Monday, July 5, 2010

செம்மொழி மாநாட்டு சொற்பொழிவு - தரவுகள் சேகரிப்பு (உத்தமம்)

செம்மொழி மாநாட்டோடு இணைந்து நிகழ்ந்த உத்தமம் மாநாட்டில்..!

தரவுகள் சேகரிப்பு - முனைவர்.க சுபாஷிணி


Sunday, July 4, 2010

செம்மொழி மாநாட்டு சொற்பொழிவு - ஆவணப்பாதுகாப்பு


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை 2010 - 26/06/10

ஆவணப்பாதுகாப்பு - முனைவர்.க சுபாஷிணி 

https://www.youtube.com/watch?v=R16FnIc0ErY
https://www.youtube.com/watch?v=Qk2ijSqAAsg
https://www.youtube.com/watch?v=hhAvZMJBJGY
https://www.youtube.com/watch?v=1p1niq5XgWk

Saturday, June 12, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய திராட்சை செடி (மரம்/கொடி) ஒன்று வாங்கி அனது தோட்டத்தில் நட்டு வைத்தேன். ஓரளவு வளர்ந்து நிறைய இலைகள் கடந்த ஆண்டு கோடை காலத்தில் (ஜூன் - செப்ட்). ஆனால் ஒரு பழத்தையும் காணோம். பெரிய ஏமாற்றமாகிப் போனது எனக்கு. எனது இல்லத்தின் தோட்டத்தில் சூரிய வெளிச்சம் கொஞ்சம் குறைவு. திராட்சைக்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவை. ஆக அதனால் தான் திராட்சை வரவில்லையோ என நினைத்து எனது மாமனார் தோட்டத்திற்கு அதனை கொண்டு போய் நட்டு வைக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். பல வேலைகளுக்கு இடையே அந்த திட்டம் மறந்து விட்டது. நேற்று மாலை தற்செயலாக எனது திராட்சைக் கொடியைப் பார்த்தால் ஆச்சரியம். அழகான குட்டி திராட்சைகள். இது சிவப்பு நிறமாக மாறக்கூடிய திராட்சை. ஆனால் முதலில் பச்சை நிறத்தில் தான் தோன்றுகிறது.

அதன் படத்தை இங்கு இணைத்திருக்கின்றேன்.


மேலும் நான் ஏப்ரல் இறுதியில் நட்டு வைத்த நான்கு தக்காளி கன்றுகளும் இப்போது பூவுடன் இருக்கின்றன. அவற்றை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன். ஜெர்மனியின் சீதோஷ்ண நிலைக்கு வீட்டில் பயிர்கள் நட்டு சிறப்பாக வளர்ப்பது சற்று சிரமம். அது ஒரு தனிக் கலை. புத்தகம் வாங்கி வைத்து படித்து எந்த செடி எந்த மாதிரியான இடத்தில் வைத்தால் நன்றாக வளரும் என தெரிந்து கொண்டு நட வேண்டும். ஏப்ரலிலிருந்து அக்டோபர் கடைசி வரை இது எனக்கு ஒரு மனம் நிறைந்த பொழுது போக்கு. மேலும் எனது அனுபவத்தை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

அன்புடன்
சுபா

Sunday, November 1, 2009

தொலைக்காட்சி சந்திப்பு - KTV (சந்தித்த வேளையில்)

தமிழ்க தொலைகாட்சி நிறுவனங்களில் ஒன்றான K TV நிறுவனத்தின் சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் நான்.

Youtube
https://www.youtube.com/watch?v=zAac5ZVoKKg&feature=youtu.be


Tuesday, April 14, 2009

நூல் விமர்சனம்: S.M.S எம்டன் 22-10-1914

S.M.S எம்டன் 22-10-1914
நூலாசிரியர் திவாகர் விசாகப்பாட்டினம்


நூல் விமர்சனம் என்பது நூலை படிக்கின்ற வாசகனுக்கு அளிக்கப்படுகின்ற ஒரு சுதந்திரம் என்று நான் கருதுகிறேன். படிக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு நூலை பல்வேறு கோணங்களில் காண்பதற்கும் உணர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஒரு நூல் தரும் தாக்கம் என்பது பல்வேறு வகைப்படும். வாசித்து பல நாட்கள் ஆகிய பின்னரும் மனதில் ஏதாவது ஒரு வித தாக்கத்தை ஒரு நூல் அளித்தால் ஒரு வகையில் அதனை எழுதிய நூலாசிரியர் வெற்றி பெற்றவராகின்றார். சிறந்த படைப்புக்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை விமர்சனப் பார்வையோடு அலசி அறிமுகப் படுத்துவது ஒரு வித சமுதாயப் பணியும் கூட. இது நூலை வடிக்கின்ற அந்த சிற்பிக்கு தனது படைப்பு எவ்வகை தாக்கத்தை வாசகர்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது என்ற ஒரு கணிப்பை நிச்சயமாக வழங்கும்.

நூலை படிக்கும் போது அதில் கிடைக்கின்ற புரிதலை விட அதனை ஆய்வு செய்ய வேண்டும் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாசிக்கும் போது எனது அறிவுப் பாதையும் விசாலமடைவதை நான் உணர்கிறேன். பல நூல்களை நான் வாசிக்கின்றேன். அதில் சில எனது மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகள், குறுந்தொடர்கள் சில கவிதைகள் - இவற்றில் அடக்கம்!

நாவல்களில் பல வகை உண்டு. அதில் வரலாற்று உண்மையைக் சிறிது கற்பனையோடு கலந்து வழங்குவதில் குறிப்பிடத்தக்கவராக விளங்குகின்றார் திவாகர். இவரது திருமலைத் திருடனை படித்தபோது இவரது முயற்சி சாதாரண ஒன்றல்ல என்ற உண்மை புலப்பட்டது. இப்போது புதிதாக பிறந்துள்ள இவரது வரலாற்று நாவல் "S.M.S எம்டன் 22-10-1914" இந்த அற்புதமான எழுத்தாளரை கொண்டிருப்பதில் தமிழ் எழுத்தாளர் உலகிற்கு பெருமையைச் சேர்த்திருக்கின்றது என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு கதையை எழுதும் போது அன்றாட வாழ்க்கையை சித்தரிப்பதாக கதை போக்கு அமைந்திருந்தால் அதில் நூலாசிரியருக்கு நிறைந்த சுதந்திரம் இருக்கும் - தனது கற்பனையை படைப்பாக மாற்ற! வரலாற்று நாவல் என்னும் போது அதில் இந்த சுதந்திரப் போக்கு இல்லாமல் ஆய்வுக்கு நிச்சயமாக இடமளித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதை மீறும் போது அது வரலாற்று நாவலாக அல்லாமல் ஒரு கதை என்ற வட்டத்திற்குள் விழுந்து விடும். வரலாற்று நாவல் என்ற அந்தஸ்து கிடைக்காது. இது ஒரு சிக்கல்.

இந்த நாவலுக்கு மேலும் ஒரு சிறப்பு கடலோடி நரசய்யாவின் அணிந்துரை. சிறந்த வரலாற்று நூலாசிரியரை நூலை அலசி அணிந்துரை வழங்க வைத்திருக்கின்றார் திவாகர். அணிந்துரையே இந்த நூலுக்கு சிறந்த ஒரு அறிமுகமாகவும் அமைந்து விடுகின்றது.
இந்த நூலை வெவேறு அங்கங்களாகப் பிரித்து சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அந்த எண்ணத்தை மனதில் கொண்டு எனது இந்த நூலைப்பற்றிய சிந்தனை ஓட்டத்தை செலுத்தியிருக்கின்றேன். முதலில் என்னை கவர்வது கதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டுள்ள கரு.

இது தற்போதை பல தமிழ் நாவல்களிலிருந்து மாறுபட்ட கரு. நடந்த உண்மைகளோடு கற்பனை கலக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு முக்கிய விஷயங்கள் எடுத்தாளப்பட்டிருகின்றன. ஒன்று S.M.S எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் அந்நாளில் இந்து மகாக் கடலில் ஏற்படுத்திய தாக்கம். மற்றொன்று சைவ பாரம்பரியம் மற்றும் சோழ மன்னனின் பரம்பரை பற்றிய செய்திகள். இரண்டும் எப்படி கலக்கின்றன? அதிலும் 1914ம் ஆண்டு வாக்கில் இது எப்படி ஒரே நேரத்தில் குறிப்பிடப்பட முடியும் என்ற கேள்வியை தகர்த்து கதையை நேர்த்தியாக கொண்டு செல்கிறார் திவாகர்.

இந்த நாவலில் சில குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. சிதம்பரம் பிள்ளை,கந்தசாமி, ராதை, நோபிள், கமாண்டர் மிக்கே, காப்டன் மூல்லர், தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு கனமான பாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களோடு மேலும், டி.ஐ.ஜி.லாங்டன், லகுளீசப் பண்டிதர், சிவபாதசேகரராக தன்னை மாற்றிக் கொண்ட இராஜராஜ சோழன், இராஜேந்திரன், மச்சு சிரேட்டியார், தம்பிரான் சுவாமிகள், சிற்றம்பல நாடிகள், சிதம்பரம் பிள்ளை, முத்து எனப் பலரது கதாபாத்திரங்களும் இந்நாவலைஆக்கிரமிக்கின்றன.

கதையில் ஆங்காங்கே சரித்திர நிகழ்வுகளின் குறிப்புக்கள் சேர்க்கப்பட்டிருப்பது இந்த நாவலுக்கு வலுவைச் சேர்க்கின்றது. அதே சமயம் வாசகர்களுக்கு எந்தப் பகுதி சரித்திர உண்மை எந்தப் பகுதி கற்பனை என்பதை பிரித்து அறிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுத்தும் என்பதும் உறுதியாகின்றது. இந்த நாவலைப் படிக்கின்ற ஒரு வாசகன் நிச்சயமாக மேலும் இது தொடர்பான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளதால் சிந்தனைக்கும் பொது அறிவுத் தேடலுக்கும் இது ஒரு சிறந்த படைப்பு என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

திவாகரின் ஆழமான சைவ சமையப் பற்று இந்த நாவலில் நன்றாகவே வெளிப்படுகின்றது. சைவ பாரம்பரியம், சந்தான குருமார்களின் விபரங்கள், சிற்றம்பல நாடிகளின் சாம்பவ விரத நிகழ்வு அதனோடு ஒட்டிய சித்தர் காட்டு நிகழ்வுகள், கதை மாந்தர்கள் பிரச்சனை என்று வரும் போது சிவனை மனதில் உறுதியாக நினைத்து இறைவன் அருள் வேண்டி நிற்பது போன்ற இடங்களில் தனது பக்தியையும் வெளிக்காடிக் கொள்கின்றார் திவாகர்.

ராதையோடு காதல் கொண்டு அவளை மனதால் பிரியாமல் இருக்கும் சிதம்பரம் நோபிளின் பால் கொள்ளும் சலனம் ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கின்றது. கதாசிரியர் இந்த உயர்ந்த பாத்திரத்தின் இந்த செயலை நியாயப்படுத்துகின்றாரோ என்ற நோக்கத்தோடு வாசித்துக் கொண்டு வரும் போது ஒரு கட்டத்தில் இந்த சலனமும் தவறு என்பதை சுட்டிக் காட்டுவதிலும் கதாசிரியர் தவறவில்லை. இது மனதிற்கும் நிறைவாக அமைந்து விடுகின்றது.
இந்த நாவலில் கடல் பயணத்தின் போது சீனன் என்ற ஒரு கதாப்பத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. கதை முழுக்க இந்த சீனர் சீனராகவே வருகிறாரே தவிர மற்றவர்களுக்கு உள்ளது போல இவருக்கு ஒரு பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனை தவிர்த்து இவருக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.

சில இடங்களில் ஜெர்மானிய வார்த்தைகளின் கலப்பு கதையோடு சேர்ந்து வருவதும் ஒருவித அன்னியப்போக்கை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக " டாக்டர்.. நிச்சயமாக டங்கே சொல்ல வேண்டும்" என்பது போன்ற இடங்களில் வற்புறுத்தி மொழிக் கலப்பு செய்யப்பட்டுள்ளது போன்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனாலும் இது ஒரு பெரிய குற்றம் அல்ல. எப்படி நமது அன்றாட தமிழ் பேச்சு மொழி பயன்பாட்டில் ஆங்கிலம் கலந்த தமிழ், மலாய் கலந்த தமிழ் என்று வருகின்றதோ அதே போல இது ஜெர்மன்(டோய்ச்) மொழி கலந்த ஒரு தமிழ். இது எனக்குப் புதிதுமல்ல. ஜெர்மனியில் இரண்டாவது தலைமுறைத் தமிழர்கள் இப்படித்தானே தமிழை பேசி வருகின்றனர்! இந்த ஜெர்மன் மொழி அதாவது டோய்ச் மொழி கலந்த தமிழ் ஒரு வகையில் ஜெர்மனியில் தமிழ் மக்களிடையேயான பேச்சு வழக்கில் அன்னியமற்றதாகி விட்ட நிலையில் இதனை நூலிலும் கலந்து பார்ப்பதில் இது ஒரு பெரிய குற்றமாக என்ணத்தோன்றவில்லை.

இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு இருக்கின்றது. கேப்டன் மூல்லர், மிக்கே மற்றும் ஜெர்மானிய வீரர்களின் பழக்க வழக்கங்களை விவரிக்கும் அழகு என்னை மிக்கவும் ஆச்சரியப்படுத்தியது. நான் அனுபவத்தில் வியந்து போற்றும் ஜெர்மானியர்களின் சில சிறப்பான பண்பு நலன்களை இவர் இந்த நூலில் தக்க சந்த்தர்ப்பங்களில் கையாண்டிருப்பது இந்த நூலுக்காக திவாகர் மேற்கொண்ட திறமான ஆய்வினை வெளிக்காட்டுகின்றது.

நாவலைப் படிக்க படிக்க எத்தனையோ புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சிறந்த போர்கப்பல், தான் பயணித்த கடல் பாதையில் நிகழ்த்திய சாகசங்கள், அடைத்த வெற்றிகள் போன்றவற்றைப் படித்து கொள்ளும் போது முந்தைய சரித்திரத்தின் பெருமையை உணர முடிகின்றது. இந்த நாவலை படித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்செயலாக வேரொரு நூலில் 13ம் நூற்றாண்டு ஜெர்மன் வரலாற்றைப் பற்றி படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரை படத்தில் ஜெர்மனியின் வடக்குப் பகுதில் இருக்கும் எம்டன் என்ற ஒரு பிரசித்தி பெற்ற நகரத்தைப் பற்றி இந்த நூல் குறிப்பிட்டிருந்தது. வலைப்பக்கங்களில் தேடிய போது இந்த நகரத்தைப் பற்றிய மேல் விபரங்களை மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது. நெதர்லாந்துக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்கரை நகரம் எம்டன். விக்கிபீடியாவில் எம்டன் நகரம் 8ம் நூற்றாண்டு தொடக்கம் அமைப்புற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அமுதோன், எம்டா, போன்றயவை இந்த நகரத்திற்கு வழங்கி வந்த பிற பெயர்கள் என்றும் 17ம் நூற்றாண்டு வாக்கில் இந்த நகரம் மிகப் பிரசித்தி பெற்ற வளம் கொழிக்கும் நகரமாக இருந்துள்ள செய்தியையும் வலைப்பக்கங்களின் வழி அறிய முடிகின்றது. டச்சுக் காரர்களில் பலர் இங்கு குடிபெயர்ந்துளளனர். ஆனால் இரண்டாம் உலகப்போரின் சமயம் இந்த நகரம் ஏறக்குறைய முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு கொடூரம். உலகப் போர் காலங்களில் 3 கடற்படை கப்பல்கள் இந்த நகரின் பெயரைக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு முதலாம் உலகப்போரிலும் மற்றொன்று 2ம் உலகப் போரிலும் ஈடுபட்டது. தற்சமயம் கூட இந்த நகரின் பெயரைத் தாங்கிய ஒரு கடற்படை கப்பல், ஜெர்மானிய கடற்படையில் உள்ளதாகவும், 1980ல் கட்டப்பட்டு 1983ல் கடற்படைச் சேவையில் இந்தக் கப்பல் சேர்க்கப்பட்டதாகவும் விக்கிப்பீடியா மேலும் விவரிக்கின்றது.

நாவலில் உள்ள மற்றொரு சிறப்பு, ராதை மிகத்துணிச்சலாக மேற்கொள்ளும் ஆய்வுகள். சுவாரசியமான அவளது அனுபவங்கள் அதற்காக அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. ராதையின் இந்த ஆய்வுகளுக்குப் பின்னால் ஒரு சுயநல காரணம் இருந்தாலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே தனது உலகத்தை கண்டு வந்த பெண்கள் மத்தியில் இப்படியும் ஒரு தமிழ் பெண் துணிச்சலாக செயலாற்றினாள் என்று சொல்வது வித்தியாசமான ஆனால் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயமே. இதற்காகவும் திவாகரை பாராட்டலாம்.

பொதுவாகவே திவாகரின் நாவல்கள் தனது தனிச்சிறப்பை வெளிக்காடிக் கொள்வதில் தவறியதில்லை. திருமலைத் திருடனை முதன் முதலில் படிக்க நேர்ந்த போது வாசிப்பதை நிறுத்தமுடியாமல் ஒரு தீவிரத்தோடு படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. அந்த உணர்வு இந்த நூலிலும் குறையவில்லை. ஒரு வகையில் இந்த நாவல் மேலும் அதிகமான ஆர்வத்தைத் தருவதாகவே உள்ளது. ஒரு நாவல் ஏதாவது ஒரு வகையில் ஒரு வித ஆழமான சிந்தனைத் தேடலை, விஷய ஞானத்தை வழங்க வேண்டும் என்பதில் நான் அக்கறையாக இருப்பேன். இது என்னுடை தனிப்பட்ட எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பினை இந்த நாவல் ஏமாற்றவில்லை. திவாகரின் சிறந்த ஒரு படைப்பு இது. வாங்கிப் படிக்கும் வாசகனை இந்த நாவல் நிச்சயமாக ஏமாற்றாது.

Monday, May 28, 2007

சூதாட்டம் ஆடும் காலம்

இது மலேசிய தமிழ் எழுத்தாளர் பேராசிரியர் ரெ.கார்த்திகேசுவின் அண்மைய நாவல்.

மின்னஞ்சல் வழி கேட்டதுமே சிரமம் பாராது எனது இல்ல மிகவரிக்கு புத்தகங்களை உடனே அனுப்பி வைத்த ரெ.கா. அவர்களுக்கு முதலில் எனது நன்றிகளைச் சொல்லத்தான் வேண்டும்..

சில நாவல்களின் முதல் ஒரு சில பக்கங்களைப் புரட்டியதுமே, நாளை படிக்கலாமே என்று தோன்றும். இந்த நாவல் அப்படியல்ல. படிக்க ஆரம்பிக்கும் போதே முழுவதையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவல் ஆரம்பத்திலேயே தோன்றுகின்றது. ஒரு எதிர்பார்ப்பை முதலிலேயே கொடுத்து வாசகர்களை நாவாலோடு சேர்த்துக் கொண்டு அழைத்துச் சென்றிருக்கின்றார் நூலாசிரியர். இந்த பாணியை அவரது முந்தைய நாவல்களிலும் கண்டிருக்கின்றேன். இதுவே இவரது நாவல்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்றும் சொல்லலாம்.

இந்நூலின் முன்னுரையில்(முன்னீடு) எஸ்.பொ அழகாக ஒரு கருத்தை வைக்கின்றார் - "மலேசியத் தமிழ் சூழல் இந்நாவலிலேயே கமழ்வதனால் தமிழ் இலக்கியத்தின் கதை நிகழ் களம் விசாலம் அடைகின்றது" என்கிறார் எஸ்.பொ. உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வேறூன்றி நிற்கின்ற காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். தமிழ் மக்களின் வாழ்க்கை என்பது தமிழகமோ, அல்லது இலங்கைக்கோ மட்டிற்கும் உரிய ஒன்றாக இருந்த நிலை மாறி பல் வேறு நாடுகளில் தமிழ் மக்களின் வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்கள் தங்களது தாயகத்திலிருந்து மற்ற பல நாடுகளுக்குச் சென்று வாழும் போது அந்நாட்டுக் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு கலந்துவிட்ட ஒரு கலவையாகவே புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழியும் பண்பாடும் வெளிப்படுகின்றது. பல்லாண்டுகளாக தமிழகத்திலிருந்து (இலங்கையிலிருந்தும் கூட) புலம் பெயர்ந்து மலேசியா சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் இதற்கு ஒரு நல்ல சான்று.

மலேசிய தமிழ் வித்தியாசமானது. பல மலாய் சொற்கள் அன்றாட பேச்சுத் தமிழில் பிரித்தெடுக்க முடியாத வகையில் கலந்து விட்டிருக்கின்றன; மலேசிய இந்துக் கோயில்களில் வழிபாட்டிற்கு வருகின்ற சீன மக்களையும் பார்க்க முடியும்; தைப்பூசம் தேசிய விடுமுறையாக எல்லா இன மக்களும் கொண்டாடும் திருவிழாவாக விளங்குகின்றது; இப்படிப் பல கலாச்சாரக் கலவைகள் மலேசியக் கலாச்சாரத்தூடே பிண்ணிப் பிணைந்துவிட்ட ஒரு நிலை இங்கு உண்டு.

இதை நோக்கும் போது, இந்தக் கலவையான மலேசியத் தமிழை, மக்களின் சிந்தனையை, இந்த தனித்துவம் வாய்ந்த வாழ்க்கை முறையை பதிவுசெய்வது மிக முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனபது சந்தேகமற்ற ஒரு விஷயம்.

ரெ.கா மலேசிய தமிழ் சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியலில் நிதர்சனத்தை வெளிக்காட்டும் வகையில் கதை புனையும் ஒரு சில எழுத்தாளர்களில் சேர்க்கப் பட வேண்டியவர். மலேசிய தமிழ் சிறுகதைகளில், நெடுங்கதைகளில், நாவல்களில் பல ஆண்டுகள் அறிமுகம் உள்ள எனக்கு இது அனுபவித்துத் தெரிந்த ஒன்று. மலேசிய தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பலர் அதீத கற்பனையில், கனவுலக வாழ்க்கையை மனதில் கொண்டு, புனிதத்துவத்தை தங்கள் கதைகளின் வழி எடுத்துக் காட்ட முயல்பவர்கள் என்பது எனது (தனிப்பட்ட) கருத்து. பல சிறுகதை எழுத்தாளர்கள், நடைமுறையில் உள்ள ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை அதீத கற்பனையோடு சேர்த்து படைத்து வாசகர்களுக்குக் கொடுத்துவிடுவதன் வழி நிம்மதி அடைந்து விடுகின்றனர். பலரது எழுத்துக்களில் தனிமனித ஒழுக்கம் பண்பாடு போன்றவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை என்பது மாறி நன்னெறி பாட போதனை போன்ற வகையில் எழுதி வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும் நிலையயும் அமைந்திருப்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் கதையின் கருவும், கதை செல்லும் நடையும் மனதைத் தொட்டாலும் மொழி வளம் குறைந்து சுவை குன்றி அமைந்திருக்கும். இந்த நிலையிலிருந்து மாறுபட்டு நடைமுறையில் உள்ள ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்த்து அதனை நல்ல கோர்வையாக மலேசியத்தமிழில் தருவதில் வெற்றி கண்டவர் ரெ.கா. அந்த வகையில் இந்த நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இலக்கியம் என்பது ஒரு வகையில் நடப்பை காட்டுகின்ற கண்ணாடி. பல நாவல்களும் சிறுகதைகளும் ஒரு கால கட்டத்தின் சரித்திர நிகழ்வுகளைக் கோடி காட்டுகின்ற முக்கிய ஆவணங்களாகக் கூட அமைந்துவிட்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் சில விஷயங்களை அளவான கற்பனையோடு கலந்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால் எழுத்தாளர்கள் கற்பனையை மட்டுமே மையமாக வைத்து எழுதும் போது கதையின் ஊடாகச் சொல்ல நினைக்கும் செய்தி முழுமையாக, படிக்கின்ற வாசகர்களை வந்தடையாமல் போய்விடுகின்றது என்பதே வருத்தத்தைத் தரும் உண்மை.

சரி. நாவலுக்கு வருவோம். இந்த நாவலின் பெரும்பகுதி பினாங்கு மாநிலத்தையும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தையும் சுற்றி வருகின்றது. பல்கலைக்கழகத்தையும் அதன் சூழலையும் இந்த நாவலின் வழி நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார் நூலாசிரியர். பல்கலைக்கழகத்தின் அங்கமான அருங்காட்சியகம், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை அலுவலகம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலம், என பல கட்டிடங்களை எந்த மாற்றமும் இன்றி இந்த நாவலில் உலவ விட்டிருக்கின்றார். சில உண்மையான நபர்களின் பெயர்களும் எந்த மாற்றமுமின்றி நாவலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் உதவிப் பதிவாளர் அருணாச்சலம் இந்த நாவலில் உலவுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்படி பற்பல நிகழ்கால உண்மைகள் இந்த நாவலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நாவலின் முழுமையும் ஒரு வகையில் மனித உணர்வின் போராட்டத்தை மையமாக வைத்தே பிண்ணப்பட்டிருப்பது படிக்கின்ற வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுவதாக அமைந்துவிடுகின்றது. இது ஒரு வகையில் இந்த நாவலின் சிறப்பு என்றும் சொல்லலாம்.
மலேசிய உணவு வகைகள் சுவையில் சிறந்தவை என்பது மலேசிய உணவை சுவைத்தவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் . வெளி நாடுகளில் இதே உணவு வகைகள் சில பிரத்தியேக உணவகங்களில் கிடைக்கின்ற போதிலும் உள்ளூரில் கிடைக்கும் உணவின் சுவையை கொண்டிருப்பதில்லை. இதனை கதையின் நாயகன் கதிரேசன் நாசி லெமாக் - சுவைத்து உண்ணுவதாகக் காட்டும் போது ரசித்து உணர முடிகின்றது. அதே சமையம் இந்த உணவை மலேசியாவில் இருந்து சுவைக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் ஏற்படாமல் இல்லை. கதாபாத்திரங்கள் உடுத்துகின்ற உடைகளின் தன்மையையும் விட்டு விடவில்லை ஆசிரியர். மலேசியத் தமிழ் மாதர்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் போது கைலி சட்டை அணிந்திருப்பது வழக்கம். சாவித்திரி கதாபாத்திரத்தின் வழி இந்த விஷயம் காட்டப்படுகின்றது.

கதையின் மையக்கரு தாய்-மகன் என்ற பாசத்தை பற்றியதாக இருந்தாலும் கதையின் வழியாக மலேசிய நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தின் அளவுகோள் எந்த வரையரைக்கு உட்பட்டு வைக்கப்படிக்கிருக்கின்றது என்று கூறியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு வகையில், மலேசியாவில் ஜனநாயகம் குன்றி பத்திரிக்கை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலை அமைந்திருப்பதை, பண்ணாட்டு கருத்தரங்கம் ஒன்றில் நிகழும் கேள்வி பதில் அங்கத்தின் வழி வெளிக்காட்டுகின்றார். மலேசிய பல்கலைக் கழக விரிவிரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் உலவும் உட்பூசல், கருத்து விவாதங்கள், சுயநலமிக்க போக்கு, பிறரது உழைப்பில் பெயர்வாங்கும் தன்மை போன்ற உள்ளூர் மக்கள் அறிந்த பல உண்மை விஷயங்களும் பரவலாக கதையினூடே வந்து போகின்றன. தயக்கமின்றி இந்த உண்மை விஷயங்களை நாவலினூடே பதிவுசெய்திருப்பதற்காகவே நாவலாசிரியரை நிச்சயமாகப் பாராட்டலாம்.

கதையின் நாயகன் கதிரேசனின் சிந்தனையை, மனப் போராட்டத்தை அங்கங்கே அழகான தமிழில் படிக்கும் போது அந்த சொற்களில் உள்ள உண்மை மனதைத் தொடுகின்றது. இதற்கு உதாரணமாக பல வாக்கியங்களைக் சொல்லலாம். உதாரணமாக ஒரு பகுதி..

" ஒரு தெளிவு ஏற்படுவது போல தெரிகையில் தெரிந்த விஷயங்களின் விளிம்புகளில் இருந்து பார்க்கும் போதுதெரியாத விஷயங்களின் உலகம் இன்னும் பெரிதாக விரிந்து கொண்டே போவதைப் பார்த்து அவன் வியந்து சோர்ந்ததுண்டு. இந்த ஆரவாரமிக்க அறிவின் போதையில் தன்னை சுற்றியிருந்த மனிதர்களும் குடும்பமும் சுருங்கிப் போயிருப்பது உண்மை தான். தன் வாழ்வும் தன் விருப்பங்களுமே முக்கியம் என்ற நிலை தனிந்து சமுதாயம், உலகு என் அவன் சிந்திக்க ஆர்ம்பித்திருந்தான்.." பல விஷயங்களைக் கற்றுத் தெரிந்து அறிவில் விசாலம் அடையும் போது ஒரு மனிதன் தனது உலகத்தைப் பார்க்கும் பார்வையிலும் விசாலத்தை அடைவது உண்மை. தான் தனது குடும்பம் தனது நேசத்திற்கு உரியவர்கள் என்ற குருகிய வட்டம் மறந்து பொது நல சிந்தனை ஆட்கொண்டு விடுவது அறிவு விரிவடையும் போது ஏற்படும் விளைவு.

மேலை நாடுகளில் பெற்றோர் குழந்தைகளை அடிப்பது, உடல் அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தண்டனை கொடுப்பது போன்றவை சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய தவறுகளாகப் பார்க்கப்படுகின்றன. மலேசிய நாட்டைப் பொறுத்தவரை இவ்வகைக் குற்றங்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படக்கூடியவையாக இருப்பினும் பலர் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. தங்கள் பிள்ளைகளை அடிப்பதற்கும் தண்டனை தருவதற்கும் பெற்றோர்களுக்கு இல்லாத உரிமையா என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் பலர் இன்னமும் உண்டு. ஆக பல இடங்களில் பெற்றோர் குழந்தைகளை அடிப்பது இன்னமும் நடைமுறையில் உள்ள ஒரு விஷயம். இந்த விஷயம் இந்த நாவலில் முக்கிய அங்கமாக அமைந்திருப்பதும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சலும் மிக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. கதிரேசன் சிறு வயதில் அனுபவிக்கும் கொடுமைகள் பின்னாளில் மனதை விட்டு அகலாமல் பூதாகாரமாக விரிந்து வியாபித்து பய உணர்வை அவனுள்ளே ஏற்படுத்துவதும். பிறரை அண்டி வாழ வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டு விட்டதே என்று வருந்துவதும் மனதைத் தொடுகின்றன.

கதையின் முடிவு நன்று. இறுப்பினும் கொஞ்சம் தமிழ் சினிமா சாயல் தென்படுகின்றது. கதிரேசனை அவன் தாயாரோடு சேர்ந்து வாழ்வது போலக் காட்டியிருக்கலாம். இது வாசகராகிய எனது விருப்பம் - கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல முடியாது. ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனாலும் இப்படியும் அமைந்திருக்கலாமே என்று எண்ணத்தோன்றுகிறது. தனது சவலைத் தம்பியை அனாதை இல்லத்திலேயே விட்டு வருவது நிதர்சனத்தைக் காட்டுகின்றது. கதிரேசன் பாரதியோடு வாழ்க்கையில் கைகோர்த்து செல்வது மலேசிய தமிழ் கதை உலகத்திற்கு கொஞ்சம் வித்தியாசமான விருந்து.

சுவாரசியமான கதை களம்; பல உண்மைப் பதிவுகள், சிந்திக்க வைக்கும் கதாபாத்திரங்கள்; படிக்கின்ற வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் சொல் பிரயோகங்கள் - இப்படி பல நல்ல அம்சங்களோடு மலேசியத்தமிழில் கலந்து விட்ட மலாய் சொற்களின் சேர்க்கையோடு இனிய தமிழில் ' சூதாட்டம் ஆடும் காலம்' என்ற தலைப்பிலான இந்த நாவலை வழங்கியிருக்கும் ரெ.கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சுவையான கதைகளை, நாவல்களை நூலாசிரியர் எழுத வேண்டும், அது மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நிச்சயம் வளம் சேர்க்கும்.

-சுபா