வண்டிகளுக்கு முன்னோடியானது இந்த டைம்ளரின் ரைட்வாகன். -சுபா

No comments:

Post a Comment