Monday, January 12, 2015

சமணத் தடயங்களைத் தேடி - ஒரு பயணியின் பார்வையில்..!

மணற்கேணி ஆய்வு சஞ்சிகையில் வெளியிடப்பட்ட எனது கட்டுரை. July 2014

சமணத் தடயங்களைத் தேடி - ஒரு பயணியின் பார்வையில்..!
முனைவர்.க சுபாஷிணி , ஜெர்மனி

முன்னுரை

தென்னிந்திய கலாச்சார செழுமைக்கும் பண்பாட்டு வளங்களுக்கும் சமணம் வழங்கியிருக்கும் கொடை அளப்பறியது. தமிழக நிலப்பரப்பில் பல பகுதிகளில் சமணம் விரிவாக செழிப்புடன் இருந்த சுவடுகளை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. பொதுவாக நோக்கும் போது தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் அழிந்து மறைந்து விட்ட சமயங்களகாகப் பலர் நினைத்தாலும் பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட நிலை போலன்றி சமணம் இன்றளவும் சில குறிப்பிடத்தக்க இடங்களில் ஒழுகப்பட்டு வருவதையும்,வழிபாடுகள் நடைபெறும் ஜிநாலயங்களையும் காண முடிகின்றது. விழுப்புரம் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சிபுரம்  ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஜினாலயங்கள் இருக்கின்றன.

களப்பணிக்காக இவ்வாண்டு (2014) ஜூன் மாதம் தமிழகத்தில் சமணச் சுவடுகள் இருக்கின்ற சில ஊர்களுக்குச் சென்று அங்குள்ள சமணப் பள்ளிகள், ஜிநாலயங்கள், சமண மதத்தைச் சார்ந்தோருடன் நேரில் செய்த உரையாடல்கள், இச்சமயத்தை ஒழுகுவோரின் அன்றாட வாழ்க்கை நெறிகளை அறிந்து கொள்ளுதல்  என்ற நோக்கிலான ஆய்வுப்பயணத்தில், சமணத் தடயங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும் விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று இக்கட்டுரை ஆசிரியர் மூன்று நாட்கள்  செய்த கள ஆய்வுகளில் சேகரித்த தகவல்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பயணம் மேற்கொண்ட நாட்கள், ஊர்கள்
இக்களப்பணி மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயணத்தின் போது சென்று பார்த்து வந்த ஜினாலயங்களின் பட்டியல் நாட்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன

முதல் நாள் (ஜூன் 10, 2014)
  • மேல் சித்தாமூர், விழுப்புரம் மாவட்டம் - ஸ்ரீசேஷத்திர ஜினகாஞ்சி ஜைனமடம், ஸ்ரீ பகவான் ஆதிநாதர் ஜிநாலயம்
  • விழுக்கம் விழுப்புரம் மாவட்டம் - ஆதிநாதர் கோயில். (இக்கோயிலில் தங்கத்தேர் ஒன்று ஆலய நிர்வாகத்தின் பெருமுயற்சியிலும் பொது மக்கள் நன்கொடையினாலும் ஜினாலய மடங்களின் உதவியினாலும் உருவாக்கப்பட்டுள்ளது)
  • குணசாகராசாரியார் நினைவாலயம்
  • பெரமண்டூர், விழுப்புரம்  மாவட்டம் -  ஆதிநாதர் தீர்த்தங்கரர் கோயில்
  • பெரமண்டூர், விழுப்புரம்  மாவட்டம் - சந்திர நாதர் கோயில்

2ம் நாள்  (ஜூன் 11, 2014)
  • ஆலகிராமம், விழுப்புரம்  மாவட்டம் - ஆதிநாதர் தீர்த்தங்கரர் கோயில்
  • வளத்தி, விழுப்புரம்  மாவட்டம் - ஆதிநாதர் தீர்த்தங்கரர் கோயில்
  • தாயனூர், விழுப்புரம்  மாவட்டம் - மகாவீரர் கோயில்
  • பொன்னூர், திருவண்ணாமலை மாவட்டம்- ஸ்ரீ குந்த குந்தாச்சாரியார் நினைவாலயம்

3ம் நாள்  (ஜூன் 12, 2014)
  • திருமலை, திருவண்ணாமலை மாவட்டம் - ஸ்ரீஷேத்திர அரிஹந்தகிரி ஜைனமடம், நேமிநாதர் ஆலயம், மலைக்கோயில், பாதக்கமலங்கள், சமாதி
  • ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் -   கொசப்பாளையம்  ஸ்ரீ ஆதீஸ்வரஸ்வாமி ஆதிநாதர் கோயில்
  • பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் - பார்சுவநாத தீர்த்தங்கரர் கோயில்
  • பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் -  அருகர் கோயில் (பொன்னெழில் நாதர்) - ஆதிநாதர் கோயில்
  • திருப்பரம்பூர், காஞ்சிபுரம் மாவட்டம்
  • கரந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்  - ஸ்ரீமுனிகிரி திகம்பர ஜினாலயம்


​பயணம் மேற்கொண்ட ஊர்கள்

வரைபட குறிப்பு:
A - மேல் சித்தாமூர்
B - விழுக்கம்
C - பெரமண்டூர்
D - வளத்தி
E - பொன்னூர்
F - திருமலை
G - ஆரணி, பூண்டி
H - கரந்தை

மேற் பட்டியலிடப்பட்ட ஆலயங்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் வழிபடு தலங்களாக அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்கள், மடாலயங்கள் நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் பொதுவாகக் காணக்கூடிய சமணத்தடையங்களை இனி காண்போம்.

ஜிநாலயங்களின் வடிவமைப்பு பொதுவாகத் தமிழகத்தில் காணக்கூடிய ஆலயக் கட்டிட அமைப்பை ஒத்ததாகவே அமைந்திருக்கின்றது. குகைக் கோயில்களும், பாறைக்கோயில்களும் இத்தகைய அமைப்பு இல்லாமல் திறந்த நிலையிலேயே தனிச் சிற்பமாகவோ அல்லது  விமானத்துடன் கூடிய சிறு கோயில் அமைப்பிலோ இருக்கின்றன. ஏனையவை நான்கு புறமும் மதிற்சுவற் அமைக்கப்பட்டு  கோபுரத்தின் கீழ் ஒரு முன் வாயில் அமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. ஆலயப் பகுதி தூண்களோடு கூடிய முகமண்டபம், அதன் பின்னர் மகாமண்டபம், அதனை அடுத்து அர்த்தமண்டபம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தை அடுத்து கருவறை அமைந்திருக்கின்றது. கருவறைக்குள் மூலவருக்கான சிலை அமைந்திருக்கும். பொதுவாக  தியானத்தில் அமர்ந்த நிலையில் அல்லது நின்ற கோலத்தில் காணக்கூடிய தீர்த்தங்கரர் உருவச் சிலை கருங்கல் சிலை வடிவிலோ சுதைச்சிற்பங்களாகவோ,அல்லது பளிங்கினாலோ அமைந்திருக்கும். 

ஜிநாலயங்களின் அர்த்த மண்டபப் பகுதியின் வலது புறமும் இடது புறமும் வணங்குதற்குறிய சமண சின்னங்களும், தீர்த்தங்கரர்கள் வடிவங்களும், யட்ஷன் யட்ஷி வடிவங்களும், வழிபடு திருமேனிகளும் உலோகங்களால் அல்லது கருங்கல்லால் அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இவ்வகை வழிபடுதலுக்கான சின்னங்கள் ஏறக்குறைய எல்லா கோயில்களிலும் ஒரே வகையான வடிவத்தில் அமைந்திருக்கின்றன. இவற்றில் சிலவற்றைப் பற்றிய சிறு குறிப்புக்களை அடுத்து காண்போம்.

சமண ஆலயச் சின்னங்கள்

மகாமேரு - இச்சின்னம் சதுரமான அடிப்பகுதியின் மேல் தாமரை மலரின் இதழ்கள் போன்ற வடிவம் அமைந்து அதன் மேல் கூம்பு போன்ற அமைப்புடன் காணப்படும். உலகின் மத்தியில் அமைந்திருக்கும் சிகரமாகக் கருதப்படும் மகாமேரு மலையைப் பிரதிநிதிக்கும் வகையில் இது அமைந்திருக்கின்றது, மகாமேருவின் உச்சிப் பகுதியின் கீழே நான்கு அடுக்குகள் அமைந்து ஒவ்வொரு அடுக்கிலும் 16 ஜினபிம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இது உலோகத்தினால் செய்யப்பட்ட ஒர் வழிபடு சின்னம். தாயனூரில் அமைந்திருக்கும் மகாவீரர் கோயிலில் இருக்கும் மகாமேரு வடிவத்தில் சில வாசகங்கள் கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன.  முதல் அடுக்கில் தொடங்குகின்ற  வாசகங்கள் தொடர்ச்சியாக அடுத்த அடுக்குகளுக்கும் தொடர்ந்து கீழுள்ள சதுர அமைப்பு வரை சென்று முற்றுப் பெறுகின்றன.  தாயனூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.  கி பி. 15ம் நூற்றாண்டுக்கு முன்னர் தாயனூரில் சமண மடம் ஒன்று இருந்து பின்னர் அது அழிந்து மறைந்தது என்பதை மெக்கன்சி குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. (Mackenzie manuscripts, Mss No. 12, SCC 5)


​மகாமேரு (தாயனூர்)

பஞ்சபரமேஷ்டி சின்னம் - சமணவழிபாட்டு முறையில் தீர்த்தங்கரர்களை வணங்குவதோடு பஞ்ச பரமேஷ்டி வழிபாடு என்பதுவும் முக்கிய அமசமாக அடங்குகின்றது. பஞ்ச பரமேஷ்டிகளாகக் குறிப்பிடப்படுவோர் அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் ஆகியோர். இந்த ஐவரைக் குறிக்கும் உருவச் சிலைகளே சதுரமான பீடம் போன்ற அமைப்பின் மேல் வட்ட வடிவிலான ஒரு அமைப்பில் நான்கு புறங்களிலும் நடுப்புறத்திலும் அமைக்கப்பட்டு காணப்படும். பஞ்ச பரமேஷ்டிகளுக்கு வணங்கிச் சொல்லும் மந்திரம் பஞ்ச நமோஸ்கார மந்திரம் என்று அழைக்கப்படுகின்றது.

சமணச் சமயச் சின்னங்கள்


நவதேவதைகள் -  இதுவும் சதுரமான அடிப்பகுதி பீடத்தின் மேல்,  வட்ட வடிவில் அமைந்த எட்டு இதழ்களும் அதன் நடுவே ஒரு வட்ட வடிவ மையப்பகுதியும் என்ற வகையில் அமைக்கப்பட்டு பஞ்சபரமேஷ்டிகளின் சின்னங்களும் பொறுத்தப்பட்டிருக்கும். மேலிருந்து வலது புற சுழற்சியில் நோக்கும் போது 1,2,3,5,7 ஆகிய இதழ்களிலும் பஞ்ச பரமேஷ்டிகளின் உருவமும் 4வது இடத்தில் ஜின ஷைத்யாலயமும், 6வது இடத்தில்  அறத்தை பிரதிபலிக்கும் வகையில் சக்கரமும், 8ம் இடத்தில் ஆகமச் சுவடிகளைப் பிரதிபலிக்கும் சுவடிச் சின்னமும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் உருவமானது ஜைன அறங்களை ஒழுகிய ஆன்ம பக்குவத்தில் உயர்ந்த நிலை எய்திய  ஜீவனைக் குறிப்பது. இது ஒவ்வொரு தனிமனிதரும் ஆன்ம பக்குவத்தில் உயரும் பொருட்டு மேற்கொள்ளும் படி நிலைகளையும் அதற்கு உபயோகமாகும் சின்னங்களையும் குறிப்பதாக அமைந்திருக்கும் படிமம்.

அறவாழி - சதுரமான அடிப்பகுதியின் மேல் சக்கரம் இணைக்கப்பட்டது போன்று அமைக்கப்பட்டிருக்கும் வடிவம் இது. ஆன்மா மோட்ஷத்தை அடைய தர்மத்தை கடைபிடிக்க வேண்டியது அடிப்படை தேவை. இதனைக் குறிப்பதே இந்த அறவாழி சின்னம். இதில் தர்ம ஸ்தூபி, பூதம் கையிலேந்திய அறவாழி,  யக்‌ஷன் கையிலேந்திய அறவாழி ஆகிய வடிவங்களிலும் இச்சின்னம் அமைந்திருக்கும். உதாரணமாக பெரமண்டூர் ஆதிநாதர் கோயிலில் தர்ம ஸ்தூபி வைக்கப்பட்டுள்ளது. 

சித்தநிலை - வீடுபேறு அடைதலே ஒவ்வொரு ஜீவனுக்கும் குறிக்கோளாக அமைகின்றது. உடல் எடுத்த நிலையிலிருந்து பிரிந்து உயிரானது பிரிந்து தூய்மையான ஒளிபோன்ற நிலையைப் பெறும் நிலையை உணர்த்தும் சின்னம் இது.  இவை பலகையிலோ அல்லது உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மைய வெற்றிடமான பகுதி இதனைக் உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது. உதாரணமாக திருப்பரம்பூரில் அமைந்திருக்கும் ஒன்பதாவது தீர்த்தங்கரர் புஷ்பதந்தருக்கு அமைந்துள்ள கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலயத்தில் உலோகத்தினாலான சித்தநிலை படிமத்தைக் காணலாம். 

சுருத ஸ்கந்தம் - அச்சுப் பதிப்பு வரும் வரையிலும் நூல்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. அதனை நினைவூட்டும் வகையில் அமைந்த சின்னமே சுருத ஸ்கந்தம். பனை ஓலைச் சுவடியை சுருதி என்பது வழக்கம். சுருதிகளை வணங்கும் சிறப்புமிக்க நாளை சுருதபஞ்சமி என்பதும் வழக்கம். இந்தச் சின்னத்தில் சமண ஆசிரியர்கள் எழுதிய சுவடிகளை மரம் போலவும் அதன் கிளைகளாகவும் பாவித்து அமைப்பர். இந்த ஒவ்வொரு கிளைகளிலும் சுருதிகளின் பெயர்களை எழுதி வைத்திருப்பர். அவை இந்த படிமத்தில் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப் படிமம் ஒரு குறிப்பிட்ட அளவு என்றில்லாமல் சில சிறியதாகவும் சில உயரமாகவும் என மாறுபட்ட அளவில் அமைக்கப்பட்டிருக்கும். இந்தச் சின்னம் மட்டுமன்றி ஜிநாலயங்களில் பனை ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. 
​​
சதுர்முகி - ஒரு சிறு கோயில் போன்ற வகையில் அமைக்கப்பட்ட வடிவம் இது. தாயனூர் மகாவீரர் ஆலயத்திலும் திருமலை கீழ் குகைகோயிலிலும் இந்தச் சதுர்முகி வடிவத்தைக் காணலாம். சமவசரனத்தில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் ஜினர் வடிவம் இதில் அமைக்கப்பட்டிருக்கும். இது பொதுவாக கருங்கல்லால் அமைக்கப்பட்டிருக்கும். 

ஜினபிம்பங்கள் - பல தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டது போல உலோகத் தகட்டில் இருக்கும் ஒரு சின்னம் இது. 9 பிம்பங்கள் மட்டும் இருக்கும் இவ்வகைச் சின்னம் நவகிரக தீர்த்தங்கரர்கள் என்றும், 24 பிம்பங்கள் கொண்டது சதுர்விம்சதி என்றும், 52 பிம்பங்கள் இருந்தால் நந்தீசுரதீபம் என்றும் 72 பிம்பங்கள் இருந்தால் திரிகால தீர்த்தங்கரர்கள் என்றும் 1008 பிம்பங்கள் இடம் பெற்றால் சஹஸ்ரகூடம் என்றும்  குறிப்பிடப்படும் (சமண வரலாறு). அனேகமாக எல்லா ஜினாலயங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இவ்வகைச் சின்னங்களைக் கானலாம்.

அஷ்டமங்கலப் பொருட்கள் - அர்த்தமண்டபத்தில் தீர்த்தங்கரர் திரு உருவத்தின் முன் அல்லது ஒரு பகுதியில் இந்தப் பொருட்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். நீர்கெண்டி, ஆலவட்டம், பூரணக்கும்பம், கொடி,  சந்தனக் கிண்ணம், குடை, கண்ணாடி, சாமரம் ஆகியனவே இந்த 8 மங்கலப் பொருட்களும். இவை தினசரி பூஜையின் போது பயன்படுத்தப்படும்.


அஷ்டமங்கலச் சின்னங்கள் (விழுக்கம்)

மூலஸ்தான தீர்த்தங்கரர் வடிவங்கள்

விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஜிநாலயங்களில்  பல, ஆதிநாத தீர்த்தங்கரருக்காக அமைக்கப்பட்ட கோயில்களே. கருவறைப் பகுதியில் மூலஸ்தானத்தில் ஆதிநாதர் உருவம் இடம்பெற்றிருந்தாலும் ஏனைய தீர்த்தங்கரர்களான பார்சுவநாதர், மகாவீரர், புஷ்பதந்தர், சந்திரபிரபர், நேமிநாதர்  ஆகியோரது உருவத்தின் கருங்கற் சிலைகளோ உலோக சிற்பங்களோ ஆலயங்களில் கூடுதலாக இடம்பெறுகின்றன. சில கோயில்களில் பாகுபலி உருவச் சிலையும் தனிப் பகுதியில் சிறப்புடன் நின்ற கோலத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆதிநாத தீர்த்தங்கரர் - ரிஷபநாதர் அல்லது அருகன் என்றும் வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர் இவர். விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான கோயில்கள் ஆதிநாத தீர்த்தங்கரருக்காக எழுப்பப்பட்ட கோயில்களாகவே அமைந்திருக்கின்றன. ஆதிநாதர் 24 தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரர் ஆவார்.  இவர் அயோத்தி என்னும் நகரில் நாபி என்பவருக்கும் மருதேவி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். இவருக்கு இரண்டு மனைவியவர் என அறிகின்றோம். யசஸ்வதி, சுநந்தை ஆகியோரே இவ்விருவரும். யசஸ்வதியின் மகன் பரதன், மகள் பிராமி.  சுகந்தையின் வாரிசாக அமைந்தவர் பாகுபலியும் சுந்தரியும். ஆதிநாதர் தம் இரு மகள்களில் பிராமிக்கு எழுத்தைக் கற்றுத் தந்தார் என்றும் சுந்தரிக்கு எண்களைக் கற்றுத் தந்தார் என்றும் குறிப்புக்களில் காண்கின்றோம். பிராமி என்ற பெயர் காரணத்தினாலேயே தமிழ் எழுத்துக்களின் பெயர் பிராமி என்ற பெயர் கொண்டது என்ற தொடர்பினையும் காண்கின்றோம். ஆதிநாதர் தமது முதுமை பருவத்தில் இமயமலைப் பகுதியில் கடுந்தவம் புரிந்து தம் தவ வலிமையால் மோட்ஷம் பெற்றார். ரிஷபநாதரின் சின்னம் நந்தி. இவரது உருவச் சிலைகளில் தலைப்பகுதிக்கு மேல் முக்குடை அமைப்பு இருப்பதைக் காணலாம்.

பார்சுவநாத தீர்த்தங்கரர் - வாரணாசியின் அரசன் விஸ்வசேனாவிற்கும் அவர்தம் துணைவி பிராமிக்கும் குமாரனாகப் பிறந்தவர் இவர். இந்திய தேசத்தின் நாகர்கள் எனப்படும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவர் தேவதாரு மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார் என்ற குறிப்புக்களை காண்முடிகின்றது. நாகம் இவரது சின்னம். ஐந்தலை நாகம் குடைபோல் விரிந்த நிலையில் பார்சுவநாதர் தலைப்பகுதிக்கு மேல் இருப்பது போல இவரது உருவச் சிலைகள் அமைந்திருக்கும்.

வர்த்தமான மகாவீர தீர்த்தங்கரர் - சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் இறுதியானவர். இவரது இயற்பெயர் வர்த்தமானர். தீர்த்தங்கரர்களில் இவரது காலம் மட்டுமே அறியப்படுவதாக இருக்கின்றது. கிமு.599ல் குண்டலபுரத்தில் அரசகுலத்தில் சித்தார்த்தன் பிரியதர்சினி ஆகியோருக்குக் குமாரனாகப் பிறந்தவர் இவர். இவர் தமது 30ம் அகவையில் அரச குல வாழ்க்கையைத் துறந்து துறவு பூண்டு  12 ஆண்டுகள் துறவு நிலை மேற்கொண்டார். இவர் அகிம்சையை போதித்தவர். புலால் தவிர்த்த சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்று மக்களுக்குப் போதித்தவர் இவர்.  புத்தரும் இவரது சமகாலத்தவர் என்று அறிகின்றோம். திருமலை குந்தவைக் கோயில் என அறியப்படும் மகாவீரர் கோயில்  ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவை பிராட்டியாரால் அமைக்கப்பட்டது. 

சந்திரபிரப தீர்த்தங்கரர் - இவர் அரச குலத்தவர்.  வட இந்தியாவில் கங்கை நதிக்கரையோர நகரான சுகந்திலை என்னும் ஊரில் மகாசேனன் - லட்சுமனை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். சம்மேத சிகரத்தில் மோட்ஷ கதி அடைந்தார் என்ற குறிப்புக்கள் கிடைக்கின்றன. இவரது உருவச் சிலைகளின் கீழ் இளம்பிறை பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புஷ்பதந்த தீர்த்தங்கரர் - காகந்தீபுரம் என்ற நாட்டில் சுக்ரீவன் - ராமை ஆகியோருக்கு குமாரனாகப் பிறந்தவர் இவர். முதலை வடிவமே இவரது சின்னம். சம்மேத சிகரத்தில் மோட்ஷ கதி அடைந்தார் என்ற குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நேமிநாத தீர்த்தங்கரர் - இவர் நமி நாதர், அரிஷ்டநேமி  என்ற பெயர்களுடனும் குறிப்பிடப்படுபவர். 24 தீர்த்தங்கரர்களில் 22மவர். நேமிநாதர் சிலைகளில் சங்குச் சின்னத்தையும் காணலாம். மிகப் பிரமாண்டமான வடிவிலான நேமிநாதர் புடைப்புச் சிற்பம் திருமலை பாறைக்கோயிலில் காணலாம். இப்புடைப்புச்சிற்பம் 16 1/2 அடி உயரத்தில் பாறைமேல் தனி உருவமாக கருங்கல்லில் அமைக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் மிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.


நேமிநாதர் (திருமலை)


இயக்கன் இயக்கி

தீர்த்தங்கரர்களுக்குத் துணையாக இருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்து காக்கும் இயக்கன் இயக்கி (யட்ஷன் - யட்ஷி) வடிவங்களையும் தமிழக ஜிநாலயங்களில் காண்கின்றோம். 

ஜ்வாலாமாலினி, தர்மதேவி, பத்மாவதி, ஜினவாணி/சரஸ்வதி, சக்கரேஸ்வரி, கூஷ்மாண்டி ஆகிய உருவங்கள் ஜிநாலயங்களில் காணப்படும் யட்ஷி வடிவங்கள். இவை சாசன தேவதைகள் என்றும் குறிப்பிடப்படுபவை. யட்ஷிகளைப் பற்றி தனித்தனியாகக் காண்போம்.

ஜ்வாலாமாலினி இயக்கி - இந்த இயக்கி எட்டு கரங்களுடன் காட்சி தருபவர். ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதம் தாங்கியிருக்கும் வகையில் இவரது உருவத் தோற்றம் அமைக்கப்பட்டிருக்கும். இவரது சிரசில் கொழுந்து விட்டெரியும் அணல் மகுடம் போன்ற வடிவைக் காணலாம். திருமலை சமண மடத்தில் வராஹி கோயிலில் இவரது கருமையான பெரிய உருவச் சிலையைக் காணலாம். இவரது வாகனம் எருமை. இந்து தெய்வங்களில் கொற்றவை உருவத்தைப் போன்ற வடிவாக ஜ்வாலாமாலினி வடிவத்தைக் காண்கின்றோம். மேல் சித்தாமூர் ஜின காஞ்சி மடத்தின் ஆதிநாதர் கோயிலில் ஜ்வாலாமாலினி இயக்கிக்கு ஒரு சன்னிதி இருக்கின்றது. அதே போல பூண்டி பொன்னெழில்நாதர் ஆதிநாதர் ஜிநாலயத்தில் ஜ்வாலாமாலினிக்கு ஒரு தனி சன்னிதி அமைந்திருக்கின்றது.

பத்மாவதி இயக்கி - தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் இவரது தோற்றம் இருக்கும். பரவலாக பல கோயில்களில் இவரது உருவச் சிலைகளைக் காணமுடிகின்றது. கோழி இவரது வாகனம் . நாகர் இனத்தைச் சேர்ந்தவராக இவர் இருக்கலாம் எனபதைக் காட்டும் வகையில் சிகரத்தில் பார்சுவநாதரைப் போலவே நாகக் குடையுடன் பத்மாவதி இயக்கியின் திருவுருவச் சிலைகளும் காட்சியளிக்கின்றன. இவர் பார்சுவநாதரின் இயக்கி என்றும் அறியப்படுபவர். பூண்டி பொன்னெழில்நாதர் ஆதிநாதர் ஜிநாலயத்தில் பத்மாவதி இயக்கிக்கு ஒரு தனி சன்னிதி அமைந்திருக்கின்றது.

ஜினவானி (சரஸ்வதி) - சுருதி என்ற பெயரும் இந்த தேவதைக்கு உண்டு.  ஆகமங்களின் கலைஞானத்தின் தலைவியாகக் கருதப்படுபவர் இவர். வித்யாதேவி என்றும் அழைக்கப்படுபவர். அமர்ந்த நிலையில் கையில் வீணையேந்தி காட்சி தரும் உருவச் சிலைகள் ஜிநாலயங்களில் உள்ளன. மேல் சித்தாமூர் ஜின காஞ்சி மடத்தின் ஆதிநாதர் கோயிலில் ஜினவானிக்கு ஒரு சன்னிதி இருக்கின்றது. பூண்டி பொன்னெழில்நாதர் ஆதிநாதர் ஜிநாலயத்திலும் சரஸ்வதிக்கு ஒரு தனி சன்னிதி அமைந்திருக்கின்றது.

தர்மதேவி - தர்மத்தை பெண் வடிவமாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் வடிவம் இது. தர்மதேவி இருக்கும் இடம் காமகோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவர் தன் வலது கையில் நீலோற்பவ மலரை தாங்கியிருப்பார். இவரது சிற்பத்தோடு மாமரமும் இணைந்திருக்கும். தர்மதேவியின் பழமையான ஒரு குடைவரை  புடைப்புச்சிற்பம் திருமலை குகைக் கோயிலில் காணப்படுகின்றது. தர்மதேவியின் மற்றுமொரு பிரமாண்டமான சுதைச் சிற்பம் கரந்தை ஜிநாலயத்தில் ஒரு தனிக் கோயிலில் காணப்படுகின்றது. பூண்டி பொன்னெழில்நாதர் ஆதிநாதர் ஜிநாலயத்திலும் தர்மதேவிக்கு ஒரு தனி சன்னிதி அமைந்திருக்கின்றது.


தர்மதேவி (கரந்தை)


சக்கரேஸ்வரி இயக்கி - எட்டு கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஒரு ஆயுதத்தை தாங்கிக்காட்சியளிக்கும் இத்தேவதையின் வடிவம். இவரது வாகனம் கழுகு. பூண்டி பொன்னெழில்நாதர் ஆதிநாதர் ஜிநாலயத்தில் சக்கரேஸ்வரிக்கு ஒரு தனி சன்னிதி அமைந்திருக்கின்றது.

கூஷ்மாண்டி (அம்பிகா) -  நேமிதாத தீர்த்தங்கரரின் இயக்கி என அறியப்படுபவர். அமரா என்ற பெயரும் இவருக்கு உண்டு. கூஷ்மாண்டி வடிவத்தோடு இரண்டு குழந்தைகளும் இடதுபக்கத்தில் ஒரு தோழிப் பெண் உருவமும் இணைத்தே வைக்கப்பட்டிருக்கும்.  காலடியில் ஒரு சிங்கம் அமர்ந்திருக்க அதன் மேல் ஒரு பாதத்தை வைத்து அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ கூஷ்மாண்டி வடிவம் அமைக்கப்பட்டிருக்கும்.

தர்மதேவியைப் போல தர்மயட்ஷன் (ஆண் தேவர்கள்) தீர்த்தங்கரர்களுக்குப் பணிவிடை செய்வதன் பொருட்டும் பாதுகாக்கும் துணையாகவும் சமண சமயத்தில் கருதப்படுகின்றனர். ஜிநாலயங்களில் யட்ஷன்-யட்ஷி உலோகச் சிலைகள் ஏனைய மங்கலக் சின்னங்களோடு இணத்து வைக்கப்படிருப்பதையும் காணமுடிகின்றது. உதாரணமாக விழுக்கம் ஆதிநாதர் கோயிலில்  இணைந்து நிற்கும் யட்ஷன்-யட்ஷி உலோக உருவச் சிலைகளைக் காணலாம். தர்மயட்ஷன் வடிவம் மெலிதான தோற்றத்துடனும் தலைச்சிகரத்தின் மேல் அறவாழி என்ற தர்மசக்கரம் பொருந்திய கிரீடம் கொண்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

பிரம்ம தேவர் அல்லது ஐயனார் - சாஸ்தா, சாத்தன் என்ற ஏனைய பெயர்களும் இவருக்கு அமைந்திருக்கின்றது. யானைமேல் அமர்ந்த வகையில் சற்றே பருமனான உடல் தோற்றத்துடன்  இந்தச் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருமலை குகைக்கோயிலில் இத்தகைய ஒரு வடிவம் புடைப்புச் சிற்பமாக அமைந்திருக்கின்றது. தாயனூர் வர்த்தமான மகாவீரர் ஆலயத்திலும் கருங்கல்லினால் ஆன யானைமேல் அமர்ந்த நிலையிலிருக்கும் பிரம்மதேவர் சிலை ஒன்றிருக்கின்றது. மேல்சித்தாமூர் ஆதிநாதர் கோயிலில் வரிசையாக அமைக்கப்பட்ட தனிச்சன்னிதியில்  பிரம்மதேவர் சிற்பம் அமைந்துள்ளது. பிரம்ம தேவர் என இவருக்கு அமைந்துள்ள பெயர் இந்து சமயத்தின் மூன்று முக்கிய கடவுளர்களாக கொள்ளப்படும் பிரம்மா-விஷ்ணு-சிவன்  மூவரில் குறிப்பிடப்படும் பிரம்மனைப் பெயரளவில் ஒத்ததாக இருப்பினும் வடிவத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன. பிரம்மனுக்குறிய நான்கு தலைகள் என்பது இல்லாமல் சமண பிரம்ம தேவர் தோற்றம் காட்சியளிக்கின்றது. ஆனால் இந்த பிரம்ம தேவர் வடிவமே இன்று பரவலாக தமிழகம் முழுவதும் கிராமத்து கோயில்களிலும் தனிக் கோயில்களிலும் காணப்படும் ஐயனார் வடிவம் என்பது மறுப்பதற்கில்லை.

பாகுபலி  - இவர் ரிஷபநாதர் அல்லது ஆதிநாத தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் முதலாம் தீர்த்தங்கரருக்கு மகனாகப் பிறந்தவர். துறவிலும் தவத்திலும் நாட்டம் மிகக் கொண்டு கடுந்தவம் மேற்கொண்டவர். இவர் மேல் செடி கொடிகள் முளைத்து இவர் உடலை மறைத்ததாகக் கூறுவர். இதனை விளக்கும் வகையில் இவரது உடலில் கால்களிலும் கைகளிலும் கொடிகள் செதுக்கப்பட்டிருக்கும் வடிவுடன் காட்சி தருவார். பாகுபலியின் உடலின் மேல் சுற்றியிருக்கும் கொடிகள் வாஸந்திக் கொடி அல்லது மாதவிக்கொடி என்ற பெயரில் அழைக்கப்படும் காட்டுக் கொடிகள் (திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு). விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காணக்கூடிய பல கோயில்களிலும் பாகுபலியின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன.  திருமலை, விழுக்கம், கரந்தை, திருப்பறம்பூர் ஆகிய ஜினாலயங்களில் பாகுபலியின் கருங்கற்சிலை அல்லது உலோக சிற்பங்கள் இடம்பெறுகின்றன.

பாகுபலி

சமண நினைவுச் சின்னங்கள்

திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம்  மாவட்டங்கள் சமணச் சின்னங்கள் நிறைந்த பகுதி என்பதில் மறுப்பேதுமில்லை. சமணப் பள்ளிகளும் சமணப் படுக்கைகளும் மலை பாறைகள் நிறைந்த பகுதிகளில்  காணப்படுகின்றன. இதனைத் தவிர்த்து சமண ஆசிரியர்களை நினைவு கூறும் சில சின்னங்களையும் இப்பகுதிகளில் காண முடிகின்றது. 

குணசாகரர் நினைவு மண்டபம் - 11ம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்தவர் எனக் கருதப்படும் குணசாகர ஆசாரியாருக்கு விழுக்கம் நகரில் ஒரு நினைவு மண்டபம் அமைந்திருக்கின்றது. குணசாகர ஆசாரியார் யாப்பருங்கல காரிகை  என்னும் தமிழ் இலக்கண நூலுக்கு விருத்தியுரை எழுதியவர். மூன்று பக்கம் மட்டும் சுவர் எழுப்பப்பட்டு தூண்களோடு நிற்கும் இம்மண்டபத்தின் மையப் பகுதியில் வட்ட வடிவிலான ஒரு அமைப்பின் மேல் குணசாகரரை நினைவு கொள்ளும் வகையில் இரு பாதங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பாதங்கள் அமைந்திருக்கும் மேடையின் கீழ் பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபம முறையாகப் பாதுகாக்கப்படாமையினாலும் அதன் மேல் கண்ணாடி பாட்டில்கள் உடைக்கப்பட்டு சேதம் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாலும் இந்த எழுத்துக்களைச் சரி வரக் காணக்கூடியதாக இல்லை. ஆயினும் வடிவங்கள் கிரந்த எழுத்துக்களாக இருக்கலாம் என்றே கருதத் தோன்றுகின்றது. 

பொன்னூர் ஸ்ரீ குந்த குந்தாச்சாரியார் - கர்நாடக மாநிலத்தின் சிரவண பெலகோலா சமண மையத்திலிருந்து தெற்கு நோக்கி வந்த சமண முனிவர்களில் சிலர் காஞ்சி, வந்தவாசி பகுதிகளில் வந்து தங்கியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரே குந்த குந்தாச்சாரியார். இவருக்கு ஹேளச் சாரியார் என்ற பெயரும் உண்டு. இவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மலைக்கோயில் வந்தவாசிக்கு அருகே அமைந்துள்ள பொன்னூரில் இருக்கின்றது.  மலை உச்சியின் மேல் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலே அமைக்கப்பட்டுள்ள கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை வழிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நினைவு மண்டபத்தில் குந்த குந்தரின் கருங்கல் சிலையும் கருங்கல்லில் உருவாக்கப்பட்ட பாதக் கமலங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவரே திருக்குறள், சமய சாரம், நியம சாரம் , சித்தாந்த பாகுடம், மோட்ஷ பாகுடம் முதலான் 84 தமிழ் நூற்களை எழுதியவர் என்று குறிப்பிடப்படுகின்றார்.


பொன்னூர் ஸ்ரீ குந்த குந்தாச்சாரியார் நினைவு மண்டபத்தில்

திருப்பறம்பூர் துறவியர் நினைவாலயம் - திருப்பறம்பூர் புஷ்பதந்தர் ஆலயத்தில் மூன்று சமண ஆசாரியர்களுக்காகத் துறவியர் மண்டபம் எழுப்பப்பட்டுளளது. முனி ஸ்ரீ தர்மசாகரர், முனி சுதர்மசாகரர், கஜபதிசாகரர் ஆகியோரது நினைவாக திருவடிகள் வைக்கப்பட்டுள்ளன.  ஸ்ரீ தர்மசாகரர்,  சுதர்மசாகரர், கஜபதிசாகரர் ஆகியோரது தந்தையாவார். கஜபதிசாகரரின் சமாதி இந்தக் கோயிலின் வாயில் புறத்தில் இடது மூலையில் ஓரிடத்தில் அமைந்திருக்கின்றது.


சமண மடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மேல் சித்தாமூர் ஜைன மடம் ஜின காஞ்சிமடம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. மேல் சித்தாமூர் மடத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் மெக்கன்சி தொகுப்பு MSSII Sec. 2, திண்டிவணம் வட்டத்தில் உள்ள உப்புவேலூரைச் சேர்ந்த சமணப் பெரியார் வீரசேனாச்சாரியார் என்பவரே சிரவணபெலகோலா சென்று கற்று பின்னர் மீண்டும் சமண நெறி பரப்ப தமிழகம் வந்து சித்தாமூரில் மடத்தை தோற்றுவித்தார் என்ற குறிப்புக்களைத் தருகின்றது. மெக்கன்சி தனது கருத்தின்படி காஞ்சிபுரத்தில் ஜினகாஞ்சி மடம் இருந்து அழிந்ததாகவும் அதுவே மேல்சித்தாமூரில் புது வடிவத்துடன் தோற்றுவிக்கப்பட்டது என்றும் கருதுகின்றார். (சமணத் தடையம், கட்டுரை:மேல்சித்தாமூர் மடத்து ஓலைச்சுவடிகள்)  மெக்கன்சி தொகுப்பு வீரசேனாச்சாரியாருக்குப் பிறகு அடுத்தடுத்து தலைமைப் பொறுப்பேற்ற மடாதிபதிகளில் சிலரது பெயர்களையும் பட்டியலிடுகின்றது.இவர்களில் கி.பி.1816ம் ஆண்டில் மடாதிபதியாகத் திகழ்ந்த முனிபத்ர தேவாச்சாரியாரை மெக்கன்சி சந்தித்தமையும் குறிப்புக்களில் இடம்பெறுகின்றன. தற்சமயம் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்று மடத்தின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மடத்தைச் சார்ந்து பள்ளிகளும் சில ஜிநாலயங்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் சிறந்த தொண்டாற்றி வருகின்றது.


​மேல் சித்தாமூர் சமண மடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருமலை சமண மடங்களில் தனிச்சிறப்பு பெறுவது. மிகப் பழமை வாய்ந்த மடங்களில் ஒன்று இந்தத் திருமலை ஜைன மடம். இதன் தற்போதைய மடாதிபதியாக இருப்பவர் ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள். இந்தத் திருமடத்தில் பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மடத்தின் மேற்பார்வையில் பாலர் பள்ளி, ஆரம்பப்பள்ளி இடைநிலைப்பள்ளி ஆகியவையும் கல்விச்சேவையைப் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றது. அத்துடன் கல்லூரி மாணவர்களுக்குத் தங்கும் வசதி அமைத்துப் பல்கலைக்கழகக் கல்விக்கு பொருளுதவியும் செய்து வருகின்றது. சமணம் வேளாண்மையைப் போற்றி வளர்த்தது என்பதை அறிவோம். இதன் அடிப்படையில் மடத்தை ஒட்டி வயல் வெளிகளில் இயற்கை வேளாண்மையும் நடைபெற்று வருகின்றது.  


​திருமலை சமண மடத்தின் பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி (மாணவர்களுடன் மடாதிபதியும், நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும்)


இக்கால நிலையில் சமணம்

ஜிநாலயங்களில் வழிபாடு என்பது இந்து சமயக் கோயில்களில் நடைபெறும் வழிபாடு போல இருந்தாலும் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகளைக் காண்கின்றோம். ஆண் பெண் இருபாலரும் இணைந்து வழிபடும் நிலை இருக்கின்றது. ஆலயங்களில் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. திருமணங்களை மடாதிபதிகள் மிக எளிமையான வகையில் செய்து வைக்கும் நிலையும் உள்ளது. சமணர்களுக்குள்ளே சாதி வேறுபாடு என்பது வழக்கில் இல்லை. ஆண்கள் பூணூல் அணிந்திருக்கின்றனர். சமணர்கள் சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கத்தை கடுமையாகப் பேணுகின்றனர். சமணர்களில் பலர் ஒரு நாள் இரண்டு வேளை மட்டுமே உன்ணும் நோன்பை கடைபிடிக்கின்றனர். களப்பணி மேற்கொண்ட பகுதிகளில் சமண சமயத்தவர் இல்லங்கள் இருக்கும் வீதிகள் சிறு சிறு வரிசை வீடுகளாக அமைந்து தூய்மையாகப் பேணப்படுவதையும் சாலைப் பகுதிகளும் தூய்மையாக அமைந்திருப்பதையும் காண முடிகின்றது.

குறிப்பு:
இக்கட்டுரை ஆசிரியர் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வோராண்டும் வரலாற்றுச் சிறப்பு நிறைந்த பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள வரலாற்றுச் சுவடுகளைப் பற்றி அறிந்து குறிப்புக்கள் எழுதி அதனை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார். 2014ம் ஆண்டு ஜூன் 10,11,12ம் தேதிகளில் மேற்கொண்ட பயணத்தில் சேகரித்த குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது இக்கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியரின் பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில்http://www.tamilheritage.org/, valippuuvil http://tamilheritagefoundation.blogspot.com/ காணலாம்.  தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டூழிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவிய நூல்கள்:
  • ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
  • த.ரமேஷ், நடுனாட்டுச் சமணக் கோயில்கள்
  • நடன காசிநாதன், மாசந்திரமூர்த்தி, சமணத் தடயம்

முற்றும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தக் கட்டுரை எனது ஜூன் மாத தமிழக பயணத்தின் போது நான் சென்று வந்த விழுப்புரம் திருவண்ணாமலை பகுதி சமண தடயங்களைக் குறிப்புக்களாகக் கொண்டும் மேல்சித்தாமூர், திருமலை ஜைன மடங்களின் தலைவர்கள் அளித்த தகவல்கள் துணை நூல்கள் கொண்டும் எழுதப்பட்டது. 

இந்த பயணம் 3 நாட்கள் என ஜெர்மனியில் இருந்த போதே ஏற்பாடு செய்திருந்தேன். திருவண்ணாமலை நண்பர் பிரகாஷ்  சுகுமாரனிடமும் சென்னையில் பானுகுமாரிடமும் விபரங்கள் கேட்டு மடங்களில் மடாதிபதிகளைப் பேட்டி காண அனுமதி பெற்றுத் தரக் கேட்டிருந்தேன். பானுகுமார் அவர்களின் உதவியால் மடாதிபதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

என்னுடன் பயணத்தில் இணைந்து வர தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.பத்மாவும் இணங்கினார்கள். இது எனக்கு மேலும் இந்தத் திட்டத்தைப், பதிவுகளைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.

பயணம் எப்படி செல்லப்போகின்றோம் என யோசித்துக் கோண்டிருந்த எங்களுக்கு ப்ரகாஷின் மைத்துனி ஹேமா தானே சென்னையிலிருந்து எங்களை தனது காரில் அழைத்துச் செல்ல, அது மிக சுவாரசியமான ஒரு பயணமாக   அமைந்தது. சென்னையிலிருந்து திண்டுக்கல் சென்று சற்று தூரத்தில் ப்ரகாஷையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். 

  • முதலில் மேல்சித்தாமூர் திருமடம்.
  • எங்களுக்காக ஒரு நாள் தனது ஏனைய பணிகளை விட்டு விட்டு நேரம் ஒதுக்கி முழு நாளும் எங்களுடன் இருந்தார் சுவாமிகள். சில இடங்களுக்கு எங்களோடு இணைந்து வந்ததோடு மடத்தைச் சார்ந்த பள்ளியில் எங்களைப் பேச வைத்து சதோஷித்தார்கள். பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். காலை உணவும் மதிய உணவும் வழங்கி பசி தீர்த்து வைத்தார்கள்.
  • அன்று இரவு திருவண்ணாமலை சென்று சேர்ந்து ப்ரகாஷ் இல்லத்தில் தங்கினோம். அவரது இல்லாளின் இனிய கவனிப்பில் அன்றைய இரவு கழிந்தது.
  • மறுநாள் பொன்னூர், தாயனூர் என சில இடங்கள் சென்று மாலை திருமலை வந்தடைந்தோம். ஹேமாவிடமிருந்தும் ப்ரகாஷிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு திருமலை ஜைன மடத்தின் விருந்தினர் மாளிகையிலேயே நானும் டாக்டர்.பத்மாவும் தங்கியிருந்தோம். அன்று இரவு எங்களுக்கு அளிக்கப்பட்ட இரவு உணவின் சுவையை விளக்க வார்த்தைகள் கிடையாது. கேசரி, உப்புமா, சப்பாத்தி, குருமா என சுவையான விருந்து அளித்து மகிழ்ந்தார்கள் மடத்தின் பொருப்பாளர்கள்.
  • மறுநாள் காலையிலேயே திருமலை திருமடத்தின் சுவாமிகளைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. எனது பேட்டி பதிவிற்காக இரவே பெங்களூரிலிருந்து புறப்பட்டு வந்தமையைக் குறிப்பிட்டார்கள். மிக எளிமையான மனிதர். ஆனால் செய்து கொண்டிருக்கும் பணிகளோ மகத்தானவை. அன்று காலையிலிருந்து எங்களுடன் இருந்து பேட்டி அளித்து அதன் பின் உணவளித்து, மடம் நடத்தும் பள்ளியில் என்னை உரையார்ற வைத்து பின்னர் எங்களை மதியம் மடத்தின் வாகனத்திலேயே செயலாளர் மற்றும் ஒரு உதவியாளருடன் சென்னைக்குச் சென்று திருவான்மியூர் வரை எங்களை விட்டு வர ஏற்பாடும்செய்தார்கள். இடையில் பூண்டி ஆரணி, கரந்தை என ஜிநாலயங்களைப் பார்த்து தகவல் சேகரித்துக் கொண்டே பயணித்தோம்.

இந்த 3 நாள் நிகழ்வின் போது கிடைத்த மடத்தைச் சார்ந்தோரின் கணிவான உபசரிப்பை  என்னால் நிச்சயம் மறக்க இயலாது.

அடுத்த  தினங்களில் சில ஒளிப்பதிவு பேட்டிகளை பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து இந்த இழையில் பயணத்தின் போது பதியப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதோடு இப்பதிவுகளுக்கு எனக்கு உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள்
  • ப்ரகாஷ் சுகுமாரன்
  • ஹேமா
  • இரா.பானுகுமார் 
  • டாக்ட.பத்மாவதி
ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.


புகைப்படத்தில் என்னுடன் டாக்டர்.பத்மா, ப்ரகாஷ், ஹேமா மற்றும் கலைஞர் டிவி நிருபர்.



மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகளுடன்



பள்ளிக் குழந்தைகளுக்கு மடத்தின் வாசலிலேயே சொற்பொழிவு செய்தோம்





5ம் 6ம் வகுப்பு மாணவிகள்



5ம் 6ம் வகுப்பு மாணவர்கள்



நான் மாணவர்களிடம் பேசுகின்றேன்



மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் எனக்கு சிறப்பு செய்கின்றார்

சுபா

2 comments:

  1. சமணம் தொடர்பான பல ஐயங்களுக்கு தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி சுபா. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சமணம் சார்ந்த நிறைய புதிய செய்கள்.மிக்க மகிழ்ச்சி.நன்றி சுபா

    ReplyDelete