Saturday, November 1, 2003

Quick Recipe - வென்பொங்கல்

நேற்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு நேரமாகிவிட்டது. பசி வேறு. நம்ம ஊறு மாதிரி உடனே வெளியே போய் சாப்பிடலாம் என்றால் 9 மணிக்குத் திறந்திருக்கும் கடையைத் தேடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். என்ன சமையல் செய்வதென்று வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் வழியிலேயே யோசிக்க ஆரம்பித்து விட்டேன். சாத வகையறாக்களில் ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக எனது சமையலறையில் இருக்கும் புத்தகங்களில் 'மணக்க மணக்க சமையல்' என்ற புத்தகத்தை எடுத்து சாத வகையாறாக்களில் தேட ஆரம்பித்தேன். 2 வகை வெண்பொங்கலைப் பார்த்ததும் அதில் ஒன்றையே செய்யலாம் என முடிவெடுத்து 20 நிமிடத்திற்குள் அருமையான இரவு உணவை செய்து முடித்தேன். சுவைத்தும் சாப்பிட்டேன். இந்த recipe மிகச் சுலபமாக செய்யக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. படிக்கின்ற நீங்களும் அவசர வேளைகளில் இதனை செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் உங்களுக்காகவும் இதனைத் தருகின்றேன்.

தேவையான பொருட்கள்:


1/2 கப் அரிசி 1/2 கப் (கொஞ்சம் குறைச்சலாக) பாசிப் பருப்பு கொஞ்சம் கருப்பு மிளகு (8 போதும்) - தூளாக்கிக் கொள்ளவும் கொஞ்சம் ஜீரகம் (1 தேக்கரண்டி) - பாதிப் பாதியாக தூளாக்கிக் கொள்ளவும் 10 முந்திரிப்பருப்பு - பாதியாக உடைத்துக் கொள்ளவும் கொஞ்சம் இஞ்சி உப்பு 1 1/2 கரண்டி நெய்

செய்யும் முறை


1.அரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி பின்னர் எப்போதும் சாதத்திற்கு விடுவதற்கு 2 மடங்கு மேலாக தண்ணீர் விட்டு, உப்பையும் சேர்த்து rice cooker- ரில் வேகவிடுங்கள்.

2.ஒரு சிறிய பாத்திரத்தில் 1 1/2 கரண்டி நெய் விட்டு சூடானதும், மிளகு மற்றும் ஜீரகத்தைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதோடு இஞ்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது முந்திரிப்பருப்பையும் சேர்த்து, கொஞ்சம் நிறம் வரும் வரை வதக்கி அடுப்பை நிறுத்தி விடுங்கள்.

3. சாதம் வெந்தவுடன் இந்தக் கலவையை cooker- ரில் போட்டு நன்றாக கிளருங்கள்.அவ்வளவுதான். வென்பொங்கல் தயார். கொஞ்சம் ஊருகாய் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள். இதன் ருசியே தனிதான்.!

கண்ணனின் வலைப்பூவில் சில சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன. பார்த்திருக்கின்றீர்களா? உருளைக் கிழங்கைச் சிக்கிரமாக வேக வைப்பதற்கான டிப்ஸை அங்கே இருந்து தான் கற்றுக் கொண்டேன்!

No comments:

Post a Comment