இன்றும் கூட தமிழ் மொழிக்கான சிறப்பான அகராதி ஒன்று வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். க்ரியா, சென்னைப் பல்கலைக்கழக அகராதி போன்ற குறிப்பிடத்தக்க முயற்சிகளை நினைவு கூறும் அதே வேளை முந்தைய முயற்சிகளைப் பற்றியும் சற்றே அறிந்திருப்பதும் இவ்வகை முயற்சிகளின் ஆரம்ப நிலையை அறிந்து கொள்ள உதவுவனவாக அமைகின்றன.
ஆண்டோ டி ப்ரென்கா (Antao de Proenca) (1625 - 1666) என்ற போர்த்துக்கீஸியர் தொகுத்த அகராதி ஒன்று தமிழ்-போர்த்துக்கீஸிய மொழியில் அமைந்த முதல் அச்சு வடிவ அகராதி நூல். இதில் 16,546 சொற்களின் பட்டியல் இருப்பதாக அறிய முடிகின்றது. 1732ல் வீரமாமுனிவரின் (பெஸ்கி) தமிழ்-தமிழ் சதுரகராதி வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதிய 'அபிதானகோசம்' என்பதே அகராதியியலில் கலைக்களஞ்சியங்களுக்கான பிரிவில் வந்த முதல் நூல். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்திலும் இடம்பெறுகின்றது.
இப்படி சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் இருந்த போதிலும் சிறப்பான அகராதி ஒன்றிற்கான தேவை இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இப்போது நாம் எதிர்பார்ப்பது போல சுப்பிரமணிய தேசிகர் ஆதீன கர்த்தராக இருந்த காலத்தில் ஒரு அகராதி நூல் உருவாக்கம் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் எழுந்திருக்கின்றது என்பதையும் உ.வே.சாவின் என் சரித்திரம் நூலில் உள்ள குறிப்புக்களின் வழி காண்கின்றோம்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இருந்த காலத்தில் மடத்திற்கு வருகை தந்த உதவி கலெக்டராக இருந்த ராவ்பகதூர் திரு.பட்டாபிராம பிள்ளை என்ற ஒருவரை பற்றிய சில குறிப்புக்கள் இந்த நூலில் இடம்பெறுகின்றன. திரு.பட்டாபிராம பிள்ளையவர்களும் நல்ல தமிழ்ப்புலமை கொண்டவராகத் திகழ்ந்திருக்கின்றார். இவர் மடத்திற்கு வரும்போது தேசிகரிடம் ஒரு அகராதி நூல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன் வைத்திருக்கின்றார். பிள்ளையவர்களிடம் இந்த விண்ணப்பம் வந்து சேர்ந்த்து என்றாலும் அவர் காலத்தில் இப்பணி தொடங்கப்படவில்லை. பிள்ளையவர்களின் இலக்கியப் பணிகள் அனைத்துமே கோயில் தலபுராண உருவாக்கங்களிலும், அந்தாதி, பிரபந்த நூற்கள் உருவாக்கத்திலுமே முடிந்தது.
பிள்ளைவர்கள் மறைவுக்குப் பின்னர் ஒரு முறை ஆதீனத்திற்கு வந்திருந்த திரு.பட்டாபிராம பிள்ளை தனது பழைய வேண்டுகோளான, முறையான ஒரு அகராதிக்கான தேவை பற்றி தேசிகரிடம் கூறி, இருக்கின்ற மாணவர்களை வைத்தே ஆதீனகர்த்தர் அகராதி உருவாக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றலாம் என் விண்ணப்பித்திருக்கின்றார். தேசிகருக்கும் இந்த முயற்சியில் விருப்பம் இருந்தமை தெரிகின்றது. ஆயினும் இதற்கு முழு ஈடுபாட்டைக் காட்டி மாணவர்களைக் கொண்டு இதனை செய்து முடிக்கவில்லை.
திரு.பட்டாபிராம பிள்ளை திருவாவடுதுறை மடத்திற்கு மட்டுமல்லாது ஏனைய எல்லா சைவ திருமடங்களுக்கும் இந்த விண்ணப்பத்தை அனுப்பியிருக்கின்றார் என்று தெரிகிறது. பாடல் புனைவதிலும் திறமையானவராக திகழ்ந்தவர் இந்த திரு.பட்டாபிராம பிள்ளை என்பதால் தமது விண்ணப்பத்தைச் செய்யுளாக இயற்றி சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பியிருக்கின்றார். அந்தச் செய்யுள் இதோ.
அகராதி தமிழிலிணை யற்றதென் வியப்புறவொன்
றான்றோர் யாரும்
பகராதி ருத்தலினிப் பாரிலுள தமிழ்மடப்பண்
ணவர்கட் கெல்லாம்
நிகராதி ருக்குநெடும் பழியென்று முன்புகன்று
நெடிய சீட்டுத்
தகராதி ருக்குமொரு சிறுகுழையி லிட்டனுப்பித்
தளர்வாய் நின்றேன்.
இந்தச் செய்யுளும் மேலும் மூன்று செய்யுள்களும் எழுதி தேசிகருக்கு அனுப்பியிருக்கின்றார் ராவ்பகதூர் திரு.பட்டாபிராம பிள்ளை. கடிதம் கண்ட வேளையிலும் பின்னர் அதற்கடுத்த சில நாட்களிலும் அகராதி தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மடத்தில் பலருக்கு உண்டாயிருக்கின்றது. அதற்காக பல நிகண்டு நூல்களையும் வீரமாமுனிவரின் சதுரகராதியையும் வாசித்திருக்கின்றனர் மாணவர்கள் ஆயினும் இந்த உற்சாகம் நெடுநாள் இருக்க வில்லை என்பதை உ.வே.சாவின் குறிப்புக்களின் வழியே அறிகிறோம்.
இந்தக் கடிதத்தைக் கண்டு நாங்களெல்லாம் வியப்புற்றோம். இப்பாட்டுக்கள் புலவர் பாடல்களைப் போன்றனவாக இராவிட்டாலும் பட்டாபிராம பிள்ளைக்கு எவ்வளவு தமிழன்பு இருந்ததென்பதை வெளிப்படுத்துகின்றன. ஓர் அரசாங்க உத்தியோகஸ்தர் அவ்வளவு அன்புடன் செய்யுள் இயற்றி விண்ணப்பம் செய்யும் திறமை படைத்திருப்பதே பெரிய ஆச்சரியமன்றோ?
அவர் கடிதம் வந்த சில நாட்கள் வரையில் சுப்பிரமணிய தேசிகரும் நாங்களும் அகராதியைப் பற்றிப் பேசினோம், வீரமா முனிவரென்னும் பெஸ்கி பாதிரியார் இயற்றிய சதுரகராதியின் அச்சுப் பிரதியும் ஏட்டுப் பிரதியும் வருவிக்கப்பட்டன. நிகண்டுகளை எடுத்துத் தட்டிக் கொட்டி வைத்தோம். இந்த உத்ஸாகம் சில நாட்கள் வரையில் இருந்தது. பிறகு அகராதியைப் பற்றிய பேச்சே நின்று போயிற்று. பட்டாபிராம பிள்ளையைப் பற்றிய பேச்சு வந்தால்
மட்டும், “திடீரென்று வந்து அகராதி எந்த மட்டில் இருக்கிறது?” என்று அவர் கேட்டால் என்ன செய்வது? என்ற யோசனை உண்டாகும்.
அகராதிக்கென்று அன்றும் இந்த எதிர்பார்ப்பு இருந்திருக்கின்றது.
இன்றும் இந்த நிலை தொடர்கின்றது!
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment