Saturday, November 22, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 76

சுற்றுலா செல்வது என்பதே அலாதியான இன்பத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம் அல்லவா? ஒரே இடத்தில், செய்த காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருக்கும் அன்றாட நிலையிலிருந்து மாறுபட்ட மனிதர்கள், மாறுபட்ட சூழல்கள், வித்தியாசமான அனுபவங்கள் என அமைவது சுற்றுலாக்களின் போது நிகழ்பவை. சுற்றுலாக்கள் கேளிக்கை தானே என்ற ஒரு கண்ணோட்டத்துடன் காண்பதை என்பதை விடுத்து அதில் நம் கண்களுக்குத் தென்படும் புது உலகம் பற்றிய சிந்தனையைச் சற்று உயரத்தூக்கி கவனித்தால் சுற்றுலாக்கள் நமக்கு தரும் புதிய அனுபவங்கள் சிறந்த வாழ்க்கைப் பாடங்களாகவும் அமைவைதைக் காண முடியும். 

இக்கால சூழலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம், நகரம், ஊர், என பயணம் மேற்கொள்ள சிறந்த வசதி வாய்ப்புக்கள் அமைந்திருக்கின்றன. பொருளாதார துணை இருந்தால் விரைந்து பல இடங்களுக்குச் சென்று வருவது என்பது   சாத்தியப்படக்கூடிய ஒன்றே. இதே நிலை இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் அமைந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகச் சூழலில் பயணம் என நினைக்கும் போது பொதுப் போக்கு வரத்துக்காகp பெரும்பாலும் மாட்டு வண்டிகளை மக்கள் புழக்கத்தில் பயன்படுத்துவதே வழக்கமாக இருந்தது. அச்சமயம் தான் தமிழ்கத்திற்கு இரயில் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்த காலகட்டம். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஆதீனத்தைச் சேர்ந்தோருடன் தனது மதுரைக்காண பயணத்தை உ.வே.சா அவர்கள் விவரிக்கும் போது இத்தகைய விபரங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

சோழ நாட்டிலேயே தனது பிறந்த நாள் முதல் வாழ்ந்து வந்த உ.வே.சா அவர்களுக்குப் பாண்டி நாடு செல்வது இதுவே முதல் முறை. அவருக்குப் புதிய இடத்திற்குச் செல்கின்றோம் என்ற உற்சாகம் ஒருபுறம். அதோடு ஆதீனகர்த்தரின் பரிவாரங்களில் அதிலும் முக்கியஸ்தர்களுடன் முக்கியஸ்தராக இணைந்து செல்கின்றோமே என்ற பெறுமை மறுபுறம். ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர், அடிப்படையில் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் அவருக்கு மீண்டும் இந்த ஊருக்கு வருவதில் அதிலும் கல்லிடைக்குறிச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி இருந்தது.  வெறும் நூல்களில் மட்டுமே.. அதிலும் திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்படும் பாண்டி நாட்டு ஆலயங்கலள் சூழல் பற்றி வாசித்து மட்டுமே அறிந்திருந்த உ.வே.சாவிற்கு இங்கே நேரில் வந்து புதிய இடங்களைப் பார்ப்பதும், ஆலய தரிசனங்களும், புதிய மனிதர்களைச் சந்தித்து உரையாடுவதும் பெரும் மகிழ்ச்சியை தந்தன.  தான் திருப்பூவனத்திற்கு வந்த போது  அங்கு திருப்பூவனத்துப் பெருமானைத் தரிசித்ததையும் வைகை நதியக் கண்டு களித்ததையும் குறிப்பிடுகின்றார் அத்தியாயம் 73ல். 

நான் இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த போது திருப்பூவனத்துப் பெருமான் சன்னிதி சென்று இறை தரிசனம் செய்து பொன்னனையாள் திருச்சிலையையும் கண்டு மகிழ்ந்தேன். ஆலயத்திற்கு எதிரே நீரில்லாத வைகையைக் கண்டு ஏக்கம் தான் உருவானது.

திருப்பூவணத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டிருக்கின்றனர். மதுரையைச் சார்ந்த வண்டியூர் தெப்பக்குளம் மேல் கரையிலுள்ள கோயில் ஒன்றில் தமது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்து  அங்கே தங்கியிருக்கின்றனர். அந்த இடத்தை ஆதீமூலம் பிள்ளை என்ற அந்த ஊரைச் சேர்ந்த கணவான் ஒருவர் மிகுந்த அலங்காரங்கள் செய்து சிறந்த வரவேற்பு நல்கியிருக்கின்றார். அந்த நாளில், இந்த நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்க அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர் 100க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு இரண்டு வேளை அன்னதானம் வழங்கி பசியாற்றியிருக்கின்றார். இந்த ஆதிமூலம் என்பவர் அந்த ஊரில் வாழ்ந்த நல்ல உள்ளம் படைத்த ஒரு காண்ட்ராக்டர் என்றும் நிறைந்த பக்திமான் என்றும் பல நற்காரியங்கள் செய்தார் என்றும் அதனால் அவர் பெயரில்  ஆதிமூலம் பிள்ளை தெரு என ஒரு தெருவிற்கு பெயரும் சூட்டப்பட்டிருந்தது என்றும் உ.வே.சா   குறிப்பிடுகின்றார். 

பயணத்தின் போது ஆதீனகர்த்தருக்கும் அவரது பரிவாரங்களாகச் சென்றோருக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு தனி வண்டிகளும் இந்தப் பயணத்தில் சென்றிருக்கின்றன.  ஆயிரக்கணக்கான பேர்கள் உண்ணுவதற்குப் போதுமான  அரிசி உணவுப் பதார்த்தங்கள் திருவாவடுதுறையிலிருந்து  வண்டி வண்டியாக வந்து குவிந்தன என்றும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

அக்கால நிலை இப்போது இல்லை. இன்று நடைமுறை  எல்லாவற்றிலும் மாற்றங்களை உட்புகுத்தி விட்டன. தூரப்பயணங்களுக்கு மாட்டு வண்டியில் ஆதீனத்தைச் சார்ந்தோர் பயணிப்பதும் மூட்டை மூட்டையாக பயணத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது என்ற நிலையும் தேவையற்றவையாகி விட்டன. இன்றைய கால மாற்றம் பல புதிய நடைமுறைகளை ஆதீனங்கள் போன்ற சமய ஸ்தாபனங்களிலும் ஏற்படுத்தத் தவறவில்லை.

தொடரும்...


சுபா

No comments:

Post a Comment