Friday, March 23, 2001

பிரம்மோபநிஷத்து (பாகம் 3) - மனித, இயந்திர - மந்திராயணம் (மந்திர உலகம்)


Date: Fri, 23 Mar 2001 06:00:32 -0800 (PST)
From: "suba k."
Subject: Upanishad - Brahmopanishad (Part 3)
To: meykandar@egroups.com

சுருக்கம்:
- ஆத்மாவைக் கீழ் அரணியாகவும் ப்ரணவ மந்திரமாகிய ஓம்காரத்தை மேல் அரணியாகவும் செய்து கொண்டு தியானமாகிய கடைதலை அப்பியாசம் செய்து மறைந்திருந்த அக்னியை வெளிக் காண்பது போல பரமாத்மாவைக் காண வேண்டும்.

- ஆத்மாவைக் காண்பதற்கு தொடர்ச்சியான சத்தியமும் தவ வாழ்வும் தேவை.

- சிலந்தி எவ்வாறு நூலை உண்டாக்கி மீண்டும் தனக்குள்஧ளை இழுத்துக் கொள்கின்றதோ அதே போல ஆத்மா விழிப்பிலும் உறக்கத்திலும் வெளி உலகத்திற்கு வருகின்றது, மறுபடி திரும்பி உள்ளே போகிறது.

- மனமும் வாக்கும் எட்டிப் பிடிக்க முடியாமல் திரும்பி விடுகின்ற ஒரு நிலையே ஜீவனுடைய பரிபூர்ண ஆனந்த நிலை. புத்திமான் இதனை உணர்ந்து முக்தனாகின்றான்.

- எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மாவை ஞானத்தாலும் தவத்தின் மூலமாகவும் அறிய வேண்டும். அதுவே பிரம்மோபநிஷத்தால் அடைய வேண்டிய பதவி. அதுதான் பிரம்மோபநிஷத்தால் அடைய வேண்டிய பதம் எனப்பூர்த்தி. 

தொடர் சிந்தனை

இந்த மூன்றாம் பாகத்தோடு பிரம்மோபநிஷம் முடிவடைகின்றது. இந்த இறுதிப் பாகத்தில் வருகின்ற விளக்கமானது மிகுந்த ஆழமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. அத்தோடு சைவ சித்தாந்தத்திற்கும் பிற ஏனைய கிளை சமயங்களாகிய யோகம் போன்றவற்றிற்கும் உபநிஷத்துகளுக்கும் உள்ள கருத்துத் தொடர்பினையும் காட்டுவதாகவும் விளங்குகின்றது.

முழுமையாக பார்க்க முற்படுகையில் பிரம்மோபநிஷம், பரப்பிரம்மமாகிய இறையைக் கண்டு, அனுபவித்து, அடைவதையே ஆத்மாவின் குறிக்கோளாகக் காட்டுகின்றது. ஆத்மா ஒரு ஜடப்பொருளாக இல்லாமல், செயல்படுகின்ற, பிறவற்றை செயல்படுத்துகின்ற ஒன்றாகவே காட்டப்படுகின்றது. ஆத்மா உடலுக்குள் இருந்து அதனை தனது போக்கில் இயக்கும் வல்லமை கொண்டது. ஆத்மா நினைக்கும் வகையில் தான் உடலின் செயல்பாடுகள் அமைகின்றன. ஆத்மா நாட்டம் இழந்து சோர்வுற்று இருக்கையில் உடல் சோர்வடைவதும், ஆத்மா மிகுந்த பலத்தோடும் வேட்கையோடும் இருக்கையில் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நமது சொந்த அனுபவித்தில் நாம் உனர்ந்திருப்போம்.

ஆத்மா இறைவனை அடைவது என்பது சாதாரண காரியம் அன்று என்றும் அதனை அடையும் வழிமுறைகளை பற்றிய விளக்கத்தினையும் 2ம் பாகத்தில் பார்த்தோம். ஆக அதன் தொடர்ச்சியாகவே இந்த கட்டுரை அமைகின்றது.

ஜீவன் ஒரு உடம்பினை எடுக்கும் போது அது தன்னோடு சேர்த்து வைத்துள்ள பாவ புன்னியங்களின் அடிப்படையிலேயே தனக்கான ஒரு உடம்பினையும், வாழ்க்கையினையும், அது வாழ்கின்ற சூழலையும் பெருகின்றது. 'ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்' எனும் மூன்று கன்மங்களும் ஆன்மாவின் செயல்பாடுகளுக்கேற்ற வகையில் இதனை அமைத்துத் தருகின்றன. எந்த ஒரு மனிதனும் தனது இருப்பை (existance), அதன் காரணத்தை, இறைவனின் மேல் மட்டும் திணித்து விட முடியாது. உலகில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களையும் பார்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் மாறுபட்ட குணாதிசியங்களோடு விளங்குகின்றார்கள். உருவத்திலும் குணத்திலும், திறமையிலும், வாழ்வின் போக்கினை அமைப்பதிலும் வித்தியாசமற்ற இருவரைக் காண்பது இயலாது.

ஆக, ஒவ்வொருவரையும் ஒரு தனிப்பட்ட ஜீவனாகக் காட்டுவது, மறையாக இருந்து கொண்டு அந்த ஜீவனை வடிவமைக்கின்ற, தொழிற்படுத்துகின்ற அந்த ஜீவனுக்குறிய கன்மமே! ஆத்மா தான் செய்த பாவ புன்னியங்களுக்கேற்ப ஒரு பிறவியினை, வாழ்கின்ற சூழலை பெற்று மேலும் தனது 'தேடலை', எடுத்திருக்கின்ற இந்தப் பிறவியிலும் தொடர்கின்ற வகையிலேயே இந்த பிறப்பு அமைகின்றது.

ஆத்மா பரப்பிரம்மத்தை தன்னுள்ளே ஐக்கியப்படுத்தி, அதனோடு தான் இரண்டறக் கலக்கின்ற போதே தொடர்ச்சியான வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி கிடைக்கின்றது. அந்த நிலையை அடைகின்ற வறையில் பல பல காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எதிலெல்லாம் மனம் செல்கின்றதோ அதனை எல்லாம் தேடி அனுபவித்து கற்றுக்கொண்டு பின்னர் அதனை விட மேலானவற்றைத் தேடும் பனியில் ஈடுபடும் சுபாவத்தோடு ஜீவன் விளங்குகின்றது. உடலுக்கு கருவிகளாக ஐம்புலன்கள் இருக்கின்றன. ஆன்மாவுக்கு கருவிகள் எவை?

ஒரு உடல் ஜீவன் இல்லாமல் இயங்க முடியாது. ஜீவன் உடலைவிட்டு வெளியேறிவிடுகின்ற நிலையில் அது தனக்குள்ளே இருக்கின்ற எந்த கருவிகளையும் செயல்படுத்தக்கூடிய திறனை முற்றாக இழந்து பிணமாகி விடுகின்றது. ஆக இரண்டு வகையில் ஜீவன் தனது செயல்களை நடைமுறைப்படுத்துகின்றது. தூலப்பொருளான உடம்பினையும் அதன் கருவிகளையும் செயல்படுத்துவது; சூக்குமப்பொருளான மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவற்றினைத் தொழிற்படுத்துவது. ஒன்று கண்ணுக்குத் தெரிகின்ற கை, கால், வாய், காது, இருதயம், நரம்புகள் போன்ற பாகங்கள்; மற்றொன்று கண் பார்வைக்குப் புலப்படாத எண்ணங்கள், சிந்தனைகள், ஆசைகள், ஆன்ம திறன் போன்றவை.

மனிதனின் இயக்கத்தை மேலோட்டமாகப் பார்க்கின்ற போது வெளிப்படையாகத் தோன்றுகின்ற குணங்களை வைத்துத்தான் நாம் ஒருவரை எடைபோடுகின்றோம். ஒருவரோடு நாம் பழக வேண்டுமானால் முதலில் நமக்கு அவரைப்பற்றிய ஒரு பிம்பம்(image) தேவைப்படுகின்றது. உதாரணமாக, 'அவள் மிகவும் திறமையானவள்; நன்றாகப் பேசும் திறன் உள்ளவள்; தனது அலுவலகத்தில் நல்ல பொறுப்பாக இருப்பவள்; நண்பர்களோடு அன்பாக இருப்பவள்; எதிலும் வேகமாக முடிவெடுப்பவள்' என ஒரு பெண்ணைப் பார்த்து அவளோடு பழகிய சில நிமிடங்களில் நமது மூளை உடனே பதிந்து கொள்கின்றது.[இந்த பதிவு என்பது தூலப்பொருளான மூளையில் பதியப்பட்டாலும், அதன் தாக்கங்கள் ஆன்மாவிலும் பதியப்படுகின்றன.] இந்த கனிப்பின் அடிப்படையிலேயே நாம் அந்த பெண்ணைப் பார்க்கின்ற, நினைக்கின்ற ஒவ்வொரு முறையும் நமக்கு அவளைப்பற்றிய ஒரு காட்சி கிடைக்கின்றது. அதனைப் பொறுத்தே நமது அவளைப்பற்றிய சிந்தனை வெளிப்பாடுகளும் அமைகின்றன.

இந்த image என்பது வெறும் வெளித்தோற்றத்தின் அடைப்படையில் மாத்திரம் அமைந்த ஒன்றல்ல. தூல உடம்பின் கருவிளோடு சூக்கும உடம்பின் கருவிகளும் இணைந்து செயல்பட்டு இந்த முடிவினை, ஒரு விளக்கத்தினை ஒரு மனிதருக்குத் தருகின்றது. தூல உடம்பினது செயல்பாடுகள் சூக்கும கருவிகளின் செயல்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவை. இரண்டும் இணைந்தே செயல்படுபவை; ஒவ்வொரு காரியத்தின் செயல்முறைகளும் அதன் முடிவுகளும், அதனால் அந்த ஆன்மா கற்றுக்கொண்ட பாடங்களும் மூளையில் பதியப்படுகின்றன. அந்த பாடங்களின் அடிப்படையிலேயே ஆன்மா தன்னை திருத்திக்கொள்கின்றது; வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முயற்சிக்கின்றது; மேலும் தனது திறமைகளை வளர்த்துக் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதே சமயத்தில், தனக்கென்று அமைந்திருக்கின்ற, பிற மனிதர் யாருக்கும் தெரியாத மற்றொரு சுக்கும உலகத்திலும் வாழ்கின்றார். இதுவே மந்திர உலகம். இந்த உலகில் ஒரு மனிதர் தன்னோடு உரையாடிக்கொள்ள முடியும்; தன்னையே ஒரு சோதனைப்பொருளாக எடுத்துக் கொண்டு தனது நடவடிக்கைகளை அலசிப்பார்க்க முடியும். இதனை நாம் எல்லோரும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சாதாரண மனிதர் தன்னை மட்டுமே அலசிப்பார்க்கும் சக்தியைக் கொண்டவர்; ஒரு ஞானியோ தன்னை உணரும் அதே தருணத்தில் பிறறது மந்திர உலகத்தில் புகுந்து, அவரது எண்ணங்களையும், கன்மங்களையும் அதனால் விளையக்கூடிய பலாபலன்களையும் அறிந்தவராகின்றார். ஒரு ஞானி என்பவர் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்பவர். பரப்பிரம்மத்தை தன்னுள்ளே அதிகமாக ஐக்கியப்படுத்திக் கொண்டு மனித குணாதிசியங்களாகிய ஆசை, பொறாமை, காமம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றிலிருந்து தன்னை விலக்கி வைத்து இறைவனோடு வாழ்பவர். பரப்பிரம்மம் வாழ்கின்ற இல்லமாக தனது உடம்பினை வைத்திருப்பவருக்கு பரப்பிரும்மத்தின் சக்திகள் படிப்படியாக அமைந்து மற்ற பிற உயிர்களுக்கு உதவும் வகையிலேயே எடுத்திருக்கின்ற இப்பிறவியும் இருக்கின்ற வாழ்க்கையும் அமைந்து விடுகின்றது. நமது பாரம்பரியத்தில் இந்த உதாரணங்களுக்கு பஞ்சமே இல்லை.

இந்த தெய்வீக சக்தியானது நன்மையைக் கொடுக்கின்ற அதே வேளையில், ஒரு சிலர் இந்த சித்திகளை அனுபவிக்கின்ற ஆரம்ப நிலையிலேயே எல்லாம் தெரிந்த ஞானிகளாக தன்னை நினைத்துக் கொண்டு இந்த மந்திர உலகத்தின் பெருமைகளைக் கண்டு அனுபவித்தவுடன் உடனே தன்னை இறைவனின் பிரதிநிதி என்று நினைத்துக் கொண்டு அகங்காரத்தோடு இந்த சக்திகளை தீயவழிகளில் பயன்படுத்தி தனக்கே துன்பத்தை வரவழைத்துக் கொண்ட செய்திகளையும் நாம் கேட்டிருக்கின்றோம். இம்மாதிரியானோர் தனக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு சில சக்திகளிக்குள்ளேயே (சித்திகள்) அடங்கிவிடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தச் செயலினால் அந்த அத்மா மேலும் கன்மத்தை ஈட்டுவதோடு, முழுமையான ஆன்ம விடுதலை பெறுவதிலிருந்து தாமதிக்கின்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றது.

பரப்பிரம்மத்தை ஆத்மாவோடு பதியவைத்து ஐக்கியப்படுத்த தியானம் தேவையாகின்றது. தியானம் மந்திர உலகத்தில் ஆன்மாவை சஞ்சரிக்க வைப்பது. இந்த மந்திர உலகம் அக்கர சக்கரங்களால் ஆனது. இந்த மந்திர உலகத்தில் பயனிப்பதற்கு இந்த உடல் தேவையற்றதாக இருப்பினும் அந்த உலகத்தினுள் செல்வதற்கு வாயிலாக அமைவது இந்த உடலே. உடலில் இருக்கின்ற சக்கரங்களை முடுக்கி அக்னியை எழுப்பிட ஆன்மா மந்திர உலகத்தினுள் புகுகின்றது. [இந்த அக்னி மண்டலம் மூலாதாரத்திற்கு இரண்டு விரளளவு மேலே, பிருதிவியும் அப்பும் (மண் தத்துவமும் நீர் தத்துவமும்) சேர்ந்த இடத்தில் முக்கோணமாய் நான்கு இதழ் தாமரை வடிவத்தில் இருப்பது.] இந்த மந்திர உலகம் முற்றிலும் மந்திரங்களால் ஆனது. ஓம்காரமே அவற்றிற்கு மூலமாகின்றது. ஓம்காரம் பிரிந்து பிரிந்து பல பல மந்திரங்களாக உருவெடுக்கின்றது. அந்த ஓம்காரத்தினுள்ளே புகுந்து அதுவே தானாகி ஆன்மா தியானிக்க வேண்டும். அப்பொழுது பரப்பிரும்மத்தை உணரமுடியும்; காணமுடியும்; அதோடு கலந்து இன்புற்றிருக்க முடியும். சிவவாக்கியர் ஓம்காரத்தையும் அக்கர சக்கரங்களையும் விளக்குகின்ற தனது ஒரு பாடலில் இப்படிச் சொல்கின்றார். "ஓரெழுத்து உலகெல்லாம் உதித்தஅட் சரத்துள்ளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேதெ அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே"

கனினி மென்பொருட்களின் சூக்கும இயக்கத்திற்கு எவ்வாறு binary விளங்குகின்றதோ அதே போல ஆன்ம இயக்கத்தின் மூல ஒலியாக ஓம்காரம் இருக்கின்றது. கண்களுக்கு புலப்படுகின்ற ஒரு மென்பொருளை கனினியில் பொருத்தி இயக்கும் போது அதன் செயல்திறனை அறிந்து கொண் பின்னரே ஒருவர் பயன்படுத்துகின்றார். ஆனால் பெரும்பாலும் எவ்வாறு அது செயல்படுகின்றது? எத்தனை module இணைந்து இந்த மென்பொருள் இயங்குகின்றது? அவை எவ்வாறு இணைக்கப்பட்டிருக்கின்றன? அது எவ்வாறு தனது GUI வர்ணங்களை வெளிப்படுத்துகின்றது? எழுத்துக்களை அச்சுவடிவத்தில் தருகின்றது? என்றெல்லாம் நாம் மறந்துவிட்டு (சிந்தனையிலிருந்து ஒதுக்கிவிட்டு) ஓமென்பொருள் வேலை செய்கின்றதா இல்லையா ? அது பழசாகி விட்டால் அதனை upgrade செய்யவேண்டும், அதனை எப்படி செய்வது?ஓ என இப்படித்தான் வெளிப்படையான பிரச்சனைகளில் பெரும்பாலும் மூழ்கி இயங்குகின்றோம். இதே போலத்தான் மனிதரைப்பற்றி நினைக்கின்ற போதும் நிகழ்கின்றது. 'நமது செயல்களுக்குக் காரணம் என்ன? எது என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது? எவ்வாறு நான் என்னை upgrade செய்து கொள்வேன்' என்று சிந்திப்பது குறைவே. அவ்வாறு தனது செயல்களுக்குக் காரணத்தைத் தேடி தன்னை மேம்படுத்திக் கொள்ள இந்த உடம்பும் நற்கருவியாக விளங்குகின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உடம்பைக் கோயிலாகக் கொண்ட பாரம்பரியம் நமது. ஓம்காரத்தை ஒலித்து, அதற்குள்ளே ஆன்மாவை கொண்டு சென்று மந்திர உலகத்திற்குள் செல்லும் போது ஆன்மா தனது சக்திகளைப் பெறுக்கிக் கொள்கின்றது; பக்குவத்தில் உயர்கின்றது.

இந்த மந்திர உலகத்தின் கோட்பாடுகள், உலக வாழ்க்கையிலேயே தன்னை முற்றிலும் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்ட பலருக்கும் உண்மையற்ற ஒன்றாகவே தென்படும். மந்திர உலகத்தின் இருப்பையும் அதன் உண்மைகளையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக மனிதர்கள் வாழ்கின்ற இந்த உலகமும் அதனுள் நாம் மாட்டிக்கொண்டு அனுபவிக்கின்றவைகளுமே வாழ்க்கையாகவும் இருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் Warnor Bros தயாரித்து வெளியிட்ட MATRIX படம் பார்த்தவர்கள் இந்த இரண்டு வகை உலகங்களைப் பற்றிய கோட்பாடுகளை இப்படம் மாறுபட்ட கோணத்தில் அலசிப்பார்ப்பதை மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, எந்த உலகம் உண்மை; எதை நோக்கி நமது தேடல் இருக்கின்றது என்பதை அலசுவது என்பது இந்தப் படத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதை தேர்ந்தெடுப்பது என்னும் கேள்விக்கு விடை (அதாவது கன்மத்தை வடிவமைப்பது) மனிதனிடம் வழங்கப்பட்டுள்ள ஒரு சுதந்திரம். மனிதரே தனது வாழ்க்கையை நிர்ணயிக்க முடியும் என்பன போன்றவற்றை இந்த ஆங்கிலப் படம் மிகவும் சுவாரசியமான வகையில் காட்டியிருந்தது.

ஜீவன் இயற்கையிலேயே சுதந்திரத் தன்மையைக்கொண்டது. அந்த சுதந்திரத்தை ஆத்மா நல்வெழியில் செல்ல தேர்ந்தெடுக்கும் போது ஆன்மா தனது பக்குவத்தில் உயர்ந்து முக்தனாகின்றது. இதனை விளக்குவதாகவே பிரம்மோபநிஷத்து அமைந்துள்ளது.

இத்தோடு பிரம்மோபனிஷத்துக்கான விளக்கம் முடிவடைகின்றது. அடுத்த கட்டுரையில் கைவல்யோபனிஷத்துக்கான எனது சிந்தனை தொடரும்.

அன்புடன்
சுபா

Friday, March 9, 2001

பிரம்மோபநிஷத்து (பாகம் 2) - மனித, இயந்திர - மந்திராயணம் (பூணூல்)

Date: Fri, 9 Mar 2001 07:42:49 -0800 (PST)
From: "suba k."
Subject: Upanishad - Brahmopanishad (Part 2)
To: meykandar@egroups.com

சுருக்கம்:
- உடலில் தெய்வங்கள் இருக்கின்ற இடங்களை பிரம்மோபநிஷத் விளக்கியதை முதல் பகுதியில் பார்த்தோம். இந்த இரண்டாம் பாகத்தில் பூணூல் பற்றிய பிரம்மோபநிஷத் கூறும் விளக்கத்தினைக் காணலாம். இருதயம் இறைவன் உறைந்திருக்கின்ற இடம். அதனைக் உருவகப் படுத்திக் காட்டுவதாக இருதயம் இருக்கின்ற இடத்தில் தவழ்கின்ற முப்புரிநூல் இந்த உபநிஷத்தில் காட்டப்படுகின்றது. இந்த பூணூலானது ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவரோடு தோன்றிய தாகவும் அதோடு மனிதனின் ஆயுளை நீட்டித்து புகழ் தரக்கூடியதாகவும் இந்த உபநிடத்தில் கூறப்பட்டுள்ளது. ஞான ஒளியும் பலமும் இதனை அணிவதால் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

- இந்தப் பூணூலை பிரம்மோபநிஷத் ஸூத்ரம் என்று குறிக்கின்றது. ஸூசனை செய்வதாலும் ஞானத்தைச் சுட்டிக் காட்டுவதாலும் இதனை ஸூத்ரம் என்கின்றது பிரம்மோபநிஷத்.

- ஒரு ஞானி எனப்படுபவன், குடுமியோடு தலைமயிரை மழித்து உடலில் தரித்திருக்கின்ற பூணூலை அகற்றி விட வேண்டும். அழியாத ஸூத்ரமாகிய பரப்பிரம்மத்தையே ஞானியாகியவன் பூணூலெனத் தரிக்க வேண்டும்.

- ஸூத்ரத்தை அறிந்தவனே வேதத்தின் கரைகண்ட பிராமணனெனப்படுபவன்.

- சிறந்த ஞாணத்தை அடைந்தவன் வெளிப்பூணூலை விட்டுவிட வேண்டும். பிரம்ம பாவனையாகிய ஸூத்ரத்தை அணிபவனே அறிவாளி.

- வைதீக கர்மங்களில் அதிகாரமுடைய பிராமணர்கள் தங்களது கருமத்திற்கு அங்கமாக பூணூலை அணிய வேண்டும்.

தொடர் சிந்தனை

பொதுவாக பூணூல் எனப்படுகின்ற முப்புரி நூல், பிராமண சமூகத்தைச் சார்ந்தோரால் உடலின் அணியப்படுகின்ற ஒரு நூல். சாதி பிரிவில் பிராமணார் அல்லாதோர், கோயில் வழிபாடுகளைச் செய்கின்ற போதும், சிலர் திருமணத்தின் போதும் வேறு சில இடங்களில் சமய காரியங்களில் ஈடுபடும் போதும் அணியக் கூடிய ஒன்றாக இந்து சமயத்தில் ஒரு அங்கம் வகிக்கின்ற ஒரு பொருளாக இந்த பூணூல் விளங்குகின்றது. இந்த பூணூல் ஏன் அணியப்படுகின்றது? எதனை விளக்கும் முகமாக இது திகழ்கின்றது? போன்றவை சிந்தனைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கேள்விகள். இதனை பிரம்மோபநிஷத் விளக்குவது என்பது, பூணூல் அணியும் வழக்கத்தின் தொன்மையை நமக்கு விளக்குவதாக இருக்கின்றது.

இந்து சமய வழிபாட்டினை மேல் நோக்காக கவனிக்கின்ற போது பல வகையில் சடங்குகளோடும் பாவனைகளோடும் கூடியதாகவே தென்படுவதற்கான சாத்தியம் அதிகம். அந்த பாவனைகளையும், சடங்குகளையும் கடந்து சென்று அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் போதே இந்து சமய வழிபாட்டினையும் தத்துவங்களையும் அறிந்து கொண்ட, அநுபவித்த பலன் கிட்டும். வழிபாடுகளில் மட்டுமல்ல; சித்தர்களின் பாடல்கள் பலவற்றைப் படித்தவர்களும் அது பெரும்பாலும் பரிபாஷைகளாய் இருப்பதை உணர்ந்திருப்பர். இறை உண்மை, தத்துவ உண்மை எனப்படுபவை மறையாகவே இருப்பது இந்து சமயத்தை பொருத்தவரை வெளிப்படையான ஒன்று. அந்த வகையிலே பிரம்மோபநிஷத்தில் பேசப்படுகின்ற பூணூல் தத்துவமும் அடங்குகின்றது.

இன்றைய வழக்கத்தில் பொதுவாக ஒரு பிராமண சிறுவனுக்கு உபநயனம் செய்விக்கும் போது பூணூல் அணிவிக்கப்படுகின்றது. பூணூல் அணியப்படுவதற்கான தத்துவங்கள் உணர்த்தப்படுகின்றதோ இல்லையோ, ஆனால் இந்த சடங்கு மாத்திரம் கடமையாக பல காலங்களாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.

பூணூல் எனப்படுவது பரப்பிரம்மத்தையே உடலில் அணிந்து கொண்டிருப்பதை உருவகப்படுத்துகின்றது என்று விளக்கமளிக்கின்றது பிரம்மோபநிஷத். இறைவனை எப்படி உடலில் அணிவது? இங்கு அறிவுப்பூர்வமாக, ஞானப்பூர்வமாக செய்யப்பட வேண்டிய ஒரு காரியம் சடங்குப் பூர்வமாக (symbolic action) செய்யப்படுவதைக் காணமுடிகின்றது.

ஒரு ஞானி என்பவன் எப்படிப்பட்டவன் என்பதற்கும் விளக்கம் தரப்படுகின்றது. பரப்பிரம்மமான இறைவனை உடலில் ஏற்ற வேண்டும். ஆன்மா தங்கியிருந்து செயல்படுகின்ற உடல் எனும் வீட்ட்டில் இறைவனும் குடி புக வேண்டும்; குடி புகுந்து அந்த ஆன்மாவை வழி நடத்த வேண்டும். அப்படிப்பட்ட உடலுடையோனே ஞானி என்கின்றது பிரம்மோபநிஷத். இங்கு ஒரு ஞானியினுடைய தாத்பரியங்கள், தன்மைகள் (characteristics) சுட்டிக் காட்டப்படுகின்றன.

உடலினுள் ஆன்மாவோடு இறைவனும் குடிபுகுதல் என்பது சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு கருத்து. இங்கு கனினியின் செயல்பாடுகளோடு இந்த பிரச்சனையை ஒப்பிட்டு விளக்க முடியும். இந்த உடல் என்பது ஒரு சிஸ்டம். கனினியில் பல சிறிய இயந்திர பாகங்களை இணைத்து, அவற்றிற்கு மின்சாரத் தொடர்பினைத் தருகின்ற போது, அந்த இயந்திரம் இயங்கத் தொடங்குகின்றது. கனினியைப் பொருத்த மட்டில் அடிப்படையில் தேவைப்படுகின்ற இயந்திரம் என்பது ஒன்றுதான். சில மறுபாடுகள் வடிவத்திலும் இயந்திரங்களின் எண்ணிக்கையிலும் இருந்தாலும் பொதுவாக அடிப்படையில் தேவையாக இருப்பது mother board, microprocessor, RAM, cash memory, storage peripherals, cables அவற்றின் இணைப்பு ஆகியவைதான். இந்த அடிப்படை பொருள்களோடு மேலும் சில இயந்திர பாகங்கள் (hardware) சேரும் போதுஅந்த இயந்திரத்தின் திறனும் தன்மையும் அதிகரிக்கின்றது. இதே போலத்தான் மனிதனும்.

மனிதனின் உடலில் 30,000 ஜீன்கள் இருக்கின்றன. எல்லா மனிதனின் ஜீன் வரிசைக்கிரமமும் ஒன்றாகவே இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் இன, நிற பேதமின்றி ஜீன்கள் 99.99% ஒன்றாகவே இருகின்றன. இது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. மேலும் ஒரு விசயம் என்னவென்றால் மனிதர்களுக்கு பூச்சிகளை விட மூன்று மடங்கும், நுண்ணுயிர்களைவிட ஐந்து மடங்கும் தான் ஜீன்கள் அதிகம். சிறிய உயிரினங்களாக இருக்கின்றவை குறைந்த எண்ணிக்கையிலான ஜீன்களோடும் ஆறரிவு ஜீவனாகிய மனிதன் அதிக எண்ணிக்கையிலான் ஜீன்களோடும் இருக்கும் நிலை உள்ளது.

இதை நமது ஆன்மீக தத்துவ நூல்கள் அழகாக விளக்குகின்றன. உலகில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உயிர்பொருள் சடப்பொருள் எனவும், நமது பெருமைக்குறிய தமிழ் இலக்கணம் அதனை உயர்தினை அஃறினை எனவும் இரு பெரும் கூறுகளாகப் பிரிக்கின்றது. அதில் உயிர்பொருளை ஓறறிவு, ஈறறிவு,மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு எனப் பிரிக்கலாம். ஆறறிவு படைத்த ஜீவனே மனித இனம். இங்கு அறிவு எனப்படுவது புத்தியை விளக்குவது அல்ல. அறிவு எனப்படுவது உலகம்; ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு உலகம்; ஆன்மா படிப்படியாக ஒவ்வொரு உலகத்திலும் பல பிறவிகளெடுத்து வாழ்ந்து, உழன்று அடுத்த அறிவாகிய மற்றொரு உலகத்தினுள் புகுந்து மேலும் மேலும் பக்குவத்தில் உயரவே இந்த அறிவு. ஐந்து அறிவுகளின் அனுபவங்களையும் பெற்று ஆறாவது அறிவான உலகத்தில் நுழைபவருக்கே மனிதப் பிறவி என்பது அமைகின்றது.

மனிதப் பிறவியை எடுத்தோருக்கு பகுத்தறிவு என்ற கூடுதல் உலகம் அமையப் பெற்றதால் இந்த வளர்ச்சி. இந்த அடிப்படையில் நோக்கும் போது விஞ்ஞான கருத்துகளுக்கு ஏற்றார் போலவே இந்திய தத்துவ விளக்கங்களும் அமைவதை காணமுடிகின்றது. ஆறறிவு ஜீவனாகிய மனிதன், ஓறறிவு ஜீவனாகிய நுண்ணுயிர்களைவிட ஐந்து மடங்கு கூடுதல் ஜீன்களைக்கொண்டே இயங்குகின்றான். உயிர்களின் உலகம் பெருகும் போது ஜீன்களின் எண்ணிக்கையும் கூடுகின்றது என்று எடுத்துக் கொள்ளலாம். இதை தத்துவ மொழியில் கூறும் போது பக்குவத்தில் ஆன்மா உயர்கின்றது என்று கொள்ளலாம்.

ஆக, அடிப்படையில் எல்லோருக்கும் அமைந்துள்ள ஏறக்குறைய ஒரே மாதிரியான இந்த உடலாகிய இயந்திரத்தை இயக்கி செயல்படுத்தும் போது (உலக வாழ்க்கையில் ஈடுபட்டு பற்பல காரியங்களில் தன்னை திணித்துக் கொண்டு இன்ப துன்பங்களை அனுபவித்து வாழ்க்கை எனும் பாடத்தை கற்று அனுபவிக்கும் போது) அங்கு வேறுபட்டு நிற்பது ஆன்மபக்குவம் என்ற ஒன்றே. ஒவ்வொரு மனிதனின் பக்குவத்திற்கு ஏற்றாற் போன்றே அவனுடைய நடை உடை பாவனைகள் சிந்தனைத் திறம் செயலாற்றும் திறன் போன்றவை அமைகின்றன. இது ஒரு கனினியின் ஹார்ட் டிஸ்க்கில் நாம் போடும் மென்பொருளைப் (software) போன்றதாகும். கனினியில் WINDOWS 3.1 இருந்து அதனை இயக்குவதற்கும் WINDOWS 2000 இயக்குவதற்கும் உள்ள வேறுபாடு போல, WINDOWS NT 5.0இருந்து அதனை இயக்குவதற்கும் UNIX இயக்குவதற்கும் உள்ள வேறுபாடு போலத்தான் இந்த ஆன்ம பக்குவம் என்பதும். பக்குவம் அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் செயல்திறம் உயர்கின்றது.

ஆக, இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில் மனிதன் எப்படி தனது ஆன்ம பக்குவத்தை உயர்த்தலாம் என்பதே. விதி என்ற ஒன்று இயங்கிக்கொண்டிருப்பினும் ஆன்மா தனது சுய முயற்சியால் உயர்ந்த பண்புகளை, நன்னெறிகளை, இறைக்கூறுகளை தன்னுள்ளே பதிய வைக்கும் போது (installation process) பக்குவத்தில் உயர முடியும். இதனை எப்படி செய்வது..?

பிரம்மோபநிஷத் பூணூல் அணியப்படுவதன் தாத்பரியத்தினைக் கூறுகின்றது; அத்தோடு ஒரு ஞானி என்பவன் தனது உடலிலே இறைவனை பதியவைத்தவன் என்கின்றது. இந்த விளக்கமானது நேரடியாக ஒரு உருவகச் செயலை (symbolic action) விளக்கிய போதும் அது போதுமானதாகத் தோன்றவில்லை. இறைவனை உடலில் பதிய வைத்தல் என்பது எப்படி செயல்முறையில் நடைமுறைப்படுத்தப் படவேண்டியவை என்பதற்கான போதிய விளக்கங்கள் இங்கு இல்லை. அவற்றினை ஆராய வேண்டியது அவசியமாகின்றது.

மனிதன் ஆன்ம பக்குவத்தில் உயர்வது என்பது நினைத்த மாத்திரத்தில் செய்யப்படக்கூடிய ஒன்றன்று; அது எளிதான காரியமும் அன்று; மாறாக, கட்டுப்பாடுகளும், தியாகங்களும், விரதங்களும் (இங்கு குறிப்பிடப்படுவது உணவு உண்ணாமல் இருக்கின்ற விரதம் அல்ல, determination என்று எடுத்துக் கொள்ளலாம்) அடங்கியதே!

அதிலும் முக்கியமாக, தன்னையும் தனது செயல்களையும் சிந்தனைப் போக்குகளையும் ஆராய்ந்து தனது குறை நிறைகளைக் கண்டறியும் திறன் பெற்றிருப்பதே அடிப்படை. தனது குறைகளை உணரும் போதே எப்படி அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்பதற்கு வாய்ப்பு பிறக்கும். தனது குறைகளையே பார்க்காமல் ஓநான் செய்வதெல்லாம் சரிதான்; மற்றவர்கள் தான் சரியாக நடப்பதில்லைஔ என்று நினைக்கும் வரையில் ஒரு மனிதனுக்கு ஆன்ம பக்குவத்தில் உயர சந்தர்ப்பம் கிடைக்க வழி பிறக்காது.

தன்னை உணரும் அதேசமயத்தில் பிறரின் மனத்தை, அவர்களின் இன்ப துன்பங்களை அறியும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு அன்பு நெறியில் வாழப்பழகுதல் அடுத்த கட்டமாகின்றது. இது கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் நடை முறைப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்லவே.

சைவ சித்தாந்தத்தின் படி ஆன்மா சுதந்திரத் தன்மை வாய்ந்தது. அது மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றோடு சேரும் போது செய்கின்ற வினைக்கேற்ப பாவ புண்ணியங்களில் விழுந்து பற்பல பிறவிகளெடுத்து பரப்பிரம்மத்தோடு இரண்டரக் கலந்து வினை கடந்து முக்தி அனுபவிக்கும் நிலைக்குச் செல்லும் தன்மை வாய்ந்தது. அப்படிப்பட்ட ஆன்மா, முதலில் இறைவனை உடலில் ஏற்றும் தேவையை உணரவேண்டும். உடலில் இறைவன் சேர்ந்திருந்து ஆன்மாவை வழி நடத்துகின்ற போது மனிதன் தனது செயல்களில் தெளிவோடு, ஈடுபட முடிகின்றது.

இம்மாதிரியான பண்புகளை ஆன்மாவில் பதிய வைத்தல் என்பது ஆன்மாவின் பக்குவத்தை நாளுக்கு நாள் உயர்த்தவல்லது. எந்த சிந்தனையை எந்த போக்கை மனிதன் வாழ நினைக்கின்றானோ, அந்த வகையில் தான் அவனுடைய வாழ்க்கை அமைந்து விடுகின்றது.தன்னை அறிந்தவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் உணர்ந்தவன் ஆகின்றான். தியானப்பயிற்சிகள், யோகப்பயிற்சிகள், சமூகத் தொண்டு போன்றவை மேலும் இந்த முயற்சிக்கு உதவுவனவாக அமைகின்றன.

அத்தோடு மேலும் மேலும் இறைவனை எந்நேரமும் நினைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆலய வழிபாடுகளில் திருவிழாக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் என்பவையும் சேர்கின்றன.தத்துவங்கள் நூல் வடிவில் மட்டுமே இருக்கும் போதும் சடங்குகளாக மட்டுமே இருக்கும் போதும் யாருக்கும் அதனால் பயனில்லை. மனிதர்கள் அவற்றின் தாத்பரியங்களை உணர்ந்து வாழ்வில் கடைபிடித்து பக்குவத்தில் உயர்ந்து மன சாந்தி பெற வேண்டும்.

தொடரும்.....


அன்புடன்
சுபா

Wednesday, February 21, 2001

பிரம்மோபநிஷத்து (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயணம்

From: "suba k."
Date: Wed Feb 21, 2001 3:48 pm
Subject: Upanishad -BrahmoUpanishad (Part 1)

அறிமுகம்:
வேதங்களும் உபநிஷத்துக்களும் தமிழ் மொழியில் எழுதப்படவில்லையே என்ற ஆதங்கம் தமிழின் வழி இந்திய தத்துவ ஞானத்தை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பல காலங்களாக ஒரு குறையாகவே இருந்து வந்துள்ளது. இதனை நிவர்த்திக்கும் வகையில் தற்பொழுது பல மொழி பெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. எனது சமீபத்திய தமிழக பயணத்தின் போது எனக்கு 108 உபநிஷத்சாரம் என்னும் நூல் கிடைத்தது. 'அண்ணா' என்பவரால் சமஸ்கிருத்தத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது இந்த நூல். இதனை படிக்கும் போது, உபநிஷத்துக்கள் தோன்றிய காலத்து தத்துவ சிந்தனைகளுக்கும் தற்போதைய சிந்தனைகளுக்கும் உள்ள தொடர்ச்சி, ஒற்றுமைகள், சிந்தனை வளர்ச்சி ஆகியவை பற்றி எழுந்த எனது சிந்தனைகளை கட்டுரையாக அமைக்க விரும்பி எழுந்ததே இந்த முயற்சி. 

சுருக்கம்
மனித உடலில் நான்கு முக்கிய பாகங்கள் இருக்கின்றன. அவை தொப்பூழ், இருதயம், கழுத்து, தலை உச்சி ஆகும். இந்த நான்கு இடங்களிலும் இறைசக்தி பிரகாசித்துக் கொண்டிருப்பதாக இந்த உபநிஷத் கூறுகின்றது. அந்த இறை சக்திகளாவன ஒரு மனிதன் விழிப்பில் இருக்கின்ற போது பிரம்மாவும், கனவு நிலையில் இருக்கின்ற போது விஷ்ணு பகவானாகவும், தூக்கத்தில் ருத்ரனாகவும், துரிய நிலையில் பரப்பிரம்மாவாகவும் அமைந்திருக்கின்றன.

அந்த பரப்பிரம்மமானவன் மனித உருவிற்கு அப்பாற்பட்டு சுயஞ்சோதி வடிவினனானவன். அவனே சூரியனும், எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணுவும், உலகாளும் ஈசுவரனும் ஆவான்.

நிர்வாண நிலை என்பது எல்லாம் பரப்பிரம்மாக விளங்குகின்ற நிலையில் ஏற்படுவது.

எல்லா தேவதைகளும் மனித உடலில் இருதயத்தில் இருக்கின்றார்கள். உயிர் நிலையும் இங்குதான் இருக்கின்றது என்கின்றது பிரம்மோபநிஷத்.

தொடர் சிந்தனை:

மனித உடலின் இயக்கம் என்பது மிகவும் துல்லியமான (complex) ஒன்று. மனித உடலில் தெய்வ மந்திரங்கள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றன. இந்த மந்திர வடிவங்கள் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் பரவியிருப்பதால்தான் மனித உடல் இயங்க முடிகின்றது. மனித உடலின் எந்த ஒரு சிறு பகுதியிலிருந்தும் தெய்வ சக்திகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகின்ற சமயத்தில் அவ்வுருப்பு செயல் இழந்து விடும் தன்மையை பெருகின்றன.

இதனை தற்கால தொழிற்துறை வளர்ச்சியில் பெருமளவில் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து வந்துகொண்டிருக்கின்ற Artificial Intelligence, Robotics Engineering துறையோடு ஒப்பிட்டு மனித உடலமைப்பை ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது. ரோபோட் பலவகைப் படும். இவற்றில் சில மனித உருவத்தை ஒத்து அமைக்கப் படினும், பெரும்பாலானவை மனித உருவின் ஒரு சில பகுதிகளை மட்டுமே கொண்டு செயலாற்றுகின்றன. உதாரணமாக கார் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தொடர்ச்சியான வேலைகளைச் செய்வதற்காக செய்யப்பட்டுள்ள பல இயந்திரங்களைக் கூர்ந்து கவனித்தோமானால், அவை மனித உடலை எந்த அளவில் ஒத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வரும். பொதுவாக ஒரு இயந்திரம் மனிதனின் தலையிலிருந்து இடுப்புப் பகுதி வரை எலும்பு வடிவத்தை ஒத்திருக்கும்; அதோடு ஒரு தனிப்பட்ட வேலையைச் தொடர்ச்சியாகச் செய்வதற்கு ஒரு கைப்பகுதி போன்ற நீளமான ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கைப்பகுதியானது 90 அல்லது 180 டிகிரி (செயலுக்கு தக்க வகையில்) அளவிற்கு சுற்றி தொடர்ச்சியான வேலைகளைச் செய்யும். ஆக, அந்த கையானது அசைவதற்கு பல கனினி மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மென்பொருளும் இயந்திரத்தின் ஒரு தனிப்பட்ட செயலுக்கு பொறுப்பாகின்றன. அதோடு இயந்திரங்களில் மிக முக்கியமான பகுதியாகக் கருதப்படுவது அதன் கையிலுள்ள விரல் பகுதிகளாகும். அவை மனித விரலை உதாரணமாகக் கொண்டே வடிவமைக்கப்படும்.

பொதுவாக தானியங்கி ரோபோட் இயந்திரங்களில் மனிதவிரல்களைப் போல 5 விரல்களை அமைப்பது குறைவே. அத்தோடு பொருட்களைப் பிடிப்பதற்காக பெரும் பாலும் ஒன்று அல்லது இரண்டு விரல்களே அமைக்கப்படும். அவற்றின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு தனிப்பட்ட மென்பொருள் module தேவைப்படும். ஒரு சிறு கைவிரலின் இரும்பினை அசைப்பதற்கே கடினமான மென்பொருட்கள் எழுதப்படும் போது, மனித உடலை அதன் எண்ணற்ற அசைவுகளை இயக்குகின்ற மென்பொருட்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

மனித உடலில் ஒரு விரல் மட்டுமில்லையே. ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள், ஒவ்வொரு விரலிலும் 3 சிறு எலும்புகள் என 27 எலும்புகளைக் கொண்டு ஒரு கைப்பகுதி அமைந்துள்ளது. இது மட்டுமல்லாது உடல் முழுதும் 206 எலும்புகள் அமைந்துள்ளன. அதோடு தசைகள் உள்ளன; நரம்புகளும் ரத்த நாளங்களும் இன்னும் பல பகுதிகளும் இந்த உடம்பினில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இயக்குதல் என்பது எப்படி ஒரு மனிதனால் முடிகின்றது. தன்னைப் பற்றிய ஒரு தெளிந்த அறிவே ஒரு மனிதனுக்கு அமைவது இல்லை; தன்னுடைய திறமைகள் தெரிவதில்லை; தன்னுடைய எதிர்காலம் தெரிவதில்லை; தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளும், சிந்தனைகளும் கூட மறந்து விடுகின்ற நிலையிலேயே பெரும்பாலான மனிதர்கள் இருக்கின்றோம். ஆக இம்மாதிரியான பல நுண்மையான வி"யங்கள் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்ற சாதாரண மனிதர்களாகிய நம்மால் எவ்வாறு நமது உடலின் அங்கங்களை அசைத்து பல காரியங்களை இயற்ற முடிகின்றது?

மனிதன் பெரும்பாலும் தனது முழுச் சக்திகளையும் பயன் படுத்துவதோ அதனை பயன்படுத்தி பயன் பெருவதோ இல்லை. இதனை யோகப்பயிற்சி வல்லுநர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். யோகப் பயிற்சியின் மூலமாகவும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பின் மூலமாகவும் மனிதனால் உடலினை நல்ல கருவியாகப் பயன்படுத்தி தெய்வ சக்தியைப் பெற்று நல்வாழ்வு வாழ முடியும். இறைவனை முழுமையாக அடைகின்ற நிலையில் உடல் என்பது இல்லாமல் போனாலும், இறைவனை அடைகின்ற வழியில், உடலைக் கொண்டே அது சாத்தியமாகின்றது. அதனை திருமூலரின் கீழ்வரும் பாடல் விளக்குவதைக் காணலாம்.


உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே (704)

பொதுவாக இறை சக்தியானது உடல் முழுதும் இருந்தாலும் குறிப்பாக ஆறு ஆதாரங்களில் அவை Sதிரப்பட்டு, உடல் இயக்கத்தையும் ஆன்மப்போக்கையும் நிர்ணயிக்கின்றன. மனித உடலினில் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களைப் பற்றிய குறிப்புக்கள் சித்தர் நூல்களில் பரவலாகக் கிடைக்கின்றன. மூலாதாரம், சுவாதி?டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களும் திருமந்திரத்தில் ஆழமாக, ஒவ்வொன்றின் தனித்தன்மைகளை விளக்கும் வகையில் தரப்பட்டுள்ளன. இதனையே அடிப்படையாகக் கொண்டு பல சித்தர் பாடல்கள் மேலும் இவற்றினை விளக்கும் முகமாக எழுதப்பட்டுள்ளன.

இந்த பிரம்மோபநி"த்தில் மூலாதாரம், சுவாதி?டானம் தவிர்த்த பிற நான்கு ஆதாரங்களைப் பற்றிய குறிப்புகள் இருப்பதைக் காண முடிகின்றது. பொதுவாக மூலாதாரத்தில் சித்தி புத்திகளுடன் கூடிய விநாயகனும், சுவாதி?டானத்தில் சரSவதி பிரம்மாவும், மணிப்பூரகக்தில் மகாலOEமியுடன் சேர்ந்த வி?ணுவும், அநாகதத்தில் ருத்ரியுடன் கூடிய ருத்ரனும், விசுத்தியில் மணோன்மனி சதாசிவமாகவும், ஆக்ஞையில் பராசக்தி பரசிவனாகவும், இவையெல்லாம் கடந்த சகSரதலத்தில் உருவற்ற அருட்சோதியாகவும் கொள்ளப்படுகின்றது.

ஆனால் பிரம்மோபநி"த்தை கவனிக்கும் போது அங்கே இறைவன் உறையும் இடமாக தொப்பூழ், இருதயம், கழுத்து, உச்சி ஆகிய நான்கு நிலைகளே கூறப்படுவதை கவனிக்க வேண்டும். அத்தோடு இந்த நான்கு நிலைகளிலும் உடலின் நிலைக்கேற்ப விழிப்பில் பிரம்மாவும், கனவில் வி?ணுவும், உறக்கத்தில் ருத்ரனும், துரியத்தில் பரப்பிரம்மமும் இயங்குவதாகக் குறிக்கப்பட்டுள்ளதேயன்றி ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு தெய்வசக்தி உரியது என்னும் கருத்து குறிக்கப்படவில்லை. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோடு, பிற்காலத்தில் ஒவ்வொரு தளத்திற்கும் சக்தியோடு கூடிய ஆண் தெய்வங்கள் கூறப்படுவது போல இங்கு பெண் தெய்வங்களைப் பற்றிய எந்த செய்திகளையும் காணவில்லை.

மனித உடலின் ஒவ்வொரு பாகங்கள் அசைவதற்கும் அங்கே அதனை இயக்குகின்ற ஒரு சக்தி நிச்சயம் தேவைப்படுகின்றது. அந்த மந்திர சக்திகளை நாம் இறை தேவதைகளாகவும் காணலாம். இறைதேவதைகள் ஒவ்வொரு அனுவிலும் உறைந்திருந்து அதனை தனது சக்தியின் முலமாக இயக்குகின்ற போதே மனிதனால் இயங்க முடியும். ஆக பிரம்மோபநிஷத்தில் குறிப்பிட்டிருப்பது போலில்லாது உடல் முழுவதும் இறைசக்திகள் நிறைந்திருப்பதாகத்தான் கொள்ள முடியும். ஒரு வகையில், பிரம்மோபநிஷத்தின் குறிப்புக்களை ஆறு ஆதாரக் கொள்கையின் ஆரம்ப நிலைக் கருத்துக்களாகக் கொள்ளவும் வாய்ப்பிருக்கின்றது.

தொடரும்.....


அன்புடன்
சுபா