Wednesday, September 18, 2024

காப்பியின் வளர்ச்சியும் பரவலாக்கமும்


 இன்று பெரும்பகுதி மக்களை ஆக்கிரமித்திருக்கும் காபியின் வரலாறு சுவாரசியமானது. ஏதோ கடைக்குச் சென்றோமா, வாங்கினோமா, குடித்தோமா என்று சிலர் போய் விடுகின்றார்கள்.. ஒரு சிலருக்குக் குறிப்பிட்ட ப்ராண்ட் காபி தான். தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டாலும் கூட இத்தகைய சிலர் தாங்கள் விரும்பிக் குடிக்கும் காப்பியின் பிராண்டை தப்பித் தவறிக் கூட மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இப்படியும் சிலர்!

என்னைப் போன்ற சிலருக்கு ஜெர்மனியில் இருந்தால் பிளாக் காபி. கசப்பு தன்மையுடன் அதன் வாசத்தை நுகர்ந்து ரசித்தபடி குடிப்பது ஒரு நாளை அதிகாரப்பூர்வமாக எனக்குத் தொடங்கி வைத்து விடுகிறது.  தமிழ்நாடு வந்து விட்டால் இங்கு உள்ள வகை காப்பி தான். கொஞ்சம் நாட்டு சக்கரை,  கொதிக்க வைத்த நல்ல பால், அதில் காப்பித் தூளை கலக்கிக் குடிப்பது என்பது வழக்கம் ஆகவிட்டது. ஓரளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலும் காபியைக் குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பது உற்சாகத்தை அளிப்பதாகவே இருக்கிறது. 

இப்படி அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் எடுத்துக் கொண்டிருக்கும் காப்பி எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? எப்படி இன்றைக்கு நம்மை இந்தக் காப்பி ஆக்கிரமித்திருக்கின்றது என்று தெரிந்து கொள்வது நமக்குக் காபியைப் பற்றிய ஓரளவு அடிப்படை தகவல்களை வழங்கும் அல்லவா? 

இன்றைக்குக் காப்பி என்றாலே மிக முக்கியமாக நமக்கு நினைவுக்கு வருவது ஆப்பிரிக்க நாடுகள் தான். ஆயினும் கொஞ்சம் கூகிளைக் கேட்டுப் பார்த்தால் நமக்கு வரும் பட்டியல் இப்படி அமைகிறது. மிக அதிகமாக உலகுக்குக் காப்பியை வழங்கும் நாடு பிரேசில்.  அதற்கு அடுத்து வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா, ஹோண்டூரா, எத்தியோப்பியா,  பெரு, இந்தியா, குவாட்டமாலா உகாண்டா ஆகியவை அடுத்தடுத்து என முதல் 10 இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. 

இந்தக் காபி அடிப்படையில் தொடக்கத்தில் இரண்டு வகை மிகப் பழமையானவை. C.canephora, C.eugenioides என்பது இவற்றின் அறிவியல் பெயர்கள். இவை ஆப்பிரிக்காவின் சப் சஹாரா பகுதிகளில் விளைந்தவை. இங்கிருந்து தான் தென் அமெரிக்கா நாடுகளுக்கு இவை விரிவாகியிருக்கின்றன. 

ஏறக்குறைய இன்றைக்கு 600,000 ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டு வகை காபிகளும் இனக்ககலப்பு செய்து  ஒரு புதிய காப்பி வகை உலகத்தில் பரவக் காரணமாகியது. மனித  குலத்துக்கு மட்டும் தான் மரபணு மாற்றங்கள் நிகழும் என்பதில்லை.  இப்படி காபிக்கும் கூட நிகழ்ந்திருக்கிறது. ஆக ஒரு இனக் கலப்பு புதிய வகை காப்பியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்தப் புதிய வகையை C.arabica என பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இந்தப் புதிய வகை காப்பி ஐரோப்பிய நாடுகளில் இன்று மிகப் பிரபலம். 

இந்தக் காபி பற்றிய வரலாற்றை, அது தொடக்கம் முதல் இன்று வரை எப்படி பரவி  இன்று மனித குலத்தின் உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றது என்பதை ஆராய்ந்து அதன் மரபணுவியல் மாற்றங்கள், அதன் பரவலாக்கம் ஆகியவற்றை வெளியிட்டு இருக்கின்றார் சிங்கப்பூரில் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் ஜார்கோ சலொஜார்வி (Jarkko Salojarvi). 

சலொஜார்வியும் அவரது ஆய்வுக் குழுவினரும் இந்த மூன்று வகை காப்பி செடிகளையும் ஆய்வு செய்து அவற்றின் மரபணுவியல் கூறுகளை வகைப்படுத்தி இருக்கின்றார்கள்.  அவர்களது ஆய்வு ஏறக்குறைய 30,000 ஆண்டுகள் கால வாக்கில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பிய நாட்டுப்பகுதியை உள்ளடக்கிய Great Rift Valley பகுதியில் காபி பரவியதை வெளிப்படுத்தியது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அதிகமாகப் பரவத் தொடங்கிய இந்தக் காப்பி மரங்கள் இப்பகுதியில் வாழ்ந்த மனித குழுக்களால் பரவலாக்கம் செய்யப்பட்டன.   ஏமன் நாட்டின் மொக்கா பகுதியிலும் விளைவிக்கப்பட்டது. 


இன்று நவீன காப்பி கடைகளில் மொக்கா காப்பி வகைகளை நாம் பார்க்கின்றோம். பலர் விரும்பி அருந்துகின்ற ஒரு நவீன வகை காப்பியாகவும் இது தற்சமயம் அறியப்படுகின்றது. அத்தகைய இந்தக்  காப்பி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான, இன்று மிக ஏழ்மையான ஒரு நாடாகவும் கடல் கொள்ளையர்கள் நிறைந்த ஒரு நாடாகவும் கருதப்படுகின்ற ஏமன் நாட்டின் ஒரு மேற்குக் கரை நகரம் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்றுதான். 

காப்பியாக இதனைத் தயாரித்து பானமாக அருந்துவது பழக்கத்திற்கு வருவதற்கு முதல் காப்பி மரத்தில் விளைகின்ற சிவப்பு நிற காய்களை மக்கள் சாப்பிடுவது பற்றிய பல கதைகள் கிபி 600, 700 கால வாக்கில் உருவாகி வளர்ந்தன, பரவின.  வாய்மொழி வழக்குகளாக மக்களிடையே பேசப்படுகின்ற ஒரு கதையாகவும் அவற்றுள் காபியும் பேசப்படுகின்ற ஒரு பொருளாகவும் வழக்கில் இருந்துள்ளது என்பதை அவரது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. 

15, 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் காப்பி ஏமன் நட்டில் விரிவான விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இங்கு வழங்கப்படுகின்ற வாய்மொழிக் கதைகளில் ஒன்று இந்தியாவில் இருந்து வந்த  பாபா பூடான் என்ற பெயர் கொண்ட ஒரு துறவி தனக்கு காப்பியின் மேல் ஏற்பட்ட தீராத ஆர்வத்தினால் C.arabica வகையின் ஏழு விதைகளை இந்தியாவிற்குக் கொண்டு சென்றதாகவம் அங்கிருந்து பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது என்றும் வழக்கில் உள்ளது.  இந்த வாய்மொழிக் கதை உண்மைதானா என ஆராய வேண்டும். இதுவும் ஒரு சுவாரசியமான ஆய்வுக் களம் தான்!

இலங்கையில் தேயிலை அறிமுகமாவதற்கு முன்னரே காப்பி அறிமுகப்படுத்தப்பட்டது, பெருந்தோட்டங்கள் உருவாக்கம் கண்டன என்பதும், பின்னர்  தொற்று நோய் பரவலால் காப்பி தோட்டங்கள் நிறுத்தப்பட்டன என்பதும் ஒரு கொசுறுத் தகவல். 

அடுத்தடுத்த நூற்றாண்டில் டச்சுக் காலனி காலகட்டத்தில் இந்த விதைகள் இந்தோனேசியாவின் ஜாவா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மேலும் பல வகையான காப்பி வகைகள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக Typica என்ற வகை இதில் குறிப்பிடத்தக்கது. 

பின்னர் இந்திய பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவுகளில் இதே C.arabica  செடிகளின் வகைகள் பிரெஞ்சு காலணியால் 1820 வாக்கில்  தீவு முழுமைக்கும் விளைவிக்கப்பட்டது. ஆக , Typica, Bourbon ஆகிய இரு வகைகள் இங்குப் பரவலாக்கும் செய்யப்பட்டன. 

இன்றைய அளவில் C.arabica வகையே உலகின் ஏறக்குறைய 70% காபி உற்பத்தியில் இடம்பிடித்துள்ளது. இன்றைக்கு ஏறக்குறைய 600,000 ஆண்டுகள் பழமையான இந்த காபியை இன்று மனிதர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாள் உணவுத் தேவையிலும்  தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம்.

மனிதர்களைச் சில உணவுகள் ஆக்கிரமித்து விட்டன. காபியைப் போலவே அரிசி, கோதுமை போன்றவற்றையும் கூறலாம்.  மனித குலம் இன்று அத்தகைய சில உணவுகளைத் தவிர்க்க முடியாத நிலைக்கு வந்து விட்டது. இவ்வகை தாவரங்கள் மனித குலத்தை அடிமைப்படுத்தி விட்டன. அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல! 

-சுபா18.9.2024

குறிப்பு: https://archaeology.org/issues/september-october-2024/collection/coffees-epic-journey/ancient-dna-revolution/