Wednesday, March 6, 2024

One Page Indian Stories

 Translator: A. Basheer Ahmad Jamali

நூல் திறனாய்வு - முனைவர் க. சுபாஷிணி


ஒரு விஷயத்தை நீட்டி முழக்கி எழுதுவது ஒரு வகையில் எளிது. அதனைச் சுருக்கி ஒரு பக்கச் செய்தியாக உருவாக்குவது என்பது ஒரு சவால்தான். அதிலும் கதைகளை அப்படி உருவாக்குவது என்பது ஒரு தனி கலை.
ஒரு கதை எதைப் பற்றி பேசுகிறது? கதை மாந்தர்கள் யார்? தொடக்கம் என்ன? அதன் முடிவு என்ன? மையப் புள்ளி என்ன? அது கூற இருக்கும் நீதி அல்லது தகவல் என்ன? என்பவை அனைத்தும் அந்தக் கதைக்குள் முழுமையாக வெளிப்பட வேண்டும்.
தமிழ் வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் இத்தகைய ஒரு பக்கக் கதைகள் நிறையவே வந்திருக்கின்றன, வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக வாசித்து விட்டு அந்தக் கதை சொல்லும் விஷயத்தைச் சற்று நேரம் யோசித்து விட்டு நமக்கு தொடர்புடையதாக இருந்தால் அதைப் பற்றி கூடுதல் நேரம் யோசிக்க வைத்து விடும். இல்லையென்றால் அதுவும் ஒரு செய்தியாக நம்மைக் கடந்து போய்விடும்.
இத்தகைய ஒரு பக்கக் கதைகளில் 50 கதைகளைத் தேர்ந்தெடுத்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கின்றார் பேராசிரியர் பஷீர் அகமத் ஜமாலி. இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
முதலில் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கதைகளை இவர் அரபி மொழியில் நூலாக வெளியிட்டிருக்கின்றார். அது அரபி மொழி பேசும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதனால் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முயற்சியில் One Page Indian Stories என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்.
நூலில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு கதைகளுக்கும் ஒரு ஓவியம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது முதலில் ஓவியம் ஒரு பக்கத்தில் அடுத்த பக்கத்தில் கதை என்ற வகையில் இது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையையும் புரிந்து கொள்வதற்கு ஒரு வகையில் இந்த ஓவியங்களும் உதவுகின்றன என்று கூறலாம்.
சிறுகதைகளின் வழி சொல்லப்படுகின்ற தமிழ் பண்பாட்டுச் சூழல் ஏனைய பல மொழிகளுக்குச் செல்லும் பொழுது அம்மொழிகளைப் பேசும் மக்கள் தமிழ் பண்பாட்டுச் சூழலைப் புரிந்து கொள்வதற்கும் நல்ல ஒரு வாய்ப்பு ஏற்படுகின்றது. இந்த ஒவ்வொரு கதைகளும் இந்தச் சிறுகதைகள் வெளிவந்த காலகட்டத்தின் சூழலை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
இதில் ஒரு சில கதைகள் என்னை ஈர்ப்பவையாக அமைந்திருக்கின்றன. "பிரசவத்துக்கு இலவசம்" என ஆட்டோ வண்டியின் பின் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.. அந்த ஆட்டோ வண்டியில் பயணித்து வரும் மகப்பேறு மருத்துவர்.. அந்த ஆட்டோ ஓட்டுனருடன் நிகழ்த்தும் கலந்துரையாடல் ஆகியவை மிக நெகிழ்வானவை.
பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் எனக் கூறும் தந்தையிடம் வம்பு பண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனிடம் கூடையில் தண்ணீரை அள்ளிக் கொண்டு வரச் சொல்லி கூடை சுத்தமாவதை விளக்கி பள்ளிக்குச் செல்வதால் அறிவு தெளிவுபடும் என விளக்கி கூறும் சிறுகதையும் நன்று.
வரதட்சணை வேண்டும் என கேட்கும் கணவன்.. அது பற்றி தனது பெற்றோரிடம் ஏதும் சொல்லாமல் காலம் கழிக்கும் பெண்.. பிறகு கணவன் வரதட்சணை கேட்டு அடிக்கத் தொடங்கியதும் போலீஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்று அங்குள்ள ஒரு அதிகாரியிடம் தனது கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதைக் கூறுவதை வாசித்துக் கொண்டு வரும்போது.. ஆஹா பெண்கள் தைரியமாகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அடுத்த நொடியே அந்த போலீஸ் அதிகாரி அவளின் தந்தை என்பதும்.. உடனே அவர் மாப்பிள்ளைக்கு அவர் கேட்கும் காரை உடனே வாங்கி தந்து விடுகிறேன் என பல்டி அடிப்பதும்.. இன்னும் மக்கள் மனம் மாறவில்லை. வரதட்சனை என்ற பெண் கொடுமைகள் பெண் அடிமைத்தனம் இன்றும் நம் சமூகத்தில் தொடர்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.
கட்டிடம் கட்ட நிலத்தை தோண்ட வேண்டும் என்பதற்காகப் புதைபொருள் கிடைத்திருக்கின்றது என்று சொல்லி அரசின் உதவியை நாடி அதன் வழியாக செலவை குறைக்கலாம் என நினைக்கும் ஒரு கன்ட்ராக்டர்... அரசின் தொல்லியல் துறை அந்த இடத்தை தோண்டத் தொடங்கிய பின்னர் அங்கு தற்செயலாக எலும்புக்கூடுகள் கிடைக்க.. இது வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் களம் என்று அரசு அறிவிப்பு செய்து அந்தப் பகுதியைப் பெற்றுக் கொள்ளும் போது தனது பேராசையை நினைத்து காண்ட்ராக்டர் வேதனைப்படுவது சிரிப்பை வரவழைக்கிறது.
இப்படி 50 கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்துடன் அமைந்திருக்கின்றன.
நல்ல தரமான அதே நேரத்தில் எளிமையான ஆங்கிலத்தில் இக்கதைகள் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு.
இந்த ஒவ்வொரு கதைகளும் வெளிவந்த பத்திரிகையின் பெயரையும் அதன் தேதியையும் நூலாசிரியர் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து. மறு பதிப்பில் நூலாசிரியர் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.
நூலை மொழிபெயர்ப்பு செய்து வழங்கிய பேராசிரியர் பஷீர் அகமத் ஜமாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள். மேலும் இத்தகைய பல நூல்கள் வெளிவர வேண்டும். உலக மொழிகளில் தமிழ் பண்பாட்டுச் சூழல் வெளிப்படும் போது அது தமிழ் சமூகவியல் பார்வையை ஏனைய சமூகங்களுகம் அறிந்து கொள்ள உதவும்.
-சுபா

No comments:

Post a Comment