Sunday, September 9, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 19


பதிவு 19

மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களிடம் பாடம் கேட்கும் தருணத்திற்காகக் காத்திருந்த வேளையிலும் உ.வே.சா புதிய நூல்களைக் கற்கும் முயற்சியை விட்டு விடவில்லை.  இடையில் விருத்தாசல முதலியார் என்னும் ஒரு பண்டிதரிடம் சில நூல்களைப் பாடம் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அதிலும் குறிப்பாக சில இலக்கண நூல்களைப் பாடம் கேட்டு தனது செய்யுள் இயற்றும் திறனை வளர்த்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார்.

விருத்தாசல ரெட்டியார் வழியாக இவருக்கு யாப்பருங்கல காரிகை நூல் அறிமுகமானது. அதிலும் அச்சு வடிவத்தில். அச்சில் நூல்கள் வெளிவருவது அக்காலத்தில் சற்றே அறிமுகமாகியிருந்த சமயம் அது. ஏட்டுச் சுவடிகள் என்பது மாறி அச்சுப் புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்த காலம் அது. அச்சு வடிவத்திலான யாப்பருங்கல காரிகை நூலை விருத்தாசல ரெட்டியார் இவருக்கு அளித்தார். அது மட்டுமன்றி வேறு சில ஏட்டுச் சுவடி நூல்களையும் இவருக்கு வழங்கினார். உ.வே.சாவின் தமிழ் கற்க வேண்டும் என்ற விருப்பமும் ஈடுபாடும் விருத்தாசல ரெட்டியார் போன்ற செல்வந்தர்கள் இவரைப் போற்றி அரவணக்கும் பண்பினை வழங்கிற்று. தனக்கு விருத்தாசல ரெட்டியார் மூலமாக கிடைத்த நூல்களைப் பெரும் செல்வமாக போற்றி நினைத்து உ.வே.சா பெருமைப்படுவதைக் காண்கின்றோம்.

அக்காலத்தில் தமிழ் கற்றோர் பலர் தாங்கள் பாடம் கேட்டு கற்ற நூல்களைத் தாங்களே ஏட்டுச் சுவடிகளில் எழுதி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை என் சரித்திரம் நூலில் ஆங்காங்கே காண்கின்றோம். அந்த  வகையில் விருத்தாசல ரெட்டியாரும் சில நூல்களை தம் கையாலேயே ஏட்டுச் சுவடியில் எழுதி வைத்திருந்திருக்கின்றார். இதனைக் குறிப்பிடும் வகையில் 25ம் அத்தியாயத்தில் உ.வெ.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

"செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதத்தில் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. தம் கையாலேயே அந்நூல் முழுவதையும் ஏட்டில் எழுதி வைத்திருந்தார். ஓய்ந்த நேரங்களில் நான் அப்புஸ்தகங்களை எடுத்துப் பார்ப்பேன்; படிப்பேன். அவற்றிலுள்ள விஷயங்களை ரெட்டியாரிடம் கேட்பேன். அவர் சொல்லுவார். இத்தகைய பழக்கத்தால் தமிழ்க் கடலின் ஆழமும் பரப்பும் பல நூற்பகுதிகளும் சில வித்துவான்களுடைய சரித்திரங்களும் விளங்கின. தண்டியலங்காரம் திருக்குறள், திருக்கோவையார் என்னும் நூல்களை நானே படித்தேன். கம்ப ராமாயணத்திலும் பல பகுதிகளைப் படித்து உணர்ந்தேன்."

யாப்பருங்கல காரிகையை முழுமையாக பாடங் கேட்டு முடித்த பின்னர் விருத்தாசல ரெட்டியார் உ.வே.சாவுக்குப் பொருத்த இலக்கணங்களையும் பிரபந்த இலக்கணங்களையும் பாடம் சொல்லத் தொடங்கினார். இலக்கணத்தில் சிறந்த புலமை பெற்றவராக விளங்கியவர் விருத்தாசல ரெட்டியார். தன் வீட்டின் சுவற்றிலேயே பல இடங்களில் இரட்டை நாகபந்தம், அஷ்ட நாகபந்தம் முதலிய சித்திர கவிகளை எழுதி வைத்திருப்பாராம்.

நாக பந்தம் எனச்சொல்லப்படும் செய்யுள் வகையிலான நூலை எனக்கு திரு.சுந்தர் பரத்வாஜ் வழங்கி அறிமுகப்படுத்தினார். சித்திரக்கவிமாலை என்னும் அந்த நூல் நமது மின்னூல்கள் சேகரிப்பில் 218வது நூலாக உள்ளது. வியக்க வைக்கும் வடிவிலான சித்திரங்களும் அதற்குள்ளே கவிதைகளும் என்ற வகையில் உருவாக்கப்பட்டதொரு அற்புதமான ஒரு நூல் அது. இதைப் போலத்தான் விருத்தாசல ரெட்டியாரின் வீட்டுச் சுவரும் இருந்திருக்கும் போல.

ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப் பிரதியாக கொண்டுவரும் செயல் என்பது மிகக்கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. பதிப்பியல் பற்றி பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையவர்கள் கூறியிருப்பதையும் இங்கே நினைவு கூறுதல் கடமையாகின்றது. ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் பதிப்புக்குச் செல்லும் போது சில வேளைகளில் பாட பேதங்களை கவனியாது, செய்யுட்களை முறையாக ஆராயாது அப்படியே கிடைக்கின்ற நூலில் உள்ள செய்யுட்களை அச்சுப் பதிப்பாக கொண்டு வந்துவிடும் நிலை பல முறை நிகழ்ந்துள்ளது. உ.வே. போன்ற அறிஞர்கள் ஒரு நூலின் பல பிரதிகளை ஆராய்ந்து பின்னர் முறையான அச்சுப்பதிப்பை கொண்டு வர பாடுபட்டவர்கள் என்பதை நாம் காண்கின்றோம். கம்ப ராமாயண அச்சுப் பதிப்பில் தனது அனுபவத்தில் தாம் கண்ணுற்ற ஒரு நிகழ்வைப் பற்றி உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

"ஒரு நாள் வழக்கம்போல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்பரெட்டியார் கம்ப ராமாயணம் படித்துத் தம் தந்தையாரிடம் பொருள் கேட்டு வந்தார். அன்று படித்தது கும்பகருணப் படலம். அவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை பதிப்பித்திருந்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துக் கேட்டு வந்தார். நானும் அவ்வூர்ப் பட்டத்துப் பண்ணையாராகிய முதியவர் ஒருவரும் உடன் இருந்தோம். அம்முதியவருக்கு எழுபது பிராயம் இருக்கும். படித்து வரும்போது இடையிலே ஓரிடத்தில் அம்முதியவர் மறித்து, “இந்த இடத்தில் சில பக்கங்களை அவசரத்தில் தள்ளி விட்டீரோ?” என்று நல்லப்ப ரெட்டியாரைக் கேட்டார். “இல்லையே; தொடர்ச்சியாகத்தானே படித்து வருகிறேன்” என்று அவர் பதில் கூறினார். “இவ்விடத்தில் சில பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றை நான் படித்திருக்கிறேன். அவை இப்புஸ்தகத்தில் விட்டுப் போயின. என் பிரதியில் அப் பாடல்கள் உள்ளன” என்று சொல்லிப் பாடம் முடிந்தவுடன் என்னையும் நல்லப்ப ரெட்டியாரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுக் கம்பராமாயணப் பிரதியை எடுத்துக் கும்ப கருணப் படலம் உள்ள இடத்தைப் பிரித்துக் காட்டினார். அவர் கூறியபடியே அவ்விடத்தில் அச்சுப் பிரதியிலே காணப்படாத சில பாடல்கள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம். அம்முதியவருக்குக் கம்ப ராமாயணத்தில் இருந்த அன்பையும் அதை நன்றாகப் படித்து இன்புற்று ஞாபகம் வைத்திருந்த அருமையையும் உணர்ந்து வியந்தோம். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வரும் ஏட்டுப் பிரதிகளின் பெருமையையும் தெளிந்தோம்."

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment