Saturday, November 8, 2014

குடியரசில் பெரியார் உடன்....!- 10

சாதியின் பெயரால் கலவரங்கள் நடப்பதும் வன்முறைகள் நடப்பதும் இந்திய சூழலில் அதிலும் தமிழக சூழலில் இன்றளவும் நிகழ்ந்தவாறு இருப்பதை மறுப்பதற்கில்லை. கல்வி அறிவு பரவலாக வாய்த்து விட்ட இவ்வேளையில் சாதியின் பெயரால் அந்தஸ்தும், மனிதர்களுக்கிடையே  உயர்வு தாழ்வும் நோக்குதல் என்பது சாதாரண அறிவுக்கும் பொருந்தாது என்பதை உணர்ந்திருக்கின்றோம். 

கடந்த நூற்றாண்டும் இந்த நூற்றாண்டும் நமக்கு அளித்திருக்கும் பரவலான உலகளாவிய பார்வை என்பது நமக்கு மனிதர்களுக்கிடையே சாதி என்ற ஒரு விஷயம் மனித வாழ்க்கைக்கு, அதிலும் மாறுபட்ட மொழி, பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட இனக்குழு மக்களுடன் வாழும் நிலையில், எவ்வித தேவைக்கும் பலன் தரும் ஒன்றன்று என்ற உண்மையை தினம் தினம் நமது அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். இது மட்டுமன்றி சமூக நலன் விரும்பும் பெரியோர்கள் பலர், மக்கள் ஒற்றுமை, மக்களுக்கிடையே உயர்வு தாழ்வு எனக் காண்பது எனும் மடமை பற்றி விளக்கி சாதி என்ற ஒன்று நம் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் நச்சு போன்றது என இலக்கிய, சமூகவியல்பார்வையிலும் விளக்கிச் சென்றுள்ளனர், தொடர்ந்து சொல்லியும் வருகின்றனர்.  அப்படியான போதிலும் இன்றளவும் சாதி பெயர் சொல்லி மக்களுக்கிடையே பிரிவினை பார்ப்பதும் அந்தப் பிரிவினை வகுக்கும் நெறிகளைப் புகுத்தி அதன் வழியாக ஒரு மனித குல சட்டத்தை வரையறுத்து மக்களிடையே அதனைப் பரப்ப  முயற்சிகள் நடப்பதுவும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான முயற்சிகள் குருகிய பார்வையைக் கொண்ட, சுயநலப் போக்கை அடிப்படையாகக் கொண்ட நோக்கமென்பது தெளிவு.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகாவது இந்திய தேசத்து மக்களிடையே பிரிவினை என்பது சாதி வடிவில் என இல்லாது எல்லோரும் இந்திய தேசத்தவர் என்ற பார்வை தோன்றியிருக்க வேண்டும். அது இன்றளவும் முழுமையாகச் சாத்தியப்படவில்லை.

திரு.ஈ.வே.ராவின் குடியரசு இதழின் 1932ம் ஆண்டு வெளிவந்த தொகுப்பினை இன்று காலையில் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில்  அவரது கட்டுரை ஒன்று தீண்டாதார் துன்பம் என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார். ஆங்கிலேயர்களின் ராஜ்ஜியத்தில் இந்திய தேசத்து மக்கள் துன்பம் அனுபவிக்கின்றோம்; ஆகையால் இந்த தேசத்தை எங்களிடம் விட்டு விட்டு உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள் என்று ஆங்கிலேயர்களை நோக்கிக் கூறும் இந்தியர்கள், அதே இந்திய சமூகத்திற்குள்ளேயே ஒரு குழுவினரை தீண்டத்தகாதோர் எனப் பெயரிட்டு அழைப்பதும் அவர்களைத் துன்பப்ப் படுத்துவம் என்பது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றார். தீண்டத் தகாதோர், மற்றும் ஆதி திராவிடர் இனக்குழுக்களை மனிதர்களில் சரி சமமாக பார்க்கும் பார்வை இழந்த பாரபட்ஷமான நிலையை கண்டித்து இக்கட்டுரையை அவர் வரைந்திருக்கின்றார். அதில் அவர் குறிப்பிடும் சில சமகால நிகழ்வுகளும் சூழல்களும்   மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. 

கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் தீண்டத்தகாதோர் எனக் குறிப்பிடப்படுவோரை, உயர் சாதி என தம்மை அடையாலப்படுத்திக் கொள்வோர், அவர்கள் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அதனை தடுக்கும் பொருட்டு ஜில்லா கலெக்டருக்கும், போலிஸ் சூப்பரிண்டென்டுக்கும் விண்ணப்பக் கடிதம் அனுப்பி அவர்கள் முன்னேற்றத்தைத் தடைசெய்யக் கோரியமையைக் குறிப்பிடுகின்றார். அதோடு அவர்களுக்கு உயர் சாதிக் குழுவினர் என தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோர் தீண்டத்தகாதோர் எனத் தாம் அடையாலப்படுத்தும் சமூகத்தினருக்கு கொடுக்கும் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றார்.

1.பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது
2.பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது. படிக்கவும் கூடாது.
3.வெள்ளை வேஷ்டிக் கட்டக் கூடாது. அழுக்கு வேஷ்டியிலிருந்தாலும் முழங்காலுக்கு மேல் கட்ட வேண்டும்.
4.பெண்கள் மார் ஆடை போடக்கூடாது. மீறி மார் ஆடைப் போட்டால் மாரை அறுத்துவிடுவது.
5.நாகரிகமான நகைகள் போடக் கூடாது
6.குடைகள் பிடிக்கக் கூடாது. குடையிருந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட வேண்டும்.
7.பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது. புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது.

.. இந்தக்கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? என்று கேட்கிறோம். இந்த நிலைதான் கிராமாந்தரங்களெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இதுவரை என்ன முயற்சியை, எந்தத் தேசீயவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம்.
                                                       -குடி அரசு - துனைத் தலையங்கம் - 21.02.1932

இக்காலத்தில் இத்தகைய நிலை இருக்கின்றதா என சிலர் வினவலாம். அதே நிலை முற்றும் முழுவதும் என்ற வகையில் இல்லாத போதிலும் சாதியின் பெயரால் நடக்கும் வன்முறைகளும், ஏற்றத் தாழ்வுகளும், தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளை, நம் சமூகத்தில் சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன் வரை இது போன்ற மனித குல சிந்தனைக்கு ஒவ்வாத சில விஷயங்கள் நடைமுறையில் இருந்தன என்பதையும் அறிந்து கொல்ள வேண்டியது அவசியம்.

சிறு பிராயத்திலேயெ சாதி சிந்தனையை குழந்தைகள் மனதில் ஊட்டி வளர்க்கும் பெற்றோர் சற்றே யோசிக்க வேண்டிய தருணம் இது. உலகின் பரப்பு, தான் தன் சமூகம் என்ற ஒரு பரப்பை கடந்து உலகமயமாக்கலில் மிக விரிந்த நிலையை அடைந்து விட்டது. ஆக, இக்காலகட்டத்திலும் பொது அறிவிற்குச் சற்றும் பொருந்தாத சாதிச் சிந்தனையை நம் மனதிலிருந்து களைவதோடு நமது குழந்தைகளுக்கும் சாதி எனும் இந்த விஷம் நிறைந்த சிந்தனைகள் சென்றடையாதவாறு காக்க வேண்டியது பெரியோர் கடமை!

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment