Thursday, January 15, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! -1

பாரீஸ் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் இன்று மாட்டிக் கொண்டேன். நேரத்தைக் கடத்த கையில் ஐபேடில் இருக்கும் மின்னூல்கள் இருக்கின்றனவே.. !

அதில் ப்ளேட்டோவின் The Republic என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். கி.மு 375 வாக்கில் ப்ளேட்டோ எழுதிய நூல் இது. சாக்ரடீஸ் தமது அரசியல் கருத்துக்களை உரையாடலாக வெளிப்படுத்துவதாக இந்த நூல் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தமிழாக்கத்தை வெ.சாமிநாதசர்மா எழுதியிருக்கின்றார். அந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் உள்ளது.

நூலை வாசித்துக் கொண்டிருக்கையில்... முதல் அறிமுகப் பகுதிகளை முடித்து நூலுக்குச் சென்றேன். உலகின் அற்புதச் சிந்தனைகளின் தொகுப்புக்களில் முக்கிய இடம் பெறும் நூல்களில் ஒன்று இது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை!

இளம் குழந்தைகளுக்கு நாம் சொல்லும் கதைகள் அறிவார்ந்த கதைகளாக இருக்க வேண்டும். அறிவுக்குப் பொருந்தாத கற்பனை புராணங்களை குழந்தைகளின் மனதில் வலிந்து திணிக்கும் போது அவர்களது சிந்தனை இயல்பான நடைமுறையை அறிந்து கொள்ள முடியாமல் திணறிப் போய் கற்பனையை நிஜமென்று நம்பிக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும். இதனையே இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாக்ரடீஸ் கிரேக்கத்தில் உரையாடுவது போல ப்ளேட்டோ இந்த நூலில் வழங்குகின்றார்.

இந்த நூலின் முதல் பகுதி நீதி என்பது என்ன? அநீதி என்பது என்ன.?. ஒருவருக்குச் சாதகமாக அமைவது அனைத்துமே நீதியாகுமா? என்பது போன்ற கேள்விகள் நிறைந்த சூடான கலந்துரையாடலாக அமைந்திருக்கும் பகுதி. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதி ..விட்டுப் போன நீதியின் விரிவாக்கத்தைத் தேடுவதாக அமைந்த பகுதி.

கிளாக்கோனுடனான நீண்ட வாதத்திற்குப் பிறகு நீதி பற்றிய விசாரணை விளக்கமாக அமையவேண்டுமென்று கூறி நீதியை விளக்கு, என சாக்ரட்டீசை அடிமாண்ட்டஸ் கேட்டுக் கொள்கின்றான்.

சாக்ரடீஸ், கிளாக்கோன், அடிமாண்ட்டஸ் ஆகிய மூவருக்கிடையிலான இந்த உரையாடல் இன்றைக்கு, இக்காலகட்டித்திற்கும் பொருந்தக் கூடியதே.

நூலிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
-சுபா


அடீ: அதென்ன பிரமாதமான விஷயம் உண்மையை அறியவேண்டுமென்பதுதானே நம்முடைய நோக்கம். சாக்ரடீஸ், நீ கூறுகிறமாதிரி, கல்வியைப் பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டுவது மிகவும் அவசியமாகின்றது.

கிளா:  நிரம்பச் சரி. நம்முடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும் தலைமுறை தலைமுறையாக எந்த மாதிரி கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றதோ அதன்மீது அபிவிருத்தி செய்வதென்பது சுலபமான விஷயமா என்ன  ஏற்கனவே நமது தேக வளர்ச்சிக்குத் தேகப் பயிற்சியும், ஆத்ம வளர்ச்சிக்கு கலைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றனவல்லவா

அடி:  ஆமாம்

சாக்: சரி முதலில் கலைப்பயிற்சியைப் பற்றி ஆராய்வோம்.

அடி: நிரம்பச் சரி

சாக்: கலையென்று சொன்னால் அதில் இலக்கியத்தையும் சேர்க்கலாமல்லவா

அடி: அப்படித்தான் சேர்க்கவேண்டும்.

சாக்: இலக்கியத்தில் பொய் இலக்கியமென்றும் மெய் இலக்கியமென்றும் இரண்டு வகைகள் இல்லையா

அடி: உண்மை
...

சாக்: அதாவது கதைகள் சொல்வதன் மூலம் குழந்தைகளுக்கு முதலில் கல்வியறிவு புகட்டுவதை பற்றி கூறுகிறேன். இந்தக் கதைகளில் சிறிதளவு உண்மையிருந்தாலும் இவை யாவும் பொய் இலக்கியத்தைச் சேர்ந்தவைதான். குழந்தைகளுக்குத் தேகப்பயிற்சி அளிப்பதற்கு  முன்னால், கதைகளைச் சொல்லிக்கொடுக்கின்றோம் அல்லவா?

அடி: ஆமாம்

சாக்: சரி. ஒரு வேலையை ஆரம்பத்தில்தான் முக்கியமானதென்று கருதிச் செய்யவேண்டும். இதை நீ ஒப்புக்கொள்கிறாயல்லவா?  சிறப்பாக பசுமனமுடைய குழந்தைகளின்  விஷயத்தில்  நாம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் இளமைப் பருவத்தில் தான், அவர்களைச் சரியான பக்குவத்திற்குக் கொண்டுவர முடியும். எந்த விதமான எண்ணமும், இளமைப் பருவத்தில் தான் ஆழமாகப் பதியும்.
...

சாக்: அப்படியானால் நமது குழந்தைகளுக்கு யார் வேண்டுமானாலும் எந்தவிதமான கதையையும் சொல்லிக் கொடுக்க அனுமதிக்கலாமா? 
இது விசயத்தில் நாம் அசட்டையாக இருக்கலாமா? இவர்கள் பெரியவர்களாகின்ற காலத்தில்  எந்த விதமான அபிப்ராயங்கள் கொள்ளவேண்டுமென்று நாம் நினைக்கின்றோமோ அவைகளுக்கு நேர்மாரான அபிப்ராயங்களை  இவர்களுக்கு சிறுவயதில் நாம் பதிவிடலாமா?

அடி: இப்படி நாம் அனுமதிக்கவே கூடாது.

சாக்: எனவே, கதைகளை சிருஷ்டித்துக் கொடுக்கின்றார்களே அவர்கள் விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்தவேண்டுவது நமது முதற் கடமை. அவர்கள் சிருஷ்டிக்கிற கதைகளில் அழகானவற்றை  மட்டும் நாம் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நாம் நிராகரிக்க வேண்டும். அப்படி பொருக்கி எடுக்கப்பட்ட கதைகளை  மட்டும் குழந்தைகளூக்குச் சொல்லிக் கொடுக்குமாறு தாய்மார்களையும் மற்றவர்களையும் தூண்டவேண்டும். இந்தக் கதைகளின் மூலமாக இவர்கள், குழந்தைகளின் ஆத்மாவை பரிபக்குவத்திற்கு கொண்டு வர முடியும். இது தேக போஷனையைக் காட்டிலும் சிரேஷ்டமானது. இந்தத் திருஷ்டியில் பார்த்தாலிப்பொழுது சொல்லிக்கொடுக்கப்படுகின்ற கதைகளில் பெரும்பாலானவற்றை நாம் தூரத்தள்ள வேண்டியதுதான்.

வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

No comments:

Post a Comment