Sunday, July 12, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-10

முனைவர்.க.சுபாஷிணி 
 
2020ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் கடந்து விட்டன. இப்போது ஜூலை மாதத்தில் இருக்கின்றோம். ஜனவரி மாதம் நாம் சற்று கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம், இந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஒரு நுண்ணுயிர்க்கிருமி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும் என்று. இன்றைய தேதிவரை உலகளாவிய அளவில் 567, 300 இறப்புகள்  உலக சுகாதார நிறுவனத்தினால்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. covid-19 தாக்கம் இன்றைய தேதியில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் மிகப்பெரிய வைரஸ் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்திருக்கின்றது.

இவ்வாண்டு பிப்ரவரி மார்ச் மாதவாக்கில் சீனாவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் நம்மில் பலரது வாட்ஸ்அப் குழுமங்களில்  நம்மைத் தேடி வந்த பகிர்வுகள் சில  இப்போது நினைவுக்கு வருகின்றன.

உலக நாடுகளே இந்தியாவைக் கண்டு ஆச்சரியப் படுகின்றன; இந்தியாவிற்குக் கொரோனா வைரஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை, ஏனெனில் இந்தியர்களின் உணவு முறை எவ்விதமான நோய்களையும் தடுத்து கொன்றுவிடும்.... இந்தியச் சூழலுக்கு கொரோனா வைரஸ் பரவலாக்கம் என்பது நடக்காது .. இப்படிப் பலரும் ஆருடம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சில சாமியார்களும் ஜூன் மாதம் 21ஆம் தேதியுடன் கொரோனா கொள்ளைநோய் இந்தியாவிலிருந்து மறைந்துவிடும் என்றும் நிவர்த்திக்கு இதை செய்யலாம் அதைச் செய்யலாம் என்று ஆருடம் கூறி யூடியூப் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிட்டதையும் பார்த்தோம். இந்த ஆருடங்களை எல்லாம் தாண்டி இன்று அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நோய் பரவலாக்கம் என்பது தகுந்த முறையான பாதுகாப்பு இல்லை என்றால் எந்த நாடாக இருந்தாலும் பாரபட்சமின்றி பரவும் என்பதைத்தான் இந்த நடப்பு நிலை நமக்குக் காட்டுகிறது.

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாநிலத்தில் பரவத் தொடங்கிய காலத்தில் இது மனிதர்களே திட்டமிட்டு உருவாக்கி பரப்பி வைத்த வைரஸ்  தாக்குதல் என்ற மிகப்பெரிய சந்தேகமும் பரவலாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் ரகசியமாக செய்கின்ற பல்வேறு வகை ரசாயன ஆய்வுகள், மற்றும் அவை தொடர்பில் உலகில் மூன்றாம் உலகப் போர்  இந்த வகையில்தான் அமைகின்றது என்ற கருத்தை மையமாகக்கொண்டு பலபல கட்டுரைகளும் செய்திகளும் யூடியூப் வீடியோ காணொளி பதிவுகளும் நாம் விரும்புகிறோமோ இல்லையோ நம் கவனத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால் காலம் காலமாகத் தொடர்ந்து இவ்வுலகை அவ்வப்போது தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர் சேதத்தை வைரஸ் நுண்ணுயிர் கிருமிகள் உருவாக்குகின்றன என்பதை இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகளில் விரிவாக விளக்கி இருந்தேன். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் இபடி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது என்பதை நாம் நினைவு கூர்வது பொருந்தலாம்..  

2003ஆம் ஆண்டு Severe acute respiratory syndrome (SARS) நுண்ணுயிர் கிருமி முதலில் அடையாளம் காணப்பட்டது. முதலில் வவ்வால்களிடமிருந்து உருவாகி பின்னர் இவை பூனைகள் வழியாக மக்களுக்குப் பரவுவது நிகழ்ந்தது. இந்த வைரஸ் கிருமி முதலில் சீனாவில் தான் அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் உலக நாடுகளில் 26 நாடுகளில் இதன் தாக்கம் பிரதிபலித்தது. 8096 மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு அதில் 774 உயிர் சேதங்கள் பதியப்பட்டன. கொரோனா வைரஸ் கிருமி இன்று உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கும் உயிர் சேதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகக்குறைவான எண்ணிக்கை தான்.

ஆரம்பத்திலேயே முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டமையால் அதே ஆண்டு ஜூலை மாதம் இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, இது பரவி உயிர் சேதம் ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகள் வெற்றி கண்டன. இந்த நோய் பரவலாக்கத்திற்கும் சீனாதான் பொறுப்பு என்ற வகையில் பேச்சுக்கள் எழுந்தது என்பதோடு ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் பரவல் பற்றிய செய்திகளை வெளிப்படையாக சீனா வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது. இப்போதும் அதே நிலை தொடர்கிறது.

covid-19 தாக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் SARS-2 நுண்ணுயிர் கிருமி SARS கிருமி வகையிலிருந்து சற்றே மாறுபட்டது என்றாலும் அடிப்படையில் அதே வகையை சார்ந்தது என்று அறியப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த நுண்ணுயிர் கிருமியை அழிப்பதற்கும் அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று முனைப்போடு  தொடர்ச்சியாக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றார்கள். ஜூலை மாதத் தொடக்கத்தில் பல இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் பற்றிய செய்திகள் உலா வரத் தொடங்கியிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளில் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இன்றைய காலநலையில் உலகவரலாற்றில் தொடர்ச்சியாக நுண்ணுயிர் கிருமிகள் செய்திருக்கின்ற உயிர்ச் சேதங்களைப் பற்றிதான் பெரும்பாலும் நம் கவலைகள் சூழ்ந்திருக்கின்றன. இது இயல்புதான்.. தவிர்க்கமுடியாத ஒன்றுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயினும் உலக சுற்றுச்சூழல் என்ற ரீதியில் காணும்போது குறிப்பிடத்தக்க வகையில் சுற்றுச்சூழலில் நிலை மேம்பாடு கண்டிருக்கின்றது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

அதில் மிக முக்கியமானது காற்று மாசடைதல். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலும் காற்றின் தூய்மை மேம்பாடு கண்டிருக்கின்றது என்பதை சுற்றுச்சூழல் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஐரோப்பாவைப் பொறுத்தவரை மிக அதிகமான விமானப் போக்குவரத்துகள், மிக அதிகமான வாகன போக்குவரத்துகள், அணு ஆலைகள் உருவாக்குகின்ற காற்றுத் தூய்மைக்கேடு எனப் பல வகையில் மாசடைந்து கிடந்த வான்வெளி என்று தூய்மை அடைந்திருக்கிறது என்பது ஒட்டுமொத்த உலகத்திற்கு நன்மை தான்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிறைந்திருக்கும் பொதுப்போக்குவரத்து மெட்ரோ ரயில்கள் இப்போது கணிசமான எண்ணிக்கையில் குறைந்த பயணிகளுடன் பயணிக்கின்றன. பெரும்பாலான கணினித்துறை சார் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே அலுவலகப் பணிகளைக் கவனிப்பதால் மிகப்பெரிய அளவில் பொதுப்போக்குவரத்துச் சேவையை நம்பி இருந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது.

பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் அலுவலக பணிகளைச் செய்யக்கூடிய வகையில் தங்கள் தொழில் செயல் முறையை மாற்றி அமைத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வீட்டிலேயே இருக்கக்கூடிய சூழல் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றது என்றாலும்கூட குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கும் நேரத்தை இது அதிகரித்திருக்கின்றது என்பதோட சாலைகளில் பயணம் செல்வதற்காக பொதுமக்கள் எடுத்துக் கொள்கின்ற நேரத்தை மிச்சப்படுத்தி குடும்பத்தாரோடு நீண்ட நேரத்தைச் செலவிடக் கூடிய வாய்ப்பையும் இது வழங்கியிருக்கின்றது. ஜெர்மனி போன்ற நாடுகளில் மிக அதிக நேரத்தை வாகனங்களிலேயே சாலைகளில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த என்னைப் போன்ற பலருக்கும் இது ஒரு மிகப்பெரிய மாற்று வழியாக அமைந்திருக்கின்றது என்பதை நானும் முழுமையாக உணர்கிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை, அதிலும் நாம் ஒவ்வொருவரும் சற்றும் கூட எதிர்பாராத மாற்றத்தை வலிந்து திணித்து இருக்கிறது கொரோனா வைரஸ். பல நாடுகளில் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமையால் மக்கள் எந்த வகையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற தெளிவில்லாமல் தடுமாற்றத்துடன் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் நடக்கின்ற நிலவரங்களைப் பார்க்கும்பொழுது வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும்  மக்கள் வேலையின்றி உணவுத் தேவைக்காக மிகப்பெரிய அளவில் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர்‌. ஐரோப்பா போன்ற நாடுகளிலும
 பல சிறிய நிறுவனங்கள் எப்படி மீண்டு எழுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் அதேவேளை மிகப்பெரிய நிறுவனங்கள் மீண்டு எழுவதே சாத்தியமில்லையோ, என்ற வகையில் தடுமாறி நிற்கின்றன. ஆயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு பொருளாதார அவசரக் கூட்டங்கள் சிறிய பெரிய என்ற பாரபட்சமின்றி வணிகத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய சூழலில் கொரோனா பாதிப்பு மேலும் ஓரிரு மாதங்கள் தொடரும் என்ற ஊகத்தின் அடிப்படையில் ஏறக்குறைய 2021 ஆம் ஆண்டு உலகம் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பை மட்டுமே முன்வைக்க முடிகின்றது.

எது எப்படியோ..
கொரோனா உலகில் அடையாளப்படுத்தப் படுவதற்கு முன்பிருந்த நம் வாழ்க்கை.. கொரோனா அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் நாம் அனுபவிக்கும் வாழ்க்கை, என இரண்டு வகையான வாழ்க்கை நிலையை நமது காலத்திலேயே அனுபவிக்கின்றோம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

உலகில் பல்வேறு காலகட்டங்களில் நுண்ணுயிர் கிருமிகள் கொள்ளை நோயை ஏற்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அத்தகைய பலப்பல தாக்கங்களில் இருந்து மீண்டு வந்தது மனிதகுலம். அதேபோல இப்போது  வந்திருக்கின்ற இந்த புதிய சவாலையும் எதிர்கொண்டு மனிதகுலம் மீண்டும் தனது நீண்ட நெடிய பயணத்தை தொடரும்.






முற்றும்

No comments:

Post a Comment