Sunday, May 3, 2020

நூல் விமர்சனம் :தமிழக மக்கள் வரலாறு: காலனிய வளர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை



முனைவர்.க.சுபாஷிணி



https://minnambalam.com/public/2020/05/03/7/book-review?fbclid=IwAR07SBfeBa2aa8EOzfWFz7-3Oj5mqrtJOsMbCwvEk2E3Uap27LIoQHy13o0

தமிழக வரலாற்றை ஆராய முற்படுபவர்களுக்கு ஐரோப்பிய ஆவணக் குறிப்புகள் தமிழக குறிப்புகளில் கிடைக்காத பல சான்றுகளை அளிக்கின்றன. மிக நீண்ட காலமாகவே ஐரோப்பியர்களது நாட்குறிப்பு எழுதும் பழக்கமும், தாங்கள் செல்கின்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைக்கும் பழக்கமும் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பண்டைய செய்திகளை அறிந்து கொள்ள நல்வாய்ப்புக்களை வழங்குகின்றன. தமிழக ஆய்வுச் சூழலில் பொதுவாகவே வரலாற்றை ஆராய முற்படுபவர்கள் மிகப் பெரும்பாலும் ஐரோப்பியரது ஆய்வு குறிப்புகளில் கவனம் செலுத்துவது மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதற்குக் காரணம், ஆய்வில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் தமிழ் மொழியில் உள்ள ஆவணங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதும். ஐரோப்பிய ஆவணங்கள் பல தமிழகத்தோடும் தமிழர் வரலாற்றோடும் தொடர்புடையன என்ற விவரங்களை அறியாமல் இருப்பதுமே எனலாம். இவ்வகைப் போக்கு, வரலாற்று ஆய்வுகளின் விரிவுகளைக் குறைத்து, குறிப்பிட்ட சிறிய  எல்லைக்குள் மட்டுமே ஆய்வுகள் சுருங்கிப் போவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. இதிலிருந்து மாறுபட்டு, ஐரோப்பிய ஆவணங்களில் முழு கவனம் செலுத்தி அவற்றை ஆராய்ந்து தமிழ்ச் சமூகத்து வரலாற்றுச் செய்திகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்பவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் எஸ் ஜெயசீல ஸ்டீபன். அவரது எழுத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்து பின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் 2018ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் நூல் `காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வரலாறு`. இந்த நூலாசிரியரின் `தமிழக மக்கள் வரலாறு` என்ற தொகுப்பின் கீழ் வெளிவருகின்ற இரண்டாவது நூல் இது. இதன் முந்தைய நூலாக வெளிவந்திருப்பது `காலனிய தொடக்க காலம்` என்ற நூல்.தொடக்க காலத்தின் தொடர்ச்சியாகக் காலனிய வளர்ச்சிக் காலத்தில் தமிழக அல்லது தமிழகத்துக்குள் புலம்பெயர்வினை ஆராய்கின்றது இந்த நூல்.

இந்த நூலில் ஐந்து பெரும் கட்டுரைகளாக ஐரோப்பிய காலனித்துவ காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் கூலிகளாகப் பயணித்த தமிழக மக்களின் வரலாற்றுச் செய்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஐந்து கட்டுரைகளுடன் மிக நீண்ட விரிவான முன்னுரை ஒன்றும், நூலின் இறுதியில் முடிவுரை ஒன்றும் ஜெயசீலன் ஸ்டீபன் அவர்களாலேயே தமிழில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மனிதகுலம், அது தோன்றிய காலம் தொட்டே ஓரிடத்தில் நிலை பெறாமல் வெவ்வேறு இடங்களுக்கு மாறிச் செல்வதை இயல்பாகக் கொண்டிருக்கின்றது. தமிழக நிலப்பரப்பில் தோன்றிய தமிழினமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதுகாறும் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் காண்கின்ற போதும், தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நில வழியாகவும் நீர் வழியாகவும் தொடர்ந்து புலம்பெயர்ந்து கொண்டே இருப்பதை பார்க்கின்றோம். பயணப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்திலும் மனிதர்கள் கால்நடையாகவே மிக நீண்ட தூரத்திற்குப் பயணம் செய்திருக்கின்றார்கள். கடல் வழி பயணம் செய்து வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியும் என்பதைப் படகுகளையும் கட்டுமரம் போன்றவற்றையும் உருவாக்கி கடலைக் கடந்து புதிய நிலங்களுக்குச் செல்லும் வழியையும் கண்டுபிடித்து மிக நீண்ட தூரம் பயணத்தைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் மனிதர்கள். இன்று போக்குவரத்து வசதிகள் மிகப்பெரிய அளவிலான மேம்பாடு அடைந்து விட்டதால் மனிதனின் புலம்பெயர்வு என்பது எளிதாக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் புலம்பெயர்வதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலான வேளைகளில் மனிதர்களின் புலம்பெயர்வு என்பது மனிதர்கள் தாங்கள் வாழ்கின்ற சூழலில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பினை அனுபவிக்கும் போதும், வாழ்கின்ற இடத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடர முடியாத இக்கட்டான சூழல் ஏற்படும் போதும் நிகழ்கின்ற புலம்பெயர்வு எனலாம். இதுகாறும் வாழ்ந்து வந்த பகுதியில் இனி வாழ்வதற்கு வழி இல்லை எனும் போது பெரும்பாலான புலம்பெயர்வுகள் நடைபெறுகின்றன. பொதுவாகவே மனிதர்கள் மட்டுமன்றி ஏனைய உயிர்களின் இயல்பும் அதுவே. அந்தவகையில் தமிழக வரலாற்றை ஆராயும்போது மிகப்பெரும்பாலான தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது தமிழகத்தைத் தாக்கிய பெரும்பஞ்சம் ஏற்பட்டிருந்த 1876-78 ஆம் ஆண்டு காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் நிகழ்ந்த புலம்பெயர்வு எனலாம். இந்த நூல் தமிழகம் பெருவாரியாக, தமிழகம் பஞ்சத்தைச் சந்தித்த காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கம் நிகழ்ந்த தீவுகளுக்கும், பிரிட்டிஷ் காலனித்துவம் ஆதிக்கம் பெற்றிருந்த இலங்கை மற்றும் மலேசியாவிற்கும் குடிபெயர்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஐரோப்பியர்களின் ஆவணங்களின் அடிப்படையில் மிக விரிவாக அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது.

நூலின் மைய ஆய்வு உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கான தமிழர்களின் புலம்பெயர்வாக அமைகின்றது என்றாலும், நூலின் முன்னுரை மாறுபட்ட வகையில் தமிழகத்துக்குள் புலம்பெயர்ந்து வந்த பிராமணர்களின் வருகைக்கான காரணங்களை அலசுகின்றன. முதலாம் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆந்திராவிலிருந்து வந்த பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடையாக வழங்கி அவர்களுக்குக் கிராமங்களை உருவாக்கித் தந்த செய்திகளைக் கூறும் கரந்தைச் செப்பேடு இச்செய்திகளை விவரிக்கின்றது. எண்ணிக்கையில் அதிகமாகப் புலம்பெயர்ந்த ஆண் பிராமணர்கள் தமிழகத்தில் வேற்று சமூக பெண்களை மணந்து சமூகக் கலப்பு திருமணத்தினால் உருவாகிய செய்தியையும் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பிரம்மதேய குடியிருப்பில் பிராமணர்கள் வாழ்ந்த பகுதிகள் பிராமணச் சேரி என்று தமிழில் குறிக்கப்படுவதையும், குடியிருப்பில் உள்ளும் வெளியிலும் பல்வேறு இடைச்சாதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகள் உருவான செய்தியையும் காண்கின்றோம்.  கோயில்கள் மன்னர்களால் அதிகமாகக் கட்டப்பட்ட செய்திகளும் கோயில்களில் பூசை காரியங்களைப் பராமரித்துச் செயல்படுத்தி வரும் பணியைப் பிராமணர்கள் மேற்கொண்டதையும், கோயில்களில் பிரசாதம் தயாரித்து வழங்கும் முறையை அவர்கள் அறிமுகப்படுத்தியமையும், அதற்காக மன்னர்கள் ஏராளமான நிதியைக் கோயில்களுக்கு வழங்கியமையும் கல்வெட்டுகள், செப்பேடுகள் தரும் செய்திகள் வழி நூல் ஆசிரியர் இந்த முன்னுரை பகுதியில் விவரிக்கின்றார்.

கோயில்கள் மற்றும் கோயில் பராமரிப்புகள் என்ற தொடர்பில் பிராமணர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் பற்றியும் இந்த முன்னுரை பகுதி விவரிக்கின்றது. கோயிலில் உள்ள நகைகள் களவாடப்பட்ட செய்தி, நெல் களவாடப்பட்ட செய்தி, கோயிலிலிருந்த விலை உயர்ந்த ஆடைகளைக் களவாடிய செய்தி, சர்ச்சையின் காரணமாகப் பழிவாங்கச் செய்யப்பட்ட கொலை, கோயில் பொருட்களைத் திருடிய செய்தி என பல்வேறு குற்றச் செயல்களும் அவற்றுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும் இப்பகுதியில் விவரிக்கப்படுகின்றன. இந்த முன்னுரை பகுதிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற  ஆதாரங்களாக செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், வரலாற்று நூல்கள், ஆவக் குறிப்புகள் என மிக நீண்ட பட்டியலையும் ஆசிரியர் வழங்கியிருக்கின்றார். முன்னுரைக்கே இத்தனை சான்றுக் குறிப்புகளா என வியக்க வைக்கின்றது இப்பகுதி.

இத்தகைய ஒரு தொடக்கத்திலிருந்து நூலின் முதல் கட்டுரைக்கு நம்மை ஆசிரியர் அழைத்துச் செல்கிறார். இந்த முதல் பகுதி 1729-1883 வரையிலான காலகட்டத்தில் பிரெஞ்சு ஆட்சியில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து மொரிஷியஸ் தீவிற்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தக் கூலிகள் பற்றிய செய்திகளாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இதில் நாம் பார்க்க வேண்டியது 4.3.1729 அன்று `லா செரன்` என்ற கப்பலில் பாண்டிச்சேரியிலிருந்து மொரிசியசுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் கைவினைத் தொழிலாளர்கள் பற்றிய செய்தி. பல்வேறு தச்சு வேலை பணியாளர்கள், கொல்லர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் கைவினை தொழில் திறன் பெற்ற தொழிலாளர்கள் இக்காலகட்டத்தில் மொரிசியஸ் தீவிற்குப் பணி செய்யச் சென்றார்கள்.
இதனையடுத்து தொடர்ச்சியாக ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் மொரீசியஸ் மற்றும் மஸ்கரேனஸ் தீவுகளுக்குச் செல்வது தொடங்கியது.

அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட சில காலங்களுக்குப் பின்னர் மொரீசியசில் காடுகளை அழித்து சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையிலான கூலித்தொழிலாளர்கள் தமிழகத்தின் பாண்டிச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் செல்வது தொடங்கியது. இதனடிப்படையில் மொரீசியஸ் போர்ட் லூயியின் புறநகர்ப்பகுதியில் கேம்ப் டி மலபார் பகுதி தமிழர் குடும்பங்களின் குடியிருப்புப் பகுதியாக உருவாகியது. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள், சமூக நிகழ்வுகள்,  தேரே ரூஷ் என்ற பகுதியில் இந்து மக்கள் வழிபாட்டிற்காக  25.10.1856ல் கட்டப்பட்ட முதல் இந்து கோயில் பற்றிய செய்தி, தமிழ் கலை இசை நாடக முயற்சிகள், சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட பஞ்சாயத்து போன்ற ஒரு `சபை` மற்றும் தமிழ்க் கல்விக்கான முயற்சிகள் போன்ற செய்திகள் பிரஞ்சு ஆவணங்களிலிருந்து நூலாசிரியர் கையாண்டிருக்கின்றார். நூலாசிரியர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் ஆழ்ந்த திறன் கொண்டிருப்பதால் நேரடியாக மூல ஆவணங்களை நூல் முழுமையுமே பயன்படுத்தியிருப்பது  நூலின் ஆய்வுத்தன்மைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றது.

மொரிசியஸ் தீவில் தமிழ் மக்கள் ஒப்பந்தக் கூலிகளாகப் புலம்பெயர்ந்தது போலவே அதன் அருகில் இருக்கும் ரீயூனியன் தீவிற்கும் தமிழ் மக்கள் இதே காலகட்டத்தில் அதிகமாகக் குடிபெயர்ந்து சென்றனர்.  மொரிஷியஸ், ரீயூனியன் ஆகிய இரண்டு தீவுகளுக்குமே சென்ற தமிழ் மக்கள் தான் இத்தீவுகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் பங்காற்றியவர்கள் என்பதை கவனத்துடன் நோக்க வேண்டியுள்ளது. இன்றைய இத்தீவுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்த பெரும் பங்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற தமிழர்களையே சாரும். கூலிக்காக வேலை செய்பவரை `கூலி` என அழைக்கும் வழக்கம் பிரெஞ்சுக்காரர்கள் தமிழ் மொழியிலிருந்து எடுத்துக்கொண்ட சொல். இதே சொல் ஆங்கிலத்திலும் பயன்பாட்டில் வந்தது. இது இன்றும் வழக்கில் உள்ள சொல்லாகவே அமைந்து விட்டது.

நூலின் அடுத்த கட்டுரையாக அமைவது பாண்டிச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் பிரெஞ்சு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களைப் பற்றிய ஆவணத் தகவல்கள்.  பிரஞ்சு கரீபியனில் 1830லிருந்து 1840 வரையிலான காலகட்டத்தில் 1.6 மில்லியன் ஆப்பிரிக்க அடிமைகள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து பணியாற்றிக்கொண்டிருந்த இந்த அடிமைகள் ஏற்படுத்திய கிளர்ச்சினால் அங்கு விவசாயப் பணிகள் தடைப்பட ஆரம்பித்தன. இதுவே தமிழகத்திலிருந்து ஏராளமான ஒப்பந்தக் கூலிகள் மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்வதற்கு அடிப்படை காரணத்தை உருவாக்கின.

தமிழகத்தைத் தாக்கிய பெரும் பஞ்சம் பெருவாரியான தமிழ் மக்கள் மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் பிரெஞ்சு அரசு ஒப்பந்தக் கூலிகளைத் திரட்டி அனுப்பும் அமைப்புகளை உருவாக்கிப் பதிவு செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது. `தி சொசைட்டி ஆஃப் இமிகரேஷன்` என்பது அத்தகைய ஒரு அமைப்பாகும். இதில் பணியாற்றும் உள்ளூர் தமிழர்கள் கூலிகளைத் திரட்ட வேண்டிய பணியைச் செய்தார்கள். அப்படித் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் கப்பல் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு முகவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்வார்கள். கப்பல் தலைவர்கள் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்த ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களைக் கப்பலில் ஏற்றிச் சென்று அங்குள்ள தோட்ட உரிமையாளர்களுக்கு விட்டுவிடுவர். இப்படிக் கூலித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தேவை இருந்ததால் கயானா, மார்ட்டினிக், குவாடலுப் ஆகிய தீவுகளுக்குத் தமிழ் மக்கள் கூலிகளாகச் செல்வது பெருவாரியாக அமைந்தது.

இத்தீவுகளுக்குக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்ட கூலிகளின் சாதிகள் ஆவணங்களில் குறிக்கப்படுகின்றன. உதாரணமாக குவாடலப் தீவுக்கு 1759 ஆம் ஆண்டு 481 கூலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பயணித்த தமிழ்மக்களின் சாதியைப் பட்டியலிடுகிறது ஒரு ஆவணம். மிக அதிகமான எண்ணிக்கையில் பள்ளர், பறையர், பள்ளியார், என்றும் அதற்கடுத்த எண்ணிக்கையில் பஞ்சாயத்தார், வெள்ளாளர், வன்னியர் அகமுடையார், அம்பட்டன், நாவிதர், இடையர், கள்ளர், நெசவாளர் ஆகியோர் என்று எண்ணிக்கை வாரியாக இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலகட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்த பெரும்பாலான தமிழ் மக்கள் அத்தீவுகளை விட்டு திரும்பவில்லை. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் குடிபெயர்ந்த அம்மக்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் கூட இத்தீவுகளிலேயே தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்தனர் என்பதை இன்று இத்தீவுகளுக்கு அன்று சென்ற  தமிழ் மக்களின் சந்ததியினர்  நிறைந்திருப்பதைக் கொண்டு இயல்பாகவே நம்மால் அறிய முடிகிறது.

இந்த நூலின் அடுத்துவரும் கட்டுரையானது மெட்ராஸில் இருந்து மொரிசியசுக்குச் சென்ற தமிழ் ஒப்பந்தக் கூலிகளைப் பற்றி விவரிக்கின்றது. கற்பனை செய்து பார்க்கும் போது கூட மனதில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்ற புலம்பெயர்வுச் செய்திகள் அமைகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடில்லாமல் அடிமை விற்பனை நடந்ததாகவும், உள்ளூருக்குள் அடிமை பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், சிலவேளைகளில் மக்கள் அடமானம் வைக்கப்பட்டதாகவும், அதுமட்டுமன்றி மக்கள் வாடகைக்கு விடப்பட்டதாகவும் ஜே.வான் என்ற ஆங்கிலேய அதிகாரி 20 ஜூலை 1819 அன்று மெட்ராஸ் வருவாய் வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவதை இங்கு நாம் சான்றாகக் காணலாம். அடிமைகள் விற்பனை என்பது ஏற்பட்டுவிட்ட காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1725 வாக்கில் பரவலாகக் குழந்தைகள் திருடப்பட்டு விற்கப்பட்ட அவலங்களையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மெட்ராஸிலிருந்து மொரிசியஸ் தீவிற்குப் பயணித்தவர்கள் மெட்ராஸ், செங்கல்பட்டு, தென்னாற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்றும், மெட்ராஸிலிருந்து வந்த கூலித் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஓரளவு சூத்திரர்களும் இசுலாமியர்களும் என்றும் கப்பல் ஆவணப்பதிவேட்டில் உள்ள தரவுகளை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 

தொடர்ச்சியாக அடுத்து நூலில் வருவது இலங்கைக்கான புலம்பெயர்வு பற்றிய தகவல்களை ஆராயும் பகுதி. இலங்கைத் தீவின் மக்கள் தொகையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எனக் குறிப்பிடப்படும் தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்றைய அளவில் 4.2 விழுக்காடு என அமைகிறது. 1820களில் காபி தோட்டங்களில் கூலி தொழிலாளர்களாகப் பணியாற்றச் சென்ற தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் மீண்டும் தமிழகம் திரும்பினார்கள் என்றாலும் கூட அடுத்த மாபெரும் அலையாகத் தமிழகத்திலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியச் சென்ற பெரும்பாலான தமிழ் மக்களே இன்று மலையகப் பெருந்தோட்ட ஊழியர்களாகத் தொடர்கின்றனர். ஆங்கிலேயக் காலனித்துவ காலகட்டத்தில் ஆங்கிலேய அரசினால் பல்வேறு சமூக அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட இம்மக்கள் உலகம் எவ்வளவோ முன்னேற்றம் கண்டு விட்ட இக்காலகட்டத்திலும் இன்றும் தங்கள் அடிப்படை வாழ்வியல் நிலையிலிருந்து மாற்றத்தைப் பெறவில்லை என்பதே இன்றைய பெருந்தோட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொழுது நாம் கண்கூடாகக் காணக்கூடிய காட்சியாக அமைகின்றன. 

இலங்கை மலையகத்தில் பணியாற்ற, தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதியில் இருந்து பன்றிப் படகுகளிலும் கப்பல்களிலும் என தமிழ் மக்கள் பெருவாரியாக 1820 தொடக்கம் புலம் பெயரத் தொடங்கினர். தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்பவர்களுக்குத் தட்டாபாறையிலும் ராமேஸ்வரம் வழியாக செல்பவர்களுக்கு மண்டபத்திலும் முகாம்கள் நிறுவப்பட்டன. இந்தியாவில் 1857 இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் தாக்கத்தினால் இலங்கைக்கான குடியேற்றம்  எண்ணிக்கையில் அதிகரித்தது. 1850 முதல் 1861 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 671,475 ஆகும்.  இக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கங்காணி முறை இலங்கையைப் போலவே மலேசியாவிலும் நடைமுறையிலிருந்தது. காலனித்துவ அரசின் துரைமார்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களினால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதோடு  தங்கள் சொந்த இனத்தைச் சார்ந்த கங்காணிகளாலும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதும் நம் வரலாற்றில் நிகழ்ந்த அவலம். பெப்ரவரி மாதம் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதன் பின்னரும் இந்த `இந்திய வம்சாவளி மக்கள்` என அடையாளப்படுத்தப்படும் தமிழ் மக்கள் அனுபவித்த குடியுரிமை பிரச்சனை என்பது 2003 ஆம் ஆண்டு வரை பல்வேறு இழுபறி நிலைக்கு உட்படுத்தப்பட்டு `நாடற்றவர்களாக` அவர்கள் நடத்தப்பட்ட அவலம் தொடர்ந்தது. இலங்கையில் பூர்வகுடிகளாக வாழ்கின்ற தமிழ் மக்கள், மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களின் அங்கீகாரத்தையும் இம்மக்கள் பெறவில்லை. இன்றளவும் மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தரம் தாழ்த்தி பேசுவதும், நடைமுறையில் அவர்களை சற்றே தாழ்த்தி வைத்துப் பார்ப்பதும் இயல்பாக அமைந்துள்ள விஷயமாகத்தான் உள்ளது.

நூலின் இறுதிக் கட்டுரையாக அமைவது மலாயாவிற்கான தமிழர்களின் புலம்பெயர்வு. 1786 தொடக்கம் 1878 வரையிலான மலாயாவிற்கான தமிழ் வணிகர்கள் மற்றும் நாடுகடத்தப்பட்ட குற்றவாளிகள் பற்றி இந்த நூலின் இறுதிக் கட்டுரை அலசுகிறது. மலாயாவிற்கான தமிழர்களின் வருகை என்பது நீண்ட நெடுங்கால வரலாறு கொண்டது. இந்தக் குறிப்பிட்ட கட்டுரை ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கான செய்திகளை மட்டும் ஆராய்வதாக அமைகின்றது. 1786ம் ஆண்டு பிரிட்டிஷார் மலேசியாவின் பினாங்குத் தீவை தனித்துறைமுக நகரமாக வளர்க்கும் பணியைத் தொடங்கினர். 1786ல் பிரான்சிஸ் லைட் பினாங்குத் தீவில் ஜார்ஜ் டவுன் என்ற துறைமுகத்தையும், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் நகரையும் உருவாக்கி ஆங்கிலேயர் கொடியேற்றத்தைத் தொடக்கி வைத்தார். அச்சமயத்தில் தமிழகத்திலிருந்து காதர் மொய்தீன் மரைக்காயர் என்பவர் 1786 லிலேயே வணிகத்திற்காகப் புலம்பெயர்ந்திருந்தார். பினாங்குத் தீவின் இந்திய இஸ்லாமியர்களின் தலைவராக காதர் மொய்தீனை பிரிட்டிஷ் அரசு அப்போது நியமித்தது. ஏராளமான தமிழ் இஸ்லாமியர்கள் இக்காலகட்டத்தில் பினாங்கு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்படி வந்து சேர்ந்தவர்கள் கம்போங் கோலம், லெபோ கிளியா மற்றும் ஜாலான் மஸ்ஜித் கபித்தான் ஆகிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கினர். மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்த் தமிழ் இஸ்லாமியர்களின் வணிக முயற்சிகள் மிக விரிவாக்கம் கண்ட ஒரு காலகட்டமாக இது அமைந்தது. பினாங்கில் தர்கா ஒன்றும் கட்டப்பட்டது. இதே காலகட்டத்தில் வணிகத்திற்காக 1801 வாக்கில் வந்த தமிழ் இந்துக்களும் பினாங்கில் குடியேறினர். 1801ல் ஆங்கில கம்பெனி ஜார்ஜ் டவுன் நகரில் இந்துக் கோயில் ஒன்றுக்கு இடம் ஒதுக்கியது. அதே காலகட்டத்தில் பினாங்கு மலையில் முருகன் கோயில் ஒன்றை தமிழ் இந்துக்கள் கட்டினார்கள்.

ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை எதிர்த்த பாளையக்காரர்கள் அக்டோபர் 1801ஆம் ஆண்டில் வீழ்த்தப்பட்டு அதே காலகட்டத்தில் சின்ன மருதுவும் பெரிய மருதுவும் ஊமைத்துரையும் கைது செய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் இவர்களில் முக்கியமாக 73 பேர் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர். இவர்களுள் சிவகங்கையின் வெங்கம் பெரிய உடையத்தேவர், பொம்ம நாயக்கர், பாஞ்சாலங்குறிச்சி தளவாய் குமாரசாமி நாயக்கர் மற்றும் மருது பாண்டியனின் மகன் துரைச்சாமி ஆகியோரும் அடங்குவர். கப்பலில் கொண்டுவரப்பட்ட இந்த அரசியல் கைதிகள் இருவர் இருவராக விலங்கிட்டு வைக்கப்பட்டிருந்தனர். 76 நாட்கள் பயணத்திற்குப் பிறகு 1802 ஆம் ஆண்டு இவர்கள் பினாங்கு வந்தடைந்தனர். பினாங்குத் தீவு புதிய உருவாக்கத்தில் இந்தத் தமிழ் கைதிகளின் உழைப்பு அடிப்படையை அமைத்தது என்பதை மறுக்கவியலாது. 1805க்குள் நாடுகடத்தப்பட்ட தமிழக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 772 ஆக உயர்ந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுவதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான இந்து, இஸ்லாமிய வணிகர்கள் பினாங்கில் குடியேறினர் என்றும் பினாங்கின் மிகப் பெரிய இனமாக அக்காலகட்டத்தில் தமிழர் இருந்தனர் என்றும் பிரிட்டிஷார் ஆவணக் குறிப்புகள் சொல்கின்றன. ஆயினும் அதன் பின்னர் தமிழ் மக்கள் பெருவாரியாகத் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றதன் காரணத்தினால் இன்று தமிழ் மக்களின் எண்ணிக்கை பினாங்குத் தீவில் குறைந்து, இப்போது சீனர்கள் பெருவாரியாக நிறைந்த ஒரு மாநிலமாகப் பினாங்கு மாநிலம் அமைந்திருக்கின்றது என்பது வருத்தத்தோடு நாம் காணக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு.

அரசியல் கைதிகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குத் திரும்பக் கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி விண்ணப்பித்தவர்களில் கிருஷ்ண ஐயர் என்ற ஒருவருக்கு மட்டுமே நாடு திரும்பக் கூடிய வாய்ப்பு அமைந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாத நிலை ஏற்பட்டது என்பதையும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாத கைதிகள் மீண்டும் மறு விண்ணப்பம் செய்ததையும் காண்கிறோம். அந்த அடிப்படையில் சின்ன மருதுவின் மகன் ராமசாமி இரண்டாவது முறையும் செய்த விண்ணப்பம் திருநெல்வேலி நீதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ராமசாமி பினாங்கிலேயே வாழ்ந்து இறந்து போனார் என்ற செய்தியும் குறிப்புகளின் வழி நமக்குக் கிடைக்கின்றன. பினாங்கில் மிக அதிகமாகக் குடியேறியவர்களில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், காரைக்கால், நாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் அமைந்திருந்தனர். மெட்ராஸிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் என இரண்டு துறைமுகப் பகுதிகளிலிருந்தும் வந்த கப்பல்களில் வந்த தமிழ் மக்கள் பினாங்குத் தீவிற்கு வந்து சேர்ந்தார்கள்.

மலாயாவிற்குத் தமிழகத்திலிருந்து பெருவாரியான தமிழ் மக்கள் குடியேற்றம் என்பது ஒப்பந்தக் கூலிகளாக அவர்கள் மலாயாவின் பல பகுதிகளில் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாகப் பணியாற்றக் குடியேற்றப் பட்டவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாக ஏராளமான தமிழ் மக்கள் மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பதிந்துகொண்ட பெருந்தோட்ட உரிமையாளர்களால் கொண்டுவரப்பட்டனர். இவர்களது நிலை ஏறக்குறைய இலங்கை மலையக பகுதிக்குக் குடிபெயர்ந்த தமிழ் மக்களின் நிலையை ஒத்ததாகவே அமைந்திருந்தது. படிப்படியான தமிழ் மக்களின் கல்விச் சூழல் மற்றும் 1958இல் மலாயா சுதந்திரம் பெற்று மலேசியாவாக மாறிய பின்னர் நிகழ்ந்த மேம்பாட்டு முயற்சிகள் ஆகிய முன்னெடுப்புகள் மலேசியாவில் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்தன.  ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்ற வந்த தமிழ் மக்கள் இன்று தோட்டங்களில் நிலங்களை வாங்கி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக பொருளாதார பலம்பெற்ற சூழல் உருவாகியிருக்கிறது. மலேசியாவின் வளர்ச்சியில் தமிழ் மக்களின் உடல் உழைப்பும் அர்ப்பணிப்பும் பின்னிப் பிணைந்து கலந்திருக்கின்றது.

இந்நூல் விவரிக்கும் செய்திகளின் அடிப்படையில் காணும்போது ஒப்பந்தக் கூலிகளாக உலகின் பல்வேறு தீவுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர் தமிழக சாதி கட்டுப்பாட்டு அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களாக,  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக  சமூகத்தின் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மக்களாகவே இருக்கின்றனர். கொடூரமான சமூக வாழ்வியல் சூழல் ஆகியவை இம்மக்களை தங்கள் இயல்பான நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பெயர்த்து புதிய நிலங்களுக்குத் தள்ளிய சூழலைக் காண்கின்றோம். புதிய சூழலில் தொடக்கக்கால வாழ்க்கை நிலை என்பது கற்பனைக்கு எட்டாத கொடூரமான சூழலாக இருந்தது என்பதே உண்மை. ஆனாலும் கூட, படிப்படியாக இம்மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவான பல்வேறு சட்டங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளன என்பதைத் தான் இன்று காண்கின்றோம். கல்வித் துறைகளில் மேம்பாடு, வணிகத் துறைகளில் மேம்பாடு, ஆளுமை, சொத்து உடமை, அரசியல் அதிகாரம் பெறுதல் என்ற வகையில் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உயரிய வாழ்க்கை பொருளாதாரச் சூழலை அனுபவிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதைக் காட்டுகிறது.  தமிழ்நாட்டில் இன்றளவும் கூட  நடைமுறையில் கிடைக்காத சுயமரியாதையும் இயல்பாகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் நிலை இன்று புலம்பெயர்ந்த நாடுகளில்  உருவாகியுள்ளது.  அரசியல் தலைமைத்துவம் பெற்று நாட்டின் அரசியல் தலைவர்களாக இம்மக்களின் பிரதிநிதிகள் செயல்படுவதை மொரிசியஸ், மலேசியா, சிங்கை,  மேற்கிந்தியத் தீவுகள்,ரீயூனியன், பிஜி தீவுகளில்  இன்று காண்கின்றோம். இம்மாற்றம் வலி நிறைந்த நீண்ட பயணத்தின் மாபெரும் சாதனை.

தமிழகத்தில் இன்றும் கூட பல்வேறு சீர்திருத்த முயற்சிகளுக்குப் பிறகும் சாத்தியப்படாத சாதி ஒழிப்பு என்பது தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த பல்வேறு நாடுகளில் மிகப் பெரிய அளவில் சாத்தியமடைந்திருக்கின்றது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்ற பூர்வகுடி மக்களோடு  அல்லது தமிழ் மக்களிலேயே வெவ்வேறு சாதி சமூகத்தைச் சார்ந்த மக்களோடு திருமண கலப்பினால் ஏற்பட்ட கலப்பு எனலாம்.  இந்த நிலை சாதி வேறுபாட்டை மிகக்குறைதிருக்கின்றது அல்லது ஒழித்திருக்கின்றது. இன்று தமிழர் புலம்பெயர்ந்த பல நாடுகளில் சாதிப் பெயர்கள் என்பன தமிழகத்தில் சொல்லப்படும் பொருள் என்றில்லாமல் குடும்பப்பெயர் என்ற அளவில் கிடைக்கும் ஒரு சாதிப்பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்ளும் நிலை உள்ளதை தென்னாப்பிரிக்கா போன்ற நாட்களில் மிகத் தெளிவாகக் காண்கின்றோம்.  கடந்த 200 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்குத் தமிழ் மக்கள் பரந்து விரிந்து சென்று  தமிழர்கள் இல்லாத நிலப்பகுதிகளே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் வகையில் விரிவான புலம்பெயர்வைச் சாத்தியப்படுத்திய ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இந்தக் காலனித்துவ காலத்தின் செயல்பாடுகள் அமைகின்றன.

உலகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றுவது என்பது இன்றும் கூட வழக்கிலிருக்கும் ஒன்றுதான். இன்றைய நாகரீக உலகில் குறிப்பிட்ட சில காலங்களுக்குக் கான்ட்ராக்ட் அடிப்படையில் தொழில் திறமை பெற்றவர் பணியாற்றுவது மிக இயல்பான ஒன்றாக வளர்ந்துள்ளது. இன்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளைத் தொழில் நிறுவனங்கள்  வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அடிப்படை தொழிலாளர் நலமாக நிர்ணயிக்கின்றன. ஆயினும்கூட எல்லா தொழில் கூடங்களும் தமது பணியாளர்களுக்கு எல்லா  சலுகைகளையும் முறையாக வழங்குவதில்லை. இது பற்றிய செய்திகளையும் இது தொடர்பான கோரிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் வழி நாம் அவ்வப்போது காண்கின்றோம். மனித உரிமைகளின் தேவை பற்றிய விரிவான புரிதல் அமைந்திருக்கும் இந்தக் காலகட்டத்திலும் கூட அடிப்படை உரிமைகள் மீறப்படுவது பற்றி கவலைப்படும் நாம், இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களின் நிலை எவ்வகையில் அமைந்திருக்கும் என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. அதனை மிக மிகச் சிறப்பாக இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

இந்த நூலின் பலமாக அமைவது நூலின் ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் நூலாசிரியர் வழங்கியிருக்கின்ற ஆவணங்களின் சான்றுப் பட்டியல்.  தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிகம் தொடாத ஒரு ஆய்வுத்துறையாகவே காலனிய கால வரலாறும் அதன் தாக்கத்தால் நிகழ்ந்த மக்களின் புலம்பெயர்வும் உள்ளன. இத்துறையில் மேலும் பல ஆய்வாளர்கள் தயக்கம் நீக்கி ஆர்வம் காட்டவேண்டும். ஐரோப்பிய ஆவணப்பாதுகாப்பகங்களில் உள்ள ஆவணங்கள் தமிழக ஆய்வு மாணவர்களால் ஆராயப்பட்டு தமிழர் மற்றும் தமிழக வரலாறு பற்றிய புதிய  தரவுகளும் தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!

-முனைவர்.க.சுபாஷிணி, ஜெர்மனி

----------------------------------
நூல்:  தமிழக மக்கள் வரலாறு காலனிய வலர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் : ரகு அந்தோணி)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: 175/-