Sunday, December 21, 2014

அன்பில் இருமனம் கலந்தால்....

தற்செயலாக நேற்று எனது நண்பர் தோமஸை ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது சந்தித்தேன். இருவரும் சந்தித்துப் பேசி ஏறக்குறைய 5 மாதங்கள் இருக்கும். 

இருவரும் கேக் சாப்பிட்டுக் கொண்டு பேசலாம் என ரெஸ்டாரண்டில் கேக் காபி ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தோம். நான் கிறிஸ்மஸ் பரிசுகளை குடும்பத்தாருக்கு வாங்க வந்த கதைகளைச் சொல்ல அவரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக தனது பாட்டிக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் வாங்க வேண்டி வந்ததாகவும் அந்த குறிப்பிட்ட பொருள் எங்கு தேடியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். 

அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. 
'சுபா.. உனக்குத் தெரியுமா.. இப்போது நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. வாழ்க்கையே புதிய அர்த்தத்தோடு இனிமையாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் இனிமையாக இருக்கின்றது. எனது கோபங்கள்.. வருத்தங்கள் எல்லாம் மறைந்து விட்டன. நான் மனம் நிறைய மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.. இதற்கு காரணம் எனது வாழ்க்கை துணை தான். அவரின் கணிவான நட்பும், அன்பும் என் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன' என சிரித்து முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க புதுமணப் பெண் போல நாணத்துடனும் அளவில்லா மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். 

தோமஸ் எனது அலுவலக நண்பராக 11 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேறொரு நிறுவனத்திற்கு பணி மாற்றிக் கொண்டு சென்றாலும் எங்கள் நட்பு இன்றளவும் தொடர்வது.

இவரது வாழ்க்கைத் துணை ஒரு ஆண். இவர்களது மணம் ஒத்துப் போனமையால் இவர்கள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை ஏறக்குறைய 8 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியிருக்கின்றனர்.  இவர்கள் நட்பை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதும் கூடுதல் மகிழ்ச்சியான விஷயம். தோமஸ் ஒரு கணினி பொறியியளாளர். என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு ஊரில் வசிப்பார். இவரது வாழ்க்கை துணை சுவிஸர்லாந்தின் லூஸர்ன் நகரில் இருப்பவர். அவர் ஒரு ஹோட்டலுக்குச் சொந்தக்காரர். அதனை நிர்வாகம் செய்வதே அவர் பணி. இருவரும் 2 வாரங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் வார இறுதியில் சந்தித்து 3 நாட்களை தங்களுக்காக செலவிடுகின்றனர்.  

அண்மையில் தான் விடுமுறைக்கு மூன்று வாரம் சென்றிருந்தனராம். விடுமுறை இதுவரை தான் அனுபவித்திராத வகையில் இனிமையாக கழிந்தது. என்று சொல்லி மகிழ்ந்தார் தோமஸ். வார்த்தைக்கு வார்த்தை தன் வாழ்கைத் துணையை வர்ணிப்பதும், அவர் சிறப்பைச் சொல்வதும் என காதலில் மூழ்கிக் கிடக்கும் இளம் காதலர்களின் உணர்வை பிரதிபலித்தது தோமஸின் பேச்சு. அவர்கள் இருவருமே 40களின் இறுதியில் இருப்பவர்கள். 

ஆண்கள் இருவர் இணைந்து காதலர்களாக, துணையாக வாழ்வது ஜெர்மனியில் மிகச் சகஜமாகிக் கொண்டு வருவது என்பது எனக்கு தெரிந்த விஷயம். ஆயினும் இப்படி காதலில் மயங்கி தன் துணையை வர்ணிக்கும் காதல் பேச்சினை நேற்று தான் நான் முதன் முதலாக கேட்டேன். 
கேட்டேன் என்பதை விட கேட்டு ரசித்தேன் எனச் சொன்னால் தான் சரியாக இருக்கும். 

அன்பில் இருமனம் கலந்தால் அதற்கு மேல்  வேறென்ன வேண்டும்??

No comments:

Post a Comment