Friday, January 2, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 77

எப்போதுமே நமது முதல் படைப்புக்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். எத்தனையோ அனுபவங்களை வாழ்க்கை எனும் நீரோட்டத்தில் நாம் கடந்து வந்த பின்னரும் கூட, நம் வாழ்வில் நமக்கு கிடைத்த முதல் அனுபவங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மனதிலெங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டிருக்கும். அந்த நினைவுகள் மனதில் எழும் போது அது ஒரு வித ஆனந்த நிலையை அவை நமக்கு அளித்து மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

உ.வே.சாவின் தமிழ் நூல்கள் பதிப்பு என்பது தமிழ் உலகத்தில் தனி இடம் பெறுவது. சங்க இலக்கிய நூல்கள் மட்டுமன்றி பல புராண நூல்களோடு தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு வகை நூல் வடிவங்களான  சீவக சிந்தாமணி, மணிமேகலை, அந்தாதி நூல்கள், கோவை நூல்கள் என பலவகைப்பட்ட    நூல்களை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் பதிப்பாக்கம் செய்தவர் இவர். உடைந்து, சேதப்பட்டு, அழிந்து போயிருக்கக் கூடிய, இன்று நாம் கல்விக்கூடங்களில் வைத்து அழகு பார்த்து ஆய்வு செய்து பொது அரங்குகளில் இலக்கியம் பேசி மகிழ்ந்து உரையாடி களித்திருக்கும் பல நூல்கள், இவரது முயற்சியினால் அச்சு வடிவம் பெற்றவை என்பதை ஒரு சாதாரண விஷயமாக நினைத்து நாம் ஒதுக்கிவிடமுடியாது. காலப்போக்கில் மறந்து விடவும் கூடாது. இத்தகைய விஷயங்களை அவ்வப்போது சொல்லி சொல்லி நாம்  ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியதும் மிக அவசியம். 

இப்படி பல நூல்களைப் பதிப்பித்த உ.வே.சாவின் முதல் புத்தகப்பதிப்பு எதுவாக இருக்கும் என பலருக்குச் சிந்தனை எழலாம். இந்த விஷயம் பற்றிய விரிவான தகவல்களை உ.வே.சா தனது சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார். 

இந்த நூலின் பெயர் சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. அதாவது திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் புலவர்கள் பலர் பாடிய செய்யுட்களின் தொகுப்பு இது.

இந்த நூல் உருவானதற்கும் ஒரு செய்தி இருக்கின்றது.  பாண்டி நாட்டிற்குப் பயணம் செய்த சுப்பிரமணிய தேசிகர் மதுரைக்கும் போய் அங்கு பல விழாக்களிலும் சிறப்பு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வந்தார் என்பதை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த பயணத்தின் போது கல்லிடைக்குறிச்சி வாசம் முடித்து அங்கிருந்து செவ்வந்திபுரம் கிராமத்திற்குப் பயணித்திருக்கின்றார்கள். இந்த கிராமத்திற்குச் செவ்வந்திபுரம் என்ற பெயர் ஏற்பட்டதற்கு  ஒரு காரணமும் இருக்கின்றது. அதாவது, பாண்டி நாட்டை ஆண்டு வந்த நாயக்க மன்னர்களின் அதிகாரியாகிய செவ்வந்தியப்ப நாயக்கரென்பவரால் மடத்திற்கு விடப்பட்ட கிராமங்கள் எட்டுள் முக்கியமானது செவ்வந்திபுரம் என்றும் இக்கிராமத்தில் செவ்வந்தியப்ப நாயக்கரால் நிர்மானிக்கப்பட்ட செவந்தீசுவரம் என்ற ஒரு ஆலயம் இருக்கின்றது என்றும் அறியமுடிகின்றது. 

இந்த மடத்திற்குத் தம்பிரானாக இருந்து வந்த வேணுவனலிங்கத் தம்பிரான் அங்கே கட்டிய மடாலயத்திற்குச் சுப்பிரமணிய தேசிய விலாசம் என பெயர் சூட்டினார். அங்கு தேசிகரின் உருவச் சிலையையும் நிறுவியிருக்கின்றார்கள். தேசிகரே அங்கு நேரில் வந்த அன்றைய நாளில்,   திருவிழா கோலம் பூண்டிருந்தது செவ்வந்திபுரம். 

அந்த அழகிய மடாலயத்தைச் சிறப்பு செய்து புலவர்கள் சிலர் கவி இயற்றினர். அந்தச் சிறப்பு நாளிலேயே அச்செயுட்களெல்லாம் அறங்கேறின. இச்செய்யுட்களில் சிலவற்றை அந்த அறங்கேற்ற நாளில் படிக்கும் வாய்ப்பும் பொருள் உரைக்கும் வாய்ப்பும் உ.வே.சாவிற்கு அமைந்தது. பின்னர் அப்பாடல்கலையெல்லாம் அச்சிட வேண்டுமென்று வேணுவனலிங்கத் தம்பிரான் ஆசைப்படவே இதனை நூலாக்கும் முயற்சி தொடங்கியது.பனை ஓலைச் சுவடி என்றில்லாமல் அச்சுப் பிரதியாக இதனை வெளியிடும் நோக்கத்தில் பதிப்புப் பணியில் ஆதினத்தைச் சார்ந்தோர் இறங்கினர்.  இந்த நூலை ஒழுங்கு படுத்தி அச்சாக்கத்திற்குத்  தயாரித்து வழங்கிய பணி உ.வே.சா. வினுடையதாக இருந்தது. 

இந்த நூலின் முகப்புப் பக்கத்தில் இருந்த வாசகங்களைப் பார்க்கும் போது இதில் அவரது பணி குறிப்பிடப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. அவ்வாசகங்களை கீழே காணலாம்

“Œ. கணபதி துணை. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த செவந்திபுரத்தில் மேற்படி ஆதீனம் பெரிய காறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்தசுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. மேற்படி திருவாவடுதுறையில் மேற்படி சுவாமிகளியற்றுவித்த கொலு மண்டபமென்னும் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு. இவை பல வித்துவான்களாற் பாடப்பட்டு மேற்படி ஆதீன அடியார் குழாங்களிலொருவராகிய ஆறுமுக சுவாமிகளாலும் மேற்படி திருவாவடுதுறை வேங்கட சுப்ப ஐயரவர்கள் புத்திரராகிய சாமிநாத ஐயரவர்களாலும் பார்வை யிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. வெகு தான்யடு ஆனிமீ.”

இந்த நூல் வெளிவந்த போது, இது இப்பணியில் ஈடுபட்டோர் அனைவருக்கும் நிறைந்த மனமகிழ்ச்சியைத் தரும் ஒரு விஷயமாக அது அமைந்தது. இதனை ஒரு சிறு குழந்தை தன் மகிழ்ச்சியை  வெளிப்படுத்துவது போல உ.வே.சா. இப்படி விவரிக்கின்றார்.

அந்தப் புஸ்தகம் அச்சிட்டு வந்த காலத்தில் நானும் பிறரும் அதை வைத்து அழகு பார்த்துக் கொண்டேயிருந்தோம். சம்பிரதாயத்திற்காக ஆறுமுகத் தம்பிரான் பெயரையும் சேர்த்துப் பதிப்பித்திருந்தாலும் அவர் என்னிடமே ஒப்பித்து விட்டமையால் நான்தான் முற்றும் கவனித்துப்
பார்த்தவன். ஆதலின் எனக்கு அப்புஸ்தகத்தைப் பார்த்தபோதெல்லாம் ஆனந்தம் பொங்கியது. “நான் பதிப்பித்த புஸ்தகம், என் பாடல்கள் உள்ள புஸ்தகம்” என்ற பெருமையோடு மற்றொரு சிறப்பும் அதில் இருந்தது. சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்புச் செய்யுட்களில் தியாகராச செட்டியார் பாடல்கள் பதின்மூன்று இருந்தன. அதில் ஒரு செய்யுளில் என்னைப் பாராட்டி
யிருந்தார்.

“துன்னுறுபே ரிலக்கணமு மிலக்கியமு
மீனாட்சி சுந்தரப் பேர்
மன்னுறுநா வலர்பெருமா னிடையுணர்ந்தெல்
லாநலமும் வாய்ந்தன் னோன்போற் 
பன்னுகவி சொல்சாமி நாதமறை
யோனியற்சண் பகக்குற் றால
மென்னுமுயர் பெயர்புனைந்த கவிராஜன்
முகற்பலரு மியம்பி யேத்த”

என்பது அச் செய்யுள்.

பாராட்டுதல்களும் முதல் பதிப்புப் பணியும்  தந்த மகிழ்ச்சி உ.வே.சாவின் மனதில் ஆழப் பதிந்திருந்தன. இவற்றை தன் இறுதிக் காலத்தில் முந்தைய நிகழ்வுகள் தந்த இனிய உணர்வுகளின் தன்மை மறவாத வகையில் உ.வே.சா பதிந்திருப்பது என் சரித்திரத்தின் ஒரு தனிச் சிறப்பு.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment