Monday, March 20, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 110

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு அச்சுப்பதிப்பு உருவாக்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது . உ.வே.சா தனது கல்லூரி வேலை நேரம்
தவிர்த்து ஏனைய நேரங்களை முழுமையாக தனக்கு இதுவரை கிடைத்த ஏட்டுச்சுவடி பாடபேதங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த ஆய்வில் அவரிடம் இதுவரை கிடைத்த நூற்கள் முழுமையானவை இல்லை என்ற எண்ணம் அவருக்கு உருவாகத்தொடங்கியது. கிடைத்தவரைக்கும் வைத்துப் பதிப்பித்து புகழ் தேடிக்கொள்வோம் என்றில்லாது, செய்வன திருந்தச் செய்வோம் என்ற சிந்தனையுடன் மேலும் வேறு இடங்களில் பத்துப்பாட்டு ஓலைச்சுவடி பிரதிகள் கிடைக்குமா என்ற தனது தேடல் முயற்சியை மீண்டும் தொடங்கினார்.

திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்று அங்கேயும் ஒரு முறை சொல்லி வைத்து வர வேண்டும் எனச் சென்றிருந்தார். முன்னர் ஆதீனகர்த்தராக இருந்து தன்னை ஒரு தந்தையைப் போல அன்பு காட்டி ஆதரித்த சுப்பிரமணிய தேசிகர் இல்லாத போதிலும் ஆதீனத்தில் இவரை அன்புடன் அனைவரும் வரவேற்பதில் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது.

ஆதீனகர்த்தரைச் சந்தித்து தனது பத்துப்பாட்டு பதிப்பு முயற்சிகளைப் பற்றி விளக்கி முழுமையாகப் பாடல்கள் கிடைக்காத நிலையைச் சொல்லி வருந்தினார் உ.வே.சா. ஆதீனத்தைச் சார்ந்த ஏனைய மடங்களில் இந்தச் சுவடி நூல் கிடைக்க வாய்ப்பிருக்குமா எனக் கேட்டுக் கொண்டார். இவரது மன நலிவைக் கண்ட ஆதீனகர்த்தர், சிறிதும் கவலைப்படாமல் இருக்கும் படியும், எல்லோருக்கும் கடிதம் எழுதச் சொல்லி பத்துப்பாட்டு பிரதிகளை வருவித்துத் தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். சொன்னதோடு மட்டுமல்ல. உடனே செயலிலும் இறங்கினார். தமது கட்டுப்பாட்டில் இருக்கும் மடங்கள், அறிஞர்கள் எனப் பலருக்கும் கடிதம் திருவாவடுதுறை மடத்திலிருந்து சென்றது.

இன்றைய நிலையை யோசித்துப் பார்க்கின்றேன். ஒரு ஆராய்ச்சி மாணவரை ஊக்குவிக்கும் பண்போ அல்லது நல்ல முயற்சிகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவும் மனப்பாங்கோ மிக மிகக் குறைவாகத்தானே இருக்கின்றது. நூற்கள், ஆய்வுகள், அறிவுத்தேடல்கள் என்ற விசயங்களே சமூகத்தின் உயர்மட்ட அதிகாரத்தில் இருப்போருக்கு மிகத் தொலைவில் இருக்கின்ற ஒரு விசயமாகத்தான் அமைந்திருக்கின்றது. கல்வி, அறிவு நாட்டம் என்பதை விடப் பொருளாதார அனுகூலங்களை மட்டும் எண்ணிப்பார்க்கும் தலைமை பீடங்கள் நிறைந்த சூழல் தான் இன்று நிலவுகின்றது. இந்த நிலையை மனதில் கொண்டு உ.வே.சாவின் தேடுதல் பணிக்காக உதவத் தீவிர முயற்சி மேற்கொண்ட திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைமையில் இருந்த தேசிகரை நாம் நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது தமிழ் மாணாக்கர்கள் நாம் எல்லோரது கடமையும் கூட. ஏனெனில் ஒரு உயரிய பணிக்கு உதவி செய்தோரை நன்றியுடன் எண்ணிப் பார்த்தலே மனிதப்பண்பு. இத்தகைய உதவிகள் கிட்டிராவிட்டால் பத்துப்பாட்டு நல்ல அச்சுப்பதிப்பு நமக்குக் கிடைத்திருக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி அல்லவா?

மீண்டும் திருவாவடுதுறை மடத்துக்கு உ.வே.சா சென்ற போது அங்கே நடந்த நிகழ்வுகளைத் தனது எழுத்துக்களால் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"அடுத்த வாரமே நான் என்னவாயிற்றென்று விசாரிப்பதற்காகத் திருவாவடுதுறை சென்றேன். மடத்திற்குள் புகுந்து ஒடுக்கத்தின் வாயிலில் கால் வைக்கும்போதே ஆதீனத் தலைவர் என் காதில் படும்படி, “பொன்னுசாமி செட்டியார்! பத்துப் பாட்டைக் கொண்டுவந்து ஐயரவர்களிடம் கொடும்” என்று உத்தரவிட்டார். அந்த வார்த்தைகள் என் காதில் விழுந்த போது என் உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. மிக்க வேகமாக ஆதீனத் தலைவரை அணுகி உட்கார்ந்தேன். உடனே பொன்னுசாமி செட்டியார் ஏட்டுச் சுவடியைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பத்துப் பாட்டுக்களும் இருந்தன. மூலமும் உரையும் கலந்ததாகவே இருந்தது அப்பிரதி. பத்துப் பாட்டு முழுவதும் இருந்தமையால் எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாயிற்று. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தேன். ஒவ்வொரு பாட்டாகத் திருப்புகையில் என் உள்ளம் குதூகலித்தது. அதில், தூத்துக்குடிக் கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமிப் பிள்ளையால், வீரபாண்டிய கவிராயர் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டதென்று எழுதியிருந்தது. " 

நாம் முழு கவனம் வைத்து ஆய்விற்காகத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் நமக்குக் கிடைக்கும் போது அது எழுப்பும் மன எழுச்சியே அலாதிதான்!

தொடரும்..
சுபா

Sunday, March 12, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 109

பத்துப்பாட்டு மூல நூலோடு மேலும் சில படிகள் கிடைத்தால் ஒப்பீடு செய்து ஆராய்ந்து அதனை முறையாக வெளியிட முடியும் என்ற எண்ணம் உ.வே.சா மனதில் இருந்தது. ஆக, அவரது எண்ணம் நிறைவேறாத நிலையிலேயே திருநெல்வேலியிலிருந்து கும்பகோணம் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனாலும் கும்பகோணம் திரும்பிய பின்னரும் நெல்லையில் தனக்கு அறிமுகமானோருக்கெல்லாம் எழுதி எங்காகினும் மேலும் சில பிரதிகள் கிடைக்குமா எனத் தேடும் முயற்சியை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

திருநெல்வேலியில் இருந்த போது ஆழ்வார் திருநகரியில் படித்த சான்றோர் சிலர் இருப்பதாகக் கேள்விப்பட்டது அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்து கொண்டிருந்தது. ஆகச் சரியான வாய்ப்புக்குக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆவணி அவிட்டம் விடுமுறை தொடங்கியது. கல்லூரியில் விடுமுறை என்றவுடன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆழ்வார் திருநகரி சென்று வருவோம் எனப் பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டுப் புறப்பட்டு விட்டார்.

உ.வே.சாவின் இந்த உத்வேகம் தான் அவரது தனிச் சிறப்பு. தான் செய்து முடிக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்ட பத்துப்பாட்டு பதிப்பாக்கத்திற்காக அவரது மனம் அல்லும் பகலும் அதே நினைவுடன் இருந்தமையும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அவரது உழைப்பின் தீவிரத்தை நன்கு பிரதிபலிக்கின்றன. இந்த உத்வேகம் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொண்ட காரியங்களை ஒருவரால் சாதிக்க முடியும். பலர் இதைச் செய்யப்போகின்றேன், அதைச் செய்யப்போகின்றேன் எனச் சொல்லிக் கொள்வதோடு நின்று விடுகின்றனர். காரியத்தில் இறங்குவதில்லை. ஏனெனில் ஒரு காரியத்தைச் செய்ய அதற்கான உழைப்பைப் போட வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதற்குத் திட்டமிடுதல் வேண்டும். பின் அதனைச் செயல்படுத்தும் திறனும் வேண்டும். பலருக்கு அதற்குப் பொறுமை இருப்பதில்லை. இதனால் செய்ய நினைக்கும் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்காமல், தனது இயலாமைக்குப் புறத்தே காரணத்தைத் தேடி தம் இயலாமைகளைப் பார்த்து சரி செய்து கொள்ளத்தவறி விடுகின்றனர்.

ஒரு வழியாக அந்த விடுமுறையில் ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார் உ.வே.சா. அங்குச் சுப்பையா முதலியாரவர்களுடன் சேர்ந்து ஸ்ரீ வைகுண்டம் சென்றார். போகும் போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள ஏடுகளை அலசிப் பார்த்தார். அங்குப் பத்துப்பாட்டு கிடைக்கவில்லை. வேறு சில நண்பர்கள் இல்லங்களிலும் தேடினார். அங்கும் இவை கிடைக்கவில்லை. சட்டென்று லட்சுமண கவிராயர் என்பவர் தனது மாமனார் இல்லத்தில் பல சுவடிகள் இருப்பதாகச் சொல்லி அவரிடமிருந்து கேட்டுச் சொல்வதாகச் சொல்லிச் சென்றார். மாலை திரும்பி வந்த போது தன் மாமனாரிடம் ஒரு சுவடிக்கட்டுத்தான் இருந்ததாகவும் அதனைப் பார்த்து உ.வே.சா தேடும் நூல்கள் அதில் உள்ளனவா எனப்பார்க்கும் படியும் கேட்டுக் கோண்டார்.

அந்தச் சுவடிக்கட்டை நிலா வெளிச்சத்திலேயே உ.வே.சா பிரித்துப்பார்த்தார். வியப்பில் ஆழ்ந்தார்.
முல்லைப்பாட்டு என்ற பெயர் அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது.

அவருக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. முதலிலிருந்து திருப்பி திருப்பி அந்த நூலைப் பார்த்தார். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக அந்த சுவடிக்கட்டில் இருந்தன.

அன்றிரவு முழுவதும் மகிழ்ச்சியில் அவருக்குத் தூக்கம் வரவில்லை என்பதை அவர் "என் சரித்திரத்தில்" குறிப்பிடும் போதே அவரது மனதின் ஆர்வமும், உற்சாகமும், மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன.

அதன் பின்னர் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் பிரதிகளையும் லஷ்மண கவிராயரிடம் வாங்கிக்கொண்டு, ஆழ்வார் திருநகரியிலிருந்து திருநெல்வேலி வந்து அங்கே பார்க்க வேண்டிய நண்பர்களையும் பார்த்து விட்டுத் திரும்பியிருக்கின்றார்.

நானும் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி போன்ற ஊர்களுக்குச் சென்றிருக்கின்றேன். இன்று இருக்கின்ற போக்கு வரத்து வசதிகளின் நிலையைக் கணக்கில் கொண்டாலும், இந்தப் பயணம் எடுக்கும் கால நேரம் மற்றும் தேடுதலுக்காகச் செலவிடும் நேரம் ஆகியனவற்றை நினைத்துப் பார்க்கும் போது அதிலிருக்கும் சிரமத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைந்த நிலையில் கூட தனக்குக் கிடைத்த விடுமுறை நாட்களை சுவடிகளைத் தேடி ஆய்வு செய்து பதிப்பிக்கும் முயற்சிக்காகவே உ.வே.சா செலவிட்டமையை எண்ணி அவரது உழைப்பை எண்ணிப் பார்க்கின்றேன். அந்த மகத்தான உழைப்பின் பலனாகத்தான் இன்று நமக்குச் சங்கத்தமிழ் நூல்கள் கிடைத்திருக்கின்றன என்பதைப் புரிந்து அந்த உழைப்பைப் போற்ற வேண்டியது தமிழ் மாணவர்கள் நம் அனைவரது கடமையும் அல்லவா?


தொடரும்..
சுபா

Monday, March 6, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 9

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 12வது கட்டுரையாக இடம்பெறுவது முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் “ காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்” என்ற கட்டுரை.

பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம்  என் மூன்று நகரங்களாக இன்று இருக்கும் ஊர்கள் இணைந்து ஒரே ஊராக காயல்பட்டினம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதன் அருகில் இருக்கும் கொற்கை சங்க காலத்தில் புகழ்மிக்க நகரமாக விளங்கியது. 

முதன் முதலில் அரேபிய முஸ்லிம்கள் கிபி.633ல் காயலில் வந்து குடியேறுகின்றனர்.இக்காலத்தில் கடற்கரைப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அது கடற்கரை மசூதி என்ற பெயரில் வழங்கியது.

அரேபியர்களின் 2வது குடியேற்றம் காயலில் கிபி.842ல் எகிப்திலிருந்து வந்த இசுலாமியர்களால் நிகழ்ந்தது இவர்களால் குப்தா பெரிய பள்ளி என்னும் மசூதி கிபி 842ல் கட்டப்பட்டது.

வாசப், இபின்பதுதா, மார்க்கோபோலோ ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் காயல்பட்டினம் துறைமுகத்தைத் தங்கள் குறிப்பேடுகளில் சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். 

காலத்தால் முந்திய கடற்கரைப் பள்ளிவாசலில் (கிபி 640) இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒன்று ஜடாவர்மன் கால கல்வெட்டு (கிபி1190-1216). இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை இக்கல்வெட்டில் காணப்படுகின்றது.

கிபி900-1500 வரை காயல்பட்டினத்தில் இசுலாமியர் சிறப்பான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். கிபி 1530 பின்னர் போர்த்துக்கீசியர்களின் வருகை இங்கே சலசலப்பை உண்டாக்கியது. முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டி உருவானது.

வகுதை, வகுதாரி என்ற பெயர்களும் காயல்பட்டினத்திற்கு உண்டு.

அஞ்சுவண்ணத்தார் என்ற வணிகக்குழு, எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் கிபி 850ல் வந்து தங்கிய பக்ரி, ஹாசிம், பருக்கி, உம்மையா, போர்வீரர் குழு ஆகிய ஐந்து குழுக்களுமே ஆவர்.

முதல் தமிழ் இசுலாமிய இலக்கியம் எனப்படும் மிராஜ்மாலை ஆலிப் புலவரால் எழுதப்பட்டது. கிபி 16ன் பிற்பகுதியைச் சார்ந்தது இந்த நூல்.

வரலாற்று அடிப்படையில் பல சான்றுகள் நிறைந்த நகரம் காயல்பட்டினம் என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக இக்கட்டுரையில் வழஙியுள்ளார்.

காயல்பட்டினம் சென்று இங்கு பல வரலாற்றுச் சான்றுகளைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. அடுத்த எனது தமிழகப் பயணத்தில் இந்த ஊருக்குச் செல்ல வேண்டும்!


சுபா

Saturday, March 4, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 108

திருநெல்வேலியில் பத்துப்பாட்டின் முழுமையான நல்ல பிரதிகள் கிடைக்குமா என உ.வே.சா தேடித் திரிந்த செய்திகளை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆயிரக்கணக்கான சுவடிகளை இந்த ஊர் கவிராயர்கள் வைத்திருந்தார்கள் என்பதனையும் அவையெல்லாம் இன்று எக்கத்தியாயின என்றும் என் அய்யத்தை எய்ழுப்பியிருந்தேன். இனி உ.வே.சாவின் பத்துப்பாட்டு தேடலுடன் நாமும் இணைந்து செல்வோம். 

திருநெல்வேலியில் அடையாளம் காணப்பட்ட கவிராயர்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் ஏறிச் சென்று அறிமுகம் செய்து கொண்டு நெல்லையைப்ப கவிராயரும் உ.வே.சாவும் பத்துப் பாட்டு நூல்களைத் தேடினர். எங்கும் கிட்டவில்லை. இன்னும் ஒரு வீடுதான் இருக்கின்றது. அங்கு நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது என்று நெல்லையப்ப கவிராயர் கூறியது சற்று உற்சாகம் அளித்தது. அவர்கள் செல்லவிருந்த வீடு அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுள் சிறந்தவரான திருப்பாற்கடநாத கவிராயர் என்பவரது பேரனின் வீடு. முதல் நாளே சென்று தம்மை அறிமுகப்படுஹ்ட்திக் கொண்டனர் இருவரும். மறு நாள் காலையில் உ.வே.சா, நெல்லையப்ப கவிராயர் மற்றும் இந்து கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயர் ஆகிய மூவரும் அந்த வீட்டிற்குச் சென்றனர். 

வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் திருப்பாற்கடநாதன் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருந்தன. அதில் பெரும்பாலானவை அவர் பாட்டனார் திருப்பாற்கடநாத கவிராயர் எழுதியவை. அதில் பெரிய சுவடி ஒன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்தார். அது திருமுருகாற்றுப்படை மற்றும் பொருநராற்றுப்படை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுவடியை ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் பார்த்தனர். பத்துப் பாட்டு முழுவதுமாக உரையுடன் இருந்தது. தேடி வந்த பத்துப்பாட்டின் நல்ல பிரதி கிடைத்ததை எண்ணி உ.வே.சாவின் அகம் மகிழ்ந்தது. இதனை உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். 

"மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. அப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது." 

இந்தப் பத்துப்பாட்டு உரையுடன் கூடியதாக இருந்தது. மூலம் மட்டும் உள்ள பத்ஹ்டுப்பாட்டு கிடைக்குமா என தேடிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே உ.வே.சா இன்னும் சிலரது இல்லங்களுக்குச் சென்று தேட வேண்டும் என முயற்சியைத் தொடங்கினார். அப்போது கல்லாடத்துக்கு உரையெழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை என்னும் வித்துவானின் நினைவு உ.வே.சாவிற்கு வந்தது. அவரது சந்ததியினரிடம் நிச்சயம் பத்துப்பாட்டு நூல் மூலம் இருக்கலாம் என நினைத்து அவர்கள் இல்லத்தைத் தேடிச்சென்றார். 

அவர் பரம்பரையில் வந்த அதே பெயர் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவரும் தாம் அந்த வித்ஹ்டுவானின் சந்ததியில் வந்தவர்தான் எனச் சொல்லி, ஆனால் தாம் ஆங்கிலப் படிப்பு படித்டு குமாஸ்தாவாகப் பணி புரிவதாகவும் சட்ட புத்தகங்கள் தாம் தம் வீட்டில் உள்ளன, தமிழ் நூல்கள் ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டார். வீட்டில் நிச்சயம் எங்காகினும் இருக்கலாம் என உ.வே.சா மேலும் வற்புறுத்திக் கேட்க அவருக்கோ கோபம் வந்து விட்டது. இந்த உரையாடலை உ.வே.சா பதிந்திருக்கின்றார். 

“அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன். 
“நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். 
நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச்சென்று விட்டார். 
“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே? அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே? இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்!” என்று நான் வருந்தினேன். 

உ.வே.சா எதிர்பார்த்ததோ வேறு. ஆனால் அங்கு நிகழ்ந்ததோ வேறு. 

தமிழறிஞர்கள் பலரது சந்ததியினர் தமிழ்ப்பற்று குறைந்து காணப்படுவதும் தமிழ் மொழிமேல் பற்றில்லாது ஆங்கில மோகம் கொண்டு செயல்படுவதும் வருத்தத்திற்குரியது. இத்தகைய பலரால் தான் பல ஏட்டுச் சுவடிகள் குப்பைகளாகப் புறக்கணிக்கப்பட்டு வீணாயின. தமிழ்க் களஞ்சியங்களின் அருமை அறியாத இத்தகையோர் தமிழுக்கு இழைத்தது பெரும் கேடு! 

தொடரும்..

சுபா

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 8

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.

இந்தியக் கப்பற்கலை தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. 

கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.

கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை
 • கட்டு மர வகை
 • தோணி வகை
 • வள்ளம் வகை 

எனப்பிரித்திருக்கின்றார்கள்.

கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.

தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு , அகநானூறு பாடால்களில் உள்ளன.

நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களை பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.

 கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.

இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.

கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி முனைப்புடன் தொடரப்பட வேண்டும். 

சுபா

Wednesday, March 1, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 7

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 7வது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் பு.சந்திரசேகரன் அவர்களின் “ பண்டைய, இடைக்காலக் கடல் ஆதிக்க வரலாறு” என்ற கட்டுரை.

சங்ககால பரதவர்கள் (மீனவர்கள்) கடல் ஆளுமையில் சிறந்திருந்தார்கள் என்பதையும், சங்ககால மன்னர்கள் கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தார்கள் என்றும், அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற துறைமுகப் பட்டினங்களில்  ரோமானிய நாணயங்கள்  புழக்கத்தில் இருந்தன என்பதனையும்  இராஜேந்திர சோழ மன்னனின் கடாரத்திற்கான போர் ஆகிய செய்திகளை அக்கால சமூக, பொருளாதார, அரசு அமைப்புக்களுடன்  இணைத்துப் பார்க்கும் வகையில் கட்டுரையாளர் இக்கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.

பரதவர்களின் ஆதிக்கம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என அமைந்திருந்தது. ஆக இந்த ஆதிக்கம்  பொருளாதார ஆதிக்கம் என்ற வகையில் அமைகின்றது.

அயல்நாட்டவர்கள் தமிழகத்தின் பண்டைய நகர்களுக்கு வந்து வணிகம் மேற்கொண்டபோது  வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஏற்ற உள்நாட்டுப் பொருட்கள் பரிவர்த்தனைச் செய்யப்பட்டன. இதனால் பரிமாற்றம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் பொருள் உற்பத்தி என்பது நிகழ்ந்தது. மிளகு, விலையுயர்ந்த கற்கள், முத்து, பட்டு, பருத்தித் துணி என்பன இவ்வகை உதாரணங்களில் அடங்குகின்றன.

இனக்குழு சமுதாயத்தில்  சிற்றரசர்களே வணிகம் செய்வதும் நிகழ்ந்தது.  

வணிக முதலீடு வணிக குழுக்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. நிகமம், சாத்து என்ற வணிகக்கூட்டங்கள் உருவெடுத்தன.

சங்ககால மன்னர்கள் மற்றும் குடிகளின்  வீழ்ச்சிக்கு  கடல்கோளும் மிக முக்கியக் காரணமாகியது.

சாத்து, நிகமத்தைச் சார்ந்த பெரும் வணிகர்கள், பல்லவர்கால சிறுபாண்மை உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து திசையாயிரத்து ஐந்நூற்றுவராக உருவாகினார்கள். இந்த அமைப்பு வேளாண்மை சிற்பாண்மை உற்பத்தியாளர்களும் நிகம, சாத்து வணிக சந்ததிகளும்  சேர்ந்தே உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பு பல்லவர் காலத்தில்  3ம் நந்திவர்மன் காலத்தில் ஏற்பட்டது. கீழையனூர் கிராமத்திலிருந்து ஒரு நிலக்கிழார் மணிக்கிராமத்து வணிகர்களுடன் தாய்லாந்து சென்று அங்கே ஒரு குளத்தை வெட்டி அது பாதுகாப்பாக இருக்க மணிக்கிராமத்தார் வசம்  ஒப்படைத்துள்ளார் என்ற கல்வெட்டுச் செய்தியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.

மலேசிய சிங்கை தவிர்த்து ஏனைய  கிழக்காசிய நாடுகளுக்கான தமிழட்களின் கடல் ஆளுமை என்பது தற்சமயம் பேசப்படாத ஒரு விசயமாகவே இருக்கின்றது. தமிழகத் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் இந்த நோக்கில் ஆய்வு செய்ய முற்பட வேண்டும். இதன் வழி மேலும் பல தகவல்களைப் பெற வாய்ப்பிருக்கும். அது தமிழர் வரலாற்றை மேலும் விரிவாக அறிந்து கொள்ள உதவும்!

சுபா

Monday, February 27, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 6

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் ஆறாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ச.செல்வராஜ் அவர்களின் “ தமிழகக்கடற்கரை துரைமுகப்பட்டினங்களும் அகழாய்வுகளும்” என்ற கட்டுரை.

இக்கட்டுரை பண்டைய தமிழகத்தோடு கிரேக்கர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாணிகத்தொடர்பை விளக்கும் வகையில் தொடங்குகின்றது.

கி.பி.1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் ஆஃப் எரித்திரியன் சீ என்ற நூலிலும் பின்னர் பிளினி எழுதிய உயிரியல் நூலிலும், தாலமி எழுதிய பூகோள நூலிலும் தமிழகத்தின் கடல் வணிகம், துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைப்பதாக கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆக சங்க நூல்களில் காண்பது போலவே அயல் நாட்டவர் நூற்களிலும் இக்குறிப்புக்கள் வருகின்றன என்ற செய்தியை இதன் வழி அறிய முடிகின்றது.

சங்ககால துறை முகங்களாக கீழ்க்காணும் பட்டினங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது.
 1. வசவசமுத்திரம்
 2. அரிக்கமேடு
 3. மரக்காணம்
 4. காரைக்காடு/குடிகாடு
 5. காவிரிப்பூம்பட்டினம்
 6. அழகன்குளம்
 7. கொற்கை


இடைக்காலத் துறைமுகங்களாக  கீழ்க்கண்பவை குறிப்பிடப்படுகின்றன
 1. பெரியபட்டணம்
 2. நாகப்பட்டினம்


இந்த பட்டினங்களின் விளக்கங்களோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடப்படுவதும் இக்கட்டுரையின் சிறப்பாக அமைகின்றது.

சங்ககால துறைமுகங்கள் இன்று மறைந்தும் அழிந்தும் விட்டன. ஆனால் இந்தப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் மென்மேலும் தொடரப்படும் போது பண்டைய கடல் வணிகம் தொடர்பான புதிய தகவல்கள் மேலும் கிடைக்க வாய்ப்புண்டு!

சுபா