வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பண்டைய பௌத்த மதச் சான்றுகள் கிடைப்பதைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஆய்வுகளின் வழியும் தொல்லியல் கள ஆய்வுகளின் வழியும் கிடைக்கின்றன. இதைப்போல இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நிலப்பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு வரலாற்றுத் தேடல்கள், அகழ்வாய்வுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தொல்லியல் களப்பணியாளர்கள் ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டு பழமையான பௌத்தப்பள்ளிகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். இந்த பௌத்தப் பள்ளி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பௌத்தப் பள்ளி வளாகங்களில் பழமையான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பாரிக்கோட் என்ற நகரில் ஏறக்குறைய கிமு 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த சமய அமைப்பாக இதனைக் கருதலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தக் கட்டிட பகுதி இதன் அருகிலேயே கிமு 3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த விகாரைக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றது.
பாகிஸ்தான் மட்டுமன்றி உலக அளவில் பழமையான பௌத்தப் பள்ளிகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. கிபி 2 ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்டாலும் கூட இதன் காலம் கி மு 3, அதாவது மௌரியப் பேரரசர் காலம் எனக் கருதக்கூடிய வகையில் கரிம சோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது பண்டைய காந்தாரப் பகுதியில் பண்டைய பௌத்த சமய செயல்பாடுகள் பற்றிய சான்றுகளை வழங்குவதாகவும் அக்காலகட்டத்தில் இப்பகுதி முக்கியத்துவம் பெற்ற ஒரு நகரமாக விளங்கி இருக்கலாம் என்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஆசிய அளவில் இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபடுவது 1955 வாக்கில் தொடங்கியது. அச்சமயத்தில் தொல்லியல் கள ஆய்வுக்கு தலைமை ஏற்றவர் ஆய்வாளர் கீசோப் தூச்சி( Giuseppe Tucci) ஆவார். தற்சமயம் இத்தாலிய தொல்லியல் பணிக் குழுவின் தலைவராக Ca'Foscari University of Venice பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லூக்கா மரியா ஒலிவியர் (Luca Maria Oliviero) பணியாற்றுகின்றார். இவர் தலைமையிலான குழு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றது.
இந்தக் கள ஆய்வு நடைபெறும் பாரிகோட் (Barikot) என்ற நகரம் கிரேக்க மற்றும் லத்தீன் மொழியில் Bazira or Vajrasthana என குறிப்பிடப்படுகின்றது. இது மாவீரன் அலெக்சாந்தர் காலத்தில் அவனது படைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு நிகழ்த்தப்பட்ட கள ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இந்த நகரம் மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு வந்த காலமான ஏறக்குறைய கிமு 327 காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த ஒரு நகரமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய காலகட்டத்தில் இந்த பாரிக்கோட் நகர பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த விவசாய செயல்பாடுகளை முன்னிறுத்தி தானியங்கள் விற்பனை மற்றும் தானியங்கள் சேகரித்து வைக்கும் பகுதியாகவும் இருந்தது என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் வேளாண்மை சிறப்புற்று இருந்தது. வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை நிகழ்ந்ததும் அதாவது வசந்த காலத்தில் ஒரு முறையும் கோடை காலத்தின் இறுதியில் ஒரு முறையும் அறுவடை நிகழ்வதையும் கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குத் தனது படைகளைக் கொண்டு செல்வதற்கு முன் தங்கியிருந்த ஒரு பகுதியாகவும் இந்த நகரம் அமைகிறது.
ரோமானிய வரலாற்று அறிஞர் Quintus Curtius Rufus பாரிக்கோடு நகரம் வளமான பொருளாதார உயர்வு பெற்ற ஒரு நகராக இருந்தது என்று தனது நூலான Histories of Alexander the Great என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
2020 ஒரு தொடக்கம் இங்கு நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் தொல்லியல் கள ஆய்வுகளில் இங்கு பிரமிக்க வைக்கும் வகையிலான கிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிமு 2ஆம் நூற்றாண்டு காலத்து பௌத்த சமய சின்னங்கள் பல கிடைத்துள்ளன. பௌத்த விகாரை அதனை ஒட்டிய வகையில் அமைந்த பௌத்த பள்ளி, வட்ட வடிவில் அமைந்த சிறிய ஸ்தூபி, மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் சின்னங்கள், ஆபரணங்கள் ஆகியவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
கிபி முதலாம் நூற்றாண்டை சார்ந்த கரோஷ்டி எழுத்து பொறிப்பு கொண்ட கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.
இப்பகுதிகளில் கள ஆய்வுகள் நடைபெறுவதற்கு முன்பே தொல்லியல் சான்றுகளைச் சட்டத்திற்கு விரோதமாக திருடி விற்கும் செயல்பாடுகள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிகழ்கின்ற அரசியல், மற்றும் சமயப் போராட்டங்கள் காரணமாகவும் அங்கு நடைபெறுகின்ற வன்முறை செயல்பாடுகளின் காரணமாகவும் பல வரலாற்று சின்னங்கள் சேதம் அடைந்துள்ளன என்பதையும் கருத வேண்டியுள்ளது. அத்தகைய இடர்பாடுகளுக்கு இடையே இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுப் பணிகள் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன. காந்தாரா கலைப் பண்பாடு இப்பகுதியில் செழித்து வளர்ந்த ஒரு பண்பாடு என்பதும் இப்பகுதியின் சிறப்பாகும்.
-சுபா