Monday, December 22, 2014

தொ.பா. (தொ.பரமசிவன்)

Inline image 1

தொ.பா. (தொ.பரமசிவன்) - ஆய்வுலகில் ஒரு தனி இடம் பெறும் தற்கால ஆய்வறிஞர். 

பண்பாட்டு அசைவுகள்.. நூலை வாசித்து இவரது விரிவான ஆய்வுப் பார்வையை அறிமுகமாக்கிக் கொண்ட போது நான் அகமகிழ்ந்தேன். 

இவரைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. மிக ஏழ்மையான குடும்பத்தில் தாழ்த்தப்பட்டோர் என குறிப்பிடப்படும் சாதிப் பிரிவில் பிறந்தவர். கல்வெட்டு, சமூகவியல், தமிழ் நிகண்டுகள், சமஸ்கிருதம், தமிழ் இலக்கணம், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் என் பல்முக ஆய்வுகளில் ஈடுபாட்டினைக் கொண்டவராகத் திகழ்பவர்.
பண்பாட்டு மானுடவியல் என்பது இவரது சிறப்பு ஆய்வுத்துறையாக அமைகின்றது. 
பலதுறையில் ஆர்வம் கொண்டவர். சைவ வைஷ்ணவ சித்தாந்தங்களில் ஆர்வம் கொண்டவர்.

தமிழின் மேல் ஆர்வம் உள்ளோர் அறிந்திருக்க வேண்டிய சிறந்த ஆய்வறிஞர். இவரது நூற்களை வாங்கி வாசித்தல் அவசியம். அதற்கு முன் இவரை அறிமுகம் இல்லாதோர் இந்த ஆவணப்படத்தைப் பார்த்து அறிந்து கொள்வது உதவும்.


நடிகர் திரு.கமலஹாசன் இவரது பண்பாட்டு அசைவுகள் நூலை வாசித்து விட்டு தனது அண்மைய விஜய் டிவி பேட்டிக்கு சென்ற போது இந்த நூலின் 50 பிரதிகளை வாங்கிச் சென்று ஊழியர்களுக்குக் கொடுத்தாராம். இந்தச் செய்தியைப் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

இவரது பேட்டியைக் கேட்ட பின்னர்தான் ஈழம் என்ற சொல்லுக்கே மனைமரம் என்று பெயர் என்பதை அறிந்து கொண்டேன்.  பனை பற்றி சற்றே விரிவாக, மிக ஆர்வத்துடன் பேசுகின்றார்.

இவரது பேச்சில் பளிச்சென்று மனதைக் கவர்ந்தது ஒரு வாசகம். .. புத்தக வாசிப்பு போல மனித வாசிப்பு என்பது மிக முக்கியம் என்கின்றார். 

ஒப்பனை.. மிகை.. கற்பனை அற்ற தெளிவான சிந்தனை எழுத்து இவருடையது. இவை மிஞ்சிக் கிடப்பவை தானே இன்றைய பெரும்பாலான எழுத்துக்கள். 

நல்ல ஆய்வாளர்களை மதிக்க வேண்டியதும், போற்ற வேண்டியதும், அவர்களின் தொடர் ஆய்வுகளுக்கு உதவ வேண்டியதும் கற்றோர் கடமை.

சுபா

No comments:

Post a Comment