ஜி.யூ போப் அவர்கள் தமிழகத்தில் நீண்டகாலம் பணியாற்றி பின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர். ஜி.யூ போப் என்றே அறியப்பட்ட இவரது முழுப் பெயர் George Uglow Pope என்பதாகும். ஆங்க்லிக்கன் கிருத்துவ மதபோதகராகத் தமிழகத்துக்குப் பணியாற்ற வந்த இவர் 40 ஆண்டுகள் தமிழகத்திலேயே தங்கிவிட்டார். கல்வி மறுக்கப்பட்டோருக்குக் கல்விக்கு வழிகாட்டிய கல்வித்தந்தை என்ற சிறப்புக்கு உரியவர் இவர். இன்று பணம் வாங்கிக் கொண்டு கராராகக் கல்லூரி நடத்துவோரைக் கூட கல்வித்தந்தை எனப் புகழும் காலம் வந்து விட்டது. காலத்தின் கோலம். அது ஒருபுறமிருக்கட்டும்!
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குக் குறிப்பிடத்தக்க தமிழ் நூற்களை மொழி பெயர்ப்பு செய்துள்ளார் ஜி.யூ போப். அதில் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழி பெயர்ப்பு செய்த பெருமை இவருக்குண்டு.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதிக்கு நான் கடந்த ஆண்டு சென்றிருந்த போது ஜி.யூ போப் அவர்களின் பெயரில் இயங்கும் உயர்கல்விக்கூடங்களை பார்வையிட வாய்ப்பு கிட்டியது. இவரைப் பற்றி ஓரளவு நேரிலும் அறிந்து கொள்ள எனக்கு அது வாய்ப்பாகவும் அமைந்தது.
இந்த சாயர்புரத்தில் தான் 1839ம் ஆண்டு இறைப்பணி ஆற்ற இவர் தமிழகம் வந்து சேர்ந்தார். தமிழகம் வருவதற்கு முன்னரே ஜெர்மானிய பாதிரிமார்கள் உருவாக்கித் தந்த நூல்களின் வாயிலாகத் தமிழ் மொழியை இவர் எழுதவும் வாசிக்கவும் கற்றிருந்தார். தமிழகத்திற்கு வந்த பின்னர் இவரது தமிழ் மொழிப்புலமை மேலும் அதிகரித்தது. நாலடியார் நூலை இவரே அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்தார். அத்தோடு அதனைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வெளியிட்டார். தமிழ் இலக்கண நூலும் தமிழ்ப்பாட நூல்களையும் உருவாக்கினார்.
ஜி.யூ.போப் அவர்களுக்கும் உ.வெ.சாவிற்கும் கடிதப் போக்குவரத்துத் தொடர்பு இருந்தது என்பதை என் சரித்திரம் நூல் வழி அறிகின்றோம். அவரைப்பற்றிக் குறிப்பிடும் போது உ.வே.சா சிறுவர்களுக்குப் பயன்படும் சிற்றிலக்கணம் எழுதியவர் என்று குறிப்பிட்டு 'போப்பையர் இலக்கணம்' என அது தமிழ் நாட்டில் வழங்கியது என்கின்றார்.
தமிழ் கற்ற ஐரோப்பியர்களை 'ஐயர்' என அடைமொழி கொடுத்து அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. பெஸ்கி, நோபிலி, போப் போன்றவர்கள் வாழ்க்கைச் சரிதத்தின் வழி இதனை அறிய முடிகின்றது.
கல்வி கற்றவர் அல்லது ஆசிரியர் நிலையில் இருப்பவர் என்றால் ஐயர் என்ற அடைமொழி தேவை என்ற எண்ணம் அன்று நிலவியிருக்கின்றது. பல தொடர்ச்சியான சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளினால் தான் இந்த நடைமுறை இன்று ஓரளவு கைவிடப்பட்டுள்ளது. தேவாலயங்களில் சமய நடவடிக்கைகளில் உள்ளோரை ஐயர் என விளிக்கும் முறை சில இடங்களில் இருப்பதாக அறிகிறேன். இன்று ஐரோப்பிய தமிழறிஞர்களுக்கு ஐயர் என்ற அடைமொழியைச் சேர்த்து எழுதும் பாணியை மக்கள் பயன் படுத்துவதில்லை. அது தேவையற்றது பொருளற்றது என்பதை உணர்ந்தவர்களாக நாம் தெளிந்து மாறிவிட்டோம்!
ஜி.யூ போப் அவர்களுக்குப் புறநானூறு வெளிவந்தபின் ஒரு பிரதியை உ.வே.சா அவர்கள் அனுப்பி வைக்க அதற்கு போப்பின் 26.4.1895 என்ற தேதியிட்ட கடிதத்தில் பதில் எழுதுகின்றார். அதில் முன்னரே உ.வே.சா பதிப்பித்த சிந்தாமணி எளிமையாக இருந்ததாகவும், ஆனால் புறநானூறு கடினமாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். இன்னும் எளிமையாகச் சிந்தாமணி போல எழுத முடியாதா என வினவுகின்றார். ஜி.யூ போப் அவர்களது கையெழுத்தில் அவர் குறிப்பிடுவதைக் காண்க.
“புறநானூற்றை இன்னும் தெளிவு படுத்த முடியாதா? எனக்குத் தமிழ் தெரியுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தாலும் எனக்கு அதில் பல பகுதிகள் விளங்கவில்லை. ஆதலால் இன்னும் தெளிவும் சுலபமுமான நடையில் உரை வேண்டும். பண்டிதரல்லாத என் போலியரிடம் கருணை கொள்ளுங்கள். சிந்தாமணி பெரும்பாலும் சுலபமாகவே இருக்கிறது. அருமையும் பெருமையுமுள்ள தமிழின் பொருட்டுத் தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சித் திறனமைந்த பதிப்பு ஒன்று வேண்டும்,.,,,,,புராணக் கதைகளை விலக்கிவிட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு எழுத வேண்டும்,,,,புறநானூற்றை எவ்வாறு படித்துப் பயன் படுத்தலாமென்பதையேனும் தெரிவியுங்கள்.”
ஜி.யூ போப் அவர்களிடமிருந்த் தமக்கு வந்த இந்த முதல் கடிதம் பொருத்தமான கருத்துக்களை முன் வைப்பதாக உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இதில் ஒரு முக்கிய விசயத்தை ஜி.யூ.போப் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டியுள்ளது. புராணக் கதைகளை விலக்கி விட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களோடு பதிப்பிக்கும் முயற்சி வேண்டும் என வலியுறுத்துகின்றார்.
தமிழ் நூல்களில் புராணக் கதைகளின் அதீதப் போக்கு வாசிப்போரின் சிந்தனையை முடக்கிப் பெறும் கோட்டினை வளர்த்தது என்பதை உறுதியாகக் கூறத்தான் வேண்டும். ஏரணவியல் சிந்தனையும் எதனையும் சீர்துக்கி அறிவுக்குப் பொருந்தும் கருத்துக்கள் உள்ளனவா என ஆராய்ந்து தெளிவது புராணக்கதைகள் மிகுந்திருந்த காலத்தில் வாய்ப்பில்லாமல் போனது கண்கூடு. இந்த நிலை இன்று மாறி வருகின்றது. அறிவுக்குப் பொருந்தும் சிந்தனையை வளர்க்கும் நூல்களை வாசிப்பதும், எழுதுவதும் அவை பற்றி சிந்திப்பதும் அவற்றை இளம் தலைமுறையினரிடையே அறிமுகப்படுத்த வேண்டியதும் நம் கடமையாகின்றது!
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment