Wednesday, January 21, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 2


மூன்றாண்டுகளுக்கு முன்னர் நான் எழுதி தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுவில் வெளியிடப்பட்ட ஒரு பதிவு இது.  மீண்டும் சிறு மாற்றங்களுடன் பகிர்கிறேன்.


பகுதி 2

The Republic - சாக்ரடீசின் உரையாடல்கள் அடங்கிய ஒரு நூல்.  இது எழுதப்பட்ட காலம் கிமு.375. இந்த நூல் ஒரு அரசு எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை பல வகையில் அலசும் ஒரு கலந்துரையாடல் வகையில் அமைந்ததாகும். உலக அளவில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அரசியல் சித்தாந்தம் என இந்த நூல் கருதப்படுகிறது.

வெ.சாமிநாதசர்மாவின் இந்த நூலின் தமிழாக்கத்திலிருந்து சில பகுதிகளும் அது தொடர்பான எனது சிந்தனைகளும் தொடர்கின்றன.

இன்று ஆர்த்தடோக்ஸ் கிருத்துவ மதம் கோலோச்சும் கிரேக்கத்தில் அதன் பண்டைய சமயம் புராணங்களும் தெய்வங்களும் நிறைந்த சமய நெறியாகவே இருந்தது. சீயஸ், ஹீரா, அதேனா, அப்போலோ,  பொசைடோன், டைட்டன், எனப் பல பல கடவுள்கள் நிறைந்த சமயமாக பண்டைய கிரேக்க சமயம் விளங்கியது. இந்த தெய்வங்களை விவரிப்பதாகவும் அவர்களின் புகழைப் பாடுவதாகவும் பல புராணங்களை அக்காலத்தில் கிரேக்க புராண ஆசிரியர்கள் உருவாக்கி வைத்திருந்தனர்.  இன்றும் இந்த கிரேக்க தெய்வ வடிவங்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளில் முக்கிய அடையாளங்களாகவும் சின்னங்களாகவும் வைக்கப்பட்டிருப்பதையும், ஏராளமான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அருங்காட்சியகங்களில் இத்தெய்வங்களில் நூற்றுக்கணக்கான சிலைகள் பாதுகாக்கப்படுவதையும் நாம் காணலாம்.  இந்தத் தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட சிறப்பினை வெளிப்படுத்தும் தெய்வங்களாக பண்டைய கிரேக்க சமயம் வைத்திருந்தது. இவை பற்றிய புராணக்கதைகளை வெளிப்படுத்தும் வகையில் பல பல கோயில்கள் புடைப்புச் சிற்பங்களளாக இப்புராணக்கதைகளைத் தாங்கிய வடிவில் அக்காலத்தில் உருவாக்கப்பட்டன. கிரேக்க தலைநகரமான ஏதென்ஸ் இத்தகைய பல பல கோயில்களைக் கொண்டிருந்த ஒரு நகரமாகும்.

இன்று இந்த நூலின் பகுதி 2ல் சாக்டரடீசும் அடிமண்டசும் பேசிக் கொள்ளும் உரையாடலலில் சில பகுதிகளைக் காண்போம்.

//
அடி:  இவர்களுடைய கதைகளில் நீ என்ன குற்றம் கண்டாய்

சாக்: அழகில்லாத பொய்களை இவர்கள் தங்கள் கதைகளில் நுழைத்திருக்கின்றார்கள். இவர்களுடைய கதைகள் எப்படி இருக்கின்றனவென்றால், ஒரு சித்திரக்காரன் தான் எந்த உருவத்தை வரையவேண்டுமென்று சங்கற்பித்துக்கொள்கின்றானோ அந்த உருவத்துக்கு மாறான ஓர் உருவத்தை வரைவதை போலிருக்கின்றது.

அடி:  நீ சொல்வது வாஸ்தவம், சாக்ரடீஸ்.

சாக்: விபரீதமான குற்றங்களைச் செய்கின்ற கடவுளர்களைச் சிருஷ்டித்து, அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால், அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகின்றார்கள் தெரியுமா? ’கடவுளர்களே பல குற்றங்களைச் செய்திருக்கும் போது நாமும்தான் செய்தால் என்ன’ என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள். இந்த மாதிரி கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர ஒரு தெய்வத்திற்கு விரோதமாக மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, அல்லது யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லக் கூடாது. ராட்சதர்களோ அல்லது  தேவர்களோ  ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இவை போன்ற நீதிகளை போதிக்கின்ற கதைகளையே சொல்ல வேண்டும்.
//

சாக்ரடீஸ் கூறும் செய்தி முக்கியமானது!

சமயங்களை வளர்க்க பயன்படுத்தப்பட்ட உத்திகளில் ஒன்று தான் புராணக்கதைகளின் உருவாக்கம்.   கடவுளர்கள் மனிதர்களை விட பலம் பொருந்தியவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பெரிதுபடுத்திக்காட்ட புராணக்கதைகளை உருவாக்கும் போது அப்புராணங்களில் உருவாக்கப்படும் கடவுளர்களின் அல்லது முனிவர்களின் கதைகள் பொருளுள்ளனவாக அமைதல் மிக முக்கியம். ஒரு தெய்வத்தைத் தூக்கிப் பிடிக்க இன்னொரு தெய்வத்தை கீழிறக்குவது.. பின்னர் அதே தெய்வம் இன்னொரு இடத்தில் தவறிழைத்து சாபம் பெறுவது... இன்னொரு தெய்வத்திடம் மன்னிப்புக் கேட்டு பின்னர் மீண்டும் பிறவியெடுத்து தன் பாவத்தை போக்குவது என்பது போன்ற சிந்தனையைக் குழப்பும் கதைகளை நாம் குழந்தைகளுக்குச் சொல்லாமல் தவிர்ப்பது நல்லது. 

அர்த்தமுள்ள அறிவார்ந்த விஷயங்களைக் கதைகள் என்ற வடிவத்தில் இளம் வயதில் குழந்தைகள் மனதில் பதிய வைக்கப்பட வேண்டும். குறிப்பாக இயற்கை, விலங்குகள், சக மனிதர்கள் என இயற்கையோடு இயைந்த வகையிலான கதைகளாக அவை இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். கற்பனை கதைகளை வழங்கி இளையோரின் கற்பனை திறத்தை வளர்க்க விரும்பினால் அதில் சொல்லப்படும் விசயம்  மூடத்தனம் அற்ற வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவே அவர்களது எண்ண ஓட்டம் தெளிவாக இருக்கவும் அறிவார்ந்த வகையில் உண்மையை உண்மையாகவும், உள்ளதை உள்ளது போல அப்படியே காணவும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவும்.   

வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

No comments:

Post a Comment