கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் மிகக் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அமைகின்றன. தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கவனச்சூழலும் பெரும்பாலும் தமிழக நிலப்பரப்பு சார்ந்தவகையில் மைய ஆய்வுப் பொருளாக அமைந்து விடுவதும், சில விதிவிலக்குகளாக அவ்வப்போது இலங்கை பற்றிய பண்டைய வரலாற்றுச் செய்திகளை ஆராய்வதுமாகவே உள்ளது. இதனைத் தாண்டி அவ்வப்போது கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பர்மா அடங்கிய பகுதிகளில் கடந்த நூற்றாண்டுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.
ஐசிங் போன்ற பண்டைய சீன வணிகர்களின் குறிப்புக்களும், தாலாங்துவோ (Talang Tuo) போன்ற கல்வெடுக்களும், தற்காலத்தில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆய்வுகளும், அண்மைய கால கம்போடிய அகழ்வாய்வுகளும் இத்துறைக்கு ஓரளவேனும் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன. மறைந்த மலேசிய மருத்துவர் மற்றும் வரலாற்று ஆய்வாளரான டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தொடர்ச்சியாக கிழக்காசிய நாடுகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அவ்வப்போது நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். இந்தோனேசியாவில் பணியாற்றியவர் என்பதோடு மலேசியச் சூழலில் இருந்தமையினால் அவரது ஆய்வுகள் கிழக்காசிய நாடுகளில் பண்டைய வரலாற்றுத் தகவல்களையும் ஆராயும் வகையில் அமைந்திருந்தது. இதைத் தவிர அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமென பேசப்பட்ட கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாற்று செய்திகளும் உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளும் மட்டுமே இப்பகுதிகளிலும் பண்டைய காலத்தில் பலம் பொருந்திய பேரரசுகள் ஆட்சி செய்தன என்பதை நமக்கு அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகளில் ஒன்றாக எழுத்தாளர் மாயா என்ற மலர்விழி பாஸ்கரன் எழுதி 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கடாரம் என்ற நூல் அமைகின்றது.
700 பக்கங்கள்; 49 பகுதிகள்; கூடுதலாக ஒரு சிறப்புப் பகுதியாகச் சோழப்பேரரசன் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி இணைக்கப்பட்டு, பண்டைய கிழக்காசியாவின் பெயர்கள் தமிழில் வழங்கப்பட்ட ஒரு வரைபடமும் இணைக்கப்பட்டு இந்த வரலாற்று நாவல் அமைந்திருக்கின்றது.
இன்றைய மலேசியச் சூழலில் மலாயாவின் பண்டைய சிறப்பு என்பது கிபி 15ஆம் நூற்றாண்டில் மலாக்காவில் எழுச்சி பெற்ற மலாய் அரசினை தொடங்கிய பரமேசுவரா அல்லது மன்னர் இஸ்கந்தர் ஷா ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குவதாகவே பெரும்பாலும் பேசப்படுகின்றது என்பதோடு பள்ளிக்கூட பாட நூல்களிலும் பாடமாக உள்ளது. ஆயினும் இன்றைய மலேசியாவின் வடபகுதி கெடா மாநிலத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆதிக்கத்தின் போது நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகளின் படியும், இன்றைய பேராக் மாநிலத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட வரலாற்று தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் இப்பகுதிகளில் ஆட்சிசெய்த ஸ்ரீ விஜய, லங்காசுக்கா, கங்கா நெகாரா, போன்ற பண்டைய அரசுகள் பற்றிய செய்திகள் கிடைக்கத் தொடங்கின. இவை மட்டுமன்றி இன்றைய தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ கிரந்த கல்வெட்டுக்களும், தமிழ் கல்வெட்டுக்களும் இங்கு முன்னர் ஆட்சிசெய்த பண்டைய அரசுகளின் வரலாற்றுச் செய்திகளை வழங்கும் முக்கிய சான்றுகளாக அமைந்திருக்கின்றன. இதுவரை கிடைக்கப்பட்ட கல்வெட்டுச் சான்றுகளும் கோயில் கட்டுமானங்களில் சிதைந்த சில பகுதிகளும் ஓரளவு இப்பகுதிகளின் வரலாற்றினை ஊகிக்கத்தக்கனவாக இருந்தாலும் அவை இன்றளவும் வரலார்றுச் சான்றுகளால் நிரப்பப்படவேண்டிய இடைவெளிகள் நிறையவே இருக்கின்றன என்பதை நமக்குக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு மேன்மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் கிழக்காசிய நாடுகளில் செய்யப்படவேண்டிய தேவை உள்ளது. எது எப்படியாகினும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பண்டைய பேரரசுகளுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
மலர்விழி பாஸ்கரனின் இந்தக் கடாரம் என்ற நூல் மாமன்னன் ராஜேந்திர சோழனின் கடற்படை கடாரத்தை நோக்கி மேற்கொண்ட போர் சூழலை விளக்கும் ஒரு முயற்சி. மிக நுணுக்கமான செய்திகள் பலவற்றைச் சேகரித்து அவற்றைக் கற்பனையுடன் கலந்து இந்த நூலில் மிகச் சுவாரசியமாக இவர் வழங்கி இருக்கின்றார். ஸ்ரீவிஜய பேரரசு, மாமன்னன் முதலாம் ராஜராஜன் காலத்தில் சோழப் பேரரசுடன் நல்ல நட்புறவுடன் இருந்தது என்பதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. அந்த நட்பிற்கு இலக்கணமாக நாகையில் கட்டப்பட்ட புத்த விகாரை இருந்தது. ஆனால் நமது துர்பலன்; வணிகம் செய்ய வந்து நாகையில் காலூன்றிய டச்சுக்காரர்களால் அது கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு சிதைக்கப்பட்டது.
வணிக நட்பு நிலைத்திருந்த மாமன்னன் ராஜராஜன் காலத்திலிருந்த அந்த நிலை மாறி, கடல் கடந்து போர் செய்யத்தூண்டிய பகை உணர்வு எதனால் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் சிந்தனையில் இருக்கும் ஒரு முக்கியக் கேள்வியே. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மிக முக்கியமான நிலப்பகுதியாக புவியியல் ரீதியில் அமைந்திருக்கும் பகுதிதான் இன்றைய மலேசியா மற்றும் இந்தோனேசியா என்று சொல்லப்படுகின்ற அன்றைய ஸ்ரீவிஜய அரசு. இந்த ஸ்ரீவிஜய அரசு என்பது பௌத்த மதம் தழுவிய மலாய் மன்னர்கள் ஆட்சி செய்த ஒரு பேரரசு. கிபி ஏழாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி ராஜேந்திரனின் கடற்படை கடாரத்தைக் கைப்பற்றும் வரை இப்பகுதியில் நீண்டகாலம் ஆட்சிசெய்த சிறப்புப் பெற்றது இந்த ஸ்ரீவிஜய பேரரசு.
இந்த நாவலில் ஆசிரியரின் சொல்வளமும் வரலாற்றுப் பின்னணியுடன் கதையைக் கொண்டு செல்லும் பாங்கும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. இந்த நாவலில் குறிப்பிடப்படும் கப்பல்களில் தான் எத்தனை விதமான கப்பல்கள்..! தமிழர்களின் கடல் வணிகமும் கடலை ஆட்சி செய்யும் திறனும் கிரேக்கர்களும் ரோமானியர்களும் அரேபியர்களும் அறிந்து தங்கள் குறிப்புக்களில் எழுதி வைத்த ஒன்று தானே.
மலேசியாவின் வடக்குப் பகுதி மாநிலங்களான பெர்லிஸ், கெடா போன்ற மாநிலங்களும், தக்கோலம் என நூலாசிரியர் சுட்டிக்காட்டும் இன்றைய தாய்லாந்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி தான். இன்றும் அதில் மாற்றமில்லை. அடர்ந்த காடுகளும், அருவிகளும், நீரூற்றுகளும், நதிகளும் என இன்றும் கூட மலேசியாவின் இந்தப் பகுதி அதன் இயற்கை வளத்திற்கு சற்றும் குறையவில்லை. நாவலில் ஆங்காங்கே ஆசிரியர் இந்த இயற்கை எழிலை நம் கண்முன்னே சாட்சியாக கொண்டுவந்து காட்டுவதில் வெற்றி பெறுகின்றார்.
நாவலில் கூடுதலாக மலாய் பெண்களுக்கே உள்ள கூடுதல் சிறப்பு அம்சமான துணிவையும், வணிகத் தொழில் ஈடுபாட்டையும் தற்காப்புக் கலையில் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கொண்டுசெல்வது மலேசிய மக்களின் இயல்பான பண்பாட்டினை அறிந்து இந்த நாவலை அவர் விவரித்திருப்பதை உறுதி செய்கிறது.
வரலாற்று நாவல்கள் எழுதும்போது வரலாற்றுச் சான்றுகளும் அனுபவங்களும் அந்த நாவல் உயிரோட்டத்துடன் அமைவதற்கு உறுதியளிக்கும். இந்த நாவல் உருவாக்கத்திற்காக நூலாசிரியர் மாயா விரிவான களப்பணியும் செய்திருக்கின்றார் என்பதை மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்த என்னால் இந்த நாவலின் வழியே பயணிக்கும் போது உணரமுடிகின்றது.
சோழர்கள் சிறந்தவர்களா ஸ்ரீவிஜய மன்னர் பரம்பரையினர் சிறந்தவர்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் நாவல் முழுவதும் நடுநிலையோடு கதைக்களம் நகர்கின்றது. ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது அடுத்து என்ன, என்ற கேள்வி நம்மைத் துரத்துகிறது. இதுவே நாவலை விரைந்து வாசிக்க வைக்கின்றது. ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போல ஒரு அனுபவம்.
பண்டைய தமிழக வரலாற்றை ஆராயும்போது தமிழர்களின் வணிகத்தையும் அந்த வணிகத்தைச் சாத்தியப்படுத்திய கடற்பயணங்களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. வணிக முயற்சிகளும் அரசும் அரசியலும் சேர்ந்தே இணைந்து பயணிப்பவை. இது பண்டைய காலத்திற்குப் பொருந்தும் ஒன்று மட்டுமல்ல. இன்றும் அரசுகளை பின்னிருந்து வழிநடத்துவது வணிகம் தானே. கடற்கொள்ளையர்கள் இப்பகுதியில் இருந்தனர், இப்பகுதியில் நிகழ்ந்த வணிகங்களில் பலத்த இடையூருகளைச் செய்தனர் என்ற மலாய் வரலாற்றுச் செய்திகளையும் உள்வாங்கிக் கொண்டு கதை சம்பவங்களில் கடற்கொள்ளையர்களைப் பற்றியும் புகுத்தத் தவரவில்லை.இந்த நாவல் சோழர் காலத்தில் வணிக அமைப்புகள் இயங்கிய தன்மையையும் அவற்றின் பலத்தையும், எந்தெந்த வகையில் அவை அரசுகளோடு இணைந்து செயல்பட்டன என்பதையும் வாசகர்களுக்கு மிக அழகாகக் காட்டிச் செல்கிறது. நாவலின் சிறப்பாக இதனை நான் காண்கின்றேன்.
நாவலினூடே பயணிக்கும்போது நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பணியாற்றிய மலேசியாவின் பல பகுதிகள் மனக்காட்சியில் வந்து செல்கின்றன; நேரில் சென்று பார்த்து வந்த தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளும் மனக்கண்ணில் விரிகின்றன. தனிப்பட்ட வகையில் எனக்கு ஸ்ரீ விஜயா லங்கா சுக்கா, கமெர் ஆகிய பேரரசுகளின் வரலாற்றில் ஆழமான விருப்பம் இருப்பதாலும் இந்த நூல் என் மனதைக் கவர்வதாக அமைகின்றது.
நூலாசிரியர் மாயா என்ற மலர்விழி பாஸ்கரன் கிழக்காசிய நாடுகளைப் பற்றிய ஆய்வுப் பணியில் தன்னை மேலும் தீவிரத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளுமையும், சொல் வளமும், கற்பனைத் திறனும் இவருக்கு இருக்கின்ற பலம்.
தமிழக பல்கலைக்கழகங்களின் வரலாற்று புலனங்களின் ஆய்வு மாணவர்கள் கிழக்காசிய பண்டைய வரலாற்று ஆய்வின் பால் தங்கள் கவனத்தைச் செலுத்தி இந்த நாடுகளுடன் இணைந்த வகையிலான அகழாய்வுப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இத்தகைய முயற்சிகள் தமிழ் மக்களுக்கும் தமிழ் நிலத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான நீண்ட நெடிய தொடர்புகளுக்குச் சான்று தந்து கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாற்றில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு நிச்சயம் உதவும்.
கங்கை கொண்ட சோழன் கடாரம் கொண்டான் என்று வரலாற்றில் சிறப்பிடம் பெற வைத்த வரலாற்று நிகழ்வினை தன் கற்பனைக்கூறுகளையும் சேர்த்து நாவலாக்கித் தந்திருக்கும் மலர்விழி பாஸ்கரனுக்குப் பாராடுக்கள்.
-சுபா
No comments:
Post a Comment